மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 40

கி.ஆறுமுகம்

Dec 20, 2014

subash4போசு தனது தற்காலிக சுதந்திர அரசை பர்மாவின் தலைநகரான இரங்கூனுக்கு மாற்றிய தினத்தில் ஜப்பான் பிரதமர் டோஜோவும் ஜப்பான் இராணுவம் இம்பால் மீது இந்திய தேசிய இராணுவ வீரர்களுடன் இணைந்து போரிட அனுமதி அளித்தார். போசு பர்மாவிற்கு வருவதற்கு முன் ஜப்பானின் வானொலியில் பேசினார், அதில் முதன்முறையாக இந்திய தேச தந்தையே என்று காந்தியை வாழ்த்தி உரை ஆற்றினார். நாங்கள் தயாராகிவிட்டோம் விரைவில் இந்தியாவில் பிரிட்டிசாரை போரில் தோற்கடித்து வெற்றி பெறுவோம், இந்த போருக்கு உங்கள் ஆசி வேண்டும் என்று தன்னை வெளியேற்றியவர் என்றுகூட பார்க்காமல் மிக உயர்ந்த மனப்பான்மையுடன் பேசினார். பின் இந்திய மக்கள் எத்தகைய அச்சமும் அடைய வேண்டாம், நமது தற்காலிக சுதந்திர அரசில் அனைத்து துறை வல்லுனர்களும் இருக்கிறார்கள், இந்திய தேசிய இராணுவம் போரிடும் போது பிரிட்டிசு படை தோல்வி அடையும், பிரிட்டனை முற்றிலும் விரட்டியடித்தப் பிறகு என்ன செய்யவேண்டும் என்ற அனைத்தும் தயார் நிலையில் உள்ளது தோல்விக் கண்டு ஓடும் பிரிட்டிசார் இந்தியாவை விட்டு போகும் போது அவர்கள் போட்ட சாலைகள், இரயில் பாதைகள், மின்சாரங்கள், போன்ற வசதிகளை அவர்கள் அழித்தாலும், அதனை சரிசெய்து தருவார்கள் நமது இந்திய தேசிய இராணுவம். பிரிட்டன் இந்தியாவின் வளங்களை அழித்தாலும் நமது நாட்டிற்கு என்ன தேவையோ அனைத்தும் தயாராக உள்ளது. இன்னும் சில நாட்களில் நமது சுதந்திர மண்ணில் இந்திய தேசிய இராணுவம் வந்துவிடும் என்று உரை நிகழ்த்தினார். இதன் பிறகு தான் காந்தியை அனைவரும் தேசத் தந்தை என அழைத்தனர். அதனையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பல அரசியல்வாதிகள் அரசியல் செய்து வந்தனர் நமது நாட்டில்.

போசு தனது அரசை பர்மாவுக்கு மாற்றிய பிறகு இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் இராணுவ அதிகாரிகள் பலமுறை போசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அதில் இளோடா என்ற ஜப்பானின் இராணுவ அதிகாரி, இவர் ஆங்கிலத்தில் மற்றும் ஜெர்மனில் மொழிகளிலும் நன்கு பேசும் ஆற்றல் உள்ளவர் இருந்தும் போசுடன் பேசும் பொழுது தனது ஜப்பானிய தாய் மொழியில் பேசுவார். அதனை வேறு அதிகாரி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து போசுக்கு தெரிவிப்பார். ஏனெனில் கௌரவம் கருதியும், பாதுகாப்பு கருதியும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் அவர் எப்பொழுதும் தன் தாய்மொழியில்தான் பேசுவார். இவர் ஒரு உயர் அதிகாரியாக இருந்தும் தனது தாய்மொழியில் பேசுவதற்குக் காரணம், ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்தையும் பரிசீலினைத்து ஒரு சரியான முடிவு எடுக்கும் திறன் மற்றும் தான் சிந்திக்கும் அனைத்திற்கும் தாய்மொழிதான் சிறந்தது என்று போசு கூறியதுதான் காரணம். எனவேதான் ஜப்பானியர்கள் இன்று கூட அறிவியலில் சிறந்து செயல்பட முடிவதற்குக் காரணம் தனது தாய்மொழியில் படித்து சிந்திப்பதினால் தான். ஆனால் நாம் தாய்மொழியில் பேச தெரிந்தும் பேசுவது கூட இல்லை.

ஒரு கூட்டத்தில் பர்மாவில் ஆஸாத் ஹிந்த் வங்கி ஒன்றை நிறுவ போசு விரும்பியது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்கு ஜப்பானியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் ஏற்கனவே இந்தியர்களுக்கு வங்கி உள்ளது, அதனை நீங்கள் பயன்படுத்தலாம் எதற்காக தனியாக உங்கள் தற்காலிக சுதந்திர அரசுக்கு வங்கி, அதுவும் பர்மாவில் தொடங்கினால் பர்மா அரசு அதனை ஆதரிக்குமா மற்றும் உங்கள் இந்தியர்கள் அதில் கணக்கைத் தொடங்கினால் பர்மாவில் உள்ள அரசு வங்கிகள் முடங்கும். தற்போது உள்ள போர் சூழலில் பர்மாவில் உள்ள அரசு வங்கி ஏற்கனவே ஆபத்தான நிலையில் இயங்குகிறது இதற்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது உங்கள் வங்கி என்று பர்மாவின் மக்கள் எண்ணக் கூடும். பர்மிய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் இத்திட்டத்தினை பர்மிய அரசு கடுமையாக எதிர்க்கும். இந்த வங்கி தொடங்குவதற்கு பல லட்சம் பணம் செலவாகும், இந்த வங்கியினால் உங்களுக்கு என்ன பயன் என்று போசிடம் கடுமையாக விவாதம் செய்தனர் ஜப்பானிய அதிகாரிகள். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு பின் போசு இந்த வங்கி தொடங்குவதற்கு பர்மிய அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை மற்றும் வங்கி தொடங்குவதற்குத் தேவையான ஆதரவு தருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். இந்த வங்கி தொடங்குவதற்குத் தேவையான அனைத்து பணத்தையும் நான்கு இந்தியர்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் இந்த வங்கியில் முதலீடு செய்யும் பணம் அனைத்தும் போனாலும் நாங்கள் அதை எங்கள் செலவு கணக்கில் எழுதிக் கொள்ளுவோம் சிறிதும் கவலைப்படமாட்டோம். இந்த வங்கியில் இருந்து வரும் இலாபத்தில் 8 ½ மூ தொகையை இந்திய தேசிய இராணுவத்திற்கு அளிக்கிறோம் என்று சொல்லி உள்ளனர். இந்த வங்கியில் கணக்கு வைப்பவர்கள் இந்தியர்கள், இவர்களினால் எவரும் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த வங்கியை நிச்சயம் நான் தொடங்கியே தீருவேன் என்றார்.

subash5மேலும் நான் போர் முனைக்குச் செல்லும் முன் இந்த வங்கி செயல்பட ஆரம்பிக்கும் என்று தெரிவித்தார். உடனே இந்தப் பணியை ஆஸாத் ஹிந்த் அமைச்சரவையில் இலாகா இல்லாத உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட சிங்கப்பூர் இந்திய சுதந்திர லீக் தலைவர் எல்லப்பாவிடம் ஒப்படைத்தார். இவர் நான்கே நாட்களில் மூன்று தேசபக்தர்களை சேர்த்துக் கொண்டு காலியாக இருந்த ஒரு கட்டிடத்தை சகல தளவாடங்களையும் கொண்டுவந்து சேர்த்து ரூ.50 லட்சம் முதலீட்டோடு கூடிய ஒரு வங்கியாக மாற்றி அதிசயம் நிகழ்த்தினார். பர்மாவில் வந்து சேர்ந்த இந்திய தேசிய இராணுவம் போருக்குத் தேவையான பொருள்களை சேகரிக்கத் தொடங்கியது. இந்த சமயம் பர்மாவில் பஞ்சம், இந்த சூழலையைப் பயன்படுத்தி பர்மாவின் தலைவர் பதவியைப் பிடிக்க எண்ணிய சிலர் பர்மா அரசைப் பற்றி மக்களிடம் தவறான எண்ணம் உண்டாகக் கூடிய வதந்திகளைப் பரப்பினர். பின் பர்மிய அரசிடம் இந்திய தேசிய இராணுவம் பற்றிய தவறான பல கருத்துகளை தெரிவித்து மக்கள் பஞ்சத்தில் உள்ளனர், ஆனால் இவர்கள் அனைத்துப் பொருள்களையும் வாங்கி பதுக்குகின்றனர் என்று தெரித்தனர். இதனால் பர்மாவின் மக்கள் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் போசின் மீது வெளியிட்டனர். உடனே போசு அதனை சரி செய்து பர்மா அரசுக்கு விளக்கினார் ஆனால், பர்மா அரசு முன் செய்த உதவியை போன்று பின் நாட்களில் நடக்கவில்லை சற்று வேண்டா வெறுப்பாக செயல்படத் தொடங்கியது. ஜப்பான் இராணுவமும் இந்திய தேசிய இராணுவத்தில் பயிற்சி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் போர் ஆயுதம் வழங்கவில்லை அதில் இருந்த ஒரு பிரிவினருக்கு மட்டுமே ஆயுதம் வழங்கினார்கள். இந்திய தேசிய இராணுவத்தின் அந்த சிறு பகுதியினர் போருக்குத் தயாராக இருந்தனர். இந்திய தேசிய இராணுவம் சில ரெஜிமெண்ட்டுகளாக பிரிக்கப்பட்டது.

  1. சுபாசு சந்திரபோசு ரெஜிமெண்டு
  2. காந்தி ரெஜிமெண்ட்
  3. ஆஸாத் ரெஜிமெண்ட்
  4. நேரு ரெஜிமெண்ட்
  5. ஜான்சிராணி ரெஜிமெண்ட்

என்று இருந்தது.

பர்மாவில் ஜப்பானின் இராணுவ அதிகாரி முடாகுச்சி இவரும் ஜப்பான் அரசிடம் பலமுறை போசின் ஆலோசனையை சரி பர்மாவின் வழியாக இந்திய தேசிய இராணுவமும் ஜப்பான் இராணுவமும் இந்தியாவில் நுழையவேண்டும் என்று அரசுக்கு எடுத்துரைத்தவர். இவர் பர்மாவில் இருந்த ஜப்பான் இராணுவத்தின் அதிகாரியாக அங்கு பொறுப்பேற்றிருந்தார்.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 40”

அதிகம் படித்தது