தினா சனிசார்
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிJul 27, 2019
ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling) எழுதிய ஜங்கிள் புக் (Jungle Book) இந்தியாவில் வாழ்ந்த உண்மைக் கதை என நாம் அறிவோமா? jungle Book-ல் வரும் மௌக்லி (mowgli) பாத்திரம் போலவே, தினா என்ற சிறுவன் ஓநாய்களால் வளர்க்கப்பட்டச் சிறுவன்.
தினா நான்கு கால்களுடன் ஓநாய்கள் நடுவில் நடந்து கொண்டுச் செல்வதை வேட்டையாடிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எப்படி அந்தச் சிறுவன் ஓநாய் கூட்டத்துடன் சேர்ந்திருக்க முடியும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் உண்மையில் ஓநாய்கள் அந்த மனிதக் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கின்றன. அவனை மீட்க அந்த வேட்டையாடிகள் பெரும் முயற்சி செய்தனர். அனைத்து முயற்சியும் வீணாகிப்போனது. இறுதியில் அந்தச் சிறுவனை பாதுகாத்து வந்த ஓநாயை கொன்று அவனை மீட்டனர்.
வேட்டையாடிகள் அந்தச் சிறுவனை கிறித்துவ மிசினரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தான் அவனுக்கு தினா சனிசார் (Dina Sanichar) என பெயரிட்டனர். Sanichar என்றால் உருது மொழியில் சனிக்கிழமை என்று பொருள். அந்த சிறுவன் அந்த ஆதரவற்ற இல்லத்திற்கு சனிக்கிழமை அன்று சேர்த்துவிடப்பட்ட காரணத்தினால் அந்தப் பெயர் கொடுத்தனர்.
ருட்யார்ட் கிப்ளிங் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். பின் எப்படி அவரால் இந்தியாவில் நடந்த இந்த உண்மைக் கதையை எழுத முடிந்தது? என்று எழும் கேள்வி இயல்பானதே. ருட்யார்ட் கிப்ளிங் விடுதலை பெறாத இந்தியாவில் பிறந்தவர். தன் ஆறு வயது வரை இந்தியாவில் தான் வாழ்ந்தார். பத்து வருடங்கள் கழித்து தான் பிறந்த இந்தியாவிற்கே திரும்பியும் வந்தார். தினா பற்றி அவருக்கு தெரிந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அவனை பிடித்து 20 வருடங்களுக்குள்ளாக 1895 இல் அவரின் நூல் வெளிவந்து குழந்தைகள் இலக்கியத்தில் பெரும் வரவேற்பை பெறுகின்றது.
தன் புது வாழ்க்கை முறையில் தினா மிகவும் சிரமமடைந்தான். காட்டிலேயே ஓநாய்கள் நடுவில் வளர்ந்திருந்த காரணத்தினால் தினா பேசவும் கற்றுக்கொள்ளவில்லை. அவ்வப்போது தன் தேவைகளை தெரியப்படுத்த ஊளை மட்டுமே இட்டான். உணவும் சமைக்காத கறியைத்தான் உண்டான். தன்னுடைய பற்களை அந்த கறியின் எலும்பில் கூராக்கிக் கொண்டான்.
ஆனால் மனிதர்களுக்குள் இருக்கும் இயற்கையான கேள்வி கேட்கும் திறன் ஓரளவிற்கு அவனுக்கு இருந்த காரணத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக அவனை நாகரிக மயப்படுத்தினர். ஆனால் எழுதவோ பேசவோ இறுதி வரை அவன் கற்றுக்கொள்ளவில்லை. உடைகள் அணியவும், சமைத்த உணவை உட்கொள்ளவும் மட்டுமே கற்றுக்கொண்டான்.
அவனுடன் மிருக கூட்டத்தில் இருந்து மீட்க்கப்பட்ட மற்றொரு சிறுவனும் இருந்தான். இருவருக்குள்ளும் ஒரு நட்பின் பிடிப்பு இருந்தது. இருவரும் புகைபிடிக்க மட்டும் எப்படியோ கற்றுக்கொண்டு சில நாட்களில் அதற்கு அடிமையாகிப்போனார்கள். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக மனிதர்களோடு பழகியும் தீனாவால் முழுதும் மனித இயல்புகளுக்குள் வர இயலவில்லை. அவன் கற்றுக்கொண்ட புகை பழக்கமே அவனுக்கு காசநோய் தந்து அவன் மிக இள வயதில் இறந்துபோனான் என்று தகவல்கள் கிடைக்கின்றன. 29 அல்லது 34 வயதில் இறந்திருக்கலாம் என்று குறிப்புகள் உள்ளன.
குழந்தைகள் இலக்கியத்தில் முக்கிய இடம் பிடித்த jungle book மௌக்லி மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் கொண்டவனாக படைத்திருப்பார் ருட்யார்ட் கிப்ளிங். ஆனால் தினா உண்மையில் மிகக் கொடுமையான வாழ்க்கை வாழ்ந்தே இறந்து போனான்.
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தினா சனிசார்”