மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் வின்சென்ட் அவர்களின் நேர்காணல்

சித்திர சேனன்

Oct 3, 2015

Dr.S.Vincentகேள்வி: உங்களைப் பற்றியான அறிமுகம்?

பதில்: தேனி மாவட்டத்தில் கம்பம் புதுப்பட்டிதான் நான் பிறந்த இடம். புதுப்பட்டிக்கு அருகாமையில் உள்ள ராயப்பன்பட்டியில்தான் படித்தேன். இந்த இரண்டு சூழலுமே ஒரு இயற்கையான சூழல் எப்பொழுதுமே. அப்படி ஒரு இடத்தில் பிறந்தேன். படித்தது ராயப்பன்பட்டி செயின்ட் அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி(St. Aloysius higher secondary school). பின் மதுரையில் யாதவா கல்லூரியில் விலங்கியல் துறையில் பட்டப்படிப்பு படித்தேன். அதேமாதிரி முதுகலைப்படிப்பை பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில்(St.Xavier’s college) படித்தேன். ஆராய்ச்சிப் படிப்பை லயோலா கல்லூரியில் படித்தேன். பின் கல்லூரியின் விரிவாளராக லயோலா கல்லூரியில் சேர்ந்து என்னுடைய பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன்.

கேள்வி: இன்றுள்ள சுற்றுச்சூழல் எதுவாக இருக்கிறது, ஏன் இந்த சூழல்?

vincent nerkaanal1பதில்: பொதுவாக இன்று சுற்றுச்சூழல் பற்றிய கவலை எல்லோருக்கும் அதிகமாக இருப்பதற்குக் காரணம், நாம் வாழ்கிற இடமே நம் சுற்றுச்சூழலைப் பொறுத்து அமைவதால்தான். ஏனென்றால் இன்று சுற்றுச்சூழல் நலமாக இருந்தால்தான் மனித வாழ்வும் நலமாக இருக்கும். இதைத்தாண்டி சுற்றுச்சூழலில் ஏற்படுகிற மாற்றம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் மிகவும் கொடியதாக இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் இன்று சுற்றுச்சூழல் மேல் உள்ள ஆர்வம், அதை பாதுகாக்கக்கூடிய ஆர்வம் மிகவும் மிகவும் குறைவு. ஏனென்றால் அதைப்பற்றியான முக்கியத்துவம் அதில் வாழ்கிற மனிதனுக்கும், மற்ற சூழலுக்கும் தெரிவதில்லை.

vincent nerkaanal2அதனால்தான் இன்றைக்கு சுற்றுச்சூழல் பலவாறு அழிக்கப்பட்டு பெரிய ஆபத்தான ஒரு சூழலில் இருந்து கொண்டிருக்கிறது. எனவே இன்றைக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு முக்கியமான பொறுப்பாக ஒவ்வொரு மனிதனும் எடுத்துக்கொள்ளவேண்டும், ஒவ்வொரு நாடும் எடுத்துக்கொள்ளவேண்டும், இன்னும் ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டும் என்றால் உலகமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிதர்சனமான சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு உலகம் முழுவதும் பேசப்படுகிற உலக வெப்பமயமாக்கல் (Global warming) என்று சொல்லப்படுகிற ஒரு உலகப் பிரச்சனை பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம், நம்முடைய சுற்றுச்சூழலை அழித்து, ஒழித்து, இன்றைக்கு அதை காயப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதுதான். அதனால்தான் இன்றைக்கு சுற்றுச்சூழல் மிகவும் சீர்கெட்டு இருக்கிறது. எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேலும் அதை வளப்படுத்துகிற ஒரு சூழலை நாம் செய்தால் ஒழிய நாம் வாழுகிற இந்த இடம் நமக்கு தகுதியான இடமாக இருக்காது.

கேள்வி: இங்கே எவை மாசுபட்டு வருகிறது? மாசுபடாமல் காக்க என்ன செய்யவேண்டும்?

vincent nerkaanal3பதில்: பொதுவாக இயற்கைக்கு ஒரு நல்ல தன்மை இருக்கிறது. மாசு, நம்முடைய வளர்ச்சியின் மூலம் ஏற்படுகிற மாசு. அந்த மாசுவை சுத்தப்படுத்துகிற தன்மையே நம்முடைய இயற்கைக்கு இருக்கிறது. இன்றைக்கு ஒரு சூழல் என்னவென்று கேட்டால் ஒரு புறம் வளர்ச்சி, இன்னொருபுறம் ஏற்படுகிற வளர்ச்சியினால் இயற்கைக்கு வரக்கூடிய தீமை. உதாரணமாக எடுத்துக்கொண்டால் நம்முடைய உலகத்தில் இருக்கவேண்டிய கார்பன்டை ஆக்சைடின் அளவு 0.03ppm சதவிகிதம். ஆனால் இன்றைக்கு அது பலமடங்காக அதிகரித்திருக்கிறது. அதற்குக் காரணம் இயற்கையில் உள்ள கார்பனை, கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்துக் கொள்ளக்கூடிய தன்மையுடைய மரங்கள் இன்றைக்கு குறைந்துவிட்டது. அதேநேரத்தில் நாம் சுவாசிக்க வேண்டிய காற்று, மரத்திலிருந்துதான் வருகிறது. நாம் வெளிவிடுகின்ற கார்பன்டை ஆக்ஸைடையும், தொழிற்சாலையில் இருந்து வெளிவருகிற கார்பன்டை ஆக்ஸைடையும் கிரகித்துக்கொள்ளுகிற ஒரு தன்மை அதாவது சமநிலையை செய்துகொண்டிருக்கிற மரத்தினுடைய, வனங்களுடைய அளவு குறைந்து குறைந்து வந்ததன் காரணமாக ஒரு புறம் நாம் வளர்ச்சி செய்திருக்கிறோம், அதில் நாம் பெறுமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதன் அடுத்தபுறம் மரங்களை, வளங்களை அழித்ததின் காரணமாகத்தான் இன்றைக்கு இவ்வளவு பெரிய சிக்கல் உண்டாகியிருக்கிறது.

கேள்வி: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தாங்கள் கூறும் வழிமுறைகள் என்ன?

பதில்: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு எளிய வழி என்னவென்றால் நம்மிடம் இருக்கிற இயற்கை வளங்களை இனிமையாகப் பாதுகாக்க வேண்டும். அதாவது இயற்கையினுடைய பொருட்களை நாம் அனுபவிக்கிற உரிமை இருக்கிறது, இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதை அழித்து அனுபவிக்க ஆரம்பித்தால் பிரச்சனை உருவாகும். உதாரணமாக நான் சொல்கிறேன் ஒரு இயற்கையான சூழலை எடுத்துக்கொண்டால் நமக்கு வேண்டிய காற்று இருக்கிறது, நமக்கு வேண்டிய தண்ணீர் இருக்கிறது, நாம் உண்ணுகிற உணவு இருக்கிறது, இவை எதுவுமே செயற்கையிலிருந்து வருவதல்ல. நம் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையுமே இயற்கையிலிருந்துதான் நாம் பெற்றுக்கொள்கிறோம். ஆனால் நாம் பெற்றுக்கொள்கிற அதே நேரத்தில் அதை மேன்மைப்படுத்தக்கூடிய முறையை நாம் செய்ய வேண்டும்.

vincent nerkaanal4இன்றைக்கு தண்ணீரின் நிலவரம் என்ன? ஒரு இடத்தில்கூட இயற்கையிலிருந்து வரக்கூடிய தண்ணீரை நாம் பருகக்கூடிய அளவிற்கு இருக்கிறதா? இல்லை. அது ஆற்று நீராக இருக்கலாம், அது கிணற்று நீராக இருக்கலாம், இன்னும் சொல்லவேண்டும் என்றால் உலகத்திலே அதிகமான சுத்தமான தண்ணீர் என்பது மழை நீர். ஆனால் இன்றைக்கு மழைநீரே அமிலமழையாக மாறிக்கொண்டிருக்கிறது. எனவே இந்த மாதிரி ஒரு சூழலுக்கு இயற்கையை தள்ளிவிட்டு பயன்படுத்துகிற அந்த சூழலைத் தவிர்த்து, ஒரு மரம் தன்னுடைய பணியை செய்ய விடவேண்டும். ஒரு ஆறு அதனுடைய பணியான தண்ணீரை வழங்கக்கூடிய அந்தப் பணியை செய்கிறது. அதை விடுத்து நாம் என்ன செய்கிறோம்?, இன்று ஆறுகளில் கழிவுகளைக் கொண்டு சேர்க்கிறோம். குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் ஆறு நமக்குத் தண்ணீரைக் கொண்டு வருகிறது. ஆனால் அந்த ஆற்றுக்கு நாம் எதைக்கொண்டு கொடுக்கிறோம் என்றால் விவசாயக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், நாம் பயன்படுத்துகிற கழிவுகள் என்று அனைத்து கழிவுகளையும் ஆற்றில் கொண்டு சேர்த்துவிட்டு இன்றைக்கு பல ஆறுகளை கெடுத்ததோடு இல்லாமல், அதை ஒரு drainage என்று சொல்லக்கூடியதாக செய்துவைத்திருக்கிறோம். ஏனென்றால் அது செய்திருக்கிற பணி என்ன? மக்களுக்கு ஏற்ற தண்ணீரை குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. ஆனால் நாம் பொறுப்புணர்ச்சியை விட்டுவிட்டு, பொறுப்போடு வாழ்கிற அந்த இயற்கை வளங்களை பராமரிக்கிற ஒரு சூழலை விட்டுவிட்டு அதை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

எப்பொழுதுமே இயற்கை ஒரு அட்சயப் பாத்திரம். எடுக்க எடுக்கக் கொடுக்கும் ஆனால் கெடுக்கக்கூடாது. கெடுக்காமல் அதை பாதுகாக்கிற பொழுது நிச்சயமாக ஒரு நல்ல சூழல் வரும். இதுதான் ஒரு எளிய வழி. நாம் தொழில்நுட்பங்களை பயன்படுத்தவேண்டும் என்பதெல்லாம் பின்பு, ஆனால் இன்று இயற்கையை இயற்கையாக பராமரிக்கக்கூடிய பண்பாடை எந்த நாடோ, எந்த மக்களோ உருவாக்கிக் கொள்கிறார்களோ அவர்களுக்கு இயற்கை ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கும். இல்லையென்றால் நாம் செய்கிற பாதகம் மீண்டும் நமக்கு பாதகமாக அமையைக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

கேள்வி: விலங்குகள் அழிப்பால் மனித சமுதாயம் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

vincent nerkaanal12பதில்: இன்றைக்கு எப்படி மனிதன் இந்த உலகத்தில் வாழ்வதற்கு உரிமை இருக்கிறதோ அதே மாதிரிதான் நம்மைச்சுற்றியுள்ள விலங்குகளுக்கும், தாவரங்களுக்குமே ஒரு அதிகாரம் இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய வாழ்க்கையே ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. நான் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் இன்றைக்கு உயிர்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்கு சூரியன் மிக முக்கியம், ஏனென்றால் சக்தியை கிரகித்துக்கொள்கிற தன்மை நமக்கு சூரியனிடமிருந்துதான் இருக்கிறது. ஆனால் அதை நீங்களோ நானோ பெற முடியாது. தாவரங்கள் மட்டும்தான் பெறமுடியும். அதனால்தான் அது பச்சையாக இருக்கிறது. Chlorophyll Pigment என்று சொல்லப்படுகிற அந்த நிரம்பிகளை வைத்துக்கொண்டுதான் சூரியனிலிருந்து சக்தியைப் பெறுகிறது. அடுத்து நாம் அதை காய்கறியாக உண்ணுகிற பொழுது அல்லது விலங்குகள் அதை உண்ணுகிற பொழுது அதனுடைய சக்தி அங்கே பரிமாறப்படுகிறது. ஆனால் நாம் சூரியனிலிருந்து எடுத்துக்கொள்ளமுடியாது. ஆனால் அந்த சக்தி அந்தத் தாவரங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் இந்த ஒவ்வொன்றுமே சுழற்சி முறையாக ஒன்றையொன்று சார்ந்திருக்கிற முறை. இதில் ஏதாவது ஒரு சீர்கேடு நடந்தால் அல்லது இதில் ஏதாவது ஒரு சிக்கல் நடந்தால் அது பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு இயற்கை, விலங்குகள் அது மீன்களாக இருக்கலாம், அது மானாக இருக்கலாம், அல்லது யானையாக இருக்கலாம், இவையனைத்துக்கும் இன்றைக்கு பெரிய சிக்கல் என்ன? விலங்குகள் தன்னுடைய வாழிடத்தில் ஒழுங்காக வாழமுடியவில்லை. ஏனென்றால் யானைகள் அதற்கு வேண்டிய உணவு வனங்களில் இருக்கிறது, ஆனால் அதை அழித்துவிட்டதன் காரணமாக, உணவைத் தேடி, தண்ணீரைத் தேடி மனிதன் வாழ்கிற இடத்திற்கு வருகிறது. காரணம் என்னவென்றால் அங்கே அதற்குக் கிடைக்கவேண்டிய இயற்கையான சூழல் அங்கே அழிக்கப்பட்டிருக்கிறது, கெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு குழப்பத்தை நாம் தவிர்க்கிற பொழுது விலங்குகள் சந்தோசமாக அதனுடைய இடத்தில் வாழும். மீன்கள் அந்த இயற்கையான தண்ணீரில் நீந்தி வாழக்கூடிய ஒரு சூழல் இருக்கும். மனிதன் தன்னுடைய நிலத்தில் தன்னுடைய வாழ்க்கை முறையை சிறப்பாக அமைத்துக்கொள்ளக்கூடிய ஒரு சூழலை உருவாகும். இதை விடுத்து மனிதன் காட்டுக்கு செல்வதனால்தான் விலங்குகள் நம்மைத்தேடி வீட்டிற்கு வருகிறது.

vincent nerkaanal6இன்றைக்கு தண்ணீரின் தரம் சரியில்லை என்பதால் கிட்டத்தட்ட எண்பது விழுக்காடு நோய்களுக்குக் காரணம் பாதுகாப்பற்ற தண்ணீர். அது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள நோய்களுக்கு மிகவும் முக்கியமான காரணமாக, எண்பது விழுக்காடு நோய்களுக்குக் காரணமாக இருப்பது பாதுகாப்பற்ற தண்ணீர் பருகுவதால்தான். இன்றைக்குக் பெருமைப்பட்டுக்கொள்வது என்னவென்றால் நாம் குடிப்பதற்கு mineral நீர் இருக்கிறது என்கிறோம், அதுவும் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் அல்ல. இன்றைக்கு ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால் இயற்கையிலிருந்து வரக்கூடிய தண்ணீரில்தான் அதிக அருமையான ஒரு mineral தாது இருக்கிறது. அது ஒரு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் என்று கருதப்படுகிறதே ஒழிய, அது நமக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்று சொல்லிவிடவே முடியாது. ஏனென்றால் விஞ்ஞான ரீதியாக பார்க்கும்போது ஒரு நாளைக்கு நமது உடம்பு வேலை செய்வதற்கு முன்னூறு வகையான enzyme என்று சொல்லப்படுகிற நொதிகள் தேவைப்படுகிறது. இதற்கு தாதுப்பொருட்கள் எங்கிருந்து வரும், உணவு வழியாக அதுவும் சிறப்பாக தண்ணீர் வழியாக. அதனால்தான் தண்ணீர் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தேவை என்கிற நிலை இருப்பதே காரணம். அந்தத் தண்ணீரைக் குடிக்கப்படுவதனால்தான் நம்முடைய உடம்பினுடைய தேவைக்கு வேண்டிய தண்ணீர் கிடைத்துவிடுகிறது.

நம் உடம்பிற்கு தேவைப்படுகிற தாதுப்பொருட்களைக் கொடுக்கக்கூடிய ஒரு சூழல் தண்ணீருக்குத்தான் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு என்ன செய்கிறோம்? அதையெல்லாம் எடுத்துவிட்டுத்தான் mineral நீர் என்று விற்கிறோம். இன்றைக்கு பெரிய பெரிய இடங்களில் இயற்கை தளங்களில் குடிக்கின்ற தண்ணீர் உண்மையிலேயே சிறப்பாக இருக்கிறது. அதன்மூலம் ஒரு பெரிய உடல் ஆரோக்கியமே நமக்குக் கிடைக்கிறது. ஆனால் இன்று ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று தண்ணீரை குடித்து, அடுத்து திரும்பி வருகிறபொழுது நோயாளியாகத்தான் வருவீர்கள். அதனால்தான் நம்முடைய இயற்கை வளங்களை சிறப்பாக பாதுகாக்கக்கூடிய ஒரு சூழலை நம்மிடம் இருக்கிறது.

vincent nerkaanal7விலங்குகளுக்கு இன்னொரு தன்மை என்னவென்றால் ஒரு இடத்தில் சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்கிறதா என்பதை சுட்டிக்காட்டுகிற ஒரு குறியீடுகளாக இருக்கிறது. உதாரணமாக நாம் வாழ்கிற இடத்தில் பச்சைக்கிளிகள் அதிகமாக இருக்கிறது என்றால், அந்த இடம் சுத்தமாக இருக்கிறது என்பது அடையாளம். அதே மாதிரி சிட்டுக்குருவிகள் இருக்கிறது என்றால் அந்த இடம் சுத்தமாக இருக்கிறது என்று அடையாளம். விலங்குகள் எல்லாம் நம் சுற்றுச்சூழலுடைய தன்மைகளை வெளிக்காட்டுகிற குறியீடுகள். ஆனால் அவை அழிந்துவிட்டது என்றால் அந்த இடம் மனித வாழ்க்கைக்கும் தகுதியற்ற இடம் என்பதை சுட்டிக்காட்டுகிறது அவை. அவை அழிந்துவிட்டது என்று நாம் மகிழ்ச்சிபெறக்கூடாது, அது மனிதனைப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதற்கு ஏற்றாற்போல்தான் இன்றைக்கு நம்மில் பலபேர் மருத்துவரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்றால், அந்தக் குறியீடுகளை நாம் உணரவில்லை. விலங்குகள் ஏதோ வாழ்ந்திருக்கிறது, அதை வாங்கி சாப்பிடவேண்டும் என்பது முக்கியமல்ல, அதனுடைய அழிவு நம்முடைய அழிவுக்கு வித்திடுகிறது.

கேள்வி: வேளாண் நடவடிக்கைகள் மூலம் மண் எவ்வாறு மாசுபடுகிறது? மண் மாசுபடாமல் காக்க என்ன வழி?

vincent nerkaana10பதில்: விவசாயம் என்பது மனித இனத்திற்கு ஒரு இயற்கையாக உருவாகிய ஒரு வேலை. உணவை உற்பத்தி செய்கிற உரிமை ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் விவசாயத்தையும் மனித நாகரிகத்தையும் பிரிக்கவே முடியாது. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில், அது கற்கால மனிதனாக இருந்தாலும் சரி அல்லது இப்பொழுதுள்ள நவீன மனிதனாக இருந்தாலும் தன்னுடைய உணவை உருவாக்கிக் கொள்ளுகிற ஒரு இயற்கை சூழலிருந்து வந்ததுதான் விவசாயம். ஆனால் அந்த விவசாயத்திற்காக வேண்டியும் நாம் காடுகளை அழித்திருக்கிறோம். ஆனால் அது தவறு அல்ல என்பது தாழ்மையான கருத்து. ஆனால் விவசாய நிலத்தை அழித்து தொழிற்சாலைகளை உருவாக்குகிறோம் என்பதுதான் வேதனையானது. ஆனால் இன்றைக்கு விவசாய நிலங்கள் எப்படி மாறிக்கொண்டு வருகிறது என்றால் ஒருபுறம் நம்முடைய விவசாய நிலங்கள் குறுகி வருகிறது. இரண்டாவது நம்முடைய விவசாய முறைகளில் குறைபாடு இருக்கிறது.

vincent nerkaanal13பொதுவாக இந்தியாவைப் போன்ற நாடுகளில் இன்றுகூட விவசாயத்தை அடிப்படையாக வைத்தது பொருளாதாரம்தான் (agree economy). ஆனால் குறைபாடு என்னவாகிவந்தது என்றால், நாம் அதில் கவனம் செலுத்தாமல் தொழிற்சாலை வளர்ச்சி என்ற முறையில் நம்முடைய தவறான நோக்கம், குறிக்கோள் தவறாகப் புரிதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியா ஒரு இயற்கையான நாடு. இந்தியாவில்தான் அனைத்து வகையான தட்பவெப்பநிலையும், அனைத்து வகையான சூழல்களும் இருக்கிறது. உதாரணமாக இந்தியாவிற்கு ஒரு தனித்தன்மை என்னவென்று கேட்டால், அதிக குளிர் பிரதேசமும் இங்கிருக்கிறது, அதிக வளர்ச்சியான சூழலும் இங்கிருக்கிறது, அதிக செழிப்பான சூழலும் இங்கிருக்கிறது. ஆனால் இந்த ஒரு சூழல் எந்த நாட்டுக்கும் கிடையாது. இப்பொழுது ஒரு நாடு அதிகமாக குளிரில் இருக்கிறது என்றால் வெப்பமான இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் வேறு ஒரு இடத்திற்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் இந்தியாவிற்கு அப்படியல்ல. ஒரு குளிர் பிரதேசத்தில் அதிக குளிராக இருக்கிறது என்று நினைப்பவர்கள் வெப்பமான இடத்திற்கு வரக்கூடும், அதேமாதிரி அதிகமாக வெப்பநிலையில் இருப்பவர்கள் ஒரு குளிர் பிரதேசத்திற்கு சென்று நாட்களைக் கழிக்கிற ஒரு சூழல் இன்றைக்கு இந்தியாவில் இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளுக்கு அவர்கள் வேறு நாடுகளுக்கு செல்லக்கூடிய நிலைமை இருக்கிறது. இப்படிப்பட்ட அருமையான சூழல் இருக்கிற பொழுது இந்தியா எப்பொழுதுமே தன்னுடைய விவசாய நாடு என்ற ஒரு சூழலை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் ஆதாரமே விவசாயம்தான். அந்த சூழலை என்றைக்குமே விட்டுவிடக்கூடாது. என்றைக்கு நாம் வேறு ஒரு முறைக்கு மாறுகிறோமோ, அது ஒரு பெரிய ஆபத்தை தரக்கூடிய சூழல் அமையும். அதனால்தான் இன்றைக்கு விவசாயம் என்பது இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பொருளாதாரம், ஒரு முக்கியமான ஆதாரம், மூன்றாவது இயற்கையைப் பாதுகாக்கக்கூடிய ஒரு சூழல் இவைகள் விவசாயத்தினால் நிர்ணயிக்கப்படும். விவசாயத்தில் ஏற்பட்டிருக்கிற ஒரு பெரிய மாற்றம் என்னவென்றால் நம்முடைய விவசாய செய்முறை. நான் ஏற்கனவே சொன்னதுபோல் ஒரு தவறான அணுகுமுறை. அதற்குக் காரணம் ஒருபுறம் நம்முடைய விவசாயத்தால், நம்முடைய கிட்டத்தட்ட 120 கோடி மக்களுக்கு உணவு கொடுக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஒரு தார்மீக பொறுப்பு நம்முடைய அரசுக்கும், நம்முடைய விஞ்ஞானிகளுக்கும், விவசாயிகளுக்கும் இருக்கிறது.

vincent nerkaanal10அதிகம் விளைவிக்கவேண்டும் என்ற அடிப்படையில் சில தவறான அணுகுமுறை செய்துகொண்டிருக்கிறோம். என்னவென்று கேட்டால் நாம் இன்றுகூட எந்த ஒரு சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் பூச்சிக்கொல்லி மருந்து என்ற அடிப்படை. விவசாயத்தில் ஒரு பெரிய மற்றொரு குறைபாடு என்னவென்றால் இந்தியாவைப் பொறுத்தளவில், கல்வியறிவு அற்றவர்கள்தான் விவசாயம் செய்கிறார்கள் என்ற ஒரு தவறான அணுகுமுறை. இன்றைக்கும் சொல்கிறேன் இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என்றால் படித்தவர்களும் விவசாயம் செய்ய முன்வரவேண்டும். I.T படித்துவிட்டு வேலை செய்யவேண்டும் என்று நினைப்பதைவிட, இந்தியர்கள் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், வளமாக இருக்கவேண்டும் என்றால், இந்தியர்களில் படித்தவர்கள் அதிகமாக விவசாயத்தை தொழிலாக ஏற்று செய்ய வேண்டும். ஏதோ ஒரு வேலை தேடி எங்கேயோ ஓடுகிறோம் என்பதை விட்டு, நம்முடைய விவசாயத்தை நிலைநிறுத்திக்கொண்டாலே நம்முடைய இந்தியா வளமான, வல்லரசு நாடாக ஆகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

vincent nerkaanal11நிறைய நேரங்கள் தவறான புரிதல் எப்படி இருக்கிறது என்றால் விவசாயம் என்பது ஒரு லாபத்தைத் தரக்கூடிய தொழிலாக இல்லை என்ற ஒரு சூழல் இருக்கிறது அது உண்மைதான். ஆனால் இஸ்ரேல் போன்ற நாடுகள் பாலைவனத்தை சோலைவனமாக ஆக்கிக் கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில் நம்முடைய சோலைவனத்தை பாலைவனமாக ஆக்கிக்கொள்வதற்குக் காரணம் நம்முடைய அணுகுமுறையில், நம்முடைய மனநிலையில் உள்ள மாற்றம். ஒரு பாலைவனத்தை சோலைவனமாக ஆக்கக்கூடிய ஒரு முயற்சியை, இன்றைக்கு பலநாடுகள் சென்றுகொண்டிருக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில், இந்தியா ஏன் இந்தத் தவறை செய்யவேண்டும். அதனால் பொறுப்புள்ள மனிதர்கள் செய்யவேண்டிய ஒரு வேலை என்னவென்று கேட்டால், இந்தியாவின் இறையாண்மை விவசாயம். நிறைய நேரங்கள் ஒரு தவறான புரிதல் இந்தியா மேல் இருக்கிறது. ஆனால் நம்முடைய விவசாயத்தை சிறப்பாக செய்து லாபகரமாக செய்யக்கூடிய உத்திகளை நம் மக்களுக்கு நம்முடைய பொதுவாக படித்த இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வரவேண்டும். இந்தியா ஒரு இளமையான நாடு. பதினைந்திலிருந்து முப்பந்தைந்து வயதிற்குள்ளே நாற்பது சதவிகிதம் அதிகமாக உள்ள நாடு இந்தியநாடு. மற்ற நாடுகளிலெல்லாம் முதியவர்கள் அதிகம். முதியவர்கள் நமக்கு வழிகாட்டிகள். ஆனால் இந்தியாவில் இருக்கிற நாற்பத்தைந்து விழுக்காடு இளைஞர்களை நாம் ஊக்கப்படுத்தி இச்செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டச்செய்யவேண்டும். பொதுவாக மற்ற பணிகளை செய்யட்டும் ஆனால் அதில் ஒரு பத்து விழுக்காடு இளைஞர்களாவது விவசாயத்தை ஈடுபடுத்திக் கொண்டார்களேயானால் இந்தியாவில் உள்ள இயற்கைத்தன்மை பாதுகாக்கப்படும், நமக்குத் தேவையான உணவு தன்னிறைவு பாதுகாக்கப்படும். மூன்றாவது நம்முடைய இயற்கைவளம் பாதுகாக்கப்படும்.

கேள்வி: காட்டுயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்ன?

vincent nerkaanal1பதில்: நான் முன்பு கூறியதுபோல் காட்டுயிர்கள் ஒரு குறியீடு. விலங்குகள் ஒவ்வொரு இடத்திற்கும் அதாவது தரையில் வாழுகிற விலங்குகள், நிலத்தில் வாழுகிற விலங்குகள், ஏன் ஆகாயத்தில்கூட பறந்து திரிகிற விலங்குகள் எல்லாம் குறியீடுகளாக இருக்கின்றன. ஒரே ஒரு உதாரணம் என்னவென்றால் வல்லூறு(vulture). இவை ஒரு உன்னதமான பணியை செய்கிறது. சில நேரங்களில் மக்கள் மத்தியில் இதைப்பற்றியான ஒரு தவறுதலான புரிதல் இருக்கிறது. அந்த வல்லூறுகளின் புனிதமான தன்மை என்னவென்றால், நிலத்திலோ அல்லது வனங்களிலோ இறந்து கிடக்கிற பொருட்களை விரைவாக சுத்திகரிக்கிற தன்மை இருக்கிறது. ஒரு காலத்தில், இறந்து கிடக்கிற ஒரு விலங்கை, நாம் சென்று வருவதற்குள் அதை இல்லாமல் செய்கிற ஒரு பெரிய திறன் அதாவது சுத்திகரிக்கிற திறன் வல்லூற்களுக்கு இருந்தது. ஆனால் இன்றைக்கு அதனுடைய எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதனால் இன்றைக்கு இறந்து கிடக்கிற விலங்குகளுடைய, மனிதர்களுடைய துர்நாற்றம் தெருக்களில் வருவதால், பல நோய்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்று உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை இருக்கின்றது.

இன்று சார்ஸ் (sars) நோய் என்று சொல்கிறோம், இந்த சார்ஸை அழிக்கமுடியாததனால் தொற்றுநோயை உருவாகிற ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வல்லூறு(vulture) அழிந்துவிட்டதற்குக் காரணம், நம்முடைய உணவுகளில் பூச்சிகொல்லி மருந்து கலந்துவிட்டதுதான். ஏனென்றால் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்து தாவரங்களிலிருந்து, உணவாக விலங்குகளுக்கும் மனிதனுக்கும் செல்லுகிறபொழுது, அதை சாப்பிடுகிற வல்லூறுகள் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறது. அந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் நஞ்சாக மாறியிருக்கிறது. இந்த மாதிரி இறந்து கிடக்கிற விலங்குகளை இயற்கையாகவே சாப்பிடுகிற, அந்த வல்லூறுகள் இன்றைக்கு மறைந்துவிட்டதனால், பெரிய தொற்று நோய்களை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம், இது ஒன்றே உதாரணம். அதனால்தான் இன்றும் காகங்களை இயற்கை தோட்டிகள் என்று சொல்கிறோம். ஆனால் அதற்கும் இந்த மாதிரி நிலைமை வந்துவிடுமோ என்கிற பயம் இன்றைக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. இது ஒரு உதாரணம், இதை வைத்து பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் இந்த ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

கேள்வி: அழிந்துகொண்டிருக்கிற அரிய வகை விலங்குகளையும், தாவரங்களையும் மீட்டெடுப்பதற்கு என்ன வழி?

vincent nerkaanal3பதில்: அழிந்துகொண்டிருக்கிற அரிய வகை விலங்குகளையும், தாவரங்களையும் மீட்டெடுக்கக்கூடிய வழிமுறைகள் நிறைய இருக்கின்றது. ஆனால் அதற்கு விரைந்து செயல்படவேண்டும். அதனால்தான் இன்றைக்கு நான் விஞ்ஞானிகளினுடைய சேவையைப் பாராட்டுகிறேன். இன்றைக்கு நம் ஊரில் பல வகையான நெல் வந்தாலும்கூட, Traditional variety என்ற மரபு சார்ந்த அதாவது ஒரு பரம்பரையாக நம்முடைய மண்ணில் விளைகின்ற பயிர்களுடைய சூழலை நாம் பாதுகாக்க வேண்டும். இன்றைக்கு அதனுடைய Traditional variety என்ற மரபு சார்ந்த பயிர்களை, நாம் பாதுகாத்து வைக்கக்கூடிய ஒரு சூழலுக்கு நாம் வந்திருக்கிறோம். இன்றைக்கு விவசாயிகளும், விவசாயப் பல்கலைக்கழகங்கள் அதை நன்றாக செய்துகொண்டிருக்கிறது. முறையில் பல மாற்றங்களை நமது பயிர்களுக்குக் கொண்டுவந்தாலும்கூட, நாளைக்கு ஒரு பெரிய ஆபத்தை சந்திக்கக்கூடிய ஒரு சூழல் வரலாம். நம் மண்ணுக்கென்று இருக்கின்ற பயிர்களுக்கு ஒரு சக்தி இருக்கிறது, அது வேறு இடத்தில் வளர்ந்தால் அதனுடைய பலனைத் தராது, ஏனென்றால் மண்ணுக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கின்றது. அந்தத் தன்மையில் உள்ள விளைச்சல்தான், நமக்கு பெரிய நிரந்தரமான பொக்கிசம். ஆனால் இன்றைக்கு மக்களுக்கு உணவு தரவேண்டும் என்ற அடிப்படையில், விஞ்ஞான ரீதியாக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பலவற்றை உருவாக்கினாலும்கூட, இவற்றை நாம் அதனுடைய germplasm என்று சொல்வார்கள், அந்த germplasm-ஐ நாம் பாதுகாத்து வைப்பதன் மூலம்தான் நம்முடைய பாரம்பரிய விவசாயம் என்றும் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கும். அதை இன்றைக்கு செய்துகொண்டிருக்கிறோம், அது ஒரு மகிழ்ச்சியான விடயம், அதைத்தான் இன்றைக்கு நாம் செய்யவேண்டும்.

vincent nerkaanal4ஒரு காலத்தில் நாட்டு மாடுகள் இருந்தது, நாட்டுக் கோழிகள் இருந்தது, ஆனால் இன்றைக்கு பிராய்லர் என்று வருகிறது, இதை நான் மறுக்கவில்லை, ஆனால் அந்த உணவு தன்னிறைவை கொடுத்திருக்கிறதே தவிர, சுகாதாரமாக மாறியிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இன்றைக்கு விலங்குகள் பல்கலைக்கழகங்கள் அனைத்தும், இயற்கையான சூழலைப் பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பூச்சிகொல்லி மருந்து சேர்த்து செய்த விவசாயம், செயற்கை உரத்தைப் சேர்த்து செய்கிற விவசாயங்கள், எப்படி மீண்டும் ஒரு இயற்கை விவசாயத்திற்குத் திரும்பியிருக்கிறதோ, அதுவே ஒரு பெரிய மாற்றம். இது மாதிரியான ஒரு நல்ல சூழலை வெகுவிரைவில் கொண்டு வருகிறபொழுது, நிச்சயமாக நம் இயற்கையும் பாதுகாக்கப்படும், நம் இயற்கையினுடைய வளங்களும் பாதுகாக்கப்படும், நம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பொருட்களும் தொடர்ந்து கிடைக்கும். இல்லையென்றால் ஒரு பெரிய அழிவு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

கேள்வி: இயற்கை சீற்றம் வருவதை முன்பே அறியும் சக்தி விலங்குகளுக்கு உண்டா?

vincent nerkaanal5பதில்: நான் எப்பொழுதுமே சொல்கிற விடயம் என்னவென்றால், இயற்கை மொழியை எந்தவொரு மனிதனோ, எந்த ஒரு நாடோ புரிந்து வைத்திருந்தால், அந்த நாட்டிற்கு இயற்கை சீர்கேடு, இயற்கை சீற்றம் வராது. வந்தால்கூட அதை புரிந்துகொண்டு பாதுகாக்கிற தன்மை உருவாகிவிடும். என்னைப் பொறுத்தளவில் இயற்கையினுடைய மொழிக்கென்று ஒரு பாடம் வைக்கவேண்டும். இயற்கை பேரிடை மேலாண்மை (disaster preparedness) என்று சொல்கிறோம், ஆனால் விலங்குகளை வைத்துக்கொண்டு அந்த மேலாண்மையை செய்துவருகிறோம். அதனுடைய மொழிகளை புரிந்துகொள்ளவேண்டும்.

vincent nerkaanal6இன்றுகூட பெரிய ஆதாரம் இருக்கிறது, சுனாமி வருகிற பொழுது கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே விலங்குகள், அதிலும் சிறப்பாக யானைகள் அந்த மாதிரி வரக்கூடிய, வாய்ப்பு கூடிய இடத்திலிருந்து மேல்நோக்கி உயரமான இடத்திற்கு சென்றிருக்கிறது. ஏனென்றால் அதனுடைய கால்களில் இருக்கிற அதிர்வுகளைப் புரிந்துகொண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்கிறது, ஆனால் அந்த மொழியை நாம் புரிந்துகொள்ள முடியவில்லையே. அதனால்தான் ஆறறிவு படைத்த மனிதன் என்று நாம் சொன்னாலும்கூட, இயற்கையினுடைய மொழியை புரிந்துகொள்ளுகிற ஒரு சூழலை, ஒரு புது உத்தியை உலகம் முழுவதும் படித்துக்கொள்ளவேண்டும். இனிமேல் நம்முடைய மக்களுக்கும், நாட்டுக்கும் போர் மூலம் தீமை வருகிறதோ இல்லையோ, ஆனால் நம்முடைய இயற்கை சீற்றம் சில நேரங்களில் சில பாதிப்புகளை நமக்கு உருவாக்கிக்கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் அதாவது நாம் இயற்கையைக் கெடுத்ததினால் வரக்கூடிய சீற்றத்தினால் வரக்கூடிய அந்த பாதிப்புகளை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமென்றால் இயற்கை மொழிகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

கேள்வி: மனித குலத்திற்கு பூச்சிகள் செய்யும் நன்மைகள் என்ன?

vincent nerkaanal7பதில்: இன்றைக்கு விலங்கு இராச்சியம் (animal kingdom) என்று சொல்கிறோம். எப்படியென்றால் animal kingdom என்றால் protozoa to mammals.   இந்த mammals -ல்தான் நாம் வருகிறோம். protozoa என்பது ஒரு செல் உயிரி, அமீபா என்று சொல்வோம். இது எவ்வளவோ இருந்தாலும்கூட, 75 விழுக்காடு இந்த உலகத்தை ஆக்கிரமித்துக் கொள்வது பூச்சிகள். மீதம் 25 விழுக்காடுதான் மனிதனாகவும், யானைகளாகவும், மான்களாகவும், மீன்களாகவும் இருக்கிறது. 75 விழுக்காடு என்பதிலிருந்து நமக்குப் புரிகிறது, அந்த பூச்சிகள் நமக்கு முக்கியமான தேவைகள் என்று. எப்படி விலங்குகளுக்கு உரிமை இருக்கிறதோ, அதேபோல் பூச்சிகள் பல சேவைகளை செய்துகொண்டிருக்கிறது. அதற்கு ஒரே ஒரு உதாரணம், இன்று தேனீக்களைப் பற்றி பல உதாரணங்கள் பேசுகிறோம், நமக்குத் தேவைப்படுகிற தேனை சேகரித்துக் கொடுக்கிறது. ஆனால் அது செய்கிற பணி நமக்குத் தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை. மகரந்தத்தை எடுக்கிறது, அதனுடன் தேவையான அனைத்தையும் சேர்த்து, தேனாக மாற்றி கொடுக்கிறது. அது நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.

vincent nerkaanal9அதே நேரம் கொசுவும் இருக்கிறது, ஆனால் இந்த கொசு ஏன் இருக்கிறது என்றால், அது இயற்கை சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எங்கே மாற்றம் ஏற்படுகிறதோ, சுற்றுச்சூழல் சரியில்லை என்றபொழுதுதான் அதனுடைய செயல்பாடு மாறிவிடுகிறது. ஏனென்றால் கொசுக்களை எடுத்துக்கொண்டால் அது தாவரத்திலுள்ள நீரை மட்டும்தான் உறிஞ்சிக்கொள்ளக்கூடியது. ஆனால் சுற்றுச்சூழல் மாற்றத்தில் கொசுவே இரண்டாக அதனுடைய செயல்பாடு மாறுகிறது. தாவரத்தினுடைய நீரை குடிப்பதற்கும், மனிதனுடைய இரத்தத்தைக் குடிப்பதற்கும், இது அங்கே ஏற்படுத்தப்பட்ட மாற்றம். தாவரத்தின் நீரைக் குடிப்பது ஆண்கொசு என்றும், மனிதனின் இரத்தத்தைக் குடிப்பது பெண் கொசு என்றும் குறிக்கிறார்கள். ஆனால் அது அங்கு நடந்த மாற்றம். அனாஃபலிஸ் என்ற கொசு உருவாவதற்குக் காரணம் என்ன? நாம்தான். இன்றைக்கு டெங்கு என்ற நோயை சொல்கிறோம், இன்றைக்கு அது அதிகமாகவே பரவிக்கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் ஏடிஸ் என்று சொல்லப்படுகிற ஒரு வகை கொசு.

vincent nerkaanal11இந்தியா போன்ற விவசாய நாடுகளுக்கு, பூச்சிகள் மிகவும் முக்கியம். ஒரு அருமையான விவசாயத்தைக் கொடுக்கக்கூடிய, அதிக விளைச்சல் திறனைக் கொடுக்கக்கூடியது மகரந்த சேர்க்கைதான். அந்தசெயல் பூச்சிகள் இல்லாமல் முடியாது. ஆனால் அதை சரியாக மேன்மைப்படுத்தாதனால்தான் இன்றைக்கு என்ன குழப்பம் வந்திருக்கிறது என்றால், பூச்சிகளும் பூச்சிகொல்லி மருந்துகளும் இரண்டுக்கும் ஒரு பெரிய போட்டியாக மாறி, நன்மை பயக்கக்கூடிய பல பூச்சிகள் நம்மை விட்டு சென்றுவிட்டதனால், தீமை தரக்கூடிய பூச்சிகள் அதிகமாகியிருக்கிறது, இதுதான் இன்றைக்குக் காரணம். என்னைப் பொறுத்தளவில் நல்லபூச்சி, கெட்ட பூச்சி என்று சொல்ல முடியாது. இயற்கையினுடைய சூழலுக்கு ஏற்றாற்போல் அதனுடைய பயன்பாட்டைத் தரக்கூடிய அளவிற்குத்தான் அந்த பூச்சிகள் இருக்கிறது. பாம்பில் நஞ்சு இருக்கிறது, அது மனிதனை கொத்தவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை. அது காடுகளைச் சென்று சேருகிற பொழுது தனக்கு ஏற்படுகின்ற சில தீங்குகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு, ஒரு பாதுகாப்பு உத்தியாகத்தான் பயன்படுத்துகிறது. அனைத்துமே நன்மை தரக்கூடியதுதான். தீமை தரக்கூடியது என்று நாம் எப்பொழுது சொல்கிறோம் என்றால், அங்கே நடந்திருக்கிற செயல்பாட்டில் வித்தியாசம் இருக்கும்பொழுதுதான்.

கேள்வி: விவசாயிகள் உணவு உற்பத்தியில் முதல் மற்றும் இரண்டாம் தர உணவுகளை அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்துவிட்டு மூன்றாம் தர உணவுகளை பயன்படுத்தும் பழக்கத்தை குறைக்க என்ன செய்யவேண்டும், இதனால் எதுவும் பாதிப்பு உள்ளதா?

vincent nerkaanal12பதில்: விவசாயத்தில் விளைச்சலுக்கு ஏற்ற ஒரு லாபகரமான தொழிலாக உருவாக்கக்கூடிய ஒரு உத்தியை இந்தியா உடனடியாக செய்யவேண்டும். விவசாயம் செய்பவர்களை எக்காரணம் கொண்டும் சோர்வடையச் (discourage) செய்யக்கூடிய ஒரு சூழலுக்கு தள்ளிவிடக்கூடாது. அரசாங்கம் இந்த மாதிரி ஒரு உத்தியை செய்கிற பொழுது, வெளிநாட்டுக்கு அனுப்புகிற ஒரு பழக்கம் குறைந்து, நம் மக்களுக்கு முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம், நான்காம் தரம் என்று ஆகிக்கொண்டிருக்கின்ற காலகட்டத்தை தடுத்து நம் மக்களுக்கு, அந்த விளைச்சலுக்கு ஏற்ற பொருட்களுக்கு உண்டான லாபம் கிடைக்கக்கூடிய பணியை அரசு முனைப்போடு செய்யவேண்டும், அதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தனிக்கவனம் செலுத்துகிற பொழுது நிச்சயமாக இந்த மாதிரி குறைபாடுகள் வரும். ஏனென்றால் தரமுள்ள பொருட்களை அவர்கள் ஏற்றுமதி செய்வதற்குக் காரணம், அதிக பொருளை ஈட்டுவதற்கு. அவர்கள் மேல் குறைபடுவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் நீங்கள் அதே நேரத்தில் அவர்களுடைய விளைச்சலுக்கு ஏற்ற லாபம் தரக்கூடிய வகையில் கொள்முதல் செய்கின்ற ஒரு சூழலை நம் அரசு உருவாக்கித் தருகிற பொழுது நிச்சயமாக அதில் ஒரு பெரிய மாற்றம் வரும். அதன் மூலம் தரமான பொருட்கள் தரமாக இந்தியனுக்குக் கிடைக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

கேள்வி: எந்தெந்த பொருட்கள் கார்பன்டை ஆக்ஸைடை அதிகம் உருவாக்குகிறது? இவற்றைத் தவிர்க்க என்ன வழி?

vincent nerkaanal14பதில்: உலகம் முழுவதும் ஒரு நல்ல உத்தி உருவாகியிருக்கிறது. கார்பன் trading என்று சொல்வார்கள், அதாவது கார்பனை உருவாக்கக்கூடிய பொருட்களைக் குறைப்பது. இன்றைக்கு வாகனங்களை எடுத்துக்கொண்டால், எல்லாமே கிட்டத்தட்ட smoke free என்ற வாகனம் வந்துகொண்டிருப்பதற்குக் காரணம் green technology. பசுமை தொழில்நுட்பங்களை உருவாக்குகிற பொழுது கார்பன் குறைப்பு ஏற்படும் இது ஒன்று, இரண்டாவது நம் வீடுகளில் பயன்படுத்துகிற பொருட்கள் இன்னும் சொல்லவேண்டும் என்றால், உண்கிற உணவு அதைத்தான் சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் நாட்டில் விளைகின்ற பொருட்களை உண்கிற பழக்கத்தை வைத்துக்கொண்டாலே இந்தத் தொல்லை வராது. தேவையற்ற முறையில், ஒரு நாகரிகமற்ற பெயரில் இந்த மாதிரி சில தேவையற்ற உணவுகளை உண்கிற பழக்கவழக்கம், நமக்கு பெரிய சிக்கலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது, இது உண்மை. இதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது, நம்முடைய இடத்தில் விளைகின்ற பொருட்கள் எதையும் ஒதுக்கிவிடாமல், சாப்பிட்டு அதற்கு ஏற்றாற்போல் வாழ்க்கை முறையை பயன்படுத்துகிற ஒரு சூழலை உருவாக்குகிற பொழுது, இந்த கார்பன் பிரச்சனை குறைக்கப்பட்டு, அதனால் நம்முடைய global warming என்று சொல்லப்படுகிற உலகம் வெப்பமயமாக்கல், நம்முடைய நாட்டை எந்தக் காரணத்தைக்கொண்டும் தாக்காமல் இருக்கும்.

vincent nerkaanal21ஒவ்வொரு நாடு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் இதில் அதிகமாக கவனம் செலுத்தவேண்டும். ஏன் ஆடையிலும் கூட தவறாக பயன்படுத்தினால், அதிகமாக கார்பன் வெளியே வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் நாம் பயன்படுத்துகிற அதிகமான பேப்பர். எதையுமே அதிகமாக விரயமாக்குவதால்தான் கார்பன் அதிகமாக உருவாகிறது. எந்தவொரு நாடு அதிகமாக வீணாகிற பொருட்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறதோ, அந்த நாட்டிற்கு பெரிய தர்மசங்கடம் காத்துக்கொண்டிருக்கிறது. e-waste என்று இன்று சொல்கிறார்கள், இன்றைக்கு பல கணினி வருகிறதுமே இதற்கு ஒரு காரணம். ஆனால் ஒவ்வொரு சூழலும் இன்றைக்கு மாறிவருகிறது, பல மாற்றங்கள் வருகிறது. ஒரு காலத்தில் குளுரோஃப்ளோரோ கார்பன் அடங்கிய Air-condition வைத்திருந்தோம், இன்றைக்கு அதை மாற்றியிருக்கிறார்கள். இந்த மாதிரியான மாற்றங்களும் ஒருபுறம் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் எப்பொழுதுமே ஒரு தனிநபராக இதற்கு நம்முடைய மேலான உதவியை செய்கிற பொழுது, நிச்சயமாக இந்த கார்பனால் வரக்கூடிய பெரிய ஆபத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

கேள்வி: இளம் விஞ்ஞானி என்ற கௌரவம் உங்களின் எச்சாதனைக்காக வழங்கப்பட்டது? அதைப்பற்றிக் கூறுங்கள்?

vincent nerkaanal16பதில்: பொதுவாக Young Scientist Awardஎன்று சொல்லப்படுகிற இளம் விஞ்ஞானி விருது என்னுடைய ஆராய்ச்சிப் பணிகளிலே ஒரு திருப்பு முனையாக அமைந்தது. பொதுவாக இளைஞர்களுக்கு ஊக்கம் தேவைப்படுகிறது என்பதை இதிலிருந்து நான் புரிந்துகொண்டேன். ஆராய்ச்சிகள் பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடியதாக இருக்கிறது. இதன் அடிப்படையில் என்னுடைய சில ஆராயச்சிகள் ஒரு தீர்வு தரக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான், என்னை அங்கீகரித்து இந்த தமிழ்நாடு அரசிலிருந்து Young Scientist Awardஎன்ற இளம் விஞ்ஞானி விருது எனக்கு வழங்கப்பட்டது. அதனுடைய முத்தாய்ப்பாக என்னுடைய பணிகள் எப்பொழுதுமே ஏதாவது ஒரு பிரச்சனையில் தீர்வு தரக்கூடியதாக, அனிச்சை செயலாகவே மாறிவிட்டது. அதில் ஒன்று எனக்குக் கிடைத்த அங்கீகாரம் ஒருபுறம், அடுத்து அதனால் ஏற்பட்ட பொறுப்புணர்ச்சி, மூன்றாவது நம்முடைய முயற்சியால் நம்முடைய விஞ்ஞான அறிவால் நல்ல ஒரு தீர்வைக் கொடுக்கக்கூடிய ஒரு காலகட்டம். அதனடிப்படையில் என் ஆராய்ச்சி மூலம் online prediction என்று சொல்லப்படுகிற vector borne diseases. இன்று மலேரியா, டெங்கு போன்ற பல நோய்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த நோய்களைப் பற்றி, பரவுதலைப்பற்றி அதிகம் புரிதல் பொதுவாக இருப்பதில்லை. ஏனென்றால் ஒரு நோய் உருவாகியிருக்கிறது என்றால் அது எங்கு உருவாயிற்று, எப்படி உருவாயிற்று, ஏன் என்று புரிந்துகொள்வதற்கே ஒரு வருடமாகிவிடுகிறது. அதற்குள் பலர் மடிந்துவிடுகிறார்கள்.

vincent nerkaanal17நாங்கள் எங்களது ஆராய்ச்சி மூலம் இதற்கு முன்பு ஏற்பட்ட அனைத்து விடயங்களையும் புரிந்துகொண்டு, இன்றைக்கு தமிழ்நாட்டில் எந்தெந்த இடத்தில் எந்த மாதிரியான நோய்கள் உருவாகியிருக்கிறது, எங்கே அதிகம் உருவாகிறது, எந்தப் பகுதியில் அதிகமாக இருக்கும் என்று ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொடுத்ததின் விளைவாக, health sector என்று சொல்லப்படுகிற சுகாதாரத் துறையிலே மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் விரைவாக தொற்றுநோய்களை குணப்படுத்துகிற, அதை மட்டுப்படுத்துகிற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இதை இந்திய அரசாங்கமே மிகவும் அதிகமாக பாராட்டி இந்தப் பணியை, ஆராய்ச்சியை மற்ற மாநிலங்களுக்கும் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு பேராசிரியராக மாணவர்களுக்கு போதிப்பதோடு இல்லாமல், சமூகப் பொறுப்பை உணர்த்துவதோடு இல்லாமல், நாட்டிற்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் உதவவேண்டும் என்ற மனப்பான்மையோடு, ஒரு சமூகச் சிந்தனையோடு ஒரு பேராசிரியர் இருக்கவேண்டும், அதனால் பல நன்மைகள் உருவாகும் என்பது என்னால் அசைக்கமுடியாத நம்பிக்கை இருப்பதனால்தான் என்னுடைய பணிகள் சிறப்பாகப் சென்றுகொண்டிருக்கிறது. அதற்குக் கிடைத்த அங்கீகாரம்தான், அதைத் தொடர்ந்து, பல விருதுகள் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் விருது கிடைத்திருக்கிறது.

vincent nerkaanal19ஆராய்ச்சிகள் மூலமாகவும், மாணவர்களை வைத்துக்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது என்கிற பழக்கத்தை, அந்த கலாச்சாரத்தை ஒழித்ததற்காக வேண்டியும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது கிடைத்தது. அடுத்து இப்பொழுது இந்தியாவிலுள்ள முக்கியமான அறிவியல் குழுமம் என்னை இரண்டு இடத்தில் உறுப்பினராக இணைத்து என்னை இந்தியாவினுடைய ஒரு நல்ல விஞ்ஞானி என்ற அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும்கூட, இது ஒரு உத்வேகம். மற்றொன்று நமது பணியை மேலும் மேலும் மேன்மைப்படுத்துவதற்கு, அதோடு மக்களுக்கு நம்முடைய ஆராய்ச்சி, நம்முடைய அறிவு பயன்படவேண்டும் என்ற ஒரு நல்ல குறிக்கோளையும் எனக்கு தந்திருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சியான விடயம்.

கேள்வி: உங்களது ஆராய்ச்சியின் அடுத்த கட்டம் என்ன?, எதைநோக்கி நீங்கள் சென்றுகொண்டிருக்கிறீர்கள்?, உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?

பதில்: என்னைப் பொறுத்தவரையில் சுற்றுச்சூழலை அடிப்படையாக வைத்து சுற்றுச்சூழல் நலம், சுகாதாரம், மனித நலம் இந்த மூன்றை அடிப்படையாக வைத்து என்னுடைய ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதில் பல மாற்றங்களையும் பார்த்துக் கொண்டிருப்பதனால், இந்தியாவை ஒரு காலத்தில் ஒரு சிறந்த சுற்றுச்சூழல் நாடாக, இந்தியர்கள் ஒரு சுகாதாரமான, ஒரு உடல்நலத்தோடு, மனநலத்தோடு வாழக்கூடிய வாய்ப்புக்கு என் ஆராய்ச்சிகள் பயன்படவேண்டும் என்ற ஒரு தேடுதல் இருந்துகொண்டே இருக்கிறது.

கேள்வி: தற்காலச் சூழலில் அறிவியல் படிப்பது எந்த அளவிற்கு அவசியம்?

பதில்: எந்த ஒரு நாடும் இன்று வளர்ந்திருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம், அவர்கள் அறிவியலில் வல்லுனர்களாக இருக்கின்றார்கள். மற்றொன்று இன்று பல சமூக கேவலங்களுக்குக் காரணமாக இருப்பதே அறிவியல் சிந்தனை இல்லாமை, பல மூடநம்பிக்கைகளுக்குக் காரணமே அறிவியல் அணுகுமுறை இல்லாமை. இது இந்தியாவிற்கு இன்று அதிகமாகத் தேவைப்படுகிறது. அதனால் அறிவியலை அதிகமாக மாணவர்கள், இளைஞர்கள் எடுத்து படிக்க படிக்க படிக்க நம் நாட்டிலுள்ள சமூக அவலங்கள் ஒழிந்துபோகக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

கேள்வி: தமிழ்ச் சமுதாயத்திற்கு தாங்கள் கூற விரும்பும் கருத்து என்ன?

vincent nerkaanal22பதில்: தமிழ்ச் சமுதாயம் பல மரபுகளையும், பல பண்பாடுகளையும் கொண்டிருக்கிறது. என்னுடைய ஆசை என்னவென்றால் தமிழர்கள் சிறப்பாக, சிறந்த சிந்தனையாளராக, சிறந்த சமூக காவலர்களாக, சிறந்த மனிதர்களாக உருவாவதற்கு சில பண்பாடுகள் அவர்களுக்கு இருக்கிறது. அதை மேன்மைப்படுத்தி ஒரு ஒருங்கிணைப்போடு இந்த உலக சமுதாயத்திற்கு, தமிழர்கள் பிறருக்கு சிறந்த காவலர்களாக இருப்பார்கள் என்ற ஒரு சூழலை உருவாக்குவதோடு இல்லாமல், பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக எப்பொழுதும் அவர்கள் மேலானவர்கள் என்பதை சுட்டிக்காட்டக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதனால், அதை பயன்படுத்தி வெளிஉலகத்திற்கு இதை காட்டுகிற பொழுது நம் தமிழ்ச் சமுதாயத்தின் பெருமையை உலகறியச் செய்யலாம். மற்றொன்று மனித நேயம் அதிகமானவர்களாக அவர்கள் திகழ வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசை. ஏனென்றால் அவ்வளவு பண்பாடும், கலாச்சாரமும் இன்றைக்கு இருந்துகொண்டிருக்கிறது. அதை ஒருங்கிணைப்பு செய்கிற பணியை செய்யவேண்டும், நன்றி!

சிறகிற்காக நேர்காணல் அளித்தமைக்கு மிக்க நன்றி.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் வின்சென்ட் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது