மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: வெள்ளச் சேதத்திற்கு முக்கியக் காரணமா?

சா.சின்னதுரை

Dec 12, 2015

sembarambaakkam3சென்னையை மட்டும் இல்லாமல், தமிழகத்தையே கதி கலங்க வைக்கும் பெயராகிவிட்டது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் மிகவும் பெரியது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் இந்த ஏரியின் கொள்ளவு 3,645 மில்லியன் கன அடி.  அதன் உயரம் 24 அடி. இதன் உபரிநீர் வெளியேறும் இடத்தில் உருவாகிறது அடையாறு ஆறு. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரானது அடையாற்றில் இணைந்து மணப்பாக்கம் தொடங்கி திருநீர்மலை, நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரத்தில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது.

சென்னையிலும், அதைச்சுற்றியுள்ள ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையின் அளவைக் கணக்கில் கொண்டு பார்த்தால் எந்த ஒரு நீர்நிலையையும் கட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமற்ற ஒன்று தான். ஆனால், சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு ஏரிகளின் நீர்மட்டத்தை நிர்வகித்து இருந்தால் சென்னைக்கு ஏற்பட்ட சேதத்தை குறைத்தியிருக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.

சர்வதேச வானிலை மையம் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே எச்சரித்திருந்தது. சென்னையில் வரலாறு காணாத அளவில் மழை பெய்யும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தமிழக அரசை எச்சரிக்கை செய்ததாக அதன் இயக்குனர் சிவன் கூறியிருக்கிறார்.

இந்த எச்சரிக்கை கிடைத்த பிறகாவது ஏரிகளில் உள்ள நீரை படிப்படியாக குறைத்து அடுத்த மழையில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் ஒரே நேரத்தில் அடையாறு ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் ஓடியிருக்க வாய்ப்பு இருந்திருக்க முடியாது. ஆனால், அதை செய்யத் தவறியதால் தான் சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.

நவம்பர் 26 முதல் 29-ம் தேதி வரை சென்னை சுற்று வட்டாரத்தில் அதிகளவு மழை இல்லை. இந்த சமயத்தில் செம்பரப்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டால், அது குறைந்த அளவாகவே இருந்திருக்கும். அப்போது அடையாற்றில் வெள்ளமும் இல்லை. ஆனால் இதனை அதிகாரிகள் செய்யவோ அல்லது ஏரி திறப்பு விடயத்தில் முடிவெடுக்காமலோ தாமதப்படுத்தியுள்ளனர்.

sembarambaakkam1டிசம்பர் மாதம் 1-ம் தேதி மாலை 5 மணி அளவில், செம்பரம்பாக்கம் ஏரி, முழு கொள்ளளவை எட்டும் நிலைக்கு சென்றது. இந்நிலையில், ‘செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், விநாடிக்கு 7,500 கன அடி நீர் வெளியேற்றப்படலாம் என்பதால், அடையாறு ஆற்றுக்கு அருகில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’  என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அவசர செய்திக்குறிப்பு வெளியிட்டார். ஆனால், அச்செய்திக்குறிப்பு ஊடக அலுவலகங்களுக்கு வருவதற்கு நீர் திறப்பின் அளவு 10,000 கன அடியைத் தாண்டி விட்டது. இந்த செய்தி ஊடகங்களில் வெளிவருவதற்குள் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 34,000 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

அதிகாரப்பூர்வமாக இந்த அளவு கூறப்பட்டாலும், உண்மையில் வினாடிக்கு 60,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.  மற்ற இடங்களில் பெய்த மழை நீரும் அடையாற்றில் கலந்ததால் சென்னையை தொடும்போது ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்ததாகவும், சேதம் அதிகரிக்க இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அடையாறு ஆற்றின் மொத்த கொள்ளளவு 40,000 கன அடி. ஆனால் அந்த இரண்டு நாட்களில் ஆற்றில் ஓடிய வெள்ளத்தின் அளவு 60,000 கன அடி. அடையாறு இத்தகைய கன அடி நீரை தாங்குமா? அடையாறு ஆற்றின் கரைகளில் எந்த பகுதிவரை வெள்ளம் பாயும்? என்பதெல்லாம் கணக்கிடப்பட்டு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா? என்பதுதான் இப்போது எழுப்பப்படுகிற கேள்வி.

sembarambaakkam4டிசம்பர் 2-ம் தேதி, காலையே அடையாறு ஆற்றை சுற்றி சுமார் ஏழு கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த, பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கத்தொடங்கியது. மதியம், வெள்ள நீர் வீடுகளுக்குள் செல்லத்தொடங்கியது. குன்றத்தூர், மாங்காடு, பம்மல், அனகாபுத்தூர், மணப்பாக்கம், விமான நிலையம், சைதாப்பேட்டை, கிண்டி, கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், அசோக் நகர், நந்தனம், கோட்டூர்புரம் உள்பட பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு கிடந்தன. இந்த பகுதிகளில் வசித்து வந்த மக்கள் தங்கள் வாழ்க்கையிலேயே சந்தித்திராத அளவிற்கு வேதனையை அனுபவித்தார்கள். மின்சாரம் கிடையாது, தூக்கம் கிடையாது , உணவு கிடையாது, குழந்தை குட்டிகளுடன் சென்னை மக்கள் சந்தித்த வேதனைகள் குறித்து விவரிக்க வார்த்தைகளே இல்லை மக்கள் மாடிகளில், பாதுகாப்பான இடங்களில்  தஞ்சம் புகுந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இது குறித்து சென்னை வளர்ச்சி ஆய்வுக் கழக பேராசிரியர் ஜனகராஜன் கூறுகையில், ‘இந்த அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்க முடியும். செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே நீர் இருப்பைக் குறைத்திருக்கலாம். அதைச் செய்யாமல் விட்டதால் தான் பெரிய பாதிப்பு ஏற்பட காரணமாகி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை அரசு தனியான ஒரு நீர்த்தேக்கமாக மட்டும் கருதக்கூடாது. அந்த ஏரி அடையாறு ஆற்றோடு மட்டுமின்றி மேலும் தோராயமாக 200 நீர்நிலைகளோடு தொடர்புடையது. அதனால்தான் விநாடிக்கு 33,500 கன அடி நீரை அங்கிருந்து திறந்துவிட்டாலும் கூட, அந்நீர் சைதாப்பேட்டையை அடையாறு வழியாக அடையும்போது 60,000 கன அடியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நிர்வாகத்துக்கு இந்த இயல்பான நிகழ்வு தெரிந்து தொலைக்காததால் மக்கள் அதற்கான விலையை தந்திருக்கிறார்கள்” என்கிறார் அவர்.

sembarambakkam2சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் ஏரி, குளம், ஆறு என்று உத்தேசமாக 3,600 நீர்நிலைகள் உண்டு. இவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக (நதிநீர் இணைப்பு மாதிரி) செய்துவிட்டால் தோராயமாக 30 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை இவற்றில் தேக்க முடியும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் வராமலும் எதிர்காலத்தில் காக்க முடியும் என்கிற யோசனையையும் ஜனகராஜன் முன்வைக்கிறார்.

இந்த பேரழிவின் விளைவு இவ்வளவு மோசமாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மக்களுக்கு, குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எவ்வித வழிகாட்டுதலோ எச்சரிக்கையோ விடுக்கப்படவில்லை. சில பகுதிகளில் மட்டுமே, காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம், வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பெரும்பாலான மக்களுக்கு இதைப் பற்றிய எந்தவொரு தகவலும் தெரியாமல், தங்கள் வீடும், உடைமைகளும் கண் முன்னரே மூழ்குவதை பார்த்து கொண்டிருந்துதான் சோகம்.

தமிழக பொதுப்பணித்துறையிடம் நீர் தேக்க நிர்வாகம் குறித்த அறிவியல்பூர்வ அணுகுமுறை இல்லை என்பது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட நிகழ்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த அணுகுமுறையை மாற்ற, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: வெள்ளச் சேதத்திற்கு முக்கியக் காரணமா?”

அதிகம் படித்தது