மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அசோகன் அவர்களின் நேர்காணல்

சா.சின்னதுரை

Jul 25, 2015

ashokanகேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்: எனது பெயர் A.அசோகன். நான் வழக்கறிஞராக இருக்கிறேன். அதுமட்டுமல்லாது நுகர்வோர் நல கவுன்சில் என்ற அமைப்பில் 1991ம் ஆண்டிலிருந்து படிக்கும்பொழுதில் இருந்து இன்றுவரை நுகர்வோர் நலனுக்காக செயல்பட்டுக்கொண்டு வருகிறேன். தற்பொழுது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு FEDCOT – Federation of Consumer Organizations in Tamilnadu என்ற அமைப்பில் மொத்தம் 400 குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. அதில் நான் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறேன்.

கேள்வி: உங்களது இயக்கத்தின் பணிகள் என்னென்ன?

பதில்: குறிப்பாக நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நுகர்வோர் பற்றியான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவர்களுக்கு நுகர்வோர் தொடர்பான பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி இம்மாதிரியான போட்டிகள் நடத்தி அதன் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒரு குறிப்பிட்ட நுகர்வோரின் பிரச்சனைகளை மையமாக, தலைப்பாக வைத்து மாணவர்களின் மத்தியில் பட்டிமன்றத்தின் வாயிலாகவும் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட நுகர்வோர் சார்பாக நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்காக நிவாரணத்தைப் பெற்றுத் தருவது, அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கிராமப்புற, நகர்ப்புற ஏழை மக்களுக்கு இலவசமாக பயிற்சி நடத்தி அதன் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது. அந்தந்த பகுதியிலே தாலுகா அளவிலான பயிற்சி இருக்கிறது.

குறிப்பாக கூட்டமைப்புக்கு இதற்கு முன்பு ஹென்றி திபென் என்பவர்தான் பொதுச்செயலாளராக இருந்தார். ஆர்.தேசிகன் என்பவர் தான் தலைவராக இருந்தார். ஜேம்ஸ் ஆரோக்கியசாமி பயிற்சி இயக்குனராக இருந்தார். இந்தக் கூட்டமைப்பினுடைய முன்னாள் நிர்வாகிகளான இவர்களுடைய தீவிர செயல்பாடு தமிழகம் முழுக்க நுகர்வோர் விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கு ஏதுவாக இருந்தது.

கேள்வி: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பற்றிய விளக்கங்கள் கூறவும்?

nugarvor5பதில்: 1986ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. நுகர்வோருக்கு எட்டு உரிமைகள் இருக்கிறது. பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, முறையீட்டு உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, நுகர்வோர் குறை தீர்ப்பதற்கான உரிமை, நல்ல சுற்றுச்சூழலைப் பெறுவதற்கான உரிமை, அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை. இந்த எட்டு உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் என்று சொல்லப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நுகர்வோர் என்பவர் யார் என்று குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவோர்கள் நுகர்வோர்கள். உதாரணத்திற்கு நாம் வாங்கக்கூடிய பொருள், அதாவது அது மளிகைப் பொருட்களாகட்டும், எலக்ட்ரானிக் பொருட்களாகட்டும், மருந்துப் பொருட்களாகட்டும் என்று எந்த ஒரு பொருளையும் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவோர் நுகர்வோர்கள். அதே மாதிரி சேவைகளான மருத்துவசேவை, போக்குவரத்து சேவை, வழக்கறிஞரிடமிருந்து பெறக்கூடிய சேவை, நிதி நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடிய சேவை, தபால், தந்தி இதுபோன்ற நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடிய சேவைகளை பயன்படுத்துவோர்கள் நுகர்வோர்கள். சாதாரணமாக காசு கொடுத்து வாங்கக்கூடியவர்கள் நுகர்வோர்கள், அதேபோல் காசுகொடுத்துதான் என்று இல்லாமல், உத்திரவாதம் கொடுக்கப்பட்டு பெறக்கூடிய பொருட்கள் மற்றும்சேவைகளைப் பெறுவோரும் நுகர்வோராகக் கருதப்படுகிறார்கள்.

உதாரணமாகப் பார்த்தீர்கள் என்றால், தவணை முறையில் பொருட்கள் வாங்குவார்கள், அதில் காசு கொடுக்கவில்லை என்பதற்காக அவர்கள் நுகர்வோர் இல்லை என்று சொல்லிடமுடியாது, தவணை முறைத் திட்டத்தில் வாங்குவோரும் நுகர்வோர். ஒருவருடைய பொருளையோ சேவையையோ பணம் கொடுத்து வாங்கி, வாங்கிய நபரின் அனுமதியின் பேரில் இன்னொருவர் பயன்படுத்துகிறார் என்று வைத்தால், உதாரணத்திற்கு Beneficiaries என்று சொல்லுவோம், அவர்களும் நுகர்வோரில்தான் வருவார்கள்.எந்த சட்டத்தில் என்றால், உதாரணத்திற்கு வீட்டில் சிலிண்டர் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், சிலிண்டர் இணைப்பு கணவரின் பெயரில் இருக்கிறது, ஆனால் பயன்படுத்துவது மனைவி. மனைவியின் பெயரில் சிலிண்டர் இணைப்பு இல்லை என்றாலும்கூட, அந்தக் கணவரின் அனுமதியின் பெயரில் அவர்கள் பயன்படுத்துகிறார்கள் எனும் பொழுது, அதில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, அதனால் விபத்து ஏற்படுகிறது, அதனால் மனைவி பாதிக்கப்படுகிறார் என்றால் அந்த இடத்தில் மனைவி நுகர்வோராக வருவார்.

அதேபோல் அப்பாவின் பெயரில் இருசக்கர வாகனம் இருக்கிறது, அவரின் அனுமதியின் பெயரில் மகன் வாங்கி ஓட்டிக்கொண்டு செல்கிறார், அதில் கோளாறினால் விபத்து ஏற்பட்டால், வண்டி அவர் பெயரில் இல்லை அதனால் அவர்நுகர்வோர் இல்லை என்று மறுக்க முடியாது. விலைகொடுத்து வாங்கியவரின் அனுமதியின் பெயரில்தான் உறவினரோ, மற்றவர்களோ ஓட்டிக்கொண்டு செல்கிறார்கள் என்றால் அவர்களும் நுகர்வோராக வருவார்கள்.

கேள்வி: பொருள் வாங்கி ஏமாற்றப்பட்டு ஒரு நுகர்வோர் பாதிக்கப்படுகிறார், அவர் வழக்கு தொடரவேண்டும் என்றால் முன் நடவடிக்கைகளாக என்னென்ன செய்ய வேண்டும்?

nugarvor3பதில்: முதலில் நுகர்வோர் கடமைகள் என்று பார்த்தோம் என்றால், ஒவ்வொரு நுகர்வோரும் பொருட்களை வாங்கும் பொழுது அதற்குரிய ரசீதை கேட்டு வாங்கவேண்டும், இது நுகர்வோரின் மிக முக்கியமான கடமை. பொருட்களை விலைகொடுத்து வாங்குகின்றோம் என்றால், அந்த பொருட்களில் கலப்படமான பொருள் இருக்கிறது அல்லது காலாவதியான பொருட்களாக இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், நாளைக்கு வழக்குத் தொடரவேண்டும் என்றால் நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு, அதற்கான ஆதாரமாக ரசீதைக் கொண்டு செல்ல வேண்டும், அது மிக முக்கியம். இன்றைய நடைமுறையில் நிறைய கடைகளில் பார்த்தீர்கள் என்றால் ரசீது வாங்கக்கூடிய போக்கு இல்லாத சூழ்நிலை இந்த பரபரப்பான உலகத்தில் உள்ளது. அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்காமல் போய்க்கொண்டிருக்கிற நிலை இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நுகர்வோருக்கு ரசீது ஆயுதம் என்று சொல்லுவோம்.

அதே மாதிரி நகைக்கடைகளுக்கு சென்றோம் என்றால், நகைகள் வாங்கிய பிறகு ரசீது கேட்டோம் என்றால் கடைக்காரர்கள் சொல்லுவார்கள், “ரசீது கேட்டால் வரி கட்டவேண்டி வரும்” என்பர். அதனால் நாம் என்ன செய்கிறோம் என்றால், அப்பொழுது ஒரு குறிப்பிட்ட ஆயிரமோ இரண்டாயிரமோ பணத்தை மிச்சம் செய்ய, ரசீது வேண்டாம் என்று வந்துவிடுகிறோம். நுகர்வோருக்கு ரசீதுதான் மிகப்பெரிய ஆயுதம், அதைக் கண்டிப்பாக வாங்கவேண்டும். அதேபோல் எந்த பொருட்களையும் வாங்கவேண்டுமானாலும் கூட தயாரிக்கப்பட்ட, காலாவதி விபரங்களை கவனிக்க வேண்டும். குறிப்பாக மருந்துப் பொருட்களில் பார்த்தீர்கள் என்றால் காலாவதியான மருந்துப்பொருட்கள் அதிகமாக வருகிறது, குறிப்பாக அந்த மாதிரியான விடயங்களில் காலாவதியை கவனிக்க வேண்டும்.

nugarvor15அதேமாதிரி மின்னணு பொருட்களில் ISI முத்திரை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சில பொருட்களில் ISI முத்திரை போல தோன்றும், ஆனால் அது ISI இருக்காது. ISU, ISE என்பது மாதரி போடப்பட்டிருக்கும். நாம் அதனை ISI என்று எண்ணி வாங்கிவிடுவோம், ஏனென்றால் ISI பற்றிய விழிப்புணர்வு இல்லை. அதனால் நுகர்வோர்கள் ஒரு சில நேரங்களில் விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக ISI முத்திரை இல்லாத பொருட்களையும் வாங்கிவிடுகிறார்கள். குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்களைப் பார்த்தீர்கள் என்றால் ISI முத்திரை இல்லாத பொருட்களை வாங்குவதால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் ஏற்படுகிறது.

அதேபோல் உணவுப்பொருட்களுக்கு தரக் குறியீடு என்பது அக்மார்க் முத்திரை. உணவுப்பொருட்கள் வாங்கும் பொழுது, அக்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். இவையெல்லாம் நுகர்வோரின் கடமைகள். அப்பொழுதுதான் நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தது என்றால் அதற்குத் தீர்வு காண முடியும். அதுமட்டுமல்லாது நாம் வாங்கக்கூடிய பொருட்களின் எடை அளவு சரியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.

கேள்வி: வழக்குத் தொடரவேண்டும் என்றால் முதலில் எந்த மன்றத்தை நாடவேண்டும், அதன் அணுகுமுறை என்ன?

பதில்: ஒரு பொருளையோ அல்லது சேவையையோ வாங்கி அதில் பாதிக்கப்பட்டிருக்கிறார் நுகர்வோர் என்றால், அந்தந்த மாவட்டத்திலே மாவட்ட குறைதீர் மன்றம் என்று ஒன்று இருக்கிறது. அந்த மன்றத்திலே வழக்குத் தொடரலாம். அந்த மன்றத்தின் அதிகார வரம்பு என்ன என்று பார்த்தீர்கள் என்றால் 20 லட்சம் ரூபாய் வரை உள்ள பிரச்சனைகளுக்கு அந்த மன்றத்தில் வழக்குத் தொடரலாம். உதாரணத்திற்கு ஒரு தொலைக்காட்சி வாங்குகிறோம், அதன் மதிப்பு அறுபதாயிரம் என்று வைத்துக்கொள்ளுங்களேன் அதுபோல, பொருட்களின் மதிப்பு அல்லது சேவையின் மதிப்பு அல்லது (மருத்துவ சேவை) மருத்துவரிடம் சென்றால் மருத்துவ செலவுக்கான ரசீதின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் வரையிலும் இருக்கிறது என்று வைத்தால் மாவட்ட குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடரலாம். இருபது லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பிரச்சனைகளுக்கு அதாவது 20 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரையிலுமான பிரச்சனைகளுக்கு, சென்னையிலுள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யலாம். இதற்கு வழக்கறிஞர் தேவையில்லை. அதேபோல் ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பிரச்சனையாக இருந்தால் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் என்று டெல்லியில் இருக்கிறது. அங்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பிரச்சனைகளுக்கு தாக்கல் செய்யலாம்.

nugarvor6பாதிக்கப்பட்ட நுகர்வோர் ஒரு வழக்கறிஞரை வைத்துத்தான் தாக்கல் செய்யவேண்டும் என்பது இல்லை. அதேபோல அவர் பெரிய பத்திரங்கள் தாக்கல் செய்தது மாதிரி தட்டச்சு செய்து, நகல் எடுத்து அதற்கான வேலைகள் செய்வது மாதிரி இல்லை. ஒரு எளிமையான முறையில் அவரே விண்ணப்பத்தை எழுதி தாக்கல் செய்யலாம். ஆனால் அதில் அவருடைய அடிப்படையான தகவல்கள் இருக்கவேண்டும் என்னவென்றால் மனுதாரருடைய பெயர், முகவரி, அதன் பிறகு எதிர்மனுதாரருடைய பெயர், முகவரி, அதேபோல் வழக்கின் சம்பவம் அதாவது எந்தப் பொருளை எந்தத் தேதியில் வாங்கினார், அதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, கோரப்படக்கூடிய நிவாரணம் என்ன அதாவது என்ன கேட்கிறார், உதாரணத்திற்கு ஒரு கலப்படப் பொருளாக இருந்தால் அந்தப் பொருளை மாற்றித் தரவேண்டும், அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குகிறார், தொலைக்காட்சி வாங்குகிறார் அதற்கான உத்தரவாதம் இருந்தும் செயலிழந்து விட்டது என்றால் அதை மாற்றித் தரவேண்டும் என்று கேட்கலாம், அல்லது அந்தப் பொருட்களினுடைய விலையைக் கேட்கலாம், பொருட்களை வாங்கி நுகர்வோர் பாதிக்கப்பட்டுவிட்டார் என்றால் அந்தப் பொருட்களை வாங்கி அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு மனஉளைச்சலுக்கு நஷ்டஈடு அதில் கேட்கலாம். வழக்கிற்கான செலவுகள் அதில் கேட்கலாம். நடைமுறையில் இன்றைக்கு சட்டத்தில் எளிமையாக இம்மாதிரியான நுகர்வோர் மன்றத்தை சாதாரணமாக அவராகவே அணுகலாம் என்று இருந்தாலும் கூட இன்றைக்கு நடைமுறையில் பார்க்கும்பொழுது அது இல்லாத சூழல்தான் இருக்கிறது. குறைதீர் மன்றத்தில் பார்த்தீர்கள் என்றால் வழக்கறிஞரின் ஆதிக்கம் என்பது இருக்கிறது, அது மறுக்க முடியாதது.

குறைதீர் மன்றமுமே பார்த்தீர்கள் என்றால் தட்டச்சு செய்யவேண்டும், மூன்று நகல்கள் கொடுக்கவேண்டும், அதைக்கொடுக்கவேண்டும், இதைக்கொடுக்கவேண்டும் என்ற நீதிமன்ற நடைமுறைகள் எல்லாம் நடப்பதை நடைமுறையில் பார்க்கிறோம். சாதாரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோர் எளிமையாக குறைதீர் மன்றத்தை அணுகவேண்டும் என்பதற்காகத்தான்சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றம் என்று சொல்லக்கூடாது, குறைதீர் மன்றம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நடைமுறையில் பார்த்தோம் என்றால் நீதிமன்ற நடவடிக்கைகள் போல்தான் இருக்கிறது. அதேபோல் மாவட்டத்துறை குறைதீர் மன்ற நீதிபதிகளைப் பார்த்தீர்கள் என்றால் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைவராக இருக்கிறார். பத்தாண்டுகள் வழக்கறிஞராக இருந்தவர் விண்ணப்பிக்கலாம் என்று அன்மையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மன்றத்திலேயுமே ஆண் உறுப்பினர், பெண் உறுப்பினர் என்று இரண்டு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த மூன்றுபேரும் சேர்ந்துதான் வழக்கு விசாரணை நடைமுறையில் கலந்துகொள்வார்கள். உத்தரவில் ஒரு தலைவர், ஒரு உறுப்பினரின் கையொப்பம் கட்டாயம் இருக்க வேண்டும்.

சட்டத்தில் உறுப்பினரின் தகுதி என்று பார்க்கும் பொழுது பட்டதாரியாக இருக்கவேண்டும், சமூகம், பொருளாதாரம் பற்றியை அறிந்தவராக இருக்கவேண்டும் என்று இருக்கிறது, ஆனாலும் நடைமுறையில் பார்த்தீர்கள் என்றால் யார் ஆளும் கட்சியாக வருகிறார்களோ அவர்கள்தான் வரக்கூடிய சூழல் இருக்கிறது. நம் நுகர்வோர் துறை நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய ஆர்வமான நல்ல விடயங்களில் பண்ணுகிற அதே சட்டத்தில் இதில் ஒரு சில குறைபாடுகளும் இருக்கிறது. இருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது நுகர்வோருக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதில் நாம் இருக்கவேண்டும்.

கேள்வி: மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிற பல நிறுவனங்கள் இருக்கிறது. அதில் குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள், கறிக்கடைக்காரர்கள், உணவகம் நடத்துகிற முதலாளிகள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் என்ன மாதிரியான வழியில் நடவடிக்கை எடுக்கலாம்?

nugarvor16பதில்: இதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு பிரிவு இருக்கிறது. முறையற்ற வணிக நடவடிக்கைகள் என்று ஒரு அத்தியாயமே இருக்கிறது. இதற்கு முன்னால் பார்த்தீர்கள் என்றால் முறையற்ற வணிக நடவடிக்கைகளுக்கு எதிராக முறையிட MRTPஆணையத்துக்கு, டெல்லிக்குத்தான் செல்ல வேண்டும். அங்குதான் முறையற்ற வணிக நடவடிக்கைகள், கட்டுப்படுத்தும் வணிக நடவடிக்கைகளுக்கு எதிராக மனு கொடுக்க முடியும். ஆனால் 1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் MRTPசட்டத்தில் இருக்கக்கூடிய முறையற்ற வணிக நடவடிக்கை, கட்டுப்படுத்தும் வணிக நடவடிக்கைகளில் உள்ள ஒரு சில பிரிவுகளை பிரித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சேர்த்துவிட்டார்கள். எவையெல்லாமே முறையற்ற வணிக நடவடிக்கைகள். ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்கு அதிகமாக வசூலிப்பது, ஒரு பொருள் வாங்கினால் ஒரு பொருள் இலவசம் என்று சொல்வது, தள்ளுபடி என்று சொல்லுவது. பண்டிகைக் காலங்களில் பார்த்தீர்கள் என்றால் ஒரு காரை கடையின் முன் நிறுத்தி வைத்துவிட்டு எங்கள் கடையில் பத்தாயிரத்திற்கும் மேல் வாங்கினீர்கள் என்றால் தள்ளுபடிக்குத் தருகிறோம், குலுக்கள் முறையில் கார் பரிசு என்று கூறுவது, அதனால் நுகர்வோர்கள் ஒரு வேளை நமக்கு விழலாம் என்று நினைத்து எல்லோரும் அந்தக் கடைக்குப் போவார்கள். அதனால் அவருடைய விற்பனை ஊக்குவிக்கப்படுகிறது. இன்றைக்கு சாதாரணமாக ஒரு கார் மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு மூன்று லட்சம் ரூபாய்க்கு காரை நிறுத்திவைத்துவிட்டு, அவர் பல கோடிக்கு பொருட்களை விற்பனை செய்துவிடுவார். அந்தப் பொருள் தரமானதா, இல்லையா, பழையதா என்று சோதிக்க முடியாமல் எல்லாவற்றையும் விற்றுவிடுவார். அந்தக் குலுக்களும் முறையாக நடக்கிறதா என்பதே சந்தேகம். உண்மையிலேயே குலுக்கிதான் கொடுத்தார்களா அல்லது அவர்களது உறவினர்களுக்குக் கொடுத்தார்களா என்பது சந்தேகமே.

இதுபோன்ற முறையற்ற வணிக நடவடிக்கை, அதேபோல் உத்தரவாதம் கொடுப்பது எங்களிடம் பொருள் வாங்கினால் இதற்கு இவ்வளவு இருக்கும், இருசக்கர வாகனங்களை விற்கும் இடத்தில் சிறிது பெட்ரோல் போட்டாலும் வண்டி பல மைல் பறக்கும், 90 கிலோ மீட்டருக்கு மைலேஜ் இருக்கும் என்று உத்தரவாதம் கொடுப்பது. இதை நம்பி பழைய வண்டியை விற்று புதிதாக வண்டி வாங்கி ஓட்டிப்பார்த்தால் அதற்கு பழைய வண்டியே பரவாயில்லை என்று தோன்றும். எந்த ஒரு விஞ்ஞானப்பூர்வமான சோதனையின் அடிப்படையில் இல்லாமல் விருப்பம்போல் விளம்பரப்படுத்துவது, சிறிது பெட்ரோலுக்கு பறக்குது பல மைல், இந்த வண்டியை வாங்கினீர்கள் என்றால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 110 கிலோமீட்டர் தரும் என்பார்கள். வாங்கிய பிறகு பிரச்சனை என்று கடையில் போய் கேட்டோம் என்றால் நீங்கள் அடிக்கடி கீர் போடக்கூடாது, பிரேக் போடக்கூடாது அப்போதுதான் எங்களது வண்டி அவ்வளவு தரும் என்பார்கள். அப்படிப்பார்த்தால் நாம் ஏதாவது மைதானத்தில் போய் ஓட்டினால்தான் அது கிடைக்கும். நடைமுறைக்கு ஏற்றமாதிரி ஒரு போலியான உத்திரவாதத்தைக் கொடுப்பது தவறு.

அதே போல் இன்று மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது கலப்படம். குறிப்பாக இன்றைக்குப் பார்த்தீர்கள் என்றால் பன்னாட்டு மேகி நூடுல்ஸ் தடை செய்வது இதையெல்லாம் பார்த்தீர்கள் என்றால் இன்றைக்கு பல்வேறு நோய்களுக்குக் காரணம் இந்த கலப்படம்தான். உண்ணக்கூடிய உணவிலிருந்து அவனுக்குக் கிடைக்கக்கூடிய சொற்ப லாபத்திற்காக கலப்படத்தைக் கலந்து அதனால் வியாதி ஏற்பட்டு இன்றைக்கு மருத்துவமனையில் சென்று நிற்கிறார்கள். பலவித நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் கலப்படம். நம்பிக்கைக்குரியது என்று நம்பி வாங்கும் ஆவின் பாலில் கலப்படம், அதேமாதிரி பார்த்தீர்கள் என்றால் இன்றைக்கு நூடுல்ஸில் பிரச்சனை. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் எவ்வளவோ வலிமையாக தரக் கட்டுப்பாடு சொல்லப்பட்டிருந்தாலும் கூட நடைமுறையில் கடைபிடிக்கப்படுவது இல்லை.

nugarvor12அதேபோல் இன்றைக்கு சாலையோரக் கடைகளில் பார்த்தீர்கள் என்றால் ஏழைமக்கள் சாப்பிடுகிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். என்னவென்றால் மூன்று நாட்களுக்கு முன்னால் செய்து வைத்திருந்த கோழிக்கறியை எடுத்து கழுவி திரும்பவும் கல்லில் போட்டு காயவைத்து விற்கிறான். மீந்துபோய்விட்டது என்றால் அதை தண்ணீர் ஊற்றி கழுவி, தோசைக்கல்லில் போட்டு காயவைத்து நெகிழியின் உள்ளே போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறான். அடுத்த நாள் பார்த்தீர்கள் என்றால் மசாலா, காரம் எல்லாம் தூக்கலாக போட்டு விடுவதால் அதைப்பற்றி தெரியாத நபர்கள் நன்றாக இருக்கிறதே என்று சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிடுகிறார்கள். ஆனால் அன்றைக்குப் பார்க்கும் பொழுது அது அவர்களுக்குத் தெரியாது. கோழிக்கறி நேற்று போட்டதா அல்லது அதற்கு முன் மூன்று நாட்களுக்கு முன்னால் போட்டதா என்றே தெரியாது. இது போன்ற அபாயகரமான உணவுகள் எல்லாம் குறிப்பாக விற்கும். இம்மாதிரியான கலப்படப் பொருள்கள் பொறுத்தவரையில் நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகலாம்.

அதேபோல இது மாதிரியான போலியான பொருட்கள், கலப்படப் பொருட்களை விற்பனையைத் தடுக்கவேண்டும் என்றால் யார் செய்கிறாரோ அந்த கிடங்கிலே சென்று அந்தப் பொருட்களை பறிமுதல் செய்யலாம். விற்கக்கூடாது என்று சொல்லி நுகர்வோர் துறை நீதிமன்றத்தில் அதற்கான தடை வாங்கலாம். குறிப்பாக இடைக்கால உத்தரவும் பெறலாம். ஒரு கிடங்கிருந்து கலப்படமான பொருளை செய்து விற்றுக்கொண்டிருக்கிறான் என்றால் அதை வாங்கும் நுகர்வோர், உடனடியாக நுகர்வோர் துறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம். சட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் வழக்கை 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும், ஆனால் நடைமுறையில் வருடக்கணக்கில் ஆகிறது. இருந்தாலும்கூட இடைக்கால வழக்கு முடிந்தபிறகுதான் அதை முடக்கவேண்டும் என்றால் அதுவரையிலும் முடியாது. எனவே உடனேயே இந்த போலியான பொருட்களை, அபாயகரமானப் பொருட்களை பறிமுதல் செய்யவேண்டும் என்ற உத்தரவை வாங்கலாம். அதனுடைய விற்பனையை நிறுத்தவேண்டும் என்று கேட்டும் நுகர்வோர் துறை நீதிமன்றத்தில் ஒரு தனிப்பட்ட நுகர்வோர்கூட மனு தாக்கல் செய்து வாங்கலாம்.

கேள்வி: நாம் வாங்கும் பொருட்கள் கலப்பட உணவு என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

nugarvor11பதில்: கலப்பட உணவுகளை கண்டுபிடிப்பதற்கு வீட்டிலேயேகூட நடைமுறையில் இருக்கிறது. உதாரணத்திற்கு தேநீர்தூள் என்றால் அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டால் சாயம் தனியாகத் தெரியும், அதேபோல தேனில் கலப்படம் கண்டுபிடிப்பது போன்ற சாதாரணமான செயல்கள் இருக்கிறது. ஆனால் இன்று சாதாரண நுகர்வோர் ஒவ்வொன்றையும் சோதனை செய்ய முடியாது. உதாரணத்திற்கு நான் காலையில் தேநீர் குடிக்கிறேன், அந்த தேநீர் குடிப்பதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும், பால், தண்ணீர், தேநீர்த்தூள், சர்க்கரை போன்ற நான்கு பொருட்கள் தேவைப்படுகிறது. இந்த நான்கு பொருட்களையும் சோதனை செய்யவேண்டும். இப்பொழுது பாலில் கலப்படம் இருக்கிறது, அதற்கு ஒரு சோதனை, தேநீர்த்தூளில் கலப்படம் இருக்கிறது அதற்கு ஒரு சோதனை, சர்க்கரையில் கலப்படம் இருக்கிறது அதற்கு ஒரு சோதனை, தண்ணீரில் கலப்படம் இருக்கிறது, இன்று பாதுகாக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர்) என்கிற பெயரில் போலியான தண்ணீர் வருகிறது. அந்தத் தண்ணீருக்கு ஒரு சோதனை. ஆக நான் காலையில் எழுந்து ஒரு தேநீர் குடிக்கவேண்டும் என்றாலும் கூட இந்த நான்கு பொருட்களையும் சோதனை செய்துவிட்டு, அப்புறமாக தேநீர் போட்டு குடித்துவிட்டு, என்றைக்கு அலுவலகத்திற்கு செல்வது, கல்லூரி மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால் என்றைக்கு கல்லூரிக்கு செல்வது. இன்று எல்லா பொருளிலுமே கலப்படம் வந்துவிட்டது, இன்று சாப்பிடுகிற முட்டையிலேயே கலப்படம். கிடைக்கக்கூடிய நாட்டுக்கோழி என்று விற்பதில் கலப்படம். மீனில் கலப்படம் இருக்கிறது, எல்லாவற்றிலுமே பிரித்துப் பார்க்கமுடியாத அளவிற்கு கலப்படம் இருக்கிறது.

nugarvor14ஒரு கட்டத்தில் அரிசியில் கல் கலப்படம், பாலில் தண்ணீர் கலப்படம் என்ற நிலைமை போய் பிரித்து பார்க்க முடியாத கலப்படம் வந்துவிட்டது. ஒவ்வொரு நுகர்வோரும் இன்று கலப்படம் என்று தனித்தனியாக ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு போகிற சூழலுக்கு யார் பொறுப்பு என்று பார்த்தீர்கள் என்றால் அரசுதான் பொறுப்பு. Food Safety and Standards Authority of India என்று அமைப்பு இருக்கிறது, இவர்கள்தான் அந்தப் பொருட்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனுமதி கொடுக்கும் பொழுது சோதனை செய்து கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்று சொன்னால் FSSAI, சூலை 2013ல் இதே மேகி நூடுல்ஸ்க்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள், அப்பொழுது அவர்கள் என்ன ஆய்வு செய்தார்கள், 2013ம் வருடம் சூலை மாதம் 4ந்தேதி இதே மேகி நூடுல்ஸ்க்கு FSSAI -யினால் அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை ஆரம்ப நிலையிலேயே தடுத்திருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு வருவதை தடுத்திருக்கலாம்.

அதே மாதிரி மாவட்ட வாரியாக உணவு பாதுகாப்பு அலுவலர் இருக்கிறார்கள். அவர்கள் மாவட்டத்திற்கு ஒருவர்தான் இருக்கிறார்கள் அல்லது தாலுகா அளவில் ஒருவர்தான் இருக்கிறார்கள். இன்றைக்கு விற்பனைப் பொருட்கள் ஏகப்பட்டது இருக்கிறது. இன்றைக்கு அலுவலர் எண்ணிக்கை என்பது குறைவு, அதை அதிகப்படுத்த வேண்டும். தொடர்ந்து அவர்களுடைய ஆய்வு சென்று கொண்டிருக்க வேண்டும். இதில் என்னவென்றால் அரசே மறைமுகமாக அவர்களுக்கு அதிகம் சான்று சேகரிக்காதீர்கள், மாதத்தில் நான்கு மாதிரி மட்டும் எடுங்கள் போதும் என்ற மறைமுக உத்தரவு இடுவதாகவும் கேள்விப்படுகிறோம். உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களுடைய வேலையை செய்வதற்கு மறைமுகமான தடங்கல் இருக்கிறது. இன்று கடந்த இரண்டு வருடங்களாக சேகரிக்கப்பட்ட மாதிரிகளை தோராயமாக பார்த்தோம் என்றால் சராசரியாக ஒவ்வொரு உணவுப் பாதுகாப்பு அதிகாரியுமே வருடத்திற்கு 12தான் எடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க 568 நபர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் மாதிரிகளின் சதவிகிதத்தைப் பார்க்கும் பொழுது மாதத்திற்கு ஒரு மாதிரிதான் எடுத்திருக்கிறார்கள்.

nugarvor13இதற்கென்று ஒரு துறை இருக்கிறது, இதற்காக இவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறது, அவர்களை முழுமையாக பணி செய்ய விடாமலும், வணிகர்களின் ஓட்டு வங்கியை பாதுகாக்கவோ என்னவோ தெரியவில்லை, ஆய்வுகளுக்கு முட்டுக்கட்டைப் போடக்கூடிய சூழல் இருக்கிறது. ஒரு சில அதிகாரிகள் ஆர்வமாக ஆய்வு செய்தாலும்கூட, அவர்களுக்கு தடங்கல் இருக்கிறது. ஒரு சிலர் போவதே இல்லை. எங்கேயும் எதிலும் கலப்படம் நிறைந்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு இந்த மேகி நூடுல்ஸ் விடயம் வெளிவந்ததே உத்திரப்பிரதேசத்தில் லக்னோவில் இருக்கக்கூடிய பாண்டே என்கிற உணவுப் பாதுகாப்பு அதிகாரி எடுத்த முயற்சிதான். அவர் எடுத்த முயற்சி, ஏன் இந்தியா முழுக்க இருக்கிற உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஒவ்வொரு பொருளையும் சோதனை செய்தால், அக்கு வேர் ஆணி வேராக எல்லா விடயங்களும் வெளியில் வந்துவிடும். ஒரு தனிப்பட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி லக்னோவில் இருந்த பாண்டே என்ற ஒருவர் எடுத்த முயற்சியினால் இன்று Nestle நிறுவனம் 320 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை, திரும்பப் பெற்று அழித்துவிட்டது. அந்த உணவுப்பொருளை எத்தனை குழந்தைகள் சாப்பிட்டிருப்பார்கள், எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தியிருக்கும்.

நுகர்வோர் உரிமையில் மிக முக்கியமான உரிமை பாதுகாப்பு உரிமை. உயிருக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய உரிமை. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நுகர்வோரே வாங்கக்கூடிய பொருளை அவரே பகுப்பாய்வு செய்யலாம். அதை சட்டத்தில் எளிமைப்படுத்த வேண்டும். பகுப்பாய்வு செய்வதற்கு கட்டணம் செலுத்தவேண்டும். அவராக சென்று சோதனை செய்ய முடியாது, அரசால் நியமிக்கப்பட்ட பகுப்பாய்வாளரை அழைத்துச்சென்று விற்பனை செய்பவருக்கு தகவல் கொடுத்துவிட்டு, பகுப்பாய்வு செய்து முடிவை எடுத்துக்கொண்டு அதன்பிறகு அவர்மேல் குற்றவழக்கை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்வார்கள். அதில் கலப்படம் இருக்கிறது, போலியான பொருள் என்று நிரூபனம் ஆனால் பகுப்பாய்வு செய்யும் பொழுது கட்டிய பதிவுக் கட்டணம் திரும்பி கிடைக்கும். அதன்பிறகு உணவுபாதுகாப்பு அதிகாரிகள் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள். ஒவ்வொரு நுகர்வோருமே பகுப்பாய்வு கட்டணம் இல்லாமல் எளிமைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மொத்தம் ஆறே ஆறு பகுப்பாய்வுதான் இருக்கிறது, மண்டலத்திற்கு ஒன்றுதான் இருக்கிறது. மாவட்டத்திற்கு ஒன்று பத்தாது, பத்தாவது இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இதுபோன்ற மிக முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தையும் தாண்டி ஆதரவான சட்டங்கள் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டம், நுகர்வோர் இதைத் தெரிந்துகொண்டு அதற்கான நடைமுறையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

கேள்வி: அரசு நிறுவனங்களாக இருக்கிற போக்குவரத்துத்துறை, கூட்டுறவுத்துறை, மின்சார நிலையங்கள் ஆகிய இந்தத் துறையில் நுகர்வோர் பாதிக்கப்பட்டால் இழப்பீடு பெறமுடியுமா?

பதில்: பெறலாம், தாராளமாகப் பெறலாம். நுகர்வோர் துறை நீதிமன்றத்தில்மனுதாக்கல் செய்து அதற்கு உண்டான மனஉளைச்சல், நட்டஈடு, வழக்கு செலவுகளும் பெறலாம்.

கேள்வி: தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து நுகர்வோருக்கும் தாங்கள் கூறும் அறிவுரை?

பதில்: குறிப்பாக இந்த காலகட்டத்தில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை முழுமையாக எல்லோரும் தெரிந்துகொண்டு கலப்படத்திற்கு எதிரான போரில் இறங்க வேண்டும். ஏனென்றால் இது முக்கியமான, தலையாய பிரச்சனை. அதனால் உணவுக் கலப்படத்தை தடுப்பதற்காக அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய நுகர்வோர் குழுக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது இதுபோன்ற வேலைகளை முதல்கட்டமாக ஒவ்வொருவரும் இறங்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

சிறகிற்காக நேர்காணல் அளித்தமைக்கு மிக்க நன்றி.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அசோகன் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது