சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 41
கி.ஆறுமுகம்Dec 27, 2014
பர்மாவில் இருந்து இந்திய தேசிய இராணுவம் இந்தியாவின் கிழக்கு பகுதி காடுகளின் வழியாக பிரிட்டிசு இந்தியா மீது போர் தொடுக்க போசின் தலைமையில் சுமார் 20,000 பேர் தயாராக இருந்தனர். இந்திய தேசிய இராணுவத்தில் போர் பயிற்சி பெற்றவர்கள் சுமார் 60,000 பேர், ஆனால் ஜப்பான் ஆயுதம் உதவி செய்தது 20,000 போர் வீரர்களுக்கு மட்டும். பர்மாவில் இந்திய தேசிய இராணுவத்துடன் இணைந்து ஜப்பான் இராணுவம் செயல்பட இருந்த பிரிவின் தலைமையாக ஜப்பான் இராணுவ அதிகாரி முடாகுச்சி இருந்தார். இந்திய தேசிய இராணுவம் தயாராக உள்ளது இன்னும் நமது ஜப்பானிய இராணுவ வீரர்கள் பர்மாவிற்கு வந்து சேரவில்லை, விரைவில் வந்துசேர வேண்டும் என்று 1944 பிப்ரவரி 11-ம் நாள் சிங்கப்பூரிலுள்ள ஜப்பானிய இராணுவ கமாண்டருக்கு முடாகுச்சி ஒரு கடுமையான கண்டனக் கடிதத்தை அனுப்பினார். பின் 15-வது படைப் பிரிவைச் சேர்ந்த சுமார் 20,000 ஜப்பானிய வீரர்கள் பாங்காக்கிலிருந்து இரங்கூனுக்கு கால்நடையாகவே புறப்பட்டு சுமார் 1,200 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து சேர்ந்தனர். போசு, பிற பகுதியில் இருந்த இந்திய தேசிய இராணுவ வீரர்களையும் பர்மாவிற்கு அழைத்தார். இந்திய தேசிய இராணுவ வீரர்கள் அலை அலையாக புறப்பட்டு தாய்லாந்து வழியாக இரங்கூன் நகருக்கு வந்து சேர்ந்தனர்.
1944 மார்ச்சில் ஆஸாத் ஹிந்த் அரசாங்கம் தாய்லாந்து அரசின் ஒத்துழைப்பிற்காக 1,00,000 தாய்லாந்து பிபாட் நாணயத்தை அன்பளிப்பாகக் கொடுத்தது. இந்திய தேசிய வீரர்கள் அணிவகுப்பு நடந்தது. அதில் ஜப்பான இராணுவ அதிகாரிகளும் பர்மாவின் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அந்த இடத்தில் எதிரி நாட்டின் விமானம் மிகத் தாழ்வாக பறந்ததைக் கண்டு பர்மிய இராணுவ அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் போசு கம்பீரமாக மேடையின் மீது நின்று உறையாற்றிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட ஜப்பான் இராணுவ அதிகாரிகள் ஒரு வீரர் போரில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை போசு இங்கு செய்து காட்டியுள்ளார். நீங்கள் அனைவரும் இந்த சம்பவத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று போசை புகழ்ந்தனர். போசு கூட்டத்தில் நான் உங்களுக்கு பசி, பட்டினி, இறப்பு போன்றவற்றைத் தருகிறேன் நீங்கள் உங்கள் இரத்தத்தினைக் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவேன் என்று உற்சாகமாகப் பேசினார். ‘டில்லி சலே’ இது ஒன்றுதான் நமது மந்திரமாக இருக்கவேண்டும், ஜெய்ஹிந்த் என்று முடித்தார்.
பிப்ரவரி 4, 1944ல் இந்திய தேசிய இராணுவம் தனது முதல் தாக்குதலைத் தொடங்கியது. சிட்டகாங் செல்லும் வழியில் உள்ள அரக்கன் பிரண்ட் வழியாக பர்மிய எல்லை பிரதேசத்தில் இருந்து இந்தியாவில் நுழைந்தது. இந்திய தேசிய இராணுவம், பிரிட்டிசு படைகள் இந்திய தேசிய இராணுவத்தின் தாக்குதலை எட்டு இடங்களில் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இந்திய தேசிய இராணுவம் பிரிட்டிசு இந்திய இராணுவத்தை சந்திக்கும் பொழுது ஒரு வாசகம் அடைந்த அட்டையை அவர்களுக்கு காண்பித்தார்கள். அதில் நமது சுதந்திர அரசு இதுதான் நீங்கள் இருப்பது வெறும் கூட்டம் உங்களுக்கு சோற்றை போட்டு முட்டாள்களாக மாற்றி தமது சகோதரர்களுடனே போரிட உங்களை அழைத்து வந்துள்ளனர் என்று இருந்தது. அதைப் படித்த பிரிட்டிசு இந்திய இராணுவ வீரர்கள் பதில் நீங்கள் எல்லாம் ஜப்பானின் கூலிப்படைகள் நீங்கள் அனைவரும் சரண் அடைந்துவிடுங்கள் அதுதான் உங்கள் உயிரை காப்பாற்றும் என்று இருந்தது. இதனைக் கண்ட இந்திய தேசிய வீரர்கள் நேதாஜி வாழ்க இந்தியா வாழ்க என்று உணர்ச்சி பொங்க தேசிய கீதம் பாடினார்.
பின் அடிமையாக உயிர் வாழ்வதை விட வீரனாக மடிவது மேல் நாங்கள் உண்மையான நேதாஜியின் படை வீரர்கள் என்று அனைவரும் விண்ணை பிளக்குமாறு காட்டு மிருகங்கள் அலறும்படி கர்சித்தனர். இதனைக் கண்ட பிரிட்டிசு இந்திய இராணுவ வீரர்கள் அனைவரும் இந்திய தேசிய இராணுவ வீரர்களுடன் சேர்ந்தனர். இதனைக் கண்ட ஆங்கிலேய அதிகாரிகள் ஓட்டம் எடுத்தனர். பின் இந்திய தேசிய இராணுவம் தாக்குதல் நடத்தினார்கள். இவர்கள் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பின்வாங்கிய ஆங்கிலேய வீரர்கள் உயிர் தப்பித்தால் போதும் என்று ஓடினார்கள். இந்திய தேசிய இராணுவ வீரர்கள் போருக்குச் செல்லும் போது நமக்கு ஆயுதம் குறைவாக உள்ளது உணவு குறைவாக உள்ளது காடுகளில் நமக்கு எப்படி உணவு ஆயுதம் கிடைக்கும் என்று சிலர் வினவினர். சில வீரர்கள் அது எல்லாம் சர்ச்சில் துரை நமக்கு கொடுப்பார் என்று சொல்லி சிரித்தனர். அவர்கள் கூறியது உண்மையாக்கும் விதம் ஆங்கிலேயர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று தாங்கள் கொண்டு வந்த ஆயுதம், உணவு அனைத்தையும் ஆங்காங்கே விட்டுவிட்டு தலைதெறித்து ஓடினார்கள். வெள்ளையர் உயிர் பயம் கொண்டு ஓடினார்கள். ஓடும் போது அவர்கள் விட்டுச் சென்ற ஆயுதம் மற்றும் உணவுப் பொருட்களை இந்திய தேசிய இராணுவம் பெற்றனர். இவ்வாறு பெற்றதும் இந்திய தேசிய இராணுவத்தில் சில வீரர்கள் நாங்கள் அப்போதே கூறினோமே நமக்கு ஆயுதம் மற்றும் உணவுப் பொருட்களை சர்ச்சில் துரை வழங்குவார் என்று, அது இதுதான் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்திய தேசிய இராணுவம் பெற்ற வெற்றிகளைக் கண்டு ஜப்பான் அரசு போசுக்கு பல வாழ்த்துக்களை தெரிவித்தது. ஜப்பான் இராணுவ அதிகாரி முடாகுச்சி ஜப்பான் இராணுவ வீரர்களைப் பார்த்து இந்திய வீரர்கள் எப்படி போர் செய்கிறார்கள் என்று பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். அவர் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் மூன்று முதல் ஆறு மாத காலம் மட்டும் இராணுவ பயிற்சி பெற்றவர்கள் ஆனால் இவர்கள் பல வருட பயிற்சி பெற்றவர்களை விட பல போர்களைப் பார்த்தவர்களை விட மிகத் திறமையாக தமது முதல் போரில் அதுவும் அடர்ந்த ஒரு காடுகளில் இவர்கள் இப்படி போர் செய்கின்றனர் எனில் அதற்கு சிறந்த தலைமையே மற்றும் உண்மையான தேசபக்தியே காரணம் என்று புகழ்ந்தனர்.
பர்மியாவில் இருந்த வீரர்களுக்கு ஆங்கிலேய படையில் இருந்த இந்தியர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்தனர். மற்றும் இந்திய தேசிய இராணுவம் போரிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி என்ற செய்தி கிடைத்ததும் அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இதை எல்லாம் கேட்டதும் அனைத்து வீரர்களும் நாங்கள் போர்க்களம் செல்ல வேண்டும் எங்களுக்கு அனுமதி வழங்குங்கள் என்று போசிடம் முறையிட்டனர். இதில் மலேசியாவில் இருந்து வந்த சில வீரர்களுக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. அதையும் அவர்கள் பொருட்படுத்தாமல் நாங்கள் போர்க்களம் செல்லுவோம் எங்களை அனுப்ப அனுமதி வழங்க வேண்டும் என்று இரயில் முன் நின்று மறியல் செய்தனர். இதனைக் கண்டதும் போசு நீங்கள் அனைவரையும் உடல் நலம் சரியானதும் செல்லலாம் என்று சமாதானப்படுத்தினர். இதற்கிடையில் ஜான்சி இராணி பிரிவினர் எங்களை இன்னும் போர்க்களத்திற்கு நீங்கள் செல்ல அனுமதிக்காமல் எங்கள் அனைவரையும் செவிலியர் நிலையில் வைத்துள்ளீர்கள் நாங்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்ற வீராகள் எங்களுக்கு ஜான்சி இராணி பிரிவு என்று நீங்கள் தான் பெயர் வைத்தீர்கள், எங்கள் வீரத்தினை மெய்ப்பிக்க எங்களை போர்க்களம் அனுப்புங்கள் என்று வேண்டுகோள் வைத்து கடிதம் எழுதி அதில் தங்கள் இரத்தத்தில் கையொப்பம் இட்டு போசுக்கு அனுப்பினர். இக்கடிதம் கண்டதும் போசு அவர்களின் தேசபக்தியைக் கண்ட உடனே போர்க்களம் செல்ல அனுமதி வழங்கினார். இரண்டு ரெஜிமண்ட் பிரிவினர் ஜான்சிராணி பிரிவில் இருந்து போருக்குச் செல்ல தயாராகுங்கள் என்றதும் இவர்கள் அனைவரும் எல்லையற்ற மகிழ்ச்சியில் சென்றனர்.
இவர்கள் பல மைல் தூரம் காடுகளில் வன விலங்குகள் உள்ள பகுதியில் நடந்தே சென்றனர். இந்த பிரிவில் சென்ற பெண் ஒருவர் தனது நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார். அந்த வீரப்பெண்மணி, நாங்கள் அடர்ந்த காடுகளில் பல குன்றுமலைகளை நடந்தே கடந்தோம் எங்களிடம் ஆயுதம் குறைவாக இருந்தது. உணவு குறைவாக இருந்தது, எங்களுக்கு போர்க்களம் மிக பயங்கரமாக இருக்கும் என்று எச்சரிக்கையிடப்பட்டிருந்தது. நாங்கள் இரவு பகலாக நடந்து ஒரு ஆங்கிலேயர்கள் இருந்த முகாமை அடைந்தோம். எங்கள் தாக்குதலைத் தொடங்குவதற்கு கட்டளை வர காத்திருந்தோம் இப்போது தாக்குங்கள் என்றதும் நாங்கள் விண்ணிலிருந்து வரும் மழைத்துளி போன்று எங்கள் துப்பாக்கி குண்டுகள் எதிரியின் முகாம் மீது சென்றது. எதிரிகள் இதனை சற்றும் எதிர் பார்க்கவில்லை. அதுவும் பெண்கள் அவர்களைத் தாக்குவார்கள் என்று எண்ணவில்லை. நான் ஜெய்ஹிந்த் என்று முழங்கிக்கொண்டு ஒரு வெறிபிடித்தவர் போன்று அந்த முகாமை நோக்கி ஓடினேன் என் தலையில் பலமான ஒரு அடி நான் கீழே விழுந்துவிட்டேன். கண் விழித்தெழும்போது நான் எங்கள் மருத்துவ சிகிச்சை முகாமில் இருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயர்கள், இந்திய தேசிய இராணுவ வீரர்களின் தாக்குதலினால் தோல்வியுற்றதைக் கேட்டதும் சர்ச்சில் மிகவும் கலக்கமுற்று போனார். இந்தப் போர் தாக்குதலின் போது காந்தி சிறையில் இருந்தார். அப்போது அவர் இந்திய விடுதலைக்காக சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். இந்த செய்தியை சர்ச்சில் கேட்டதும் அந்தக் கிழவன் அங்கேயே சாகட்டும் விட்டுவிடுங்கள் என்று கூறினார் தோல்வியின் பயத்தினால்.
-தொடரும்
கி.ஆறுமுகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 41”