மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தற்போதைய தேவை கூட்டணி

சுசிலா

Apr 8, 2017

Siragu mega team1

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்திய கொள்கைக்கு எதிராக இப்போதிருக்கும் பா.ச.க ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா தற்போது மிகப்பெரிய அழிவு சூழலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மத்திய மதவாத பா.ச.க அரசு, ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆலோசனை பேரில் மிகப் பல மக்கள் விரோத செயல்களிலும், மதவெறியைத் தூண்டும் விதத்திலும், சிறுபான்மையினர் பாதுகாப்பின்மையிலும், பெண் விடுதலைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கவும், மாநில உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நம் தேசம் ஒரு நாடு அல்ல. பல மொழிகள், பல இனங்கள், பல பண்பாடுகள், பல வாழ்க்கை முறைகள் என வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம். இதில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்ற குரலில், ஒரே பரந்த இந்து தேசமாக மாற்றுவதற்கு பா.ச.க துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான முயற்சிகளிலும் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலமாக தங்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, ஆதிக்கமுறையை செலுத்தி வருகிறது. அதற்கு தக்க சான்றுகளாக தற்போது நடந்த கோவா, மணிப்பூர் சட்டசபைத் தேர்தல்கள்.

Siragu mega team2

இவ்விரு மாநிலங்களிலும் காங்கிரசை விட குறைவான இடங்களில் வெற்றிபெற்றும், தங்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். குதிரை பேரம் முறையில் சட்டசபை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தங்கள் ஆட்சியை நிறுவி இருக்கிறார்கள். இதற்கு ஆளுநர்களும் உடந்தையாகவே இருக்கிறார்கள். உத்திரப்பிரதேச மாநிலத்திலும், பணப்பட்டுவாடா மற்றும் கள்ள ஓட்டுகள் மூலம் வெற்றி பெற்றுகிறது பா.ச.க. மேலும் வாக்கு இயந்திரங்களில் குளறுபடிகள் செய்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அடுத்து வரும் மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஒடியா ஆகிய மாநிலங்களிலும் தங்கள் ஆட்சியை அமைக்க, தங்களுக்கே உரிய பல தகிடுதித்த வேலைகளை ஆரம்பிக்கிறது இந்த மதவாத மோடி அரசு. இவர்களை ஆட்டுவிக்கும் காரணியாக இருப்பது, மூன்றுமுறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான். இவர்களின் தூண்டுதலின் பேரில் தான், பசுவதை தடுப்பு, மாட்டிறைச்சி தடை, சிறுபான்மை மதத்தினர், குறிப்பாக இசுலாமிய சமூகத்திற்கு அச்சுறுத்தல் என அனைத்து சனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது மோடி அரசு.

Siragu-mega-team3

அவர்கள் ஆட்சி அதிகாரம் இல்லாத மாநிலங்களில் எல்லாம், ஆளும் கட்சியை உடைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது. பா.ச.க. உத்திரப்பிரதேசம், ஒடியா என இரு மாநிலங்களிலும் தங்கள் கொல்லைப்புற வேலைகளை நடத்தி முடித்து விட்டு, இப்போது தமிழ்நாட்டிற்குள் கால் வைத்திருக்கிறது. அ.தி.மு.க-வை உடைக்க வேண்டும் என்ற முயற்சியில் தான் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியை உருவாக்கி, அதன் பின்னே ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க இருந்து இயக்கிக்கொண்டிருக்கின்றன. கேரளாவிலும் தங்கள் காலடியை பதிக்க அதிவேகமாக முயற்சி செய்கிறது. அவர்கள் நினைத்தது போல் அனைத்து மாநிலங்களிலும் தங்கள் ஆட்சியை எப்படியாகிலும் நிறுவி விட வேண்டும். ஒரே ஆட்சியின் கீழ் இந்தியா என்ற இந்துநாடு இருக்க வேண்டுமென்றும் என்ற ஒரு கொள்கையை முன்னிறுத்தி செயல்படுகிறார்கள். பிறகு சனநாயகத்திற்கே முழுக்குப் போட்டு சர்வாதிகார நாடாக மாற்றி விட்டாலும் வியப்பில்லை. அந்த அளவிற்கு அவர்களின் செயல் மூர்க்கமாகவும், தந்திரமாகவும் இருக்கின்றன.

Siragu-mega-team5

ஊழல் என்பதை கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மாநிலமாக வலம் வருகிறது பா.ச.க.. ஊழலை விட அதிபயங்கரமானது மதவாதம். அப்படித் தான் அவர்கள் ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சியா என்றால் அதுவும் இல்லை. நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல், பா.ச.க ஆளும் மத்தியப்பிரதேசத்தில் நடக்கும் வியாபம் ஊழல் தான். இவ்வளவு பெரிய சதியை முறியடிக்க வேண்டுமென்றால், நாட்டில் உள்ள அனைத்து மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இது தற்போதைய காலத்தின் கட்டாயம். பீகார் மாநிலத்தில், எப்படி அனைவரும் சேர்ந்து பா.ச.க-வை தோற்கடித்தார்களோ, அம்மாதிரி அனைத்து மாநிலங்களிலும் பா.ச.க-விற்கு எதிரான கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் இப்போது வந்திருக்கிறது. அது மட்டுமல்ல. அடுத்த 2019 பாராளுமன்றத் தேர்தலில், இந்த ஆர்.எஸ்.எஸ், பா.ச.க- வினற்கு எதிராக அனைத்து மாநிலங்களில் உள்ள முற்போக்குக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு புது அணியை உருவாக்கி, அதனை வெற்றிபெறச் செய்ய வேண்டும். நாம் ஒற்றுமையுடன் செயல்படவில்லை என்றால் மதவாதமும், சாதீயவாதமும் தலைவிரித்து ஆடத் தொடங்கிவிடும். ஆதலால், அந்தந்த மாநிலக்கட்சிகள் இதனை நன்றாக சிந்தித்து, ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு, இந்த மதவாத மோடி அரசை ஆளும் அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும்.!

மதவாதத்தை முறியடிப்போம் … மதச்சார்பற்ற ஆட்சிக்கு அடிகோலுவோம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தற்போதைய தேவை கூட்டணி”

அதிகம் படித்தது