மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜிஎஸ்டி ஏற்படுத்திய மாபெரும் இழப்பு

சுசிலா

Sep 30, 2017

Siragu GST1

இந்த மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு திட்டமும் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது என்பதற்கான மற்றொரு சான்றுதான் இந்த ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு. இந்த ஜிஎஸ்டி ஏற்படுத்திய தாக்கம் என்பது மக்களிடையே மிகப்பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். இது மக்களுக்கு உண்டான வாழ்வியல் தொடர்பான பாதிப்பு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்த இந்திய தேசத்திற்கான வருவாய் இழப்பு என்பதை தற்போதைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மத்திய பா.ச.க அரசின் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால், வணிகவரித்துறைக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல், மது, இயற்கை வாயு மூலம் கிடைக்கும் வருவாய் சரிந்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

நம் தமிழக மாநில வணிகவரித்துறையில், ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வரை வணிகம் செய்பவர்கள் கட்டாயம் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் கணக்குகளை மாதம் ஒருமுறை என தாக்கல் செய்து வரி செலுத்த வேண்டும். மதிப்பு கூட்டு வரி, விற்பனை வரி, ஆடம்பர வரி, கேளிக்கை வரி உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்பட்டு அதன் மூலம் வருவாய் கிடைக்கும்படியான முறை இருக்கிறது. ஆனால், இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன், அதாவது சென்ற ஆண்டு ரூ. 67 ஆயிரம் கோடி நம் மாநில வணிகவரித்துறை வருவாயாக ஈட்டி இருந்தது. இதனிடையே இந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் மூலம், கடந்த ஜூலை மாதம் முதல், 2,12,18, 28 என்ற சதவிகிதம் முறையே நான்கு அடுக்காக பொருட்களைப்பிரித்து வரி விதிக்கப்படுகிறது. இதில் என்ன கொடுமையென்றால், இந்த 28 விழுக்காடு வரி விதிப்பு என்பது வளர்ந்த நாடுகளுக்குக் கூட கிடையாது என்பது தான். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இதுவரை சரக்கிற்கான வரி விதிப்பு என்பது அந்தந்த மாநிலங்கள் மட்டுமே விதிக்கும் முறை தான் இருந்தது என்பதாகும். மாநில வருவாய் துறை மிகப்பெரிய வரி இழப்பை சந்திக்கும் என பல பொருளாதார வல்லுநர்கள் முன்பே கூறியிருந்தனர். அது தான் இப்போது நடந்து இருக்கிறது.

Siragu GST2

இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம், மாநில வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது தற்போதைய பட்டியல். அதற்கான சான்று, 2017 ஆம் ஆண்டு ஜூலையில் 5,553.92 கோடி வருவாய் ஈட்டியிருந்த நம் மாநிலம், ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வருவாய் தற்போது வரைகூட ரூ. 2000 கோடியை கூட எட்டவில்லை என்பதை கூறியிருக்கிறது. அப்படியே இருந்தாலும் இரண்டாயிரத்தை எட்டக்கூடும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதிலும் மத்திய அரசு பகிர்ந்து கொள்ளும் என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம் மாநிலம் வருவாய் துறையில் முன்னேறிய நிலையில் இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்படி இருக்கும்போது நம் மாநிலம் ஈட்டும் வருவாய், இதன்மூலம் குறைந்து இருக்கிறது என்பதையே நாம் ஏற்றுகொள்வது என்பது இயலாத ஒன்று. அப்படி இருக்கையில், இதில் குறிப்பிட்ட தொகை மத்திய அரசிற்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது நியாயமான முறையாகுமா…? மேலும், பெட்ரோல், டீசல், மது, இயற்கை வாயு ஆகிய பொருட்களுக்கு கடந்த ஜூலை மாதம் ரூ. 3,166.17 கோடி கிடைத்திருக்கிறது. இதுவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5,581 கிடைத்தது. உண்மையை உரக்க சொல்ல வேண்டுமென்றால், ஆண்டிற்கு 60 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி இல்லாத காலகட்டத்தில் தமிழக அரசிற்கு வருவாய் கிடைத்தது. தற்போது இது கேள்விக்குறியாக உள்ளது என்பது தான் மிகப்பெரிய பிரச்சினை.

Siragu GST4

இந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் மூலம் நாட்டிற்கும் வருவாய் குறைந்திருக்கிறது என்பதுதான் உண்மையான நிலவரம். வாங்கும் ஆற்றல் குறைந்திருப்பதைதான் இது மெய்ப்பிக்கிறது. வாங்கும் திறன் குறைந்தால், உற்பத்தித்திறனும் குறையும் என்பது தானே சரியாக இருக்க முடியும். உற்பத்தித்திறன் குறைவு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்குமா என்பது தான் நம்மிடையே வைக்கப்படும் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கக்கூடும்.!

எந்த வைகையில் பார்த்தாலும் இந்த ஜிஎஸ்டி தோல்வியை தழுவி இருக்கிறது என்பது உண்மை. மாநில உரிமையையும், மாநில வருவாய் குறைப்பிற்கு காரணமாக இருப்பதையும், இதன் மூலம் உணர முடிகிறது. மாநில தேவைகளுக்கு எல்லாம் மத்திய அரசை கையேந்தும் நிலை ஏற்பட்டு, கேட்டாலும் கிடைக்காது என்ற நிலையைத்தான் மத்திய பா.ச.க அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அரசின் நோக்கமே, சிறு, குறு வணிகர்களை ஒழித்துக்கட்டிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழுவதும் கதவை திறந்து விடும் அயோக்கியத்தனம் என்பது தெளிவாகியிருக்கிறது. இதனை மக்களாகிய நாம்தான் உணர்ந்து, இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்த ஜிஎஸ்டி எனும் அரக்கனை விரட்டியடிக்க செயல்படுவோம். !

ஜிஎஸ்டி கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்.!
மாநில உரிமைகள் பறிபோவதை தடுக்க வேண்டும்.!
சிறு, குறு வணிகர்கள் திட்டமிட்டு ஒழிக்கப்படும் இந்த ஜிஎஸ்டி முறையை முழுவதும் அடித்து விரட்டும்வரை போராடுவோம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜிஎஸ்டி ஏற்படுத்திய மாபெரும் இழப்பு”

அதிகம் படித்தது