மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ் மருத்துவம்

சித்த மருத்துவர் வி.என். பரிமளச் செல்வன்

Jun 1, 2019

siragu siddha1

தமிழ் இலக்கியங்களில் மருத்துவக் குறிப்புகள் பல கிடைக்கின்றன. இதன் வழி தமிழர்கள் மருத்துவத்துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது தெரியவருகிறது. நூல்களுக்குப் பெயர்களே மருந்தின் பெயர்களாக வைத்துள்ளனர். திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் போன்றன இதற்குச் சான்றுகள் ஆகும். மருந்துகளைப் பயன்படுத்தியதோடு மருத்துவ முறைகளையும் தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனின்று கிளைத்ததே சித்த மருத்துவம் ஆகும். ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளைப் போலத் தமிழர்கள் பயன்படுத்திய மருத்துவ முறை சித்த மருத்துவம் எனப்படுகிறது.

இயற்கையில் கிடைக்கக் கூடிய எண்ணற்ற புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து முதலியவைகளைக் கொண்டும் நவரத்தின நவலோகங்களைக் கொண்டும் இரசம் கந்தகம், கற்பூரம், தாரம் அயம், பவளம், துருசு முதலியவற்றைக்கொண்டும் திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கசாயங்கள் போன்றன கொண்டு செய்யப்படும் மருத்துவ முறை சித்த மருத்துவம் ஆகின்றது.

சித்த மருத்துவம் மருத்தவ முறை மட்டும் அல்ல. அது பல துறைகளுடன் தொடர்புடையதாக உள்ளது. சோதிடம், பஞ்சபட்சி சாத்திரம், சரநூல், வகார வித்தை, முனிவர்கள் இயற்றிய பாடல்கள், கன்ம காண்டம் போன்றவற்றுடன் தொடர்புடையதாக இது விளங்குகிறது.

சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் மூன்று ஆகும். அவை வாதம் (காற்று), பித்தம் (சூடு), சிலேத்துமம் (நீர்) என்பனவாகும். இவை மிகினும் குறையினும் நோய் செய்யும்.

உணவே மருந்து

பண்டைய தமிழர்கள் உணவே மருந்தாக உண்டனர். ‘‘உண்டி முதற்றே உணவின் பிண்டம், உணவெனப்படுவது நிலத்தொடு நீரே” (புறம் 18) என்பது இதனை மெய்ப்பிக்கும் இலக்கியச் சான்றாகும்.

சித்தமருந்து என்பது இருவகைப்படுகின்றது. அது அக மருந்து, புற மருந்து என்பனவாகும். இது அக, புற பாகுபாடுபோல அமைந்துள்ளது.

அகமருந்து

அகமருந்து என்பது உள்ளுக்குள் சாப்பிடுவது. அவை

 1. சுரசம் – இஞ்சி சுரசம்
 2. சாறு – கற்றாழைச்சாறு
 3. குடிநீர் – ஆடாதோடைக்குடிநீர்
 4. கற்கம் -கீழாநெல்லிக்கற்கம்
 5. உட்களி -கடுகு உட்களி
 6. அடை – துாதுவளை அடை
 7. சூரணம் – அமுக்கிராச்சூரணம்
 8. பிட்டு
 9. வடகம் -தாளிசாதி வடகம்
 10. வெண்ணெய்- குங்கிலிய வெண்ணெய்
 11. மணப்பாகு – மாதுளை மணப்பாகு
 12. நெய் – ஆடாதோடைநெய்
 13. இரசாயனம் – இஞ்சிஇரசாயனம்
 14. இளகம்- கேசரிஇளகம்
 15. எண்ணெய்- பூரஎண்ணெய்
 16. மாத்திரை-பாலசஞ்சீவிமாத்திரை
 17. கடுகு -
 18. பக்குவம்- பாவனக்கடுக்காய்
 19. தேனுாறல் -இஞ்சி
 20. தீநீர்- ஓமம்
 21. மெழுகு – கிளிஞ்சல் மெழுகு
 22. குழம்பு- சாதிஜம்பீரக்குழம்பு
 23. பதங்கம் -சாம்பிராணிப்பதங்கம்
 24. செந்துாரம்- இரசசெந்துாரம்
 25. நீறு அல்லது பற்பம்- முத்துப்பற்பம்
 26. கட்டு- இரசக்கட்டு
 27. உருக்கு -
 28. களங்கு
 29. சுண்ணம்- வெடியுப்பச்சுண்ணம்
 30. கற்பம்
 31. சத்து- கடுக்காய் சத்து
 32. குருகுளிகை- இரசமணி

என்பனவாகும்.

siragu siddha4

புறமருந்து என்பன பின்வரும் தன்மையன.

 1. கட்டு – இலைகள் அல்லது பட்டைகளை நைய இடித்தோ அரைத்தோ வதக்கியோ புளித்தநீர் முதலியவற்றில் வேகவைத்தோ கட்டுதல்
 2. பற்று- சரக்குகளை நீர்மப்பொருள் விட்டு அரைத்து சுடவைத்தோ சுடவைக்காமலோ நோயுள்ள இடங்களில் அப்புதல்
 3. ஒற்றடம்-சரக்குகளை சூடுபடுத்தி துணியில் முடிந்து நோயுள்ள இடங்களில் ஒற்றுதல்
 4. பூச்சு-நீர்மப்பொருட்கள் மற்றும் பசை குழம்பு நிலையில் உள்ளவற்றை நோயுள்ள இடங்களில் பூசுதல்
 5. வேது- சரக்குகளை எடுத்து கொதிக்க வைத்து அதனின்று எழும் ஆவியை நவதுவாரங்களில் ஏதாவது ஒன்றின் வழியாக இழுத்தல்
 6. பொட்டணம்- சரக்குகளை துணியில் முடிந்து சுடவைத்த நெய்ப்புப் பொருட்களில் நனைத்து நோயுள்ள இடங்களில் ஒற்றடமிடுதல்
 7. தொக்கணம்- இது மர்த்தனம் எனப்படும். இது வெறுங்கையால் பிடிப்பதும் தைலங்களை தடவிப்பிடிப்பதும் என இரு வகைப்படும்
 8. புகை-சரக்குகளை நெருப்பிலிட்டு எழும் புகையைப்பிடித்தல் அல்லது குடித்தல் அல்லது புண் முதலியவற்றுக்கு தாக்கும் படி செய்தல்
 9. மை- உ-ம் நீலாஞ்சனமை
 10. பொடிதிமிர்தல்- உடம்பில் தேய்த்து உருட்டி உதிர்த்தல் உ-ம் மஞ்சள் பொடி
 11. கலிக்கம் – சில சரக்குகளை சில சாறுகளால் அரைத்த உருட்டி மாத்திரையாக்கி தேனிலாவது வேறு சாற்றிலாவது உரைத்து கண்ணில் போடுதல்
 12. நசியம்- இலைச்சாறு அல்லது தைலம் அல்லது மாத்திரைகளை தாய்ப்பாலுடன் உரைத்து மூக்கிலிடுதல்
 13. ஊதல்- (ஆக்கிராணம்) சரக்குகளை வாயிலிட்டு மென்று காது முதலியவற்றில் ஊதல்
 14. நாசிகாபரணம்-சரக்குகளை இடித்து மூக்கிலிடுவது
 15. களிம்பு- உ-ம் வங்கவிரணக்களிம்பு வங்கக்களிம்பு
 16. சீலை- குழம்பில் துணித்தண்டை தோய்த்து விரணங்களுக்கு உபயோகிப்பது
 17. நீர்- விரணங்களை கழுவுவதற்கு உபயோகிக்கும் நீர்மப்பொருட்கள்
 18. வர்த்தி – ஆறாத விரணங்களுக்கும் புரையோடும் விரணங்களுக்கும் வைப்பது
 19. சுட்டிகை – சுடுகை எனப்படும்
 20. சலாகை- கட்டிகள் புரைகள் சிலைப்புண் பவுத்திரம் போன்றவற்றின் நோய் நிலைமையை அறிய உதவும் உலோகக்கருவிகள்
 21. பசை – உ-ம் கார்போகிப்பசை
 22. களி – நீர் விட்டு அரைத்த சரக்குகளை கரண்டியிலிட்டு சுடவைத்தோ சுடவைக்காமலோ கட்டுதல்
 23. பொடி – சரக்குகளை பொடித்து எடுத்து கொள்ளுதல்
 24. முறிச்சல் – எலும்புகள் பிறழ்ந்து இருந்தால் அதனை சரியான நிலைக்கு மாற்றுதல்
 25. கீறல் – கட்டி பரு கொப்புளம் ஆகியவற்றில் தங்கியுள்ள சீழ் இரத்தம் நீர் என்பவற்றை நீக்க கீறிவிடல்
 26. காரம் – விரணத்தை ஆற்றுவதற்காக தோற்றவிப்பதற்காக பயன்படுத்தப்படும் சில நச்சுமருந்துகளும் அதன் கட்டுகளும்
 27. அட்டை விடல்- நோயுற்று வீங்கின இடங்களில் தீய இரத்தத்தை அகற்றுவதற்காக அட்டை விடல்
 28. அறுவை- தேவையில்லாதவற்றை அறுத்து நீக்கி தைத்து செம்மைப்படுத்தல்
 29. கொம்பு கட்டல் – உடைந்த உறுப்புக்களை இணைத்து மீண்டும் ஒட்டும்படி மரச்சட்டம் கட்டி வடல்
 30. உறிஞ்சல் – விரணங்களிலுள்ள சீழ் குருதி என்பவற்றை உறிஞ்சி எடுத்தல்
 31. குருதி வாங்குதல்- இரத்தக்குழாயை கீறி இரத்தத்தை வெளிப்படுத்தல்
 32. பீச்சு- மலம் வெளிப்படாவிடில் குழாய் மூலமாக நீர்மப்பொருட்களை உட்செலுத்துதல்

இவ்வாறு இன்று சித்த மருந்து பெருமளவில் வளர்ந்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசு ஆகியன இம்மருத்துவம் வளர வகை செய்துவருகின்றன.

சங்க இலக்கியத்தில் மருந்து

சங்க இலக்கியங்களில் மருந்து என்ற சொல் 38 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அனைத்தும் உடல் பிணி தீர்க்கும் மருந்து என்ற குறிப்பில் எடுத்தாளப்பெற்றுள்ளன.

வரினும் நோய் மருந்து அல்லர் வாராது – நற் 64/10

மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/9

மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல – நற் 136/3

மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 140/11

மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/9

மருந்து எனப்படூஉம் மடவோளையே – நற் 384/11

மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே – குறு 68/4

மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே – குறு 71/1

தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா – குறு 263/3

வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து/அறியான் ஆகுதல் அன்னை காணிய – குறு 360/1,2

நினக்கு மருந்து ஆகிய யான் இனி – ஐங் 59/3

இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சே – ஐங் 59/4

நோய்க்கு மருந்து ஆகிய பணை தோளோளே – ஐங் 99/4

நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே – ஐங் 101/5

மருந்து_உரை இருவரும் திருந்து_நூல் எண்மரும் – பரி 8/5

மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய – பரி 23/4

மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப – கலி 17/20

மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப – கலி 17/20

இன் உயிர் செய்யும் மருந்து ஆகி பின்னிய – கலி 32/15

மருந்து ஆகி செல்கம் பெரும நாம் விரைந்தே – கலி 44/21

மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ – கலி 60/18

மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து_இழாய் – கலி 60/21

மருந்து நீ ஆகுதலான் – கலி 63/11

மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா – கலி 81/14

நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட – கலி 81/18

மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த – கலி 89/10

நீ உற்ற நோய்க்கு மருந்து/மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா – கலி 107/26,27

மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா – கலி 107/27

இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள் – கலி 109/21

மருந்து அறைகோடலின் கொடிதே யாழ நின் – கலி 129/24

எல்லாரும் தேற்றர் மருந்து/வினை கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர் – கலி 145/50,51

மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே – அகம் 147/14

வருந்து தோள் பூசல் களையும் மருந்து என – அகம் 351/15

தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் – அகம் 388/21

மருந்து இல் கூற்றத்து அரும் தொழில் சாயா – புறம் 3/12

நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்து – புறம் 42/22

இரு மருந்து விளைக்கும் நன் நாட்டு பொருநன் – புறம் 70/9

மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி – புறம் 180/5

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருந்து

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருந்து என்ற சொல் பின்வரும் நிலைகளில் கையாளப்பெற்றுள்ளது.

மம்மர் அறுக்கும் மருந்து – நாலடி:14 2/4

வாடும் பசலை மருந்து – கார்40 4/4

நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி – கார்40 40/2

இன் உயிர் தாங்கும் மருந்து – ஐந்70:1 6/4

மாலும் மாறா நோய் மருந்து – திணை150:5 142/4

மருந்து எனினும் வேண்டல்பாற்று அன்று – குறள்:9 2/2

மருந்து ஆகி தப்பா மரத்த அற்றால் செல்வம் – குறள்:22 7/1

மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது – குறள்:95 2/1

உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று – குறள்:95 10/1

அ பால் நால் கூற்றே மருந்து – குறள்:95 10/2

நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள்:110 1/2

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை – குறள்:111 2/1

தன் நோய்க்கு தானே மருந்து – குறள்:111 2/2

எவ்வ நோய் தீர்க்கும் மருந்து – குறள்:125 1/2

தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – குறள்:128 5/2

திரிகடுகம் போலும் மருந்து – திரி 1/4

மருவு நல்லாதன் மருந்து – திரி 105/4

மனை மரம் ஆய மருந்து – பழ 53/4

உடுக்கை மருந்து உறையுள் உண்டியோடு இன்ன – பழ 167/1

விண்டற்கு விண்டல் மருந்து – பழ 251/4

மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி மருந்தின் – பழ 355/2

தலைமகனை தாழ்க்கும் மருந்து – சிறுபஞ் 51/4

கோடல் குழவி மருந்து வெருட்டாமை – சிறுபஞ் 72/3

இவ்வகையில் செம்மொழி இலக்கிய காலத்தில் மருந்தின் பயன்பாடு அதிக அளவில் இருந்துள்ளது.

இசை மருத்துவம்

siragu siddha2

தமிழர் நோயுற்றொர்க்கு நோயின் கடுமை தெரியாது இருக்க இனிமையான இசையை இசைத்துள்ளனர். நோயாளிக்கு நோயின் கடுமையைத் தணிக்க மருந்து, சுகாதாரமான சூழல், மணந்த மணம், இனிய இசை’ அன்பான பணிவிடை ஆகியன தேவைப்படும். இது வளர்ந்த நாகரிகங் கொண்ட மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பழக்க வழக்க நடைமுறைகள். இவ்வாறான நடைமுறைகள் ஈராயிரம் ஆண்டின் முன்பே பழந்தமிழர் இல்லற ஒழுக்கங்களில் இரண்டறக் கலந்த ஒன்றாகக் காணப்படுகின்றன.

“ தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ8

என்னும் புறநானூற்றுச் செய்யுள், விழுப்புண் கொண்ட போர்வீரன் கிடத்தப்பட்டிருக்கும் மனையின் இறைப்பில் இரவம்’ வேம்பு ஆகிய இலைகளைச் செருகி, மனையெங்கும் வெண்ணிறங் கொண்ட சிறுகடுகைத் தூவி’ நறுமணம் கமழும் நறும்புகை புகைத்து’ யாழினால் பல்லிசை இசைத்தும் ஆம்பல் என்னும் குழலை ஊதியும் காஞ்சிப் பண்ணைப் பாடியும் மருத்துவம் செய்தனர்.

வரிப்புலி மார்பைக் கிழித்தது போல், போர்க்களத்தில் ஏற்பட்ட விழுப்புண்ணை ஆற்றுதற்குக் கொடிச்சியர் இசைப்பாடலை இசைத்தனர் என்று மலைபடுகடாம் உரைக்கின்றது.

இதனால்’ மனையிலுள்ள நோயாளரைப் பேணும் மருத்துவர்களாகப் பெண்டிரும் இருந்துள்ளனர் என்பதும், நோயின் கடுமையைப் போக்க நோய்த் தடுப்பும் சுகாதாரமும் தேவை என்பதும், அறியப் பட்டிருந்தது. இசையால் நோயைத் தணிக்கும் இசைமருத்துவம் (Musico therapy) என்னும் முறையும் நடைமுறையில் இருந்திருப்பதும் தெரியவருகிறது.

அறுவை மருத்துவம்

siragu siddha3

போர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து’ மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.

“மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்

சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் ”10

நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம்.

குழந்தை மருத்துவம்

பண்டைத் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றிருந்த மருத்துவம், எல்லாவிதமான மருத்துவமாகவும் விரிவடைந்து பரிணாம நிலையில் வளர்ந்து வந்திருப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு வளர்ந்து வந்த மருத்துவம் குழந்தை மருத்துவத் துறையையும் தன்னகத்தே கொண்டதாகக் திகழ்ந்திருக்கிறது.

இளங்குழந்தைகளுக்குச் செய்யப்படுகின்ற மருத்துவத்தை மிகவும் தேர்ந்தநிலை பெற்றதாகவே கருத வேண்டும். குழந்தைகள், நோயையோ, நோயின் குறியையோ கூறும் நிலையில் இருப்பதில்லை. குறிப்பறிந்தும்’ சோதித்தறிந்துமே மருத்துவம் பார்க்க வேண்டி யிருக்கும். அம்மாதிரியான மருத்துவத்தை மனையுறையும் பெண்டிரே செய்தனர் என்பதற்குச் சீவக சிந்தாமணி சான்றாகிறது.

“” காடி யாட்டித் தராய்ச் சாறும் கன்னன் மணியும் நறு நெய்யும்

கூடச் செம்பொன் கொளத் தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறீஇப்

பாடற் கினிய பகுவாயும் கண்ணும் பெருக உகிர் உறுத்தித்

தேடித் தீந்தேன் திப்பிலி தேய்த்து அண்ணா உரிஞ்சி மூக்குயர்ந்தார்”20

பிரமிச்சாறு, கண்ட சருக்கரை’ தேன், நறுநெய் ஆகியவற்றுடன் காடியைக் கூட்டி, பொன்னினால் தேய்த்துக் குழந்தைகள் உண்ணுகின்ற அளவிற்குப் பக்குவப்படுத்திய மருந்தாக்கி’ தினமும் வாய்வழி ஊட்டினர் என்றதனால்’ குழந்தை மருத்துவத்தினை மகளிரும் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகின்றது.

இவ்வாறு பல்வகை நிலையில் மருத்துவ முறைகளைத் தமிழர்கள் செய்து வந்துள்ளனர். இவை இன்று வளர்ந்து சித்த மருத்துவம் என்ற தனித்துறையாக எழுச்சி பெற்று நிற்கிறது.


சித்த மருத்துவர் வி.என். பரிமளச் செல்வன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ் மருத்துவம்”

அதிகம் படித்தது