மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை!

சுசிலா

Aug 21, 2021

siragu DMK

தற்போது புதிதாக 2021 சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று, தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், ஆட்சியில் அமர்ந்திருக்கும் திராவிட முன்னேற்றக்கழகம் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். பெண்களுக்கு பேருந்தில் இலவசம், பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, மக்கள் குறைதீர்ப்பு மனுக்களுக்கு முக்கியத்துவம், மக்களைத்தேடி மருத்துவம், தொல்லியல் ஆய்வுக்கென்று ரூ. 5 கோடி ஒதுக்கீடு, மருத்துவம் மட்டுமல்லாமல் அனைத்து கல்லூரிகளிலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மற்றும் கடந்த அதிமுக அரசின் நிர்வாகம் சார்ந்த வெள்ளை அறிக்கை எனவும், இந்த ஆண்டின் மிகச்சிறந்த நிதிநிலை அறிக்கை என அனைத்து செயல்பாடுகளும் மிகுந்த வரவேற்புக்குரியதாகவே இருக்கின்றன. எதிர்கட்சியினரும், அதன் கூட்டணியில் உள்ள பாஜக, பாமக உள்ளிட்ட பல கட்சிகளுமே பாராட்டும் வண்ணம் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது மக்களாகிய நமக்கு பெரும் மகிழ்ச்சியையும், மனஅமைதியையும் அளிக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. இதில், எல்லாவற்றிற்கும் மேலாக, வைரம் பதித்த அணிகலன் போல முத்தாய்ப்பாக, இந்த ஆட்சியின் 100 நாட்கள் சாதனையாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்குதல் என்ற பணி நியமன ஆணையை வெளியிட்ட தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் இந்த செயல்பாடு தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையாக, பொன்னெழுத்தில் பொறிக்கக்கூடிய திருநாளாக, எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதில் சிறிதும் அட்டியில்லை!

அனைத்து சாதியினரும் அரச்சகர் ஆகுதல் என்பது நமக்கான நீண்டகால உரிமைப்போராட்டம். அனைத்து துறையிலும், இடஒதுக்கீடு என்ற சமூகநீதி கடைபிடிக்கையில், கோயில் கருவறை என்பதில் மட்டும் உயர்சாதியினர் என்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இந்நாள் வரை இருந்து வருகின்றனர் என்பது சாதி ஒழிப்பிற்கு நேர் எதிரானது. முதன் முதலில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை தந்தை பெரியாரால் எழுப்பப்பட்ட ஒரு போர்க்குரல். ஒரு குறிப்பிட்ட முற்போக்கு சாதியினர் மட்டுமே கோவில் கருவறைக்குள் செல்ல முடியும், கடவுளுக்கு இறைபணி செய்ய வேண்டும் என்ற நிலை இந்நாட்டில் பல நூற்றாண்டு காலமாகவே இருந்துவருகிறது. இதனை எதிர்த்து, முதலில் குரல் எழுப்பியவர் தந்தை பெரியார் அவர்கள். நம் தமிழ் அரசர்கள் கட்டிய கோயில்களில், தமிழ் மக்களின் உழைப்பில், பொருளில், உருவாக்கிய ஒவ்வொரு கோயில்களிலும், இந்து மதத்தை சார்ந்த தமிழ் மக்கள் கோயில் கருவறைக்குள் சென்றால் தீட்டாகிவிடும் என்றும், அது மரபிற்கு எதிரானது என்றும் காலங்காலமாக கோயில் என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற தங்களின் உயர்சாதி பெருமையாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கூறிவருகின்றனர். தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டிய மாபெரும் அரசன் ராசராசசோழன் சிலையை கோயிலுக்குள் வைக்கக்கூடாது என்ற இழிநிலை கூட இங்கு அரங்கேறியிருக்கிறது. இன்றும் கூட அந்த மாமன்னன் சிலை கோயிலுக்கு வெளியே தானே நிற்கப்பட்டிருக்கிறான் என்றால், சாதிவெறி, உயர்சாதி ஆதிக்கம் எந்தளவிற்கு நம் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கிறது என்பதற்கான சரியான சான்று. ஒரு காலத்தில், கோயிலுக்குள்ளே செல்ல கூட அனுமதி மறுக்கப்பட்ட மக்களாகத்தான் நாம் இருந்தோம். தீண்டாமை மிகக் கொடுமையாக கடைப்பிடிக்கப்பட்ட காலம் அது!

siragu DMK2

தந்தை பெரியார் அவர்களால் மற்றும் நீதிக்கட்சியின் சமூகநீதி அரசாங்கத்தால் அது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இருப்பினும், கோயில் கருவறைக்குள் செல்ல அனைத்து மக்களுக்கும் அனுமதி கிடையாது. கருவறைக்குள் தீண்டாமை மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டிருந்தபடியால், தந்தை பெரியார் அவர்கள், 1937 ஆம் ஆண்டிலிருந்து தன்னுடைய இறுதிமூச்சு உள்ளவரை இதற்காக போராடினார்கள். கருவறைக்குள் நீடிக்கும் தீண்டாமை ஒழிக்கப்பட்டால் தான் சாதி ஒழிப்பு முழுமைபெறும் என்று தன் வாழ்நாள் முழுதும் போராடினார்கள். அச்சமயத்தில் தான், தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள், 1970 ஆம் ஆண்டு, சனவரி 17ம் நாள், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை இயற்றுகிறேன் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்பிறகு இருவேறு காலகட்டங்களில் தனித்தனி இரு சட்டங்களாக நிறைவேற்றினார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்!

ஆதிக்கசக்தியினர் சும்மா இருப்பார்களா என்ன … உச்சநீதிமன்றம் வரை சென்று இடைக்கால தடை வாங்கி அச்சட்டத்தை செயல்படவிடாமல் தடுத்தனர். அரசின் கீழ் செயல்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில், முறைப்படி அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்கள் 200 பேருக்கும் மேலானவர்கள் வேலையில்லாமல் தவிக்கவிடப்பட்டனர். இறுதியில், 2015-ல் உச்சநீதிமன்றம் அந்த தடையை நீக்கி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இருந்தாலும், கடந்த அதிமுக ஆட்சி, பணி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் தான், புதிதாக பதவியேற்றிருக்கும் திமுக அரசு, 100 நாள் சாதனையாக, ஆகஸ்ட் 14- ஆம் தேதி, முதல் 58 பேருக்கு பணி நியமன ஆணையை வெளியிட்டது. முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்களுக்கு அர்ச்சகர் பணிக்கான நியமனத்தை பயிற்சிபெற்ற அனைத்து சாதியினருக்கும் வழங்கினார்கள். இதில், மற்றொரு சிறப்பு என்னவென்றால், இவர்களில் பெண் ஓதுவார் ஒருவரும் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார் என்பது தான்!

தமிழ்நாட்டின் வரலாற்றில் இந்நாள் ஒரு பொன் நாளாக மின்னப்போகும் நன் நாள்!

இது, சாதி ஒழிப்பில் மிகச்சிறந்த ஒரு மைக்கல். கோயிலில் நுழையும் தீண்டாமை ஒழிக்கப்பட்ட நிலையில், தற்போது கோயில் கருவறைக்குள் இருந்த தீண்டாமையும் ஒழிக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக பிறப்பின் அடிப்படையில், பிரித்து வைக்கப்பட்டிருந்த மக்களின் வாழ்வில் சமத்துவ ஒளி வீச துவங்கியிருக்கிறது. சாதியற்ற ஒரு சமுதாயம் உருவாகக்கூடிய நல்வாய்ப்பு உருவாகியிருக்கிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் ” என்ற வள்ளுவப்பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, பிறப்பால் நாம் அனைவரும் சமம் என்ற உரிமை, சுயமரியாதை நமக்கு கிடைத்திருக்கிறது!

“தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றாமல் விட்டுவிட்டோமே…” என்று கலங்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கண்ணீரை, அவருடைய புதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் துடைத்து, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கியிருக்கிறார்!

இப்போதும், தங்களை உயர்சாதியினர் என்று சொல்லிக்கொள்ளும், ஆணவ ஆதிக்க சக்தியினர், இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றம் செல்வோம் என்று கொக்கரிக்கின்றனர்.

என்றைக்கும், சமூகநீதி தான் வெல்லும் என்ற உண்மையை உணராமல் அரற்றுகின்றனர். சாதியால், வருணாசிரமத்தால், தீண்டமையால், நம்மை வேறுபடுத்தி வைத்திருக்கும் அடிப்படைவாதம் பேசும் ஆதிக்க பிரிவினைவாதிகள். அவர்களுக்கு, தமிழ்நாடு என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல… மொழியால், இனத்தால், சுயமரியாதையால் ஒற்றுமையுடன் வாழக்கூடிய மக்களைக் கொண்ட சமூகநீதி மண் இது என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பிப்போம்!

தமிழ்நாடு அரசிற்கு நம்முடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் மனதார தெரிவிப்போம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை!”

அதிகம் படித்தது