மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னையில் விண்ணைத்தொடும் நிலத்தின் மதிப்பு – விரைவில் சரிந்து விழும்

வெங்கட்ரமணி

Jun 6, 2015

chennayil vinnai thodum4சென்றவாரம் இரண்டு மனை சார்ந்த பேரங்களில் ஈடுபட்டு தோல்வியடைந்தேன். காரணம், மனைக்கு அதன் உரிமையாளர்கள் கேட்ட தொகை விண்ணைத்தொடும் அளவிற்கு இருந்தது. அந்த விலையில் வாங்கி, அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டி விற்றால் மிகக் கொடுமையான கடனுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். என்னிடம் இருக்கக்கூடிய அனைத்து சொத்துக்களையும் விற்றாலும் அந்தக் கடன் தீராது. இரண்டு மனை பேரங்களிலும், தாங்கள் கேட்டத் தொகைக்கு பலர் வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அறிவுள்ள எந்த ஒரு கட்டிட முதலாளியும் முட்டாள் தனத்துடன் சொல்லப்படும் அத்தகைய அதிக விலையில் மனையை வாங்கமாட்டார்.

சென்னையில் கடந்த சில மாதங்களாக நிலம்/வீடு சார்ந்த சொத்துக்களில் விலையை நீங்கள் கவனித்து வந்தால் பெரிய அளவிலான கழிவுகளை முதலாளிகள் தந்து தங்களிடம் இருக்கக்கூடிய அடுக்குமாடிக் கட்டிடங்கள் விற்றுப்போக எண்ணுவதைக் காணமுடியும். ஒருசில மேல்தட்டுப் பகுதிகளில் தொடக்கத்தில் அறிவித்த விலையை விட முப்பதிலிருந்து நாற்பது சதவிகிதம் விலையைக் குறைத்துக் கொடுக்கிறார்கள்.

chennayil vinnai thodum5சென்னையின் புறநகர்ப் பகுதியான கிழக்குத் தாம்பரம் போன்ற இடங்களில் மழை நீர் தேங்குதல், கழிவுநீர் வடிகால் இன்மை, நகராட்சிக்குடிநீர் இன்மை, நெரிசல், சுகாதாரக் கேடுகள், குறுகலான சாலைகள் என ஏராளமான குறைகள் இருந்தாலுமே கூட 2400 சதுரடி கொண்ட நிலம் ஒன்றே முக்கால் கோடிக்கு விற்கப்படுகிறது. இந்த விலையில் மனையை வாங்கினால் அடுக்கு மாடிக்கட்டிடத்தை விற்கும் பொழுது சதுரடிக்கு 8000 ரூபாய் விலை வைக்க வேண்டும். ஆனால் அந்தப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சதுரடி 4500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலைக்கே கூட வாங்குவதற்கு ஆள் இல்லை. மனையை இவ்வாறு மிகுந்த விலை கொடுத்து வாங்கினால் கட்டிடங்களுக்கான அனைத்து விதிமுறைகளையும் காற்றில் பறக்க விட்டு, கட்டினால் மட்டுமே போட்ட பணம் தேறும்.

மேலே சொன்ன பரிவர்த்தனைகளில், சகோதரர்களான உரிமையாளர்கள் தங்களுடைய மனைக்கு நான்கு கோடி ரூபாய் கேட்டனர். சந்தை விலையை விட இது 250 சதவிகிதம் அதிகமானதாகும். அவர்கள் சொன்ன காரணம் என்னவென்றால், தாங்கள் நான்கு பேர் இருப்பதால் தலைக்கு ஒரு கோடி கிடைப்பதே சரியானதாக இருக்கும் என்றனர். நல்லவேளை அவர்களின் குடும்பம் நான்கு பேர் கொண்டதாக இருந்தது. ஒரு வேளை அவர்களது பெற்றோர்கள் மேலும் சிலரைப் பெற்றிருந்தால் என்ன கேட்டிருப்பார்கள் என நினைக்கவே பயமாக இருக்கிறது. இன்னொரு இடத்தில் பார்த்தீர்கள் என்றால் வயதான தம்பதி, தங்களது மகனையும் மகளையும் வெளிநாடுகளில் குடியேற்றிவிட்டு சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள சொத்தை விற்றுவிட முனைகின்றனர். ஆனால் கேட்கும் விலையோ 200 சதவீதம் அதிகமாக இருக்கிறது. மடிப்பாக்கம் பகுதியில் ஆண்டு முழுக்க நீர் தேங்குவதும், கொசுத் தொல்லையும், கழிவுநீர் வடிகால் இன்மையும், நிலத்தடி நீர் உப்பு கரிப்பதும், நகராட்சி நீர் இல்லாமல் இருப்பதும் வெகுவாக காணப்படக்கூடிய ஒன்று. இந்தப் பகுதியில் கூட மிக மிக அதிகமாக விலை மனைக்கு கேட்கப்டுகிறது.

நில உரிமையாளர்களின் பேராசை எல்லையே இல்லாமல் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

chennayil vinnai thodum3பல சிறிய கட்டிட முதலாளிகள் சந்தையிலிருந்து முற்றிலும் விலகிவிட்டனர். அதற்குக் காரணம், அருவருக்கத்தக்க அளவில் அதிகமாக உள்ள மனை விலை, அரசு அனுமதி சார்ந்த தொந்தரவுகள், உள்ளுர் அரசியல் வாதிகளின் இடையூறுகள், மூலப்பொருட்களின் தொடர்ந்த விலை ஏற்றம் மற்றும் விற்பனை விலையில் சரிவு மற்றும் தேக்கம். ஒரு சிலர் மிகவும் அதிகப்படியான கடனுக்கு உள்ளாகி அனைத்தும் இழந்து வெற்றுடம்புடன் நிற்கின்றனர். அவர்களால் கட்டிடங்களில் முடங்கிய தங்கள் பணத்தை வெளியே எடுக்க முடியவில்லை. வங்கிகள் வராக்கடன்களால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. சரியான ஆய்வு செய்யாமல் வங்கிகள் கடன் கொடுப்பது, கடன் வாங்கியவர் திருப்பி கட்டாமல் இருப்பது அதிகரித்துள்ளது.

மேலே சொன்ன நிலைமையினால் சில முதலாளிகள் தங்களது விற்பனை விலையை வெகுவாகக் குறைத்துக்கொண்டு விரைவில் விற்றொழித்துவிட்டு வங்கிகளில் கடனை கட்டிவிட முனைகின்றனர். மிகப்பெரிய அளவு நட்டத்தை சந்தித்தாலும் அவர்களுக்கு வேறு வழி இல்லை. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள், நடுவண் அரசு கொண்டு வர இருக்கும் நில மசோதா, கருப்பு பண மசோதா போன்றவை சந்தையில் ஒரு தெளிவையும் ஒழுங்கையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்.

இதுபோல நடந்தால், கட்டிடங்கள் நியாயமான விலைக்கு விற்கப்படும். அவ்வாறு நடக்கும் பொழுது பேராசையில் மூழ்கித் திளைக்கும் நில உரிமையாளர்கள் கடும் மன அதிர்சசியை சந்திப்பதோடு, அவர்களின் கனவுகள் தகர்வதையும் காண முடியும்.

இது மிக விரைவில் நடந்தால் இந்த சமூகத்திற்கே பெரிய பலனாக இருக்கும்.

BVe Consulting Engineers

Engineering Project Consultancy & Property Advisory Services,

Residential-Commercial-Industrial-Infrastructure Designs

Due-diligence studies -Asset valuation services

Chennai -600 083

bv.consultingengrs@gmail.com

www.bveconsultingengineers.in

www.bveconsultingengineers.com


வெங்கட்ரமணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னையில் விண்ணைத்தொடும் நிலத்தின் மதிப்பு – விரைவில் சரிந்து விழும்”

அதிகம் படித்தது