மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 43

கி.ஆறுமுகம்

Jan 10, 2015

subash3ஜப்பான் இராணுவம் பின்வாங்க இம்பால் முற்றுகையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்ற முடிவு 1944 சூலை மத்தியில் எடுத்திருந்தனர். அதன்படி இராணுவம் பின்வாங்கியது. அவர்கள் இந்திய தேசிய இராணுவ வீரர்களையும் பின்வாங்க வலியுறுத்தினர். ஆனால் நமது இந்திய தேசிய இராணுவ வீரர்கள், ஒரு வேலைக்குத்தான் உணவு அடுத்த உணவுப்பொருட்கள் எப்போது வரும் என்ற நிலை தெரியாது என்ற போதும் ஜப்பான் வீரர்களுடன் திரும்ப மறுத்தனர். இவர்களின் வீரம், தேசப்பற்றைக் கண்டு ஜப்பான் படையின் தளபதிகள் இந்திய தேசிய இராணுவ வீரர்களை தனியாக விட்டுச் செல்ல மனமின்றி தங்கள் இராணுவ அணி ஒன்றை இந்திய தேசிய இராணுவத்தின் கேப்டன் சுராஜ்மல் என்பவர் தலையில் ஒப்படைக்கவும் செய்தனர். இது மிக அபூர்வமான செயல். இந்த இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஒரு நாட்டின் இராணுவ வீரர்களை மற்றொரு இராணுவ அதிகாரியின் கீழ் செயல்பட விட்டு விட்டு ஜப்பான் இராணுவம் அதிகாரிகள் செயல்படுவது மிகப்பெரிய வியப்பை அளிப்பதாக உள்ளது. மிகப்பெரிய வீரர்கள் சாமுராய் தாங்கள்தான் என்றவர்கள் ஜப்பான் வீரர்கள், அவர்கள் இந்திய வீரர்களின் போர் திறமையைக் கண்டதும் தாங்கள் தான் மிகச் சிறந்த போர் வீரர்கள் என்ற ஆணவ எண்ணங்களை மாற்றிக் கொண்டனர். இந்திய தேசிய இராணுவ வீரர்களின் திறமையையும், தங்களது உயிரை பெரிதாக எண்ணாத தியாக உணர்வையும் கண்ணால் கண்டபின்தான் ஜப்பானியர்கள் தங்கள் கர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டனர்.

ஜப்பான் தளபதி போஸ்டன் போசிடம் சென்று இராணுவ மரியாதையோடு குனிந்து வணங்கி, “நேதாஜி அவர்களே என்னை மன்னியுங்கள், நாங்கள் இதுவரை இந்திய தேசிய இராணுவ வீரர்களைப் பற்றி மிகத் தாழ்வாக எண்ணியிருந்தோம். இவர்கள் நீண்ட காலமாக பிரிட்டனிடம் அடிமைப்பட்டு இருப்பவர்கள், இவர்கள் போர் புரியும் ஆற்றல் இல்லாதவர்கள், போரின் கடுமையான சூழல்களை சந்திக்கமாட்டார்கள், எதிரியிடம் மிக விரைவில் சரணடைந்துவிடுவார்கள் என்று எண்ணியிருந்தோம். அதற்கு எங்களை மன்னித்துவிடுங்கள்” என்று மன்னிப்பு கேட்டார். பின், “குறைந்தபட்ச வசதிகளைக் கொண்டு அதிகபட்ச சாதனைகளை செய்த வீரர்கள் இந்திய தேசிய இராணுவ வீரர்கள்தான். உலகின் வேறு எந்த நாட்டு வீரர்களும் இவர்களுக்கு இணையாக முடியாது, சிறந்த தேசபக்தி கொண்ட வீரர்கள்” என்று புகழ்ந்தார்.

இதைக் கேட்ட நேதாஜி சிறு புன்னகையோடு, “எங்கள் வீரர்கள் நீங்கள் போற்றும் வகையில் போரிட்டது உங்களுக்குத்தானே அதிசயம், எங்கள் வீரர்களின் தியாக உணர்வையும் வீரத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைத்ததற்கு நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எங்கள் வீரம் அடக்கமானது, அனாவசியமான விளம்பரத்தை நாடாதது, அவசியப்படும்போது மட்டும் அது வெளிப்படும். இது குறித்து உங்கள் வியப்பில் நான் பங்குகொள்ளவில்லை. வீரத்தின் விளைச்சல் நிலமே எங்கள் இந்திய மண்தான், வீரம் விளையாடிய இடம் இந்திய தேசம் என்பது உங்களுக்குத்தான் புதிய அறிமுகம் என்னைப் பொறுத்தவரை என் தாய் நாட்டு வீரர்களின் வீரத்தை முழுமையாக வெளிப்படுத்தும் காலமும் வாய்ப்பும் இன்னும் வரவில்லையே என்பதுதான் எனக்குள்ள கவலை. ஏதோ சிறிய வாய்ப்புக் கிடைத்தது, வீரத்தை வெளிக்காட்டி விட்டோம். உங்களுடைய பாராட்டு என் தேசத்தையும் அதன் இறவா வீரத்தையும் சாரட்டும்” என்றார்.

ஜப்பான் இராணுவம் பின்வாங்கிய பின்னும் இந்திய தேசிய இராணுவம் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தது. இது போன்ற போர்களில் வீரர்கள் குண்டடிபட்டு விழுவார்கள், எதிர்பாராமல் மரணம் அடைவார்கள், சில இராணுவ உத்திகளின்படி சில சமயங்களில் பின்வாங்க வேண்டிய சந்தர்ப்பம் எல்லாம் இருக்கும். இது எல்லாம் வரலாற்றில் பல போர்களில் கண்டுள்ளோம். இதை எல்லாம் நமது இந்திய தேசிய இராணுவ வீரர்கள், “ போனால் என்ன நமது உயிர் தானே” என்று உயிரை பெரிதாக எண்ணாமல் தேசபக்தி ஒன்றையே பெரிதாக எண்ணி எதிரிகளிடம் போராடினார்கள்.

bosu1போரின் போது ஏற்பட்ட பருவமழையின் காரணமாக எதிர்பாராத துன்பங்களுக்கு நமது வீரர்கள் ஆளானார்கள். எனவே உடனே தற்காலிகமாக இம்பால் முற்றுகையை கைவிட்டுவிட்டு திரும்பும்படி நமது இந்திய தேசிய இராணுவத்திற்கு உத்தரவிடுங்கள் என்று போசிடம் இந்திய இராணுவ அதிகாரிகள் எடுத்துரைத்தனர். நிலைமையை முற்றிலும் பரிசீலித்து அதன்படி 1944 ஆகஸ்ட் 14ம் தேதியன்று நமது படையை போர் முனையிலிருந்து பின்வாங்கும்படி உத்தரவிட்டார் நேதாஜி. ஆனால் நமது இராணுவ வீரர்கள் இந்த உத்தரவை நம்பவில்லை, நேதாஜி ஒரு போதும் இதுபோன்ற ஒரு உத்தரவை பிறப்பிக்க மாட்டார். எனவே நாங்கள் போர் முனையில் இருந்து திரும்ப மாட்டோம் என்றனர் நமது இந்திய தேசிய இராணுவ வீரர்கள். பின்னர் பின்வாங்கி வரும்படியான ஒரு அத்தாட்சி பத்திரத்தை போர்முனைக்கு நேதாஜி அனுப்பியிருப்பதைக் கண்டு இந்திய வீரர்கள் திரும்பினார்கள். இந்தப் பயணமும் மிகக் கடுமையானதாக இருந்தது.

நமது வீரர்களுக்கு இந்த இம்பால் முற்றுகையைப் பற்றி பிரிட்டிசு இராணுவத்தின் ஒரு பிரிவு படைத்தலைமையைத் தாங்கி போரிட்ட சர் வில்லியம் ஸ்லிம் பின் நாட்களில் அவர் எழுதிய நூலில், “அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்த தினாப்பூர் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது. இதனை இந்திய தேசிய இராணுவம் எந்த நேரத்திலும் தாக்கி பிடித்துவிடலாம் என்று பிரிட்டிசு அரசு அச்சம் கொண்டிருந்தது. கொஹிமாவிலிருந்து ஜப்பான் படைவீரர்கள் பின்வாங்கி சென்ற போது, ஒரு சிறுபடையை அங்கு பாதுகாப்பிற்கு நிறுத்திவிட்டுச் சென்றிருந்தால் கொஹிமாவும் இந்திய தேசிய இராணுவத்திடம் கிடைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிசு இராணுவத்தைச் சேர்ந்த ஆர்தர் கேம்பல் என்பவர் குறிப்பிடும் பொழுது “தினாப்பூரில் மரத்தால் கட்டப்பட்ட வீடுகள், இரயில் நிலையம் உள்ளது. இதனை ஜப்பான் வீரர்கள் கைப்பற்றியிருந்தால் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் கிடைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். கொஹிமா, தினாப்பூர் ஆகிய இரண்டு இடங்களைக் கைப்பற்றக்கூடிய பொன்னான வாய்ப்பு ஜப்பான் இராணுவத்திற்கு இருந்தது என்று பிரிட்டிசு அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தப் போரில் ஜப்பான் இராணுவ வீரர்கள் சுமார் 1,25,000பேர் இறந்தனர்.

இந்திய தேசிய இராணுவம் பர்மாவின் தலைநகரை அடைந்ததும் புணரமைக்கப்பட்டது. பின்னர் ஐராவதி ஆற்றங்கரை ஒட்டிய பகுதிகளில் ஜப்பான் இராணுவம் பிரிட்டனை எதிர்த்து போர் செய்து கொண்டிருந்தது. இவர்களுக்கு உதவ இந்திய தேசிய இராணுவத்தை செல்லும்படி உத்தரவிட்டார் போசு. ஜப்பானின் நிலைமையை உணர்ந்த போசு, மலேசியாவில் இருந்த இந்திய தேசிய இராணுவ வீரர்களை மலேசியாவை பாதுகாக்க அங்கேயே இருக்கும்படி உத்தரவிட்டார்.

subash3இந்தப் போர் சூழ்நிலையில் பர்மாவில் இராணுவ தளபதிக்கும் பர்மாவின் தலைவருக்கும் இடையில் பகை ஏற்பட்டது. இதனால் இராணுவ தளபதி பர்மாவின் இராணுவ வீரர்ளை, இராணுவ உடையில் இல்லாமல் பொதுமக்களைப் போல் நடமாடி ஜப்பான் இராணுவத்தினரைத் தாக்க உத்தரவிட்டார். ஜப்பான் இராணுவ வீரர்கள் முற்றிலும் எதிர்பாராத இந்தத் தாக்குதல் ஜப்பானிய வீரர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்தது. ஜப்பானியர்கள் இவர்களைக் கண்டுபிடிக்கவும் மிக சிரமப்பட்டனர். பர்மாவின் தாக்குதலை எதிர்கொள்ள நேதாஜியிடம் இந்திய தேசிய இராணுவ உதவியை கேட்டனர். ஆனால் போசு பர்மிய மக்களை அடக்குவதற்கு எங்கள் இராணுவம் உதவ முடியாது என்று தெரிவித்துவிட்டார். இந்தப் போர் நடைபெறும் பொழுது நேதாஜியின் பிறந்த நாள் சனவரி 23ம் தேதி ஜான்சிராணி பிரிவினரால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழா வேண்டாம் என்று போசு கூறினாலும் ஜான்சி ராணி வீராங்கனைகள் போசை துயிலா பாரத்தில் வைத்து எடைக்கு எடை தங்க நகைகள் மற்றும் 2 கோடி ரூபாய் பணம் வசூலித்துக் கொடுத்தனர். 1945 ஏப்ரல் மாதம் பர்மாவின் இரங்கூன் நகரிலிருந்து ஜப்பானியப் படைகள் திரும்பி செல்லும் (வாபஸாவதை) ஆதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

போபா மலைப் பகுதிகளை எதிரிகள் நெருங்கிவிட்டனர், இன்னும் விரைவில் இங்கு வந்துவிடுவர். எனவே நேதாஜி இங்கு இருக்கவேண்டாம் உடனே தப்பிக்க வேண்டும் என்று ஜப்பான் இராணுவ அதிகாரிகள் போசு அமைத்திருந்த மெய்க்டிலா முகாமிற்கு வந்து நேதாஜியிடம் தெரிவித்தனர். உடனே இந்திய சுதந்திர லீக் அமைப்பின் அதிகாரிகள், இந்திய தேசிய இராணுவ அதிகாரிகள் அனைவரும் போசை உடனே இந்த இடத்தை விட்டு நீங்கள் வெளியேறுங்கள், நீங்கள் உயிரோடு இருந்தால்தான் மீண்டும் நாம் போரிட முடியும். உங்களுக்கு வேண்டுமென்றால் உங்கள் உயிர் பெரிதாகத் தெரியாது, ஆனால் எங்களுக்கு உங்கள் தலைமை மீண்டும் இருக்க வேண்டும். நமது மக்களையும் தேசிய இராணுவத்தையும் சீரமைத்து மீண்டும் போர் நடத்த நீங்கள் வேண்டும், எனவே உடனே புறப்படுங்கள் என்று கட்டாயப்படுத்தினர். அனைவரின் கருத்தினையும் அமைதியாகக் கேட்டு ஆலோசித்து போசு, “நான் புறப்படுகிறேன் ஆனால் முதலில் ஜான்சிராணி பிரிவினர் இங்கிருந்து பத்திரமாகச் செல்ல வேண்டும். பின்தான் நான் செல்லுவேன். நான் செல்லும் போது இங்கு யார் இருக்கப் போகிறீர்கள்” என்றார். உடனே எஸ்.ஏ.ஐயர் நான் இங்கு இருக்கிறேன். எனக்கு ஒரு கைத்துப்பாக்கி மட்டும் கொடுத்துவிட்டு செல்லுங்கள். நான் எதிரியிடம் உயிரோடு பிடிபட விரும்பவில்லை என்றார். போசு எஸ்.ஏ.ஐயரைப் பார்த்து சிறு புன்னகை செய்துவிட்டு பின் புறப்படுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்றார்.

subash4புறப்படுவதற்கு முன் பர்மாவில் இந்திய தேசிய இராணுவத்திற்கு உதவியாக இருப்பதற்காகத் தொடங்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்தவர்களை அழைத்து அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தினைக் கொடுத்துவிட்டு மீதி இருந்த பணத்தினை அந்த வங்கியின் நிர்வாகத்தை ஒப்படைத்தவரிடம் கொடுத்துவிட்டு, பர்மாவின் போர் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டிய ஆலோசனைகளையும் கூறினார். பின்னர் பயணத்தை பகலில் இல்லாமல் இரவில் தொடங்க வேண்டும் என்று அறிவித்துவிட்டு, பயணத்திற்குத் தேவையான வாகனங்கள் ஜப்பானிய இராணுவத்தில் இருந்து வரும் வரை அங்கு முகாமில் பர்மாவிலிருந்து போர்களை கவனித்து கொள்பவர்களுக்குத் தேவையான அனைத்து திட்டத்தினையும் கூறினார் போசு. வாகனங்கள் அதிகாலை நேரத்தில் வந்து சேர்ந்தது பகல் பயணம் கூடாது என்பதினால் இரவுக்காக காத்திருந்து இரவு ஆனதும் பயணம் தொடங்கியது.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 43”

அதிகம் படித்தது