தொலைக்காட்சி
T.K.அகிலன்Jun 6, 2015
தொலைக்காட்சிப்பெட்டியின் மற்றொரு பெயர் ‘இடியட் பாக்ஸ்’ – முட்டாள்(களின்) பெட்டி. முட்டாள்கள் தினத்தில் மட்டுமல்லாமல் தினம்தோறும் மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கும் பல்வேறு தொழில்நுட்ப நுகர்வு சாதனங்களில் ஒன்றுதான் தொலைக்காட்சிப்பெட்டி. பொழுதுபோக்கு என்றும் செய்திகள் என்றும் நம் வீட்டின் வரவேற்பறையில் குப்பைகளை அள்ளி நிறைத்துக்கொண்டிருக்கும் சாதனம். கூடவே நம் மூளைகளிலும்! அந்தப் பெட்டியின் திரையில், வீட்டுக்கூடத்தின் நடுவில் நிகழ்ந்து கொண்டிருப்பது, பெரும்பாலும் நாம் ரகசியம் என்றும் கெட்டவை என்றும் ஒதுக்கி வைத்திருக்கும் வக்கிரங்கள் – வன்முறை, புறம்பேசுதல், அறமீறல்கள், அத்து மீறல்கள், பாலியல் வெளிப்படுத்தல்கள்! பொழுதுபோக்கு என்னும் பெயரில் வீட்டுக்கூடத்தில், அனைத்து உறவுகளின் கூட்டு அமர்வின் முன் நிகழ்வதால் அவற்றை மனதுக்குள் ஏற்றும் தடை விலகி விடுகிறது. வக்கிரங்கள் எனக்கருதுவதால், பார்ப்பவற்றை ஈடுபாட்டுடன் செயல்படுத்த முடியாமல் ஆசைகளாக மனதின் ஆழங்களுக்குள் புதைத்து வைக்கப்படுகிறது. புதையலின் அழுத்தம் அதிகரிக்கும்போது வெடித்து விடும்! அதே நேரத்தில் தொலைக்காட்சிப்பெட்டி, சுய உணர்வுடன் உபயோகிப்பவர்களின் அறிவுக்குத் தீனி போடும் சாதனம் கூட. அதை ‘இடியட் பாக்ஸ்’ என அழைப்பது, தொழில்நுட்பத்தின் மூலம் நம்மை வந்தடைந்திருக்கும் தொலைக்காட்சிப்பெட்டியை அவமதிப்பது ஆகலாம். உண்மையில் அதை உபயோகிக்கும் நாம் முட்டாள்களா இல்லையா என்பதைப் பொறுத்துதான், அதன் குணம் அமையும் – கண்ணாடியில் பதிந்திருக்கும் அழுக்கு, அது எதிரொளிக்கும் காட்சியில் படிவது போல!
எந்த தொழில்நுட்பத்துக்கும் மூலக்காரணம், மனிதனின் மூளையில் இயற்கை விதிகள் ஏற்படுத்தும் ஒரு தூண்டுதல். அந்தத் தூண்டுதல் அளிக்கும் அறிதல். தொலைக்காட்சியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியின் முதல் கட்டம் செலினியம் என்னும் தனிமத்தின் குணமான, ஒளி பட்டால் எலெக்ட்ரான்களை வெளியிடும் தன்மையை மனிதன் கண்டறிந்ததுதான். இந்தக் கண்டுபிடிப்பு 1873-ம் ஆண்டு நிகழ்ந்தது. செலினியம் என்னும் தனிமத்தில் ஒளி படும்போது, அந்த ஒளியின் தன்மைக்கேற்ற மின் சமிக்ஞ்சையை (Signal) வெளியிடுகிறது. இதுவே ஆரம்பக்கட்ட தொலைக்காட்சி கேமராக்களின் தொழில் நுட்பம்.
ரேடியோ அலைகள் மூலம் ஒலியலைகளை 1906-ம் ஆண்டு அலைபரப்பு செய்திருக்கிறார்கள். அதன்பின் 1920-களின் நடுவில், படங்களை ரேடியோ அலைகள் மூலம் அனுப்ப தீவிரமான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. அதாவது தொலைக்காட்சியின் வயது 100 ஆண்டுகளை இன்னும் தொடவில்லை. ஆனால் தொலைக்காட்சி தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் அதீத வேகத்தில் வளர்ந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
முதன்முதலாக 1926-ம் வருடம் ஜனவரி மாதம், சலனப்படம்(Moving Micture) ரேடியோ அலைகள் மூலம் அலைபரப்பப்பட்டு, ரேடியோ அலை ஏற்பிகளால் அது மீண்டும் படமாக மாற்றி திரையில் காண்பிக்கப்பட்டது. இந்த முதல் அலைபரப்பில், திரையில் கிடைக்கப்பெற்ற படம், அத்தனை தெளிவானதாக இருக்கவில்லை. அது ஒரு முகத்தின் சலனப்படம் என்பதை அறியும் அளவுக்கு மட்டும் தெளிவானதாக இருந்திருக்கிறது. 1928-ம் ஆண்டு, முதல் முறையாக லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்துக்கு தொலைக்காட்சி அலைபரப்பப்பட்டு அங்கு மீண்டும் படமாக திரையில் மாற்றப்பட்டது. ஃபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஐரோப்பிய நாடுகளின் முதல் தொலைக்காட்சி நிறுவனம் 1929-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐரோப்பாவில் இவ்விதமாக தொலைக்காட்சி தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அமெரிக்காவில் 1925-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி, சார்லஸ் பிரான்ஸிஸ் ஜென்கின் என்பவர், நிழல்படங்களை ஐந்து மைல் தூரத்துக்கு அலைபரப்புதல் செய்து காட்டினார். இந்த அலைபரப்பில், ஒரு காற்றாலை இயங்கும் சலனப்படத்தை அலைபரப்பினார். இதுவும் ஒரு நிழலுருவம் போல தெளிவற்ற படமாகவே தெரிந்திருக்கிறது.
1927-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பெல் டெலிஃபோன் நிறுவனம் முதன்முதலாக படத்துடன் இணைந்த ஒலியையும் அலைபரப்புதல் செய்து காட்டியது. இந்த அலைபரப்புதலில் படங்கள் ஒரு வினாடிக்கு 18 சட்டங்கள் (Frames per Second அல்லது FPS) என்னும் விகிதத்தில் அலைபரப்பப்பட்டது. தற்போதைய தொலைக்காட்சி அலைபரப்புகள், வினாடிக்கு 30 முதல் 60 சட்டங்கள்வரை உள்ளனவாம். இந்த எண்ணிக்கை, நமது கண் மற்றும் மூளையின் பிரித்தறியும் திறனை அடிப்படையாகக் கொண்டது. வினாடிக்கு 18 சட்டங்களுக்குக் குறைவாக இருந்தால், அதை சலனப்படமாக (Moving Micture) மனித மூளையால் அறிய முடியாது. அவை தனித்தனி நிழல் படங்கள் வேகமாக காட்டப்படுவது போல தோன்றும்.1928-ம் ஆண்டு உலகின் முதல் தொலைக்காட்சி நிலையம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், W2XB என்னும் பெயரில் தொடங்கப்பட்டது.
தொலைக்காட்சி என்னும் போது, மூன்று அம்சங்கள் முக்கியமாகக் கொள்ள வேண்டும். முதலில் அலைபரப்ப வேண்டிய காட்சியை அலைபரப்பும் வடிவுக்கு மாற்றுவது. இதை ‘கேமரா’ என்னும் பொது வார்த்தையால் குறிக்கலாம். இரண்டாவது, அலைபரப்பும் வடிவுக்கு மாற்றப்பட்ட காட்சியை மின்காந்த அலைகளாக மாற்றி பொதுவெளியில் உலவ விடுவது. இறுதியாக பொதுவெளியில் அலையும் மின்காந்த அலைகளைப் பிடித்து, அவற்றை காட்சிகளாக மீண்டும் மாற்றுவது.
1937-ம் ஆண்டு முதன்முறையாக பிரிட்டிசு அரச நிகழ்ச்சி ஒன்றை, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ‘எமிட்ரான்’ என்னும் கேமரா கருவியின் துணைகொண்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த ஒளிபரப்புகள் எல்லாம் கறுப்பு வெள்ளை-யில் மட்டுமே இருந்தன. ஆனால், வண்ணத் தொலைக்காட்சி கருவிகளுக்கான ஆராய்ச்சிகள் இந்த கால கட்டத்திலேயே நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த காலத்தில், வண்ண ஒளிபரப்புக்கு தேவையான அலைக்கற்றையின் (Band width)தேவை, கறுப்பு வெள்ளை ஒளிபரப்புக்கு தேவையானதை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. இதுவே வண்ணத் தொலைக்காட்சி குறித்த வேகமான ஆராய்ச்சிகளுக்கும் தடையாக அமைந்தது.
வண்ணத் தொலைக்காட்சிகளும் வண்ண ஒளிபரப்புகளும் 1953-ம் வருடத்திலேயே தொடங்கியிருந்தாலும், அதற்கு அப்போது தேவைப்பட்ட அதீத செலவினங்களாலும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியின் அதீத விலையாலும் 1960-களின் நடுப்பாதிவரைக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் பெரும்பாலும் கறுப்பு வெள்ளையிலேயே இருந்தன.
தொலைக்காட்சிக்கான ஆராய்ச்சிகள் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு நிகழ்ந்து கொண்டிருந்ததால், தொலைகாட்சிக்கும் ஒளிபரப்புக்கும் ஒரு பொது விதிகள் (Standard) தேவைப்பட்டது. இந்த விதிகளின் தொகுப்பு அமெரிக்காவில் NTSC என்னும் பெயரில் 1941-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு, பின்னர் 1953-ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, அமெரிக்கா முழுவதும் பின்பற்றப்பட்டது. இந்த NTSC விதிகள், ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு பல சிக்கல்களை அளித்தது எனக்கூறப்படுகிறது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிகழ்ந்த ஆராய்ச்சிகள், வெவ்வேறு தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தியதன் காரணமாக இருக்கலாம். அந்த சிக்கல்களைக் கடப்பதற்காக அவர்கள் ஒரு புதிய விதிகளை அறிமுகப்படுத்தினர். இது PAL எனப்பட்டது. இது 1962-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்னர் PAL விதி, அமெரிக்கா தவிர மற்ற பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படும் பொது விதியாக மாறியது.
1990-களின் நடுவில் டிஜிட்டல் தொலைக்காட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின்னர் தினம்தோறும் தொலைக்காட்சி தொழில்நுட்பம் புதுப்புது பரிமாணங்களை அடைந்து கொண்டே இருக்கிறது. இன்று அது எங்கு இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்.
தொலைக்காட்சியை மனித பயன்பாட்டுக்கு கொண்டுவர செலவிடப்பட்ட உழைப்பையும் அறிவையும் அறியும்போது உண்மையில் வியப்பு ஏற்படுகிறது – அந்த தொலைக்காட்சியால் மனித இனம் அடைந்திருக்கும்\அடைந்து கொண்டிருக்கும் செயலின்மையையும் மந்தத் தன்மையையும் உணரும்போது! மனித இனத்தின் மகத்தான ஒரு கண்டுபிடிப்பு, பல்வேறு நேர்மறை செயல்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தாலும், பொழுதுபோக்கு என்னும் செயலுக்காகவே அல்லது மனிதனின் செயலின்மைக்காகவே பெரும்பாலும் பயன்பட்டு, மனித இனத்தின் குறிப்பிடத்தக்கப் பகுதியை தனக்கு அடிமையாக்கி வைத்துள்ளது. கூடவே செயலின்மை அளிக்கும் உடல் மற்றும் மனப்பிரச்சனைகளும்.
இன்று சாதாரண மக்களுக்குக் கிடைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், கலையம்சம் சார்ந்த நிகழ்ச்சிகளை, அறிதல் சார்ந்த நிகழ்ச்சிகளை உண்மையில் தேட வேண்டும். பெரும்பாலான நிகழ்ச்சிகளும் மனித மூளையை மந்தமாக்கும் நிகழ்ச்சிகளே. செயலின்மையை பெரிய செயலாக மாற்றும் நிகழ்ச்சிகள். செய்திகள், விவாதங்கள் என்னும் பெயர்களில், ஒரு சிலர் மக்களின் எண்ணங்கள் எந்ந திசையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அந்த திசையை நோக்கி மட்டுமே திரும்ப வைக்கும் அத்து மீறல்கள். இன்று தொலைக்காட்சி வணிகத்தின் முக்கியமான ஊடகம். எனவே உடனடி பொருளாதார லாபம் மட்டுமே கணகில் கொள்ளப்படுகிறது. அது உருவாக்கும் செயலின்மை அளிக்கும் பொருளாதார இழப்புகளும், நிகழ்ச்சிகள் இலவச இணைப்பாக வழங்கும் உடல் மற்றும் மனப் பிரச்சனைகள் அளிக்கும் இழப்புகளும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
2015-ம் வருடத்தில் இந்தியாவின் விளம்பரச் செலவினம் சுமார் ரூ.48976 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுமார் ரு.22446 கோடி, தொலைக்காட்சியில் விளம்பரங்களுக்காக செலவிடப்படலாம். என்ன வாங்கலாம், என்ன செய்யலாம், என்ன உணவு உண்ணலாம், என்ன மேற்கல்வி கற்கலாம் என்பவை ஒருவரின் தேவை மற்றும் திறமைகளை புறந்தள்ளி விட்டு, விளம்ரங்களில் தோன்றும் பிரபலங்கள் சொல்வதைச் செய்யும், சுய சிந்தனையற்ற சமூகமாக மாறி வருகிறோம். பிரபலங்களோ, எவ்வித சமூகப்பிரக்ஞையும் இல்லாமல், பணம் கொடுப்பவர்களுக்காக எந்தப் பொய்யையும் மக்களிடம் பரப்பும் இழிவை, தொழில் என்னும் பெயரில் அரங்கேற்றுகிறார்கள். அவர்களை பிரபலங்கள் என்று வேறு நாம் கொண்டாடுகிறோம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தனிப்பட்ட மனிதர்களின் விருப்பங்கள் – அவற்றை அளிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும். அவர்களின் விருப்பங்களில் தலையிட மற்றவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. சமூகம் அவற்றை விரும்புவதால் அவை அளிக்கப்படுகிறது. இருந்தாலும் அதன் போதாமைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது, எதிர்மறை விளைவுகளை உணர வைக்க முயல்வது, அந்தச் சாக்கடைக் கடலில் தேவையானவற்றை மட்டும் பிரித்தறிய வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்குவது, அதிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களின் தவிர்க்க முடியாத கடமை.
இது பிற்போக்கான கருத்தாகத் தோன்றினாலும், இன்னும் மனிதத் திரளுக்கு சுதந்திரத்தை கையாளும் கலை கைசேரவில்லையோ என்றும் தோன்றுகிறது. இல்லையெனில், மகத்தான தொழில்நுட்பங்களை தங்கள் ஆன்மீக அழிவுக்கு பயன்படுத்த முடியுமா? அகம் அழிந்தபின், புறவாழ்க்கையில் என்ன நிகழ முடியும்? ஆனால், சுதந்திரத்தின் எல்லையை வரையறுக்க யாருக்குத்தான் தகுதியும் உள்ளது? ஒரே வழி, மனிதத் திரளுக்கு சுதந்திரம் என்றால் என்ன என்பதை அறியும் சாத்தியங்கள் வேண்டும். உண்மையான சுதந்திரத்தின் துளியையாவது அனுபவித்தவர்கள், எல்லாவிதமான புறந்தள்ளல்களையும் ஒதுக்கிவிட்டுத் தங்களை வெளிப்படுத்த வேண்டும். அது, திரளில் ஒன்றிரண்டு சிப்பிகளுக்குள்ளாவது முத்தாக மாறலாம். முத்து தன் இயல்பால் பெருந்திரளை தன்னை நோக்கி ஈர்த்து விடும்!
T.K.அகிலன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொலைக்காட்சி”