மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 42

கி.ஆறுமுகம்

Jan 3, 2015

subash3போசின் இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழர்கள் அளித்த ஆதரவு கண்டு எரிச்சல் அடைந்த சர்ச்சில் ரேடியோவில் “மலேயா இரப்பர் தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது” என்று கூறினார். இதற்கு போசு, “இந்தத் தமிழர்கள்தான் பின்னாளில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தைக் குடிப்பார்கள், அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்” என்று பதில் கூறினார். போசு தமிழர்களின் மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அவர்களின் வீரத்தினை போரில் மெய்ப்பித்து காட்டிவிட்டனர் தமிழர்கள் என்றார். காந்தி பிரிகேட் என்ற பெயரில் இந்திய தேசிய இராணுவத்தில் இருந்த ஒரு பிரிவினர்தான் முதன் முதலில் பிரிட்டனை எதிர்த்து இந்திய தேசிய இராணுவம் தொடங்கிய போரினை ஆரம்பித்து வைத்த வீரர்கள். இவர்கள்தான் எதிரிகளை புறமுதுகிட்டு ஓட விரட்டியடித்து சற்றும் பின் வாங்காமல் உணவு, ஆயுதம், இரவு உறக்கங்கள், கடும் மழை, வெள்ளம் அனைத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் உயிரையும் பெரிதாக எண்ணாமல் தேசபக்தியோடு முன்னேறி இந்தியாவில் ஏறத்தாழ 200 சதுரடி மைல் பரப்பைக் கைப்பற்றி இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்த இந்த வீரர்கள் அனைவரும் தமிழர்கள். இதற்கு தளபதியாக இருந்தவர் கர்னல் ஜியானி. இந்திய தேசம் எந்த காலத்திலும் இந்தத் தமிழர்களுக்குக் கடமைப்பட்டுள்ளது. பட்டினி,கடுமையான காடுகள்,குறைந்த கால போர்ப்பயிற்சி பெற்று பிரிட்டனின் இராணுவத்தை சிதறடித்த இவர்களின் வீரம் என்னை திகைத்து திகிலடைய வைத்திருக்கிறது என்றார் இதன் தளபதி.

கொஹிமா – இம்பால் முனையில் பல வெற்றிகளைப் பெற்ற இந்திய தேசிய இராணுவம் – ஜப்பான் இராணுவமும் பலேல் என்ற இடத்தை அடைந்தது. அந்த இடத்தில் இருந்த இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு உணவு இல்லை. உடனே ஜப்பான் இராணுவ தளபதியிடம் இந்திய தளபதி உணவு வழங்க வேண்டும் என்று கூற, ஜப்பான் தளபதி இன்று இரவு நாம் தாக்க திட்டமிட்டுள்ள இடத்தில் ஏராளமான உணவுப் பொருட்கள் உள்ளது இன்று இரவு வரை உங்கள் வீரர்கள் காத்திருக்கட்டும் என்றார். கோபம் வந்த இந்திய தளபதி தனது முகாமுக்கு வந்து நமக்கு உணவு இல்லை, அதற்காக நாம் இரவு வரை காத்திருந்து போரிட்டு பிறகு அடையும் உணவை இப்போதே புறப்பட்டு எதிரியை தாக்கி,நாம் ஜப்பான் வீரர்களுக்கு உணவளிக்கும் நிலையை அடைவோம், புறப்படுவோம் என்றார். இந்திய தேசிய வீரர்கள் பசியையும் களைப்பையும் தூக்கி எறிந்து பகலிலேயே போரிட்டு அந்த இடத்தினை கைப்பற்றினார்கள். மற்றொரு பகுதியில் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் சுமார் 20 பேர் இருந்த இடத்தினை பிரிட்டிசு இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தி பிடிக்க எண்ணியது. அதில் தோல்வியைக் கண்டு பின்வாங்கி ஓடிய பிரிட்டன் வீரர்கள், பின் விமானத்தாக்குதலில் இறங்கினார்கள். அதிலும் தோல்வி, மீண்டும் மூன்றாம் முறையாக அதே நாளில் அந்த இடத்தினை பிடித்தே தீறவேண்டும் என்று முயன்ற பிரிட்டன் மீண்டும் தோல்வியை சந்தித்து ஓடியது. உடனே பிரிட்டன் வீரர்கள் அந்தப் பகுதியில் இந்திய தேசிய வீரர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர் என்ற செய்தியை இராணுவ அதிகாரிக்கு அனுப்பினர். ஆனால் அந்த இடத்தில் இருந்தது 20 பேர் மட்டும் தான் இதனை அறியாமலேயே தோற்று ஓடிய பிரிட்டன் வீரர்கள் முகாமில் ஓய்வு எடுக்கும் போது மற்றொரு இடத்தில் இருந்து வந்த இந்திய தேசிய இராணுவ வீரர்கள் சுமார் 50 பேர்களுடன் இந்த 20 வீரர்களும் சேர்ந்து பிரிட்டிசு முகாமைத் தாக்கிப் பிடித்தனர்.

subash3பிரிட்டிசு படை இந்திய வீரர்களிடம் இருந்த சிறிய பகுதியை பிடிக்க ஒரே நாளில் மூன்று முறை முயற்சி செய்து தோற்று ஓடினர். ஒரு தாக்குதலில் இந்திய வீரர்களிடம் இவர்களின் இருப்பிடத்தினை இழந்து தோற்று ஓடிவிட்டனர் பிரிட்டன் வீரர்கள். இந்தத் தாக்குதலில் ஒரு இந்திய வீரர் கூட இறக்கவில்லை, 100க்கும் மேற்பட்ட பிரிட்டன் வீரர்கள் இறந்தனர். இந்திய தேசிய இராணுவம் பிடித்த இந்திய நிலப் பகுதிகளை, தொடர்ந்து அந்த இடத்தில் இராணுவ வீரர்களை நிறுத்தி எதிரியை மீண்டும் வராமல் தடுப்பது நமக்கு கடினமாகும் ஏனெனில் நமக்கு உணவு பற்றாக்குறை, ஆயுதம் பற்றாக்குறை, ஆட்கள் குறைவு. இங்கேயே வீரர்களை விட்டுவிட்டு மற்ற பகுதிகளுக்கு குறைந்த வீரர்களோடு செல்வது கடினம். தோற்றோடிய எதிரி மீண்டும் மிக வலிமையாக நம்மைத் தாக்க வருவான் எனவே நாம் இங்கேயே இருந்து அவர்களை எதிர் கொள்வது என்பது மரணத்தை எதிர் கொள்ளுவதற்கு சமம். எனவே நாம் இப்பகுதியை விட்டு செல்லுவோம் என்று ஜப்பான் இராணுவம் இந்திய தேசிய இராணுவத்திடம் கூறி நாங்கள் புறப்படப் போகிறோம் நீங்களும் எங்களுடன் வாருங்கள் என்றார்கள் ஜப்பானியர்கள். ஆனால் நமது இந்திய தேசிய இராணுவ வீரர்கள் நாங்கள் வரமாட்டோம் நீங்கள் வேண்டுமெனில் திரும்பி செல்லுங்கள் நாங்கள் கைப்பற்றிய எங்கள் தேசத்தை விட்டு வரமாட்டோம் வெற்றி அல்லது மரணம், இதுதான் நேதாஜி எங்களுக்கு இட்ட கட்டளை, எனவே எங்கள் உயிர் போனாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம், எங்கள் உயிர் இங்கேயே போகட்டும் நீங்கள் செல்லலாம் என்றனர். இவர்களின் தேசப்பற்றை பார்த்து ஜப்பானியர் வியந்தனர். இப்படிப்பட்ட தேசபக்தர்களை நாங்கள் கண்டதில்லை என்று புகழ்ந்தனர்.

இந்தப் போர் நடந்து கொண்டிருக்கும் போது பருவமழை தொடங்கியது. ஜப்பானும் உலகப்போரில் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது. தோற்றோடிய பிரிட்டன் அமெரிக்காவின் உதவியை நாடி விமானத்தின் மூலம் இந்திய தேசிய இராணுவத்தை எதிர் கொண்டது. பிரிட்டன் படையில் ஆப்பிரிக்க இனத்தினர் மற்றும் நீக்ரோ இனத்தினர், அமெரிக்க படை என்று சேர்த்து போரை நடத்தியது. இவர்களுக்கு பச்சை நிற உடை வழங்கப்பட்டது. இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு காக்கி நிற உடை வழங்கப்பட்டிருந்தது எனவே காடுகளில் இவர்களை எதிர்ப்படை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து சுட முடிந்தது. ஆனால் நமக்கு அடர்ந்த காடுகளில், காடுகளின் நிறத்தில் எதிரியின் உடை நமது துப்பாக்கியின் தோட்டாக்களை எண்ணி எண்ணி சுட வேண்டிய நிலை. உணவு இல்லை, பருவ மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நமது இந்திய தேசிய இராணுவ வீரர்கள் பள்ளத்தாக்கில் இருந்தனர். மழை நீர் சில இடங்களில் அவர்கள் இடுப்பளவில் இருந்தது. எதிரி மேடான பகுதியில் இருந்து சுடுகிறான், விமான தாக்குதல் வேறு, அனைத்தையும் எதிர்த்து போராடினர்.

subash1நமது இந்திய தேசிய இராணுவ வீரர்களான இந்த தேசபக்தர்களை எதிரியிடம் சில துரோகிகள் காட்டியும் கொடுத்தனர். 1944ல் பெனாங் நகரில் நடத்தப்பட்டு வந்த உளவுப் படைப் பயிற்சிப் பள்ளி ஒன்றிலிருந்து பயிற்றுவிக்கப்பட்ட சில உளவாளிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கே சென்று இந்திய தேசிய இராணுவம் அளித்த உளவுப் பணிகளைச் செய்யாமல், பிரிட்டிசு அரசிடம் டெல்லியில் சரணடைந்ததோடு பிரிட்டிசு வானொலியில் பேட்டியும் கொடுத்து, இந்தியர் சுதந்திர இயக்கத்தைக் காட்டிக் கொடுக்கும் ஈனச் செயலையும் செய்தார்கள். இந்தத் துரோகிகள் உளவுப் பணிக்காகப் பயிற்சி கொடுக்கப்பட்டு ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர்கள். அவர்களுடைய ஒரே நோக்கம் தேச சேவை அல்ல, பெனாங்கிலிருந்து தப்பிச் செல்வதுதான் என்பது பின்னரே தெரியவந்தது. இவர்களுக்கு இந்த ஆலோசனையைத் தெரிவித்தவர் இதே பள்ளியின் அதிகாரியாக இருந்த கேப்டன் ‘துரானி’ என்பவர்தான். இந்த துரானி அவர்களிடம் இந்திய தேசிய இராணுவம் மற்றும் ஜப்பான் இராணுவம் குறித்த போர் இரகசியங்களையும் கொடுத்தனுப்பினர். ஜப்பானியர் இந்த துரானியின் மீது ஆரம்பத்தில் இருந்தே சிறிது சந்தேகம் கொண்டிருந்தனர். உடனே இவரை கைது செய்து ‘பிடாதாரி’இராணுவ சிறையில் அடைத்து விசாரித்தனர். இதனைக் கேட்டதும் போசு மிக சினம் கொண்டு துரானியை சிறையில் சந்தித்து எல்லா உண்மையும் சொல்லும் படி கூறியும் அவர் கூறவில்லை. உன்னைப் போன்ற தேச துரோகிகளை சுட்டுக் கொள்வதுதான் ஜப்பானியர் செயல் என்றார் போசு.

இந்திய தேசிய இராணுவ வீரர்களும் தொடர்ந்து விசாரித்தும் துரானி எந்த தகவலையும் உண்மையும் சொல்லவில்லை. துரானியை கொல்லக்கூடாது விசாரணை மட்டும் செய்ய வேண்டும் என்று போசு உத்தரவிட்டிருந்தார். எனவே தான் இந்திய தேசிய இராணுவ அதிகாரிகளும் ஜப்பான் இராணுவ அதிகாரிகளும் துரானியை கொல்லாமல் விசாரணை மட்டும் நடத்தினர். ஆனால் இந்த தேசத்துரோகி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பின் நாட்களில் 1946ல் ஆங்கிலேயர்கள் பர்மாவையும் இதர நாடுகளையும் கைப்பற்றியவுடன் தனக்கு விசுவாசமாக இருந்த இந்த தேச துரோகி துரானியை சிறையில் இருந்து விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்து அவர் செய்த தேசதுரோகத்திற்கு பரிசாக ‘ஜார்ஜ் கிராஸ்’ விருதை அளித்து கௌரவித்தனர்.

ஜப்பான் படையினர் சிறிது சிறிதாக பின் வாங்கி செல்கின்றனர். இந்திய தேசிய இராணுவத்தின் வீரர்களுக்கு தேவையான ஆயுதம், உணவு, வாகன வசதிகள் போன்றவற்றை அளிக்காமல் ஜப்பானிய இராணுவ அதிகாரிகள் சிலர் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர் என்ற செய்தி போசுக்கு காலம் கடந்து வந்து சேர்ந்தது, இதுவும் ஜப்பானியர் செயலால் நிகழ்ந்தது. போசு இந்திய தேசிய இராணுவத்திற்கு உதவிகளையும் உணவு, ஆயுதம், வாகனம் அனைத்தையும் உடனே செய்வதற்கு ஆட்களை நியமித்து அதற்குத் தேவையான பணம் திரட்டவும் செய்தார்.

தோல்வி அடைந்த பிரிட்டன் ஒரு பொய் பிரச்சாரம் செய்தது. அது இந்திய யுத்தக் கைதிகளை இந்திய தேசிய இராணுவத்தில் சேர மறுத்து விட்டதாகவும் ஆனால் சேனையில் சேரும்படி கிழக்காசிய இந்தியர்கள் வற்புறுத்தப்படுவதாகவும் அவர்கள் பரப்பினார்கள். இதற்கு போசு சேனையில் சேரும்படி யுத்தக் கைதிகளையே நிர்ப்பந்தப்படுத்த முடியவில்லை என்றால் சுதந்திரமான இதர மக்களை எப்படி நிர்ப்பந்தப்படுத்த முடியும் என்பது டில்லியில் உள்ள அந்த மேதைகளுக்குத் தெரியவில்லை,அவர்கள் மூளைக்கு எட்டவில்லை. ஒருவனைத் துப்பாக்கி ஏந்தும்படி நிர்ப்பந்தப்படுத்த முடியும் ஆனால் தனக்குச் சொந்தமாக மதிக்காத, ஒரு இலட்சியத்திற்காகத் தன் உயிரையே அர்ப்பணம் செய்யும்படி அவனை எப்படிக் கட்டாயப்படுத்த முடியும் என்றார். போர் முனையில் இருந்து ஜப்பான் இராணுவம் சிறிது சிறிதாக பின்வாங்கிக் கொண்டிருந்தது ஆனால் நமது இந்திய தேசிய இராணுவம் சிறிதும் பின் வாங்காமல் தமது உயிரை துச்சம் என மதித்து எதிரியை எதிர்த்து போராடினர்.

-               தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 42”

அதிகம் படித்தது