மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாறு

தேமொழி

Feb 25, 2023

siragu the history of technology

இன்று மனிதர்களின் குறுகிய வாழ்நாளில் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வகையில் மாறிவிடுவதுமட்டும் அல்ல, பலரின் நடைமுறை வாழ்க்கையை அடியோடு மாற்றியும் விடுகிறது. அந்த காலத்தில் நாங்கள் எல்லாம் என்று கதை சொல்வதற்கு ஏற்ற செய்திகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தலைமுறைக்கும் அதிகரித்துவிடுகிறது. ஒருவரின் வாழ்நாளில் தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவில் மாறிவிடுகிறது என்பதை விளக்கும் நோக்கில் ‘அவர் வேர்ல்ட் இன் டேட்டா’ (our world in data) நிறுவனம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின் தொகுப்பு சுவையான தகவல்களைத் தொகுத்து படமாக அளித்துள்ளது.

முதலில் ஒருவரின் வாழ்நாள் காலம் என்பதே தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிகரித்து உள்ளதையும் காணலாம். மில்லினியல் (Millennials) தலைமுறை என்பவர்கள் காலத்தில், அதாவது 1981ஆம் ஆண்டுக்குப்பிறகு பிறந்து 2000ஆம் ஆண்டு தொடங்கிய புதிய நூற்றாண்டில் தேர்தலில் வாக்களித்து தங்கள் முடிவைத் தெரிவிக்கும் வயதை எட்டிய தலைமுறையினர் காலத்தில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் என்பது 75 ஆண்டுகள் என்ற நிலையை எட்டியிருக்கிறது. ஆனால், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், 1870களில் உலகளாவிய அளவில் மனிதர்களின் ஆயுட்காலம் சராசரி 30 ஆண்டுகளுக்கும் குறைவு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அறியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றின் மூலம் மருத்துவ வளர்ச்சியும், மக்களை நோய்களிடம் இருந்தும், செயற்கை மற்றும் இயற்கைப் பேரிடர்களில் இருந்து காக்கக்கூடிய வசதிகளும் இன்று மனிதர்களில் பலர் 70 அல்லது 75 வயது வரையிலும் வாழும் நிலையை ஏற்படுத்தியுள்ளது (அண்மையில் மக்கள் எதிர் கொண்ட கோவிட் பெருந்தொற்றுப் பரவலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் இந்த ஆயுட்கால எண்ணில் எதிர்பார்த்தவாறே சிறிது சரிவைக் காட்டியுள்ளது).

siragu the history of technology-themozhi

எனவே எந்த பெரிய தொழில் நுட்ப மாற்றமும் காணாது 50 வயதிற்குள் மறைந்துவிட்ட முன்னோர்களுடன் ஒப்பிடுகையில், அவர்களையும் விட நீண்ட நாட்கள் வாழ்வது மட்டும் அல்லாமல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும் பெருமளவில் கொண்டு வந்த மாற்றங்களைப் பார்ப்பவர்கள் 20 ஆம் நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் பிறந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்பதை ‘அவர் வேர்ல்ட் இன் டேட்டா’ மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இத்தரவுத் தொகுப்பு மூலம் நாம் அறிவது:

இன்றிலிருந்து . . .

3.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் மனித மூதாதையர்களால் கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்பதே தொழில்நுட்பத்தின் துவக்கம்.

ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தீயினைப் பயன்படுத்திச் சமைக்கத் தொடங்குதல் அடுத்த கட்ட தொழில் நுட்ப வளர்ச்சி.

இதன் பின்னர் இன்றிலிருந்து 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ‘ஹோமோ சாப்பியன்ஸ்’ (Homo sapiens) என்ற இன்றைய உலகின் மனித இனம் தோன்றுகிறது.

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டைத் தொழிலுக்கான வில்லும் அம்பும் பயன்படுத்தப்படுகிறது.

43,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் புல்லாங்குழல் பயன்படுத்தப்பட்ட தடயம் கிடைக்கிறது.

மாறுதலற்ற வாழ்க்கைமுறை பற்பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. இதன் பின்னர் பொது ஆண்டுக்கு முன்னர் (அல்லது கிறித்துவுக்கு முன்னர்/கி.மு.) என்ற தற்காலக் காலக் கணிப்பில் தரவுகள் வழங்கப்படுகிறது.

சற்றொப்ப பொது ஆண்டிற்கு முன் (பொ. ஆ. மு.) 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்யும் வேளாண் தொழில் நுட்பம் நடைமுறைக்கு வருகிறது.

பொ. ஆ. மு. 7,000களில் எழுதும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

சுமார் பொ. ஆ. மு. 3,300 காலவாக்கில் 3.3 மில்லியன் ஆண்டுகளாக நிலவிய கற்காலம் முடிவுக்கு வரத் தொடங்குகிறது, செம்புக் காலம் என்ற உலோகக் கருவிகள் காலம் தொடங்குகிறது, ஏறத்தாழ அதே காலகட்டத்தில் சக்கரம் பயன்பாட்டிற்கு வருகிறது.

பொ. ஆ. மு. 1,300களில் இரும்பின் பயன் கண்டறியப்பட்டு இரும்புக் கருவிகளின் காலம் தொடங்குகிறது. இரும்புக் கருவிகளினால் தொழில் நுட்ப வளர்ச்சி வேகம் பிடிக்கிறது.

பொ. ஆ. மு. 300களில் எழுவதற்கான தாள் பயன்படுத்தும் முறை மக்களால் அறிந்து கொள்ளப்படுகிறது.

பொ. ஆ. 700களில் (அல்லது கி. பி.700களில்) காற்றாலை உருவாக்கி அதன் சக்தியைப் பயன் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மனித உழைப்பின் சக்தியால் கருவிகள் இயக்கப்படும் முறையில் இருந்து மாறுபட்டு காற்றால் இயங்கும் எந்திரத்தின் சக்தியால் கருவிகள் இயக்கப்படுகிறது.

பொ. ஆ. 900களில் துப்பாக்கி அல்லது வெடி மருந்தின் பயன் அறியப்படுகிறது.

பொ. ஆ. 1400களில் பெரும் அளவில் நூல்கள் உருவாக்க அச்சு எந்திரங்கள் கண்டறியப்படுகிறது.

பொ. ஆ. 1600களில் நுண்ணோக்கி, தொலைநோக்கி போன்ற அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு அறிவியல் புரட்சியும்,

தொடர்ந்து பொ. ஆ. 1700களில் நீராவி ஏந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டு தொழில் புரட்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது.

பொ. ஆ. 1800களுக்குச் சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பெரியம்மை தடுப்பூசி (1796), நீராவி தொடர்வண்டி(1804), நிழற்படம் (1839), தொலைத் தந்தி (1844), தொலைபேசி (1849), மின்விளக்கு (1880), சிற்றுந்து (1886), வானொலி (1895) போன்ற கண்டுபிடிப்புகளும்;

1900களில் விமானம் (1903), செயற்கை உரம் (1903), தொலைக்காட்சி (1927), அணுகுண்டு (1933), கணினி (1945), மரபணு அறிவியல் (1953), நிலவில் காலடி வைத்தது (1969), கைபேசி (1973), இணையமும், இணைய வலைத்தளமும், இணையத் தேடு பொறியும் (1991), பன்னாட்டு விண்வெளி ஆய்வு மையம் (1998) போன்ற தொழில் நுட்ப வளர்ச்சிகளும்,

1900களில் திறன்பேசி (2007), 1950களில் தொடங்கி இன்று அனைத்துத் துறைகளிலும் பெருமளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ள செயற்கை நுண்ணறிவும், விண்வெளி ஆய்வுகளும் எனப் பல வளர்ச்சியை, இரண்டாம் உலகப்போர் காலத்திலும் அதற்குப் பின்னர் பிறந்த தலைமுறையினரும் தங்கள் வாழ்நாளிலேயே பற்பல மாறுதல்களை மருத்துவச் சிகிச்சை, தொலைத்தொடர்பு, உணவு உற்பத்தி, பொழுது போக்கு, அரசியல் ஆட்சிமுறை, நெடுந்தூரப் பயணம், கல்வி முறை என்ற பலவற்றில் கண்டு வருகிறோம்.

தொலைத்தொடர்பு வளர்ச்சியால் செய்திகள் விரைவில் பரிமாறபட்டு கண்டுபிடிப்புகளும் விரைவில் பகிரப்படுதல் இதற்கு அடிப்படைக் காரணியாக அமைகிறது. கண்டுபிடிப்புகளும், மேம்படுத்தப்பட்ட கருவிகளும் பயனர்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வந்து சேரும் நிலை ஏற்பட்டுள்ள ஒரு காலகட்டத்தில் பிறந்து வாழ்வது ஒரு அரிய நல்வாய்ப்பு என்பதில் ஐயமில்லை.

தொலைத்தொடர்பு வளர்ச்சியால் செய்திகள் விரைவில் பரிமாறபட்டு கண்டுபிடிப்புகளும் விரைவில் பகிரப்படுதல் இதற்கு அடிப்படைக் காரணியாக அமைகிறது. கண்டுபிடிப்புகளும், மேம்படுத்தப்பட்ட கருவிகளும் பயனர்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வந்து சேரும் நிலை ஏற்பட்டுள்ள ஒரு காலகட்டத்தில் பிறந்து வாழ்வது ஒரு அரிய நலவாய்ப்பு என்பதில் ஐயமில்லை.

மனிதர்கள் பயன்படுத்திய தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாறு பல மில்லியன் ஆண்டுகளை உள்ளடக்கிய வரலாறு. கடந்த 500 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி பெரிய திருப்புமுனைகள் கொண்டதாக விளங்குகிறது. அதிலும் கடந்த நூற்றாண்டு வளர்ச்சி அதிவேக வளர்ச்சியாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் இந்த வரலாற்றை நேர்க்கோட்டில் காட்டுவது தெளிவாக அமையாது என்ற காரணத்தால் மேக்ஸ் ராசர் (Max Roser-2023) வளர்ச்சியே இல்லாத காலத்தையும், குறைவான வளர்ச்சி காலத்தையும், அதிவேக வளர்ச்சிக் காலத்தையும் முறையே சுருள் கோடு, மடங்கிய கோடு, வளரும் கோடு என்ற முறையில் காட்டியுள்ளார். இத்தகைய வரையும் முறையால், இக்கால மனிதர்கள் தங்கள் குறுகிய வாழ்நாளில் எத்தனை எத்தனை மாற்றங்களைக் காணமுடிகிறது என்பதை மனித வரலாறு நெடுக ஒப்பிட்டுக் காட்டும் மேக்ஸ் ராசர் உருவாக்கிய வரைபடம் தெளிவாக விளக்குகிறது. இந்த துரித வளர்ச்சியின் அடிப்படையில் எதிர்கால மனிதர்கள் வாழும் முறை எப்படி இருக்கக்கூடும் எனக் கணிப்பது எளிய மனிதர்களுக்கு மட்டும் அல்ல, அறிவியல் ஆய்வாளர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

Reference:

Technology over the long run: zoom out to see how dramatically the world can change within a lifetime, Max Roser, February 22, 2023

https://ourworldindata.org/technology-long-run


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாறு”

அதிகம் படித்தது