மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தலித்திய அரசியல் பதிவுகளில் முதன்மை

இல. பிரகாசம்

Mar 31, 2018

siragu-thotti-magan3

(தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகனை முன்வைத்து)

சமீப காலங்களில் நாம் அதிகம் விவாதிக்கத் தொடங்கியிருக்கிற சொல்லாடல் “தலித்தியம்”. நவீன காலத்திய நாகரீகம் வளரத் தொடங்கிய போது பல்வேறு விதமான பிரச்சனைகளைப் பற்றி பேச ஒரு வழி பிறந்தது. அது பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் சொல்லலாம். ஆனாலும்,அது தன் பழைய மரபானவற்றின் தொடர்ச்சியிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிட முடியாமல் ஏற்றத் தாழ்வுகளை அதிக அளவில் பிரதிபலித்தது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய சில ஆண்டுகள் ஜமீன்தாரி முறையானது உச்சகட்டத்தை எட்டியிருந்த காலம். அது அரசாங்கத்தை ஆதரிப்பவர்களுக்கு வேண்டிய பலன்களை நிலம் முதல் அதிகாரம் வரையிலான இன்ன இன்ன விவகாரங்கள் வரையிலும் அளித்துவந்தது. அதன் முகம் மிக கோரமானதாக்,பாமர மக்களின் அடித்தட்டு வாழ்க்கையை நிர்மூலமாக்கியதுடன் அவர்களது அடிமை நிலையை நிலை நிறுத்தவும் பல்வேறு விதமான வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டது.

இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளிலும் தொழிலாளர் இயக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டன. அவற்றில் சில அமைப்புகள் நிலவுடமையாளர்களுக்கு மிக விசுவாசமாக நடந்து கொண்டன. அது முதலாளித்துவம் பாமரர்களிடத்தில் ஊடுருவம் தந்திரம்.

தொழிலாளர் நலன்,தொழிலாளர் முன்னேற்றம் என்ற அடிப்படை நோக்கத்தை முன்வைத்து தோற்றுவிக்கப்பட்ட சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் தங்களது தேவையை காரணமாக வைத்து ஜமீன்தார்களுக்கு வளைந்து கொடுத்து வேண்டியதைப் பெற்று கொள்கை முரண்பாட்டில் மூல காரணகர்தர்களாக விளங்கினர்.

உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த மக்கள் ஒன்று திரண்டு(?) ஆரம்பித்த இயக்கங்கள் நிலத்தின் அடிப்படையிலான போராட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் அவை அரசாங்க அதிகாரத்தின் உதவியுடன் முடக்கப்பட்டன. அவைகளைப் பற்றிய பதிவுகள் அதன் சமகாலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் விரிவாகவும் பதிவு செய்யப்பட்டன. அவை பாமரர்களின் போராட்டங்களான நிலப் போராட்டம்,அதிகாரப் போராட்டம்,இடதுசாரிச் சிந்தனைப் போராட்டம் என பல கோணங்களில் பதிவு செய்யப்பட்டு இலக்கியமாக செய்யப்பட்டன. அவைகள் ஆவணங்களாக பாதுகாக்கக் கூடியவைகளாக இருந்து வருகின்றன.

தலித்திய இயக்கமும் இலக்கியத்தின் தோற்றமும்:

siragu-thotti-magan5

வர்க்கப் போராட்டங்கள் 19-ம் மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் அதிக அளவில் நடைபெற்றன. இக்காலகட்டம் இந்திய சுதந்திர போராட்டத்தின் உச்சகட்டத்தை எட்டியிருந்த சமயம் ஆகும். இதே காலகட்டம் இந்திய இலக்கியங்கள் மேல்நாட்டு இலக்கிய முறையை பின்பற்றி நாவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவைகள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டப்படுவனவாக அமைந்திருந்தன.

தமிழ் நாவல் இலக்கியத்தில் முதல் மூன்று நாவல்களிலும் கூட பெரும்பாலும் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் அதிகாரத்தின் மையத்தையும் காட்டுவனவாகவே அமைந்திருப்பதனை நாம் பார்க்கலாம். ஆனாலும் ஆறுதல் அளிப்பவையாக இருப்பது பெண்ணிய சிந்தனைகளை கொண்டவை என்ற அடிப்படையில் அவைகளை நாம் பெரிதும் வரவேற்று மகிழ்ந்தோம்.

நாவல் இலக்கியம் முதன் முதலில் வங்காளத்தில் ஏற்பட்டது என்றாலும்இக்காலகட்டத்திற்கு சில ஆண்டுகளுக்குப் பின் மகாராட்டிராவில் இலக்கியத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. அது “தலித் இலக்கியம்”என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தற்போதும் அவ்வகையான முயற்சிகள் அங்கே மிகப் பிரபலம்.

தென்னிந்தியாவில் தலித்திய இலக்கிய வகை பரவல்:

தலித்திய இலக்கியம் இந்திய அளவில் பலராலும் ஆரம்பத்தில் புறக்கனிப்பிற்கு ஆளானது. ஆனாலும் இலக்கிய ஆசிரியர்கள் முயற்சியை மேற்கொண்டனர். அது மராட்டிரத்திலிருந்து தொடங்கி பின் கன்னடம்,மலையாளம் பிறகுதான் தமிழுக்கு வந்தது. ஆனாலும்,தலித்திய இலக்கிய அமைப்பிற்கு தமிழகத்தில் க.அயோத்திதாச பண்டிதர் விதையை போட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தலியத்திய இலக்கியம் பரவ மலையாள இலக்கியங்களும்,கன்னட இலக்கியங்களும் நமக்கு உந்து சக்தியை அளித்தன. 1946-ல் மலையாளத்தில் தகழி சிவசங்கரப் பிள்ளையின் “தோட்டியின் மகன்”வெளியாகி தென்னிந்திய அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். முதன் முதலில் பாமர மக்களான தோட்டிகளின் வாழ்வை விருப்பு வெறுப்பின்றி பதிவு செய்த அரசியல் மற்றும் சமூக நாவல் இதுவாகும்.

தோட்டியின் மகன் தமிழுக்கு:

siragu-thotti-magan4

சுந்தர ராமசாமி அவர்கள் “தோட்டியின் மகன்”-ஐ தான் 1951-52-ம் காலகட்டத்தில் மொழிபெயர்த்ததாக குறிப்பிடுகிறார். பின்னர் இதனை மொழிபெயர்த்ததைப் பற்றிச் சொன்ன போது தோழர் ஒருவர் இவ்வாறு கேட்டாராம்:

        தோழர்: மலையாளத்திலும் ~தோட்டியின் மகன்தானா?’

       சு.ரா: ஆம்

நூல் பற்றிய சிறிது நேர உரையாடல்களுக்குப் பிறகு

      தோழர்: ‘தமிழ்ல தலைப்ப மாத்திப்புட்டா என்ன தோழர்?’

என்ற கேள்வியை சு.ரா அவர்கள் இதனைத் தாம் கேட்ட பொழுது பெரும் கவலையடைந்ததாக கூறியுள்ளார். அப்பொழுது அவருக்கு ஆறுதல் கூறியவர் எழுத்தாளர் தோழர் ஜி.நாகரான் அவர்கள் “தோட்டிகளும் தொழிலாளர் வர்க்கம் தானே தோழர்”. சு.ரா. மிக உற்சாகமாக அதனை நூலாக வெளிக்கொண்டுவர பாடுபட்டார். சரசுவதியில் 1957 மார்ச் முதல் 1958 ஜூன் வரையிலும் தொடர்கதையாக ‘சரஸ்வதி’இதழிலும் வெளியானது. இருப்பினும் இதற்கு ஆதராவாக எந்தவொரு ஆதாராமும் கிடைக்கப்பெறவில்லை என்று சு.ரா அவர்கள் கூறுவதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. அல்லது மக்கள் அதனைப் பெரும்பாலும் புற்கணித்துவிட்டிருப்பார்கள் என்று எண்ணுவதற்கும் போதிய ஆதாரமும் நம்மிடையே இல்லை.

சுதந்திர இந்தியாவின் காலகட்டம்:

சுதந்திர இந்தியா ஏற்படுவதற்கு முந்தைய காலம் பிரிட்டிஷ் ஆட்சியன் ஆதரவு பெற்றவர்களே நகராட்சி சபைகளின் தலைவர்களாகவும்,ஆதிக்க சக்தியினர் அதிகாரப் பதவிகளில் இருந்து வந்தனர் என்பதும் அறிந்ததே.

2-ம் உலகப்போர் உச்சகட்டத்தை எட்டியிருந்த காலமும் அதுவே. தொற்று வியாதியான காலரா நோயின் தாக்கத்தால் அதிக உயிர்கள் பலியாயினர். அரசாங்க அமைப்புகளும் அதில் தோற்றுப் போயிருந்தன(?) அல்லது திட்டமிட்டு மிகக் குறைவான எண்ணிக்கையில் சுகாதார முறைகள் மேற்கொள்ளப்பட்டனவா?. என்பதை ஆய்வுகளில் தான் கண்டறிய வேண்டும்.

தோட்டியின் மகன்: தலித்துகளும் அரசியலும்:

தகழி சிவசங்கரப் பிள்ளையின் “தோட்டியின் மகன்”நாவலும் சுதந்திர இந்தியாவின் காலகட்டத்தில் எழுதப்பட்டது. அந்நாவலின் மையம் பாமரமக்களுள் ஒருவர்களாகிய தோட்டிகளின் வாழ்வை குறித்து பல கேள்விளை எழுப்பிய நாவல்.

கேரளத்தின் ஆலப்புழை பகுதியில் தமிழகத்தின் பகுதிகளான திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளிலிருந்து பல தொழில்கள் புரிகின்ற மக்களை சுத்தம் செய்யும் பணிகளுக்கு குடியேற்றம் செய்யப்படுகின்றனர். அவர்களின் வாழ்வு அதிகார மையத்தில் இருப்பவர்களால் எப்படியெல்லாம் ஒடுக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டுகிறது.

குடியேற்றம் செய்யப்பட்ட தோட்டிகளின் வாழ்வு அடிமை நிலையைக் கொண்டதாக இருப்பதாக தன் தந்தை ‘இசக்கி முத்து’ இறப்பின் போது அவரது மகன் ‘சுடலை முத்து’வும் சுத்தம் செய்யும் பணிக்காக நகரச் சபை அதிகாரியான கேசவப் பிள்ளையின் தயவால் தோட்டியாக நியமனம் செய்யப்படுகிறான். அதன் பின் அத்தொழில் ஏற்பட்ட பிரச்சனை அது சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகளை எண்ணிப் பார்க்கிறான்.

அதுவரை தன் தந்தை தனக்காக உணவுகளை கொண்டு வந்த முறையை தன் முதல் நாளின் வேலையின் போது அறிந்து அதிர்ந்து போகிறான். ஆனாலும் அவன் அதைவிட்டு வெளியே வந்துவிட முடிகிறது. ஏனெனில் அவர்களுக்கு வேறெந்த வேலையும் கிடைப்பதில்லை என்பதாலும் அவன் அதை எளிதில் ஏற்றுக் கொண்டுவிட முடிகிறது.

சங்கம் ஏற்படுத்துதல்:

தங்கள் சமூகம் முன்னேற வேண்டுமெனில் கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் தொடங்கிய சங்கம் செயல்படுவது கண்டு நமக்கும் ஒரு நன்மை கிடைக்கும் என்று எண்ணுகிறான். சங்கத்தைத் தொடங்க தன் கையிருப்பிலிருந்தும் போட்டுக் கொள்வது என்று தீர்மானம் செய்து கொள்கிறான். சங்கம் தொடங்கப்படுகிறது. ஆனால் கூட்டத்திற்கு தலைமை ஏற்றவரின் பிரசங்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை. சங்கத்து உறுப்பினர்களாக மற்ற தோட்டிகள் சேர்ந்து கொள்கின்றனர். இவனும் பெயரளவில். பின்னர் நடவடிக்கையில் இருந்து பின்வாங்கல்.

siragu thotti magan1

மேற்கண்ட விபரம் அறிந்த கேசவ பிள்ளை சுடலை முத்துவிடம்

கேசவ பிள்ளை: “என்னாச்சுடா உன் சங்கம்?”அக்கேள்வி அவனை திடுக்கிட வைத்தது. மற்றும் ஒருவித பயத்தையும் உண்டு பண்ணியிருந்தது.

சு.முத்து: “நானொண்ணும் அதிலே சேரலை”மேல்விபரம் பற்றி அவரிடத்தில் தெரிவிக்கிறான். இந்த விவகாரம் நகரசபை தலைவருக்கும் கொண்டு செல்லப்பட்டது.

தொழிலாளர்கள் ஏற்படுத்திய சங்கம் நகரசபை தலைவருக்கு ஏற்புடையதாகப் படவில்லை. அப்போது ஓவர்சீயரான கேசவ பிள்ளையும் தலைவரும் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். சுடலை முத்துவிடம் புதிய சங்கத்தை தொடங்கவும் அதற்கான பணச் செலவு முதற்கொண்டு ஆதரவும் அளிக்கப்படுகிறது. புதிய சங்கம் தொடங்கி அதற்கு பல தொழிலாளர்களின் தலைவராக கேசவ

பிள்ளை தேர்வு செய்யப்படுவதும் முரண்?

சுரண்டலும் சுரண்டப்படுதலும்:

தான் நம்பிக்கை வைத்துள்ள கேசவ பிள்ளையிடம் தான் சேர்த்துவைத்திருந்த தொகையினை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி வீடு, நிலம் என்று முன்னேற வேண்டும் என கூறிய அறிவுரை கவனிக்கத்தக்கது.

தனக்குப் பிறக்கும் மகன் ஒரு போதும் தோட்டியாகி விடக்கூடாது என்று லட்சியமாகவே உறுதிகொள்கிறான் சுடலை முத்து. அதற்காக தான் சேமித்திருந்த பணத்தில் ஒரு பகுதியை தன் நண்பர்களிடத்திலும் பக்கத்து வீட்டாரிடமும் வட்டிக்கு விட்டு அதில் வரும் சொற்ப காசையும் கொண்டு நிலத்தை வாங்கிவிட வேண்டும் என்பது அவனுக்கு தீவிரமாக இருந்து வருகிற கனவு.

பிள்ளைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று எண்ணுகிற போது,தான் தினமும் வேலை செய்து வருகிற வீட்டில் பிள்ளைகளை தாய்மார்கள் அழைக்கும் பெயர்களை உற்று நோக்குகிறான். அது போலவே தன் மகனுக்கும் ‘மோகன்’என்று சூட்டுகிறான். அப்பொழுது அவன் உள்ளம் மிக உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது. அத்தோடு தன் மகனின் பெயரை எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

தான் வேலை செய்து வருகின்ற டாக்டரின் வீட்டாரிடம் ‘எம்மவனுக்கு மோகன்னு போரு வெச்சிருக்கேன்’என்று கூறுவது ஒரு வித பலத்த தாக்குதலாகவே அவனுக்குப் படுகிறது. பெயர்களில் கூட மேல்தட்டு மக்கள் மட்டுமே வைத்திருந்த காலமும் ஒன்று உண்டு.

எதிர்த் தாக்குதல் எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து எழுவதும் அவை மீண்டும் ஒடுக்கப்படுவதும் தொடர்கதைகள் தானே?. இன்றும் கூட…

நம்பிக்கையை இழக்கச் செய்தல்:

நம் சமூகத்தில் எப்போதும் ஒரு மனோபாவம்  உண்டு. தன் நிலையினை ஒருவன் சற்று உயர்த்திக் கொள்ள முற்படும் போது அவனைச் சார்ந்த அந்த சமூகம் சற்றே தங்களது கண்களை விழித்துப் பார்க்கும். அது ஒரு வெறுப்புப் பார்வையை அள்ளி வீசுவதற்று ஒப்பானதாகவே பார்க்கப்படும்.

தான் சேமித்த தொகையை கேசவ பிள்ளையிடம் கொடுத்ததைப் பற்றி அவன் மனைவி வள்ளி “பணம் கிடைக்கலனா என்ன செய்யறது?”. ஆனாலும் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை அவன் விடவில்லை. கேசவ பிள்ளையின் அறிவுரை அவனுக்கு அப்டியொரு நம்பிக்கை அளித்திருக்கலாம்.

சுடலை முத்துவின் மகனை பள்ளிக்கூடத்தில் சேர்க்கிற பொழுது ‘தோட்டியின் மகன் என்பதற்கு பதிலாக வோறொரு நபரின் பாதுகாப்பில் வளர்கிற பையன்’என்ற அளவில் சேர்க்கப்படுகிற போது தாக்குதல் அடுத்த தலைமுறைக்கும் தொடுக்கப்படுகிறது.

சுடலை முத்து: “எம்மவன் ஒரு நாளும் தோட்டியாக முடியாது”என்று உறுதி கொள்கிறான்.

மனைவி வள்ளி:; “தோட்டி இல்லாத காலம் வருமா?”

சுடலை முத்து: “ஆருக்குத் தெரியும்”

என்று எதிர்காலத்தைப் பற்றிய தன் கணவனின் சிந்தனையுடன் பயணம் மேற்கொள்ள முயல்கிறாள்.

சதியும் இனஒழிப்பு நடவடிக்கையும்:

ஆலப்புழை ஊர்முழுவதும் காலரா நோய்த் தொற்று ஏற்பட்ட போது போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் நகரசபைத் தலைவர் அலட்சியம் செய்வது பெரும் ஒரு சதித் திட்டமே.

தோட்டிகளின் குடியிருப்பில் தினமும் ஒருவர் இறந்து போகிற போது நகரசபை தலைவர் கேசவ பிள்ளையிடம் திருநெல்வேலிக்குச் சென்று சுத்தப்படுத்தும் தொழிலுக்கு ஆட்களை கொண்டுவர சொல்வதும் இங்கே இன அழிப்பு நடவடிக்கையாக தோன்றுகிறது.

மேலும் சுடலை முத்து நோயின் அச்சம் காரணமாக தன் இருப்பிடத்திலிருந்து நீங்கி வோறொரு இடம் பெயர்வதிலிருந்து தோட்டி வேலையை விட்டு மயான வேலையை பார்ப்பதும் அவை அத்தனையும் தன் மகன் தோட்டியாகி விடக் கூடாது என்ற லட்சியம் முன்னிற்கிறது.

எனினும் மோகனின் தந்தையும் தாயும் மிக மோசமாக நோயின் தாக்குதலுக்கு ஆளாகி மரணித்துப் போகிற நிலையில் நிச்சயம் இன்றை வாழ்க்கை நிலை அவ்வளவாக முன்னேறி விடவும் இல்லை என்பதும் புலனாகிறது. மேலும் தந்தையின் வேலையை மீண்டும் மோகன் ஏற்கிறபோது தற்போதை வாழ்வில் ஏற்படுகிற அதிகார ஒடுக்கு முறையை இன்றைய அரசியலை தோலுரித்துக் காட்டுகிறது என்பது 1946-ல் எழுதப்பட்ட நாவல் என்பதையும் காலத்தையும் கவனிக்கிற போது நாம் எந்த நிலையில் அரசியலை கொண்டிருக்கிறோம் என்பது தெரியவருகிறது.

அரசியல் ஒடுக்கம்:

எல்லா காலத்திலும் சமூகத்தில் விளிம்பு நிலை மக்களே அரசியல் முதற்கொண்டு இன்ன பிற அதிகார வர்க்கநிலையிலும் ஒடுக்கப்பட்டனர். ஒடுக்கப்படுகின்றனர். அது இலக்கிய அமைப்பிலும் தொடர்கிறது என்பதையும் இன்று அதிக அளவில் காணப்படுகிறது.

இன்னமும் தமிழில் அவ்வப்போது தலித்திய இலக்கியங்கள் படைக்கப்பட்டாலும் அவை பெரும் வாசக பரப்பிற்கு கொண்டு செல்லப்படவேயில்லை. அல்லது அதற்கான தளத்தை போதிய அளவிற்க ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். தலித் இலக்கியம் பாமர மக்களை சென்றடைய தமிழ் இல்கியம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலித்திய அரசியல் பதிவுகளில் முதன்மை”

அதிகம் படித்தது