மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருக்கேதீச்சுவரமும், சைவ பண்பாட்டுத் தாக்கமும்

முனைவர் மு.பழனியப்பன்

Oct 12, 2019

siragu thiruketheechcharam

ஆசிய கண்டம் மற்ற கண்டங்களை ஒப்பிட்டு நோக்கும் நிலையில் மற்ற கண்டங்களைவிட மிகப் பெரும் நிலப்பரப்பினையும், மக்கள் பெருக்கத்தையும் உடையது. மேலும் இக்கண்டத்தில் பல்வகை சமயங்கள், பல்வகை பண்பாடுகள், பல்வகை உணவுப் பழக்க வழக்கங்கள், பல்வேறு ஆடை அணிகலன்கள், பல்வேறு கலைகள், பல்வேறு நாகரிகங்கள் தோன்றின. தோன்றி வருகின்றன.

ஆசியாவில் உள்ள நாடுகள் மொத்தம் ஐம்பத்தொன்பது ஆகும். இவை தற்போது விளையாட்டு, கலை, பண்பாடு போன்ற பொதுமை நிகழ்வுகளால் ஒன்றுபட்டு வருகின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய கலாச்சார மாநாடுகள் போன்றன இந்நாடுகளை ஒன்றுபடுத்துவதில் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன.

ஆசிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகள் ஆங்கிலேயப் பிடியில் இருந்தவை என்பது கருதியும் இவற்றுக்குள் ஓர் ஒருங்கிணைவு கடந்த மூன்று நூற்றாண்டுகளில் உண்டு. இந்நிலையில் ஆசியாவுக்கென ஒரு தனித்த பண்பாடு ஒருமை அமைந்து நிற்பதையும் காணமுடிகின்றது. இப்பண்பாட்டினை வலுப்படுத்தவும், தனித்துவமாக்கவும் அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்றிருக்கின்றன. பெற்று வரப்பெறுகின்றன.

கி.பி. ஆறாம் நூற்றாண்டு என்பது தமிழ்ச் சமுதாயத்தின் மிக முக்கியமான காலகட்டம் ஆகும். இக்காலத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தியை செயல்களாலும் செய்யுள்களாலும் பரப்பி வந்தனர். இவர்களுக்கு முன்னதாக விளங்கிய சமண, பௌத்த சமயங்களின் ஆளுமையிலிருந்து சைவ, வைணவம் சமயங்களுக்கு மக்களை மடைமாற்றம் செய்வித்த பணி இவர்களைச் சாரும்.

ஆழ்வார்களின், நாயன்மார்களின் பாடல்களில் பௌத்த, சமண சமயங்கள் பற்றிய செய்திகள் முரண்பட்ட நிலையில் காட்டப்பெறுகின்றன. ஆனால் பௌத்தம் ஆசிய கண்டத்தில் அமைந்த பல நாடுகளால் ஏற்கப்பெற்றிருந்தது என்பது இங்கு அறியத்தக்கது.

இவ்வகையில் சமயம் என்பது ஆசிய நாடுகளின் தனித்த அடையாளமாக விளங்குகின்றது. சமணம், சைவம், வைணவம், சீக்கியம், டாவோயிசம், கன்பூசியசம், இசுலாம், கிறித்துவம் போன்ற பல சமயங்கள் ஆசியாவின் பல பகுதிகளிலும் பரவியிருந்தன.

சமயங்கள் வழியாக ஆசியப் பண்பாட்டின் தன்மையை அறிந்து கொள்ள முடிகின்றது. இலங்கையில் பௌத்தமும், சைவமும் இணைந்தே வளர்ந்துவந்தன. ஏறக்குறைய தமிழகத்தின் சமய நிலைப்பாடே இலங்கையில் அவ்வப்போது எதிரொலித்து வந்தது.

சைவ சமயக் குரவர்கள் தலங்கள் தோறும் சென்று அங்குள்ள இறைவனை வணங்கி நின்றனர். அவ்விறைவர் குறித்துத் தேவாரப் பாடல்கள் பாடினர். இவ்வழியில் பாடல் பெற்ற தலங்கள் சைவ சமயத்தில் குறிப்பிடத்தக்கனவாக விளங்கின. திருஇராமேச்சுவரத்திற்கு வந்த சைவ சமயக்குரவர்கள் இராமேச்சுவரத்தைத் தாண்டி இலங்கையிலும் சைவ சமயம் சிறந்திருந்ததைக் கண்டு அத்தலங்களையும் திருமுறைத்தலங்களாக ஆக்கினர்.

திருஞானசம்பந்தர் திருகேத்திசுரம், திருகோணம் போன்ற தலங்களில் உள்ள இறைவனை எண்ணித் தேவாரப் பாடல்கள் பாடியுள்ளார். இவை இரண்டாம் திருமுறையில் தொகுக்கப்பெற்றுள்ளன. சுந்தரர் பாடிய ஏழாம் திருமுறையில் திருக்கேதீச்சுரம் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. இவைதவிர சேக்கிழாரும் இத்தலத்தைப் பாடியுள்ளார். தமிழகத்தைத் தாண்டிய நிலையில் இலங்கையிலும் திருமுறைத் தலங்கள் இருப்பது என்பது, ஆசிய சமயப் பண்பாட்டின் ஒருங்கிணைப்பாக அமைகிறது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள இரு தலங்கள் தேவார வைப்புத்தலங்களாகக் கொள்ளப்பெற்றுள்ளன என்பது இங்கு எண்ணத்தக்கது. இவற்றில் திருக்கேதீச்சுரம் தமிழ் பக்தி மரபோடு ஒத்து அமைகிறது.

தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற நிலையில் திருக்கேதீச்சரம், பலாவி, திருக்கேதீச்சரத்தார் என்ற மூன்றும் சிறந்த தலமாக இத்தலம் விளங்குகிறது. இத்தலத்தின் புராணவரலாறு, வரலாறு, கட்டடக் கலை, வழிபாட்டுமுறை போன்றன தமிழக சைவத்தின் தாக்கம் மிக்குடையனவாகும்.

தலப் பெருமை

திருக்கேதீச்சரம் என்ற இத்தலம் ஞானசம்பந்தர் காலத்தில் மாதோட்டம் என்று அழைக்கப்பெற்றுள்ளது. சங்க காலத்தில் மாந்தை என்றழைக்கப்பெற்ற ஊரும் இதுவே என்று குறிப்பாரும் உண்டு. இது சங்க காலத்தில் ஒரு துறைமுக நகரமாக இருந்தது. இங்கு கேது வழிபட்ட நிலையில் இங்குள்ள இறைவன் கேதீச்சுவரர் எனப்பட்டுள்ளார். இவ்வூர் திருக்கேதீச்சரம் என்றும் அழைக்கப்பெற்றுள்ளது. இவ்வூருக்கு மற்றொரு பெயரும் உண்டு. மகாதுவட்டாபுரம் என்பது அப்பெயராகும். சூரபதுமானார் மனைவியின் பேரனார் துவாட்டா என்பவர் பிள்ளைப் பேறு இன்றி இக்கோயில் சார்ந்த தீர்த்தத்தில் மூழ்கி, இத்தல இறைவனை வணங்கிப் பிள்ளைப் பேறு பெற்றார் என்று ஒரு தொன்மக்கதை உரைக்கிறது. இதன்காரணமாக இந்நகர் மாதுவட்டா என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

இத்தல இறைவன் கேதீச்சரநாதன், கௌரிநாதன், கேதீச்சரர், மாதுவடடாபுர நாதர், ஈழக்கைலாய நாதர், தென்கயிலாய நாதர், மத்ய சேது நிவாசர், நாகநாதர், இராஜராஜேசுவரர், நித்திய மணவாளர், பெருந்துறை ஈசன் என்று பல பெயர்களால் அழைக்கப்பெறுகிறார்.

இவ்வாலயம் பதினேழாம் நூற்றாண்டில் வேற்று அரசர் படையெடுப்பாலும் இயற்கை சீற்றத்தாலும் அழிவினை எய்தி மண் மேடாகியது. ஆறுமுக நாவலர் அவர்களின் வேண்டுகோளால் இக்கோயில் இருப்பிடம் அறியப்பெற்று மீளவும் உருவாக்கப்பட்டது. இதற்காக நிலம் வாங்குதல், அகழாய்வு செய்தல் போன்ற பல பணிகள் செய்யப்பெற்று இப்போது இவ்வாலயம் தமிழகக் கோயில் கலை அமைப்புடன் ராசகோபுர நுழைவாயிலுடன் காணப்படுகிறது. இவ்விறைவன் சுயம்பு வடிவானவர் என்பதும் குறிக்கத்தக்கது.

இவ்விறைவனின் தன்மையைப் பற்றி சுந்தரர்,

‘‘அங்கம்மொழி யன்னாரவர் அமரர்தொழு தேத்த
வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல்
செங்கண்ணர வசைத்தான்திருக்கேதீச்சரத் தானே” (திருக்கேதீச்சுர பதிகம்.3)
என்று பாடுகிறார். கப்பல்கள் நிற்கும் கடற்புரமாக விளங்கம் மாதோட்ட நகரில், பாலாவி ஆற்றின் கரையில் திருக்கேதீச்சுரத்தான் என்ற இறைவன் விளங்குகிறான். அவன் பிறை சூடியவன். தேவர்கள் போற்றிடும் தன்மை பெற்றவன். இவ்வாறு இறைவனின் சிறப்பினைச் சுந்தரர் பாடுகின்றார்.

தீர்த்தம்

siragu balavi theerththam1

இவ்வாலயத்தின் புண்ணிய தீர்த்தம் பாலாவி என்பதாகும். இதற்குத் தனித்த படித்துறை அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் குளித்தால் முன்னோர்க்கு கடன் செய்யாமல் கழிந்த செயல்களுக்குப் பரிகாரம் ஆகும் என்பது நம்பிக்கை.
சுந்தரர் தன் ஏழாம் திருமுறையில் இத்தீர்த்தம் பற்றிப் பாடியுள்ளார்.

‘‘மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரில்
பாவம்வினை யறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல்
தேவன்எனை ஆள்வான்திருக் கேதீச்சரத் தானே”
(சுந்தரர், திருக்கேதீச்சரபதிகம்.9)
பாலாவியின் கரைமேல் தேவனாக இறைவன் இருப்பதாகச் சுந்தரர் பாடுகிறார்.

மூர்த்தி

நல்ல ராற்றவும் ஞானநன் குடையர் தம் மடைந்தவர்க் கருளீய
வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் மலிகடல் மாதோட்டத்
தெல்லை யில்புக ழெந்தைகே தீச்சரம் இராப்பகல் நினைந்தேத்தி
அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும் அன்பராம் அடியாரே.
(ஞானசம்பந்தர், இரண்டாம்திருமுறை, திருக்கேதீச்சரம்,5)

என்று திருக்கேதீச்சரத்து இறைனின் தன்மைகளைக் காட்டுகிறார் சம்பந்தர். நல்லவர், ஞானம் நன்கு உடையவர், தம்மை அடைந்தவர்க்கு அருள்பவன். பிறப்பும் இறப்பும் இல்லாதவன், கடலுடைய மாதோட்டத்தில் இருப்பவன். அவனை இரவும் பகலும் நினைந்தால் தீமைகள் அகலும் என்று குறிப்பிடுகிறார் ஞானசம்பந்தர். இத்தலத்து இறைவியின் பெயர் கௌரி அம்மன் என்பதாகும். தல விருட்சம் வன்னிமரமாகும்.

இக்கோயிலைச் சார்ந்து பல மடங்கள் இருக்கின்றன. ஞானசம்பந்தர் மடம், நகரத்தார் மடம், அம்மன் மடம், பசுமடம், பூநகரி மடம், சபாரத்தினசாமி மடம், சிவராத்திரி மடம், திருவாசக மடம், திருப்பதி மடம், கௌரீ சர்மடம், நாவலர் பெருமான் மடம், விசுவகர்மா மடம், திருக்குறிப்புத் தொண்டர்மடம் போன்ற மடங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் தமிழ்மரபு சார்ந்த அங்கு அமைந்துள்ளன. இவை விழாக்காலங்களில் மகேஸ்வரபூசை என்ற அன்னதானம் செய்கின்றன. இம்மரபு தமிழகத்தின் பக்தி மரபில் சிறந்த ஒன்றாகும்.

இக்கோயிலில் தற்போது குணவாசல் பிள்ளையார், குணவாசல் சுப்பிரமணியர், நந்தி மண்டபம், சூரிய சந்திரர் சந்நதிகள், பலிபீடம், கொடிமரம் போன்றன அமைக்கப்பெற்றுள்ளன. மேலும் கேது, நால்வர், சேக்கிழார், சந்தானக் குரவர்கள், சோமாஸ்கந்தர், மகாவிஷ்ணு, மகாலிங்கம், மகாலட்சுமி, பைரவர், நவகிரகங்கள், துர்க்கை, லிங்கோத்பவர், பிரம்மா, நாயன்மார்கள், ராசராசன் போன்றோர் சுற்றுப் பிரகார தெய்வங்களாக அமைந்துள்ளனர்.

பிற சமயங்களை நோக்கும் நோக்கு

திருஞான சம்பந்தர் காலத்தில் சமணம், பௌத்தம் ஆகியன தமிழகத்தில் தலைசிறந்து விளங்கின. இவற்றை மறுத்து சைவத்தை நிலைநிறுத்தும் பாங்கு ஞானசம்பந்தருக்கு ஏற்பட்டது.
‘‘புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் புறனுரைச் சமணாதர்
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய ஏழைமை கேளேன்மின்
மத்த யானையை மறுகிட வுரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே தீச்சரம் அடைமின்னே.”
(சம்பந்தர், இரண்டாம் திருமுறை, திருக்கேதீச்சுரம், ப10)

பௌத்தர்கள் புனை துகிலுடையவர்கள், சமணர்கள் எத்தர்கள், நின்று உண்ணும் பழக்கமுடையவர்கள். அவர்களின் கருத்துகளைக் கேட்காமல் யானைத் தோல் உரித்தவனான மாதோட்ட இறைவனை, பாலாவிக் கரையில் இருப்பவனைச் சென்றடைக என்கிறார் சம்பந்தர்.
‘‘தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே”

இராமன், இராவணன் என்ற இரு தொன்மங்களின் தாக்கம் பல ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன. இலங்கையில் வாழ்ந்தவன் இராவணன். அவனைப் பற்றித் தன் எட்டாம் பாடலில் குறிப்பது சம்பந்தர் வழக்கம். அவ்வகையில் இலங்கை நாட்டில் உள்ள திருக்கேதீச்சரத்தைப் பாடும்போது இலங்கை இராணவணனைப் பாட வேண்டிய நிலை சம்பந்தருக்கு ஏற்படுகிறது. அவர் இராவணன் தென்னிலங்கைக்கு குலபதியாக விளங்குபவன். அவன் கயிலாய மலையைத் தூக்க முன்வந்தவன். அவனின் தோள்களில் உள்ள வீரத்தை அடக்கிய சிவபெருமான் கயிலாய மலையில் இருந்து வந்து அமர்ந்த இடம் திருக்கேதீச்சரம் என்கிறார் சம்பந்தர்.

இலங்கையில் உள்ள தலத்திற்கும் கைலாய மலைக்கும் உள்ளத் தொடர்பு ஆசிய சாடுகள் இரண்டின் தொடர்பாகக் கொள்ளத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இவ்வகையில் சமய இலக்கியங்கள் ஆசிய நாடான இலங்கையில் பல தாக்கங்களை ஏற்படுத்தி அறவழியிலும், அன்பு வழியிலும் பக்தியை நிலை நாட்டி வருகிறது என்பது ஆசியப் பண்பாட்டின் வெற்றியாகும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருக்கேதீச்சுவரமும், சைவ பண்பாட்டுத் தாக்கமும்”

அதிகம் படித்தது