மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தின் நீர் நிலைமை – ஒரு கண்ணோட்டம்

சித்திர சேனன்

Mar 7, 2015

thamilagaththin neernilaimai1தமிழ்நாடு பெரும்பாலும் மழை நீரை நம்பியே உள்ளது. ஆறுகளைப் பொருத்த அளவில் பொருநையைத் (தாமிரபரணி) தவிர பெரிய ஆறுகள் அனைத்தும் பிற மாநிலங்களில் இருந்துதான் ஓடி வருகின்றன. இப்போது அவை அண்டை மாநிலங்களால் முற்றுகைக்கு ஆளாக்கப்படுகின்றன. காவிரி-முல்லைப்பெரியாறு போன்றவை இன்று கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 8% அளவுள்ள தமிழகம் பரப்பளவில் 4% மட்டுமே உள்ளது. இந்திய நீர் வரத்தில் தமிழகத்தின் நீர்வளம் 2% மட்டுமே உள்ளது. தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் கிணற்றுப் பாசனத்தை நம்பியே உள்ளது. தமிழகத்தின் அதிக அளவு நீர் வளமை என்பது 56.50 லட்சம் எக்ட்டேர்களாகும். இதில் கிணறுகளின் அளவு 31 லட்சத்திற்குச் சற்றுக் கூடுதல் ஆகும். இந்த நீர் வளமானது மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீரையும் கணக்கில் கொள்ளத்தக்கதாகும்.

தமிழகத்தில் ஏரிப்பாசனம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் ஏறத்தாழ 39000 ஏரிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தான் ஏரிகள் அதிகம் உள்ளன. தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஆற்றுப்பாசனம் உள்ளது. பெரும்பாலான ஏரிகள் நாளாவட்டத்தில் பராமரிப்பு முறை சீர்கேடுற்றதால் நீரின் கொள்ளளவு குறைந்துள்ளது. இதனால் ஒரு பருவச் சாகுபடி மட்டுமே செய்ய முடிகிறது.

ஏரிகளின் அழிவினால் கிணற்றுப் பாசனம் அதிகமாக உருவாகிவிட்டது. 1960-களில் ஏரிப்பாசனம் ஒரு லட்சம் எக்டேராக இருந்தது. இதுவே 2001ல் 5.89 லட்சம் எக்டேர் அளவாகக் குறைந்துள்ளது. இதுபோல் 1960-களில் கிணற்றுப் பாசனம் 24 விழுக்காடு இருந்தது. ஆனால் அதுவே 1993-ஆம் ஆண்டளவில் 46 விழுக்காடாக மாறிவிட்டது. அதாவது 1960-களில் 6.98 லட்சம் எக்டேர் கிணற்றுப் பாசனப் பரப்பு 2001ல் 14.49 எக்டேர்களாக உயர்ந்துள்ளது. 2001லேயே இப்படி என்றால் 2015ல் இதன் அளவு கூடியிருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

thamilagaththin neernilaimai6இதில் ஆழ்துளை கிணறுகளும் அடக்கம். இதனால் நிலத்தடி நீர் மிக அதிகமான அளவில் கீழிறங்கி விட்டது. குறிப்பாக பசுமைப் புரட்சிக் காலத்திற்குப் பின்பு கிணறுகளின் நீர் மட்டம் மிக விரைவாகக் கீழிறங்கி விட்டது. ஏரிகளை ஆழப்படுத்துவது குறைந்துபோய் விட்டது. வேதி உரங்களின் வரவால் ஏரி-குளங்களில் வண்டல் அடிப்பது குறைந்துபோனது. இதனாலும் ஏரிகள் தூர்ந்து போயின.

நிலத்தடி நீரைப் பொருத்த அளவில் தமிழகம் மிக மோசமான பாதிப்புகளைத் தொட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 399 ஒன்றியங்களில் 175 ஒன்றியங்கள் கறுப்பு ஒன்றியங்களாக அறியப்பட்டுள்ளன. 26 ஒன்றியங்கள் மிக அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சிய ஒன்றியங்களாக கண்டறிப்பட்டுள்ளன. இந்தப் புள்ளி விவரங்கள் தமிழகம் ஒரு பாலையாக மாறுவதைச் சுட்டிக் காட்டுகிறது. உரிய நடவடிக்கைகள் எடுத்து நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு முனையவில்லை எனில் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

வர்னீசியாவில் 1997-ஆம் ஆண்டு கூடிய அறிஞர்கள் பேரச்சம் ஊட்டும் செய்திகளை முன் வைத்தனர். அதாவது 1950முதல் 1990 ஆண்டு வரையான கால அளவில் ஆண்டிற்கு 2.1% என்ற அளவில் உயர்ந்து வந்த தானிய விளைச்சல், 1990-1998-ல் வீழ்ச்சியடைவதாக முன்னறிவித்தனர். இது 300 ஆண்டுகளுக்கு முன் சொன்ன மால்தூpசன் கருத்தை உண்மையாக்கக் கூடுமோ என்று அச்சம் தெரிவித்தனர்.

thamilagaththin neernilaimai4வரவுள்ள 2025-ஆம் ஆண்டளவில் பாசனத்திற்கு மட்டும் இப்போதுள்ள நீரை விட கூடுதலாக 2000 கன கிலோமீட்டர் நீர் தேவையாக உள்ளது. இது 24 நைல் ஆறுகளுக்குச் சமமாகும். தொடர்ந்து பேரணைகள் கட்டியதால், உலகின் மிக அரிய, உயரிய உயிரினங்களைக் கொண்டிருந்த பகுதிகள் யாவும் அழிந்து விட்டன. இதனால் பல்வேறு மூலங்களில் இருந்து கிடைத்து வந்த உணவு தடைபட்டது. பல அரிய மீனினங்களும் மறைந்துவிட்டன. ஒவ்வொரு நாளும் அணைகளில் படியும் வண்டல் அணையின் கொள்ளளவை குறைத்து வருகிறது. ஆற்றங்கரையின் ஓரங்களில் அதிக அளவில் குவிந்திருக்கும் தொழிற்சாலைகள் முடிந்த மட்டும் நீரை மாசுபடுத்துகின்றன. இயற்கையான நீர் பிடிப்பு மண்டலங்களான ஆற்றுப் படுகைகளில் உள்ள மணல் அளவற்ற முறையில் கொள்ளையிடப் படுகின்றது. இதனால் அதையொட்டிய நகரங்களிலும், சிற்றூர்களிலும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள குன்றுகள் யாவும்,“கிரானைட்”என்ற பெயரில் ஏற்றுமதியாகி வருகின்றது. இவற்றுடன் பண்டைப் பழமை மிக்க கல்வெட்டுக்களும் மறைகின்றன. தண்ணீரைப் பிடித்து வைக்கும் இயற்கை அமைப்புகளில் ஒன்றுதான் குன்றுகள். இவற்றில் சிறு புல், பூண்டுகளும், புதர்களும் முதலில் தோன்றும். நாம் இடையூறு செய்யாவிட்டால் அங்கு பெருமரங்கள் வளர்ந்து காடாகும். தமிழகத்தின் நீர் வளம் முறையாகப் பேணப்படாவிட்டால் அங்கு கடும் விளைவுகள் ஏற்படும்.

நீர் குறைபாட்டிற்கான காரணங்கள்:

thamilagaththin neernilaimai5நீர் வளம் பொதுவாக கீழ்கண்ட காரணங்களால் குறைந்து கொண்டிருக்கிறது. விரைவுச் சாகுபடி முறைகளால் மிக அதிகளவு நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. மலைகளிலும், மலைக்காடுகளிலும், சமவெளி நிலங்களிலும் பெய்த மழைகளில் பெரும் பகுதி நிலத்தினுள் மண் இடைகளிலும் பாறை வெடிப்புகளிலும் புகுந்து, நிலத்தடி நீராக பல்லாயிரமாண்டுகளாக சேமிக்கப்பட்டு வந்தது. இப்படியான நீர் சேகரிப்பு இப்போது பயன்பாட்டிற்கு அறிவியல் தொழில்நுட்பம் மூலம் வந்துள்ளது.

நீர் பயன்பாடு, குடிநீர் போக வேளாண்மை மற்றும் தொழில் தேவைகளுக்காக பெருமளவு நீர் பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் நேரடி நீர் பாசனம் குறைவான தமிழகத்தில் நிலத்தடி நீர் பாசனமே பெருமளவில் நடைபெறுகிறது. மின்னாற்றல் மூலம் இயங்கும் குடிநீர் இறைப்புக் கருவிகள் பெருகிய சூழ்நிலையில் நிலத்தடி நீர் மிக வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறையக் குறைய தொழில் தேவைகளுக்காகப் பசுமை குறையக் குறைய நிலைமையை சீர் செய்யாத அளவுக்கு சிக்கலாகி விட்டது.

சீர் செய்யும் முயற்சிகள், யானைப் பசிக்கு சோளப்பொறி கொடுப்பது போலாகி விட்டது. நீர் பற்றாக்குறைக்கான அடிப்படைக் காரணமாக வரம்பற்ற நுகர்வு, ஆடம்பரம், செயற்கை வேதிப்பொருட்களின் எல்லையில்லா பயன்பாடு போன்றவை உள்ளன. மனிதர்கள் தங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என எண்ணி வரைமுறையற்று மரங்களை வெட்டியும், ஆழ்துளை கிணறுகளை அமைத்தும் சேமிப்பிற்கு விஞ்சிய நுகர்வு உருவாகி உள்ளது.

வேதிப்பொருட்களால் நிலத்தில் உள்ள சிற்றுயிர்களும், நுண்ணுயிர்களும் அழிக்கப்பட்டு நிலம் களர் உவர்தன்மை கூடி நிலத்தின் நீர் பிடிப்புத் தன்மையும் கெட்டுப்போகின்றது. உயிர்மங்கள் இல்லா நிலம் கெட்டிப்பட்டு, நீர் உறிஞ்சும் மற்றும் நீர்பிடிப்பை பாதுகாக்கும் தன்மைகள் கெட்டுப்போய்விடுகின்றன. குறிப்பாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 24 மணி நேரமும் நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. மரங்கள் வளர பூமியின் மேல் பாகத்தில் வேர்கள் செல்லும் பகுதிக்கு ஈரம் வேண்டும். இந்த வகையான ஈரம் இன்று குறைந்து கொண்டே போவதால் பனை மரம் கூட பட்டுப்போகும் சூழல் வந்துள்ளது. மரங்கள் இருக்கும் போதுதான் வேர் மண்டலங்கள் நீரைப் பிடித்து வைத்துக் கொள்ளும். இப்படியாக நீருக்கும் மரத்திற்குமான பிணைப்பு நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் துண்டிக்கப்படுகிறது.

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் 1975-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்த நல்ல நீர்தேக்கிகளாக பயன்பட்ட 43 ஆயிரத்து 200 குளங்கள், 10 ஆயிரமாக குறைந்துள்ளன. சென்னையில் மட்டும் 219 குளங்கள் இருந்ததாக தரவுகள் உள்ளன. ஆனால் இப்போது வெறும் 30 குளங்கள் தான் உள்ளன. அதுவும் சீரழிந்த நிலையில்.

இயற்கைச் சீரழிவினால் பருவமழை தவறுதல், நீரை வீணாக்குதல், மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவற்றால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன் மக்கள் தொகை 35 கோடி. ஆனால் இப்போது 102 கோடியைத் தாண்டி விட்டது. நிலைமை இப்படியே போனால் அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பின் நீர் கிடைக்காமல் பல லட்சம் உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது.

மழைநீரை சிறந்த முறையில் சேமிக்க உதவுபவை ஏரி, குளங்கள், குட்டைகள் ஆகியவையாகும். இவை இன்று நேற்று உருவாக்கப்பட்டவை அல்ல. 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உருவானவை. பல ஆண்டுகளாக உதவி வரும் ஏரிகளை கோடையில் தூர்வாரி கரைகளை மேம்படுத்தி நீர்வரத்துக் கால்வாய் மற்றும் மிகைப்போக்கிகளை செப்பனிட்டு நீர்பிடிப்புப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆண்டுதோறும் அகற்றி செய்யவேண்டிய சில பணிகளை முறையாகச் செய்வதில்லை. இதனால் சில நாட்களில் அதிக அளவில் பெய்கின்ற மழைநீரை ஏரிகளில் சேமிக்க இயலாமல் போய்விடுகிறது.

மக்களிடம் இருந்த ஏரி குளம் பராமரிப்பு என்ற அதிகாரம் அல்லது உரிமை இன்று அரசின் கைகளில் சென்றுவிட்டதால் எதற்கும் அரசாங்க அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் வேண்டும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். மக்களின் பங்கேற்பு இல்லாமல் செய்யப்படும் வேலைகளில் தரம் இல்லாமல் போய்விடுகிறது. இத்தகைய பல்வேறு காரணிகளால் நீர்வளம் மிக விரைவாக அழிந்து வருகிறது.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தின் நீர் நிலைமை – ஒரு கண்ணோட்டம்”

அதிகம் படித்தது