மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தலையங்கம்

க.தில்லைக்குமரன்

Jan 7, 2017

siragu-demonetization1

உலக நாடுகளில் இன்றைய இந்தியா மிகப் பழமையான நாகரீகத்தைக் கொண்டது. 1947-க்குபின் ஆங்கிலேயரால் இந்தியா என்று அழைக்கப்பட்ட இந்நாடு 1947-க்குமுன் பல நாடுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு நாட்டிற்கும் தனி பண்பாடு, மொழி, உடை, உணவு மற்றும் வாழ்வுமுறை இருந்து வந்தது. இந்திய ஒருங்கிணையம் ஒரு நாடாக இருந்தாலும், இன்றும் பல தேசிய இனங்களைக்கொண்ட ஒருங்கிணையமாகத்தான் இருந்து வருகிறது. வட இந்தியரையும் தென்னிந்தியரையும் பார்த்தாலே இது தெரியும். மிகப் பழமையானதொரு நாட்டின் பழக்க வழக்கங்களை ஒரு நாளில் மாற்றுவது ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம். பலநூறு ஆண்டுகளாக இருந்து வரும் பொருளாதாரத்தை மேற்கத்திய பொருளாதாரமாக மாற்றுவது மிக எச்சரிக்கையாகவும், பொறுமையாகவும் சிந்தித்து சிறிது சிறிதாக செயல்படுத்துவதுதான் உகந்தது. ஆனால் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் அவசரகதியில் ஒரு முடிவை எடுத்து, நேர அவகாசமேதும் கொடுக்காமல் ஒரு முக்கிய முடிவை மக்களின்மேல் திணித்துள்ளார்கள்.

இந்தியா போன்ற பழம்பெரும்நாடுகளின் பொருளாதாரம் 80 விழுக்காட்டிற்குமேல் பணத்தினால்தான். இன்றும் இந்தியாவில் மின் வசதி, இணைய வசதி, சாலை வசதிகளே இல்லாத கிராமங்கள் பல உள்ளன, நாட்டு நடப்புகள் தெரியாமல் வாழ்ந்து வருபவர்கள் கோடிக்கணக்கினர். இந்த நிலையில் இந்தியத் தலைமையமைச்சர் ஓரிரவு 8 மணியளவில் தொலைக்காட்சியில் தோன்றி இன்னும் சிலமணி நேரத்தில் இந்தியாவில் புழங்கும் 86% பணம் செல்லாது என்று அறிவிப்பது முட்டாள்தனத்திலே முட்டாள்தனமானது. பல கிராம மக்களுக்கு இது குறித்து எந்த அறிவிப்புமில்லாமல் இந்த முட்டாள்தன முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

siragu-demonetization7

காலையில் எழுந்த பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் சேமித்து வைத்திருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்று தெரிந்து என்ன செய்வதறியாது அதிர்ச்சி அடைந்தனர். சிலர் உடனே மாரடைப்பினால் இறந்தனர். பெரும்பாலான இந்திய நடுத்தரவர்க்கத்தினர் வாழ்நாள் முழுதும் சிறிது சிறிதாக சேமித்த பணத்தை வீட்டில் வைத்திருப்பதுதான் வழக்கம். அவர்களுக்கு வங்கி செல்வது முடியாத செயல். வங்கிகளை நம்புவதுமில்லை அவர்கள். வங்கி என்றாலே கடன் கொடுக்கும் நிறுவனமென்பதுதான் அவர்கள் அறிந்த உண்மை. அங்கு போய் தங்கள் பணத்தை வைப்பது என்பது இவர்களுக்கு என்றுமே உகந்ததல்ல. மேலும் வங்கிகள் கொடுக்கும் கடன்கள் பெரும்பாலும் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே, எனவே வங்கிகளை இவர்கள் மதித்ததுமில்லை, அதன் பயன்களை அவர்கள் அனுபவித்ததுமில்லை, தேவையுமில்லை.

வங்கிகளையே மிதிக்காத இவர்களை அடுத்த நாள் முதல் வங்கி வாசலில் கால் கடுக்கக்காக்க வைத்து அவர்கள் வைத்திருந்த பணத்தை மாற்ற தள்ளியது இந்த அரசின் சாதனை. நாள் முழுதும் காத்திருந்து பணத்தை மாற்ற முடியாமல் இல்லம் திரும்பி மீண்டும் அடுத்த நாள் நீண்ட வரிசையில் நிற்க வைத்ததுதான் கொடுமை. பணம் மாற்றமுடியாமல் பல உயிர்கள் இழந்ததுதான் மிச்சம். பெரும்பாலான மக்கள் தினக்கூலிகள், அல்லது பணிக்கு தினமும் செல்பவர்கள். இவர்களை தினமும் காக்க வைத்து அவமதித்ததுதான் இந்த முட்டாள்தனமான திட்டத்தின் பலன்.

siragu-demonetization2

இந்தியத் தலைமையச்சர் திரு. மோடி 50 நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று பொய்யுரைத்தார். 50 நாட்களுக்கும் மேலாகியும் இன்றும் மக்கள் வரிசையில் நின்று வருகின்றனர். இதற்குமேல் கொடுமை என்னவென்றால் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒவ்வொருநாளும் ஒரு அறிவிப்பைச் செய்து மக்களை மேலும் கொடுமைகளுக்குள்ளாக்கியது. RBI ஒன்று சொல்ல, இந்திய நிதியமைச்சர் இன்னொன்றைச் சொல்ல, தலைமையச்சர் வேறொன்றைச்சொல்ல இந்திய அரசு ஒரு துக்ளக் அரசாகாவே ஆகிப்போனது. உலகநாடுகளிலுள்ள பொருளாதார வல்லுநர்கள் பலர் காரித்துப்பியும், இதற்கு மாற்றுமருந்து அளிக்க மறுத்தது மனிதாபிமானமற்ற இந்த கேவல அரசு.

முதலில் இந்தத் திட்டம் கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கு என்றார் திரு. மோடி. பின்பு இதனால் கறுப்புப்பணமொழிக்க முடியாது என்று தெரிந்து, பணமில்லா வர்த்தகத்தை இந்தியாவில் (cashless economy) துவக்கத்தான் இந்தத் திட்டமென்றார். கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் வங்கியில் வைக்க முடியாமல் அதை அவர்கள் அழித்து விடுவார்கள், வங்கியில் மாற்றாத அந்தப் பணம் அரசிற்கு வரும் இலாபம் என்றெல்லாம் பகற்கனவு கண்டார் திரு. மோடி. ஆனால் இன்று மொத்த பணத்தில் 97% பணத்தாள்கள் வங்கிக்கு வந்துவிட்டது. அதாவது 15.5 இலக்கக்கோடியில் கிட்டத்தட்ட 15 இலக்கக்கோடி ரூபாய் வங்கிக்கு வந்துவிட்டது, கறுப்புப்பணமனைத்தும் சேர்த்து. மோடியின் பகற்கனவு தகர்ந்து இன்று என்ன செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார். மக்களின் கோபத்திற்கு ஆளாகிவிட்டோமே என்று பாரதிய சனதாக் கட்சியினர் அச்சத்திலுள்ளனர்.

siragu-demonetization5

கறுப்புப்பணமும் ஒழியவில்லை, அரசிற்கும் எவ்வித இலாபமுமில்லை, மக்களுக்கு சொல்ல முடியாதத் துன்பத்தைத்தான் இந்த திட்டம் கொடுத்தது. பின்பு ஏன் இந்த அழிச்சாட்டியம், அகங்காரம்? இன்று வரும் செய்திகளைப் பார்க்கும் போது, இந்த பணமில்லா வர்த்தகம் வந்தால் இவ்வசதிகளைத்தரும் தனியார் நிறுவனங்கள் பெரும்பயனடையும். பேடிஎம் (PayTM) என்கிற சிறு நிறுவனம் இத்திட்டத்தினால் பெரும் வர்த்தக நிறுவனமாக இன்று பயனடைந்திருக்கிறது, இதற்கும் பாசக-விற்கும் என்ன ஒப்பந்தமோ? மேலும் பல தனியார் நிறுவனங்கள் இத்துறையில் நுழைய அரசு அனுமதித்துள்ளது. இவர்களுக்கு மட்டும்தான் இத்திட்டத்தினால் பயன். இவர்களில் பெரும்பாலோர் மோடியின் நண்பர்கள், பாசக-வின் பாசப்பிள்ளைகள்.

siragu-demonetization3

மக்களைத் துன்புறுத்தி அவர்கள் வாழ்நாள் சேமிப்பை வங்கியில் போட நிர்ப்பந்தித்த அரசு, அப்பணத்தை எடுப்பதற்கு பல தடைகள் விதித்தது. ஒரு வாரத்திற்கு இவ்வளவு பணம்தான் எடுக்க முடியும், அதையும் எடுக்க முடியாமல் மக்களை துன்புறுத்தியதற்கு என்ன தண்டனை? தேர்தல்தான் அத்தண்டனையைக் கொடுக்க வேண்டும். இந்த மக்கள் விரோத அரசை மக்கள்தான் தூக்கியெறிய வேண்டும். தன்பணத்தை வங்கியில் போட நிர்ப்பந்தித்து, அதை அவர்கள் எடுக்க விடாததற்கு என்ன காரணம்? செய்திகளை வைத்துப் பார்க்கும்போது, இத்திட்டம் வங்கிகளைக் காப்பாற்ற எடுத்த முடிவு என்றும் நினைக்கத் தோன்றுகிறது. வங்கிகள் பெரும் முதலாளிகளுக்கு பல இலட்சம் கோடிகள் கடன் கொடுத்து அவற்றை வசூலிக்க இயலாமல் தத்தளித்து நிற்கும் வங்கிகளைக் காப்பாற்றுவதற்கு இத்திட்டம் உதவியிருக்கலாம். இந்த சூழ்நிலையில் இத்திட்டம் அறிவிப்பதற்கு முன்பே, அமெரிக்காவின் USAID என்கிற அரசுத்துறை பணமில்லா வர்த்தகத்தை இந்தியாவில் திணிக்க உதவுவதாக இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தமிட்டிருக்கிறது. இதெல்லாம் பார்க்கையில் ஏழை, நடுத்தர மக்களை நிர்ப்பந்தித்து அவர்கள் வாழ்நாள் முழுதும் சேமித்த பணத்தை அவர்கள் விருப்பமில்லாமல் வங்கியில் போட நெருக்கடி கொடுத்து இத்திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதனால் இந்திய மக்களுக்கு எவ்வித பயனும் கிட்டப்போவதில்லை என்பதுதான் உண்மை.

“சாத்தான் அரசாண்டால் சாஸ்திரங்களும் பிணம் தின்னும்” என்கிற முதுமொழிதான் நினைவிற்கு வருகிறது.


க.தில்லைக்குமரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலையங்கம்”

அதிகம் படித்தது