மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொடரும் பாலியல் வன்புணர்வு கொலைகளும், அரசின் அலட்சியமும்!

சுசிலா

Nov 17, 2018

Siragu thodarum paaliyal vanpunarvu1

நம் மாநிலத்தில் தற்போது நடந்துவரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளன என்பது மிகவும் வருந்தத்தக்க, வேதனைப்படவேண்டிய, வெட்கப்படவேண்டிய ஒரு விசயமாக இருக்கிறது. அதிலும் பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு, பாலியல் வற்புறுத்தலுக்கு, கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றால், (எத்தனை சாதனைகளை நாம் சாதித்தாலும்) இந்த சமூகம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பது நம் முன் வைக்கப்படும் மிகப் பெரிய கேள்விக்குறி. உலகளவில் இது, நம் ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமான மிகப்பெரிய இழிவாகப் பார்க்கப்படும். பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி வாழ்ந்தால் தான் அது ஒரு சுதந்திரமான வளர்ச்சியை நோக்கிய சமுதாயமாக இருக்க முடியும்.

பெண்களுக்கு இது மாதிரி கொடுமைகள் நடக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நம் பெண் குழந்தைகளுக்கு நடக்கிறதென்றால், இந்த அரசாங்கம் இதனை நடக்கவிடாமல் தடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்பது இன்றியமையாதது அல்லவா.!

ஆனால், தண்டிக்க வேண்டிய அரசாங்கமே, இம்மாதிரி கொலைகளை செய்யும் குற்றவாளிகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறது, காலம் தாழ்த்துகிறது என்றால், குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்துவிடும் என்ற அபாயம் அவர்களுக்கு தெரியவில்லையா என்ற கேள்வி எழத்தானே செய்கிறது.

கடந்த ஆண்டு, அரியலூர் நந்தினி என்ற 17 வயது சிறுமியின் கொடுரக் கொலை, நம் எல்லாரையும் கதிகலங்க வைத்தது, இதுபோல இனி நடக்கக்கூடாது என்று எண்ணி வேதனைப்பட்டோம். ஆனால், அந்த குற்றவாளி என்ன ஆனான் என்று இதுவரை தெரியவில்லை. எதோ, இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவன் என்ற செய்தி வந்தது. அவன் தண்டனை பெற்றானா என்ற விவரம் இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை. இந்த போக்கு தான் மீண்டும், மீண்டும் இதுபோல கொலைகளை செய்வதற்கு வழிவகுக்கிறது. சமீபகாலமாக, பெண் குழந்தைகள் அதிக அளவில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி கொல்லப்படுகிறார்கள்.siragu baby3

சேலம், தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற 14 வயது சிறுமி, கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள். இதை கேட்கும்போதே இவ்வளவு பதைபதைக்கிறதே, பாதிக்கப்பட்ட அந்த தாய்க்கும், அந்த குடும்பத்தினருக்கும் எவ்வளவு வேதனையை அளித்திருக்கும். தங்கள் வீட்டிற்கு பக்கத்தில், மிகவும் பழக்கப்பட்ட அதிலும் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தகப்பனான ஒருவனால் (தினேஷ்), அந்தச் சிறுமிக்கு பாலியல் சீண்டல்கள் அடிக்கடி நடந்திருக்கின்றது. பொறுக்கமுடியாத ஒரு கட்டத்தில், தன் தாயிடம் இதனை கூறியிருக்கிறாள். இதன்முலம் கொலையாளியின் மனைவிக்கு செய்தி தெரிந்து, இருவருக்கும் வாக்குவாதம் வந்திருக்கிறது. இந்நிலையில் தான், குடிபோதையில் கையில் அரிவாளுடன் சிறுமி வீட்டிற்கு வந்து, தடுக்கவந்த அவளின் தாயையும் தள்ளிவிட்டு, சிறுமியின் தலையைவெட்டி, தலை வேறு, உடல் வேறு என கொடூரமுறையில் கொலை செய்திருக்கிறான் அந்தக் கொடியவன். காவல்நிலையத்தில் சரணடைந்த அவன் ஒரு மனநோயாளி போல நடித்திருக்கிறான். ஊடகங்கள்கூட இதை வெளியில் கொண்டுவரவில்லை. காவல்துறையோ, எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை என்பது எவ்வளவு கொடுமையான விசயமாயிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் மட்டுமே இதனை வெளி உலகத்திற்கு கொண்டுவந்து, தகவல்களை திரட்டி பதிவு செய்தது. அதன்பிறகு தான் காவல்துறை விழித்துக்கொண்டு அதற்கான நடவடிக்கையை எடுத்தது.!

அதேபோல, தருமபுரி மாவட்டம் அரூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சவுமியா என்ற 17 வயது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்புணர்விற்கு ஆளாகி இறந்திருக்கிறாள். அக்கிரமத்தைச் சேர்ந்த இருவர் (ரமேஷ், சதிஷ்) இக்கொடுமையை செய்திருக்கிறார்கள். அச்சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றால், புகாரை ஏற்காமல் அம்மாணவியை மருத்துவமனைக்கும் அனுப்பாமல் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர் காவல் துறையினர். உரிய மருத்துவசிகிச்சை இல்லாமல் அம்மாணவி மறுநாள் இறந்திருக்கிறாள். அவளின் இறப்பிற்கு முழு காரணம் காவல்துறை மட்டுமே என அக்குடும்பத்தினர் கூறுகின்றனர். குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை. இந்த நிகழ்வு பற்றியும் ஊடகங்கள் வாயே திறக்கவில்லை. சமூகஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியபின், ஒரு குற்றவாளியை கைது செய்தது. சமீபத்திய செய்தி படி. இரண்டாவது குற்றவாளி சரண் அடைந்திருக்கிறான் என்பது தெரிய வருகிறது. இந்த குற்றவாளிகள் ஆளும் கட்சியின் செல்வாக்கு உள்ளவர்கள் என்ற செய்தியும் கசிகிறது. ஆதலால் தான் இவ்வளவு தாமதப்படுத்தியிருக்கிறார்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் வருகிறது.

அடுத்து, தேனியில் ராகவி என்ற சிறுமியும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இறந்திருக்கிறாள் என்ற செய்தி நம்மை மேலும் மேலும் கொதிப்படைய செய்கின்றன.

இந்த பெண் குழந்தைகள் எல்லோருமே வறுமையில் வாழும் தாழ்த்தப்படுத்தபட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மேல் உள்ள சாதியாக தங்களை காட்டிக்கொள்ளும் இடைநிலை சாதியினர் இக்கொடூரக்கொலைகளை சர்வ சாதாரணமாக நிகழ்த்தும் ஆபத்தான போக்கு இப்போது தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், கேட்பதற்கு யாருமில்லை, என்ன வேண்டுமாலும் செய்யலாம் என்ற சாதி ஆதிக்கத்தை வைத்து, காவல்துறையை சமாளித்து விடலாம் என்ற சாதிய ஆணவப்போக்கா என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் வருவது நியாயம் தானே.!

ஆட்சியில் இருக்கும் அரசும், காவல்துறையும், தங்கள் பொறுப்பையுணர்ந்து இவைகளை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்ற தங்கள் கடமையிலிருந்து தவறுகிறார்கள் என்பதுதான் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்றே ஆக வேண்டும். அதிலும், தண்டனை மிகக் கடுமையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் இம்மாதிரி குற்றங்கள் இனி வராமல் தடுக்க இயலும். ஆட்சியிலிருக்கும் அதிமுக அரசு, காவல்துறையை முடுக்கிவிட்டு குற்றவாளிகளை உடனே கைதுசெய்து, வழக்கு பதிவுசெய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி, அதற்குரிய தண்டனையைப் பெற்றுதர வேண்டும். இதனை துரிதகதியில் செய்வதற்கு ஆவணப்படுத்தவேண்டும். இது அரசாங்கத்தின் கடமைகளில் மிகவும் தலையாய கடமையாகும்.

” பெண் குழந்தைகளைக் காப்போம்
பெண் குழந்தைகளைக் கற்பிப்போம்.”

என்ற வாசகங்கள் விளம்பரங்களில் மட்டுமில்லாமல், உண்மையில், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இச்சமூகத்தை, பாலின சமத்துவமிக்க சமூகமாக கட்டமைப்போம். வருங்கால குழந்தைகள் பல துறைகளில் சாதிக்கவேண்டும் என்றால், முதலில் அச்சமில்லாமல் வாழ வைப்பது மிக முக்கியம். அதற்கு அரசாங்கத்தைத் தொடர்ந்து செயல்பட வலியுறுத்துவோம், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொடரும் பாலியல் வன்புணர்வு கொலைகளும், அரசின் அலட்சியமும்!”

அதிகம் படித்தது