மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சோவியத் ஒன்றியத்தில் பஞ்சம்

இராமியா

May 14, 2022

Siragu soviyath ondriyaththil panjam

ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்று, பெரும் தொழிற்சாலைகள் அனைத்தும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. விவசாய நிலங்களும் விவசாயத் தொழிலும் இன்னும் அரசின் கட்டுப்பாட்டில் வரவில்லை. எப்படிக் கொண்டு வருவது என்று தோழர்கள் சிந்தித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் தான் விவசாயிகளின் பிரதிநிதிகள் லெனினைச் சந்தித்தனர். தங்களுக்கு இந்த அரசின் கொள்கைகள் புரியவில்லை என்றும், தங்களைப் பழைய வழியிலேயே செயல்பட அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டனர். அதாவது நிலம் தங்கள் கைகளிலேயே இருக்க வேண்டும் என்றும், தானிய விளைச்சலில் ஒரு பகுதியை வரியாகச் செலுத்தி விடுவதாகவும் கூறினர். லெனின் ஒரு கணம் யோசித்தார்.

தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டன என்றாலும், அவற்றை நிர்வகிக்கும் பயிற்சி அளிக்கும் சிரமமான பணி அவர் முன் மண்டிக் கிடந்தது, இந்நிலையில் விவசாயிகளையும் புதிய அமைப்புக்கு அணியப்படுத்தும் பணியைச் செய்யப் போதுமான தோழர்கள் இல்லை. ஆகவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வது மற்ற பணிகளைச் செய்யும் வாய்ப்பை அதிகரிக்கும் என நினைத்தார். அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, விவசாயத்தைப் பொறுத்த மட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை ஒன்றை வெளியிட்டார். அதன் படி நிலம் அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்று ஏற்கனவே இயற்றப்பட்ட அரசாணையின் கிளை விதியாக விவசாய நிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலங்களைத் தங்கள் உரிமையாக வைத்துக் கொள்ளலாம். அரசுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு வரியாகச் செலுத்த வேண்டும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சில ஆண்டுகள் சென்ற பின், சோஷலிச அரசு நன்கு வலுப் பெற்ற பிறகு, 1930களில் ஸ்டாலின் விவசாயிகளிடையே கூட்டுப் பண்ணைகள் பற்றியும் அதனால் விளையக் கூடிய நன்மைகள் பற்றியும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். இப்பிரச்சாரம் நிலமற்ற விவசாயிகள் மற்றும் குறுநில விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைக் கண்டு அரண்டு போன பெரிய நிலக்கிழார்கள் தங்களுடைய ஆதிக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சி உள் நாட்டு வெளிநாட்டு எதிர்ப் புரட்சியாளர்களுடன் சேர்ந்து, தங்கள் நிலங்களில் விளைச்சல் சரியில்லை என்று பொய் சொல்லி வரி கொடுக்காமல் அரசை ஏமாற்ற முனைந்தனர். அவ்வாறு செய்து நாட்டில் செயற்கையான பஞ்சத்தைத் தோற்றுவித்து சோவியத் அரசை நிலைகுலைய வைக்க முனைந்தனர். இதனால் வெகுண்ட ஸ்டாலின் பெரும் நிலக்கிழார்கள் மேல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.

ஸ்டாலினின் பெரும் நிலக் கிழார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் கடுமையாகவே இருந்தன. அவர்கள் ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி என்றும் மக்களைப் பட்டினி போட்டுக் கொல்கிறார் என்றும் கூக்குரல் இட்டனர். வெளி நாட்டு முதலாளித்துவ ஊடகங்களும் அவர்களுக்குத் துணையாய் வன்மத்தைக் கக்கின. சோவியத் ஒன்றியத்தின் தவறான பொருளாதாரக் கொள்கையால் ஸ்டாலின் சோவியத் மக்களைப் பட்டினி போடுகிறார் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தன. கெட்டிக்காரனின் பொய்யும் புளுகும் எட்டு நாள் தான் தாங்கும் என்பார்கள்.

முதலாளித்துவ ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரம் கூடிய விரைவில் முடிவுக்கு வந்தது. இவர்களுடைய பொய்ப் பிரச்சாரச் சாயத்தை வெளுக்க வைக்கவே வந்தது போல் வெடித்த பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் பஞ்சத்தை ஏற்படுத்தியது. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பது பழமொழி; ஆனால் முதலாளித்தவ ஊடகங்களின் நிலையோ சொக்கத் தங்கத்தைப் பார்த்துப் பித்தளை இளித்த நிலை போல் ஆயிற்று. இது வரைக்கும் சோவியத் ஒன்றியம் ஒரு பேய், பூதம் என்று முதலாளித்துவ ஊடகங்கள் உருவகித்து வைத்து இருந்த பொய்யை நம்பி அதன் பக்கம் திரும்பிப் பார்க்காமலேயே இருந்த அறிவு ஜீவிகளை முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருந்த பஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்படிப் பார்த்தவர்களுள் ஒருவர் தான் கான்டர்பெரி ஆர்ச் பிஷப் ஹெவலட் ஜான்சன் (Hewlett Johnson). அவர் நிச்சயமாக ஒரு பொதுவுடைமைவாதி அல்ல என்பதுடன் ஒரு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையாளரும் புரொட்டஸ்டன்ட் கிருத்துவ மதத் தலைவரும் ஆவார்.

உலகம் முழுவதும் பஞ்சம் தலைவிரித்து ஆடிய போது சோவியத் ஒன்றியம் மட்டும் தப்பியது எப்படி? அவர் சோவியத் ஒன்றியம் சென்றார். அந்நாட்டின் பொருளாதாரம் எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டார். நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளை முதலாளித்துவ ஊடகங்கள் சர்வாதிகாரம் என்றும், கொடுங்கோன்மை என்றும்  திரித்துப் பொய்ப் பிரச்சாரம் செய்து இருந்ததையும் / இருப்பதையும் உணர்ந்து கொண்டார். இதன் காரணமாகத் தான் சுதந்திரம் சுதந்திரம் என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூவிக் கொண்டு இருக்கும் முதலாளித்துவத்தில் சுதந்திரம் இல்லை என்றும், உண்மையான சுதந்திரம் சோஷலிசத்தில் தான் உள்ளது  என்றும் உலகில் ஆறில் ஒரு பகுதியில் சோஷலிசம் (The Socialist Sixth of the World) என்று தான் எழுதிய நூலில் விளக்கி உள்ளார்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சோவியத் ஒன்றியத்தில் பஞ்சம்”

அதிகம் படித்தது