மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா

சுசிலா

Jan 13, 2017

Siragu pongal1

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்.’

என்ற வள்ளுவப்பெருந்தகையின் கருத்துக்கேற்ப நாம் எல்லோரும் உழவர்கள் பின்னே சென்று கொண்டிருப்பவர்கள் தான்.!

உழவு இல்லையேல் உணவு இல்லை, உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை. இந்த உழவு தான் மனிதர்களை நாகரீக வாழ்வு நோக்கி நகர்த்தியிருக்கிறது. காட்டுவாசிகளான நம் ஆதி மூதாதையர்கள் ஆற்றங்கரையோரமாய் குடில் அமைத்து வாழ்வதற்கு ஆதாரமாய் இருந்தது வேளாண்மை என்ற ஒன்றை ஏற்றுக் கொண்டதினால் தான்.!

Images of Indian farmers, agriculture, agricultural fields, vegetable farming, fruit, harvesting activity.

தமிழர்களாகிய நாம், நமது வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும் விழா தான் இந்த பொங்கல் விழா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். விளை நிலத்தில் விதை விதைத்து, நாற்று நட்டு, பாத்திக்கட்டி, நீர் விட்டு, நெற்பயிரை வளர்த்து பிறகு அறுவடை செய்து, அதன் பின்னே நமக்கு கிடைக்கும் புதிய நெல்லைக் கொண்டு, புதுப்பானையில் வெல்லத்துடன் சேர்த்து பொங்கலிட்டு, அந்த இனிப்பை அனைவரும் பகிர்ந்து உண்டு மகிழும் விழா நம் தைத்திருநாளாம் பொங்கல் விழா.!

Siragu-pongal6

எவ்வித மதத்தையும் சாராமல், இயற்கைக்கு நன்றி சொல்லும் மதசார்பற்ற விழாவாக பொங்கல்திருநாள் இருப்பது தான் இதன் கூடுதல் சிறப்பு. நம் முன்னோர்கள் இதனை மிகச் சிறப்பாக மூன்று நாட்களாகப்பிரித்து கொண்டாடி இருக்கிறார்கள். முதல் நாள் வேளாண்மைக்குத் தகுந்தாற்போல், வேண்டியபோது வெயிலையும், வேண்டிய போது மழையையும் தந்து உதவிய ஆதவனுக்கு நன்றி சொல்லுதல், இரண்டாம் நாள் வேளாண்மைக்கு உதவிய கால்நடையான நம் வீட்டு விலங்கான மாடுகளுக்கு நன்றி சொல்லுதல், மூன்றாம் நாள் இயற்கையை கண்டுகளித்து மகிழவும், பாரம்பரிய விளையாட்டுகள் என கொண்டாடியும் மகிழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.!

காலங்காலமாக கிராமங்களில் மட்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நம் பண்பாடு விழாவான தைத்திருநாள் சமீபகாலமாக நகரங்களில் கூட விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என எங்கும் பொங்கல்விழா கொண்டாடப்படுகிறது. அதிலும், நம் பாரம்பரிய இனிப்புப்பொங்கல், கரும்புடன் சேர்த்து, நம் பாரம்பரிய உடை என, புத்தாடை உடுத்தி கொண்டாடுகிறார்கள் என்பது மிக்க மகிழ்வைத் தருகிறது.!

இந்த விழாவைப் பற்றிய செய்திகள், கொண்டாட்டங்கள் அனைத்தும் நம் அடுத்தடுத்தத் தலைமுறையினர்களுக்குக் கொண்டு செல்லுதல் மிக அவசியம். இன்னும் சொல்லப்போனால், அது நம்முடைய கடமை. நம் தமிழர் பண்பாட்டு விழாவான இவ்விழா சரியான முறையில் கொண்டாடப்படுவது அவசியம். எவ்வித மத சடங்கும் உள்நுழையாமல் பார்த்துக் கொள்ளுதல் நம் எல்லோரின் கவனத்தில் இருக்க வேண்டிய ஓன்று.!

siragu-farmer

தமிழகத்தில் தற்போது நீர் ஆதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன் விளைவாக தமிழக விவசாயம் பொய்த்துப் போனது வருத்தத்துக்குரிய ஒன்று. இவ்வாண்டு மழை பொய்த்ததால், நீரின்றி விவசாயம் மிகவும் பாதிப்படைந்துள்ளது நம் எல்லோரின் மனதிலும் நீங்கா வேதனையைத் தந்திருக்கிறது. தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்தவர்கள் என்ற நிலை போய், இன்று நம் நீர்நிலைகளை சரியாக பராமரிக்கத் தவறியதால், நீர் மேலாண்மையை அலட்சியம் செய்ததால் வந்த விளைவு இது. ஏராளமான நீர்நிலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. மீதி இருக்கும் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், தாங்கல்கள், ஆறு கூட தூர் வராமல் சீரழிக்கப் பட்டிருக்கின்றன. ஆற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. விவசாயம் பொய்த்ததால், விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் நம்மை மென்மேலும் வேதனைக்குள்ளாக்குகிறது.!

இவையனைத்தையும் அரசு கட்டாயமாக சரி செய்ய வேண்டும். நம் உரிமையான காவேரி நீரை பெற்றுத் தர அரசு போராட வேண்டும். விவசாயிகள் நம் நண்பர்கள். உண்ண உணவு அளிக்கும் தாயைப் போன்றவரகள். அவர்களுக்கு ஒரு இன்னல் என்றால் நம் அனைவருக்கும் தான் என்பதை அரசு உணர வேண்டும். விவசாயத்தை அழித்து உணவிற்காக மற்ற நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலையை உருவாக்கிவிடக் கூடாது. விவசாயம் மீண்டும் செழிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்தபிறகு கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தான் நம்முடைய உண்மையான பொங்கல் திருநாளாக இருக்க முடியும்.!

தமிழர்களுக்கான விழா என்ற ஒன்று உண்டென்றால், அது தைத்திருநாளாம் பொங்கல் திருநாள்தான். இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை செழிப்பான விவசாயத்துடனும், முகத்தில் மகிழ்ச்சித் ததும்பும் நம் விவசாய சகோதர்களுடனும் சேர்ந்து கொண்டாடுவோம்.!

தமிழர்தம் பண்டைய, சிறந்த நீர் மேலாண்மையைக் கற்றறிவோம்.!

வேளாண்மையை செழிப்பாக்குவோம்.!

தமிழர்கள் வேளாண்மையில் சிறந்தவர்கள் என்பதை மீண்டும் உலகிற்கு பறைசாற்றுவோம்.!!

நண்பர்கள் அனைவருக்கும் “இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!!!”


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா”

அதிகம் படித்தது