மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆபாசப்படங்களும், அத்துமீறும் அரசும்

T.K.அகிலன்

Sep 26, 2015

aabaasa inayathalam3கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆபாச இணையதளங்களை மத்திய அரசு தடைசெய்த நிகழ்வு பலதரப்பிலும் பரந்துபட்டு விவாதிக்கப்பட்டது. ஆபாச தளங்களை ஒழிப்பதன் மூலம், பாலியல் ரீதியிலான குற்றங்கள் குறையும் என்பது அரசின் வாதம். சீப்பை ஒளித்துவைத்துவிட்டு திருமணத்தை நிறுத்த திட்டம் போட்ட ‘போண்டா’ மணியே கூட, அரசின் இந்த வாதத்தை கேட்டு கொல்லென சிரிப்பார்.
ஒரு உடலுறவு காட்சியை கணினியின் திரையில் பார்ப்பதன் மூலம்தான் பாலியல் குற்றங்கள் நிகழ்வதாக அரசு நினைத்தால், அதைவிட அடிமுட்டாள்தனமான கற்பனை இருந்திடவே முடியாது. “ஆபாச தளங்கள் இருப்பது தவறில்லை” என்ற எனது வாதத்தை முன்வைப்பதற்கு முன்பு ஒருசில விளக்கங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சம்மந்தப்பட்ட இருவரின் ஒப்புதலோடு படமாக எடுக்கப்பட்டு, அதனை “அடல்ட் கன்டன்ட் வார்னிங்” போட்டு இணையத்தில் பதிவேற்றப்படும் உடலுறவு காட்சிகள் அடங்கிய காணொளிகளை மட்டும்தான் இங்கே நான் குறிப்பிடுகிறேன், நியாயப்படுத்துகிறேன். மற்றபடி 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களையோ, சம்மந்தப்பட்ட இருவர் அறியாத வண்ணம் மறைந்திருந்து எடுக்கப்படும் உடலுறவு காட்சிகளையோ, வன்புணர்வுகளையோ எந்த தருணத்திலும் நான் நியாயப்படுத்தவில்லை. நிச்சயமாக அப்படிப்பட்ட குற்றங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை, தடுக்கப்பட வேண்டியவையே.

ஆபாச தளங்கள் இருக்கக்கூடாது, பாலியல் கல்வி பற்றி பேசவேக்கூடாது. ஆனால் பாலியல் குற்றங்கள் மட்டும் குறைய வேண்டும் என்று நினைப்பது, ஓட்டைப்பானையில் நீர் நிரப்புவது போலத்தான். முதலில் இந்த “ஆபாசம்” என்ற வார்த்தையிலேயே எனக்கு உடன்பாடு கிடையாது. சாதிக்காக செய்யப்படும் கொலைகளை “கௌரவக்கொலை”ன்னு மடத்தனமாக சொல்வதைப்போல, இப்படி பாலுணர்ச்சிகளை உந்தும் படங்களை ஆபாசப்படங்கள் என்று வரையறுப்பதும்  ஏற்கத்தக்க விஷயமல்ல. உடலின் பசியை ஆபாசம் என்றா சொல்கிறோம்?, அதைப்போலத்தான் இதுவும் ஒரு மனிதனின் இயல்பான உணர்வுப்பசி.

domesticviolence5பாலியல் உள்ளடக்கம் கொண்ட தளங்களை இந்த அரசு தடை செய்ததற்கு காரணமாக, பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதை குறிப்பிடுகிறார்கள் கலாச்சாரவாதிகள். அப்படியானால் இணையதளங்கள் வருகைக்கு முன்பு நம்ம நாடு பாலியல் குற்றங்கள் நிகழாத நாடாக இருந்ததா என்ன?. பாலியல் குற்றங்களுக்கும், இத்தகைய பாலியல் உள்ளடக்க படங்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாலியல் குற்றங்களை குறைப்பதற்கு ஒருவகையில் இந்த தளங்கள் மறைமுக வழிவகுக்கிறதென கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான நேரங்களில் ஒரு மனிதனின் காமப்பசிக்கு வடிகால் கிடைக்காதபோதுதான், இதைப்போல குற்றங்கள் அதிகம் நிகழ்கிறது. இத்தகைய காணொளிகள் நிறைந்த தளங்கள், அந்த மனிதனின் அப்போதைய தேடலுக்கு வடிகாலாக அமைகிறது. சுருக்கமாக சொல்வதானால், “ஐந்து நிமிடங்கள் திரைக்காட்சியை பார்த்துவிட்டு, ஆறாவது நிமிடம் சுய இன்பம் செய்துகொள்வதோடு” அந்த காமப்பசி முற்றுப்பெறுகிறது. இதன்மூலம் தனி மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ என்ன இழுக்கு வந்துவிட்டது?. யாரையும் வன்புணர்ச்சி செய்யவில்லை, குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை, கருத்தரிக்கக்கூட வாய்ப்பில்லாத வகையிலான இந்த வடிகால் தவறானது என்று எப்படி சொல்வீர்கள்?.

சில நேரங்களில் திரையில் காணும் காட்சிகள் வாழ்க்கையில் நடக்காதபோது, உடலுறவில் நாட்டமில்லாமல் போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கு சொல்வதானால், oral செக்ஸ் எனப்படும் வாய்வழிப்புணர்ச்சி இணையங்களில் நாம் பார்க்கும் செக்ஸ் காட்சிகளில் மிக இயல்பான ஒன்று. ஆனால், இந்தியாவை பொறுத்தவரையில் வாய்வழி புணர்ச்சி என்பது கணவன் மனைவிக்கு இடையில் அரிதான சிலர் வாழ்க்கையில் மட்டுமே நிகழ்கிறது. ஒரு பெண்ணுக்கு அதில் விருப்பம் இருந்தாலும் கூட, கலாச்சாரம் கருதி அதனை செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுவாள். இது பெண்ணின் நடத்தையின் மீதே ஒருகட்டத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திவிடும் அளவிற்கு மாறிவிடுகிறது. அப்படி இருக்கையில் வாய்வழி புணர்ச்சியை விரும்பும் கணவன் அது கிட்டாதபோது, உடலுறவில் நாட்டமில்லாமல் போவதற்கான வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறான வாதம். டொனால்ட் ஆர்டல் என்னும் மேற்கத்திய ஆராய்ச்சியாளர், “பாலுறவு காட்சிகள் ஒரு மனிதனின் செக்ஸ் வாழ்க்கையை ஒருபோதும் பாதிக்காது. நிஜத்தில் அவர்களுடைய பாலுறவின் தரத்தை மேம்படுத்தவே செய்கிறது. பரந்துபட்டு சிந்திப்பதற்கும், தயக்கங்களை  தவிர்ப்பதற்கும் உதவுகிறது” என்று முடிவை அறிவித்துள்ளார். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?. டொனால்ட் ஆர்டல் அவர்கள், தனது ஆய்வுக்கு பின்பற்றிய நூல் வாத்ஸ்யாயனர் எழுதிய “காமசூத்திரம்”. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நமது காமசூத்திரத்தை மையப்படுத்தி எடுத்த ஒரு ஆய்வின் முடிவை, அந்நூலின் பிறப்பிடமான நமது இந்தியாவே இன்னும் ஏற்கவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

2009ஆம் ஆண்டு உட்டா பல்கலைகழகத்தின் பிரபல பாலியல் ஆய்வாளர் முனைவர் மைக்கேல் வோஹிக் என்பவர், ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்களை அப்படியொரு ஆய்வுக்கு உட்படுத்தினார். அவரது ஆய்வின் நோக்கம், “பாலியல் உள்ளடக்க படங்கள் அவர்களை மனரீதியான பாதிப்புக்கு உள்ளாக்கியதா?” என்பதுதான். அந்த ஆய்வின் முடிவுதான் நம் கலாச்சார காவலர்களின் கேள்விக்கு பதில். “செக்ஸ் படங்கள் எங்கள் மனங்களை கொஞ்சம் கூட பாதிப்புக்கு உள்ளாக்கவில்லை. ஆனால், அந்த காட்சிகளை காண்பதற்கான தடை விதிக்கும்போது, அதனை பார்த்தே ஆகவேண்டும் என்கிற அதீத உணர்வு எழுகிறது. அந்த உணர்வுதான் எங்கள் மனங்களுக்குள் பாதிப்பை உண்டாக்குகிறது”. அப்படியானால் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிற இந்த தடையால்தான் பிரச்சினைகள் உருவாகுமே தவிர, அந்த தளங்களால் ஒருபோதும் ஏற்படுவதில்லை.

aabaasa inayathalam4பாலியல் உள்ளடக்க தளங்களுக்கு அடிமையாகிவிடுவதால், இளைஞர்களுக்கு சமுதாயத்தின் மீதான பிணைப்பு துண்டிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. உண்மையில் அது இந்த தளங்களால் மட்டும் உண்டாகும் பிரச்சினை இல்லை, நம்மில் பெரும்பாலானவர்களும் மூழ்கிக்கிடக்கும் முகநூலால் கூட இதே பாதிப்பு உண்டாகிறது. ஆபாச தளங்களை தடைசெய்ய சொல்லும் முற்போக்குவாதிகள், இப்படிப்பட்ட சமூக தளங்களையும் தடைசெய்ய சொல்வார்களா?.

பிரச்சினை என்பது அந்த தளங்களின் மீது அல்ல, அதை பயன்படுத்துபவர்களை பொறுத்தே அது உருவாகிறது என்ற உண்மையை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அது பேஸ்புக் முதல் ‘எக்ஸ் வீடியோஸ்’ வரை அத்தனை தளங்களுக்குமே பொருந்தும். இந்த தளங்களை அளவோடு பயன்படுத்துகிறோமா? என்ற விஷயம் மட்டுமே அதனுடைய சிக்கலின் அடிநாதம். உங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வை பாதிக்காத வகையில், எப்போதாவது நேரம் கிடைக்கும்போது பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இந்த தளங்கள் இருக்குமானால் அது நிச்சயம் எந்தக்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஒருவேளை சதாசர்வகாலமும்ம் உங்கள் வேலைகளை விட்டுவிட்டு, இந்த படங்களை பார்ப்பதையே முழுநேர பணியாக செய்வீர்களானால், மெலிதாக அந்த அடிமை நிலையிலிருந்து உங்களை மீட்டெடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் இந்த நிலையைக்கூட “பார்ன் அடிக்ஸன் (porn addiction)” என்று வரையறைப்படுத்தக்கூடாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். பாலியல் உள்ளடக்க தளங்கள் மீது அடிமை கொள்ளுதல் என்கிற ஒரு நிலையை இதுவரை அறிவியலாளர்கள் யாரும் உறுதிசெய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். பாலியல் கல்வியை முறையாக கொடுக்காத காரணம்தான், இன்றைக்கு பதின் வயது நபர்களின் பாலியல் தளங்கள் மீதான அதீத ஆர்வத்துக்கு காரணம். நாம் நம் பிள்ளைகளுக்கு முறையான வகையில் செக்ஸ் பற்றி சொல்லிக்கொடுக்காததன் விளைவு, அவர்களாகவே தேடிக்கற்றுக்கொள்ளும் கூடமாக இந்த தளங்கள் மாறிவிடுகிறது. ஒருவேளை இந்த தளங்களும் தடுக்கப்பட்டுவிட்டால், இவர்களின் அடுத்தக்கட்ட தேடல் என்னவாக இருக்கும் என்று யோசித்தீர்களா?. அதனுடைய ஆபத்து இன்னும் கடுமையான விளைவுகளுக்குக்கூட வழிவகுத்திடக்கூடும். ஆகையால் முறையான பாலியல் கல்வியுடன், முறைபடுத்தப்பட்ட பாலியல் உள்ளடக்க தளங்கள் ஆரோக்கியமான உடலியல் தேவைக்கு நிச்சயம் உதவிபுரியும்.

சில நேரங்களில் இந்த தளங்களே கூட, அவர்கள் அறியாமல் பாலியல் கல்வியை ஊட்டுவதாக காத்தரின் சாலமன் என்கிற உளவியல் ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். “இன்றைக்கு பாலியல் நோய்களை தடுப்பதற்கான ஆணுறை பற்றிய விழிப்புணர்வு இளைஞர்களிடத்தில் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. நாம் பார்க்கும் நிறைய தளங்களில் உடலுறவு காட்சிகளில் தொடர்ச்சியாக ஆணுறை பயன்படுத்தப்படும் நிகழ்வை பார்க்கும்போது, உறவுக்கு முன்பு ஆணுறை அணியவேண்டும் என்கிற புரிதல் இளைஞர்களுக்கு உண்டாகிறது. அதனை பயன்படுத்தும் முறைகூட இதன்வழியே பொதுத்தள மக்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. பொதுத்தள திரைப்படங்களில் ‘ஆணுறை’ என்கிற வார்த்தையே சொல்லப்படக்கூடாத வார்த்தையாக பார்க்கப்படுகிற சூழலில், இந்த பாலியல் உள்ளடக்க தளங்கள் ஒருவகையில் பாலியல் கல்வியை கொடுக்கிறது” என்கிறார் காத்தரின்.

aabaasa inayathalam2ஒருசில தருணங்களில் உடலுறவு காட்சிகளின் மூலம் தவறான புரிதல்களும் உண்டாகிவிடுவதுண்டு. அதில் முதன்மையான புரிதலின்மை, “எனக்கு சீக்கிரமே விந்து வெளியாகிவிடுகிறது” என்பதுதான். திரையில் காட்டப்படும் காட்சியில் ஒரு ஆடவன் அரை மணி நேரத்துக்கு மேலாக விந்து வெளிவராமல் உறவுகொள்ளும்போது, தமக்கு மட்டும் ஏன் ஐந்து நிமிடத்தில் வெளியாகிவிடுகிறது? என்று எழும் சந்தேகம் இயல்பானதுதான். சர்வதேச பாலியல் மருத்துவ மையம் இதற்குரிய விளக்கமாக, “ஒரு நிமிடத்துக்கு முன்னதாக விந்து வெளியானால் மட்டுமே அது விந்து முந்துதல் குறைபாடாக கருதப்படும்” என்று கூறியுள்ளது. ஆகையால், திரைக்காட்சிகளை நிஜ வாழ்க்கையோடு பொருத்திப்பார்ப்பதை கைவிடுவது உத்தமம். ஆகையால் ஒட்டுமொத்தமாக இத்தகைய தளங்களை தடைசெய்திடாமல், முறைப்படுத்தப்பட வேண்டியது மட்டுமே அரசின் கடமை. பாலியல் உள்ளடக்க தளங்கள் சைபர் க்ரைம் பிரிவால் கண்காணிக்கப்பட்டு, அவை ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். ஓரளவு நாமும் நம் பிள்ளைகளுக்கு பாலியல் அறிவை புகுத்த முயற்சிப்போம். சட்டமன்றத்தில் அமர்ந்துகொண்டு பிட்டுப்படங்கள் பார்ப்பதுதான் தவறே ஒழிய, என் அறைக்குள் கணினியின் முன்னே நான் பார்ப்பதை தடைசெய்ய முனையும் அரசின் செயல்பாடும் சர்வாதிகார போக்கின் எச்சம்தான்.


T.K.அகிலன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆபாசப்படங்களும், அத்துமீறும் அரசும்”

அதிகம் படித்தது