மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொழில் நுட்பவியல்- பகுதி-2

பேரா. இரா. குமார்

Dec 14, 2019

நாவாய் (கப்பல்)

siragu tholil nutpaviyal4

மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட பண்டைத் தமிழகக் கடற் பகுதி நெய்தல் நிலம் எனப்பட்டது. கடலை நம்பி வாழ்ந்த மக்கள் கலம் செலுத்துவதிலும் வல்லவர்களாயிருந்தனர். காவிரிப் பூம்பட்டினமும், கொற்கையும், முசிறியும் தலைசிறந்த துறைமுக நகரங்களாக இருந்தன. பழங்காலத்தில் இந்திய நாட்டின் ஏனைய பகுதிகளை விடப் பழந்தமிழ் நாடே கடற்படை ஆற்றலில் சிறந்திருந்தது என்பதை நிலவியல் ஆசிரியர்கள் எடுத்தியம்பி உள்ளனர்.

புழந்தமிழ் தொழில்நுட்ப ஆற்றலைப் புலப்படுத்தும் வண்ணம், அம்பிகள், முகப்பில் விலங்கு, பறவை, மனிதனின் தலைவடிவங்கள் இடம் பெற்றன. கட்டுமரம், தோணி, ஓடம், பஃறி, பரிசல், படகு திமில் முதலியன சிறுசிறு தொழில்புரியப் பயன்பட்டன. கலங்கள் பெரும் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. நீர் விளையாடவும், பொழுது போக்கவும் சங்ககால மக்கள் புணை, தெப்பம் மிதவை முதலானவைகளையும், பறவைமுக அம்பிகளையும் பயன்படுத்தினர். பெரும் அகழிகளையும் ஆறு, கடல் முதலானவற்றையும் கடப்பதற்கு போர்க் காலங்களிலும் அரிமுக அம்பி, கரிமுக அம்பி, பரிமுக அம்பி, புலிமுக அம்பி ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

பெரும்புலி வங்கம் கடலின் பல திசைகளிலும் சென்று வந்தது. காற்றின் இயக்கத்தால் அக்கலம் ஆழ்கடலிலும் சென்றது. பாரமிறக்காது புகார்த்துறை புகுந்த கப்பலைப் பற்றிப் புறநானூறு கூறகிறது. பெரும் நாவாய் காற்றைத் துணை கொண்டு கடலைப் பிளந்து, சிறந்த பொருள்களை நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பது, பெரும்போர் நிகழ்ந்த அனைத்து வசதிகளும் நிறைந்தது. கடலோடும் நாவாய்களைக் கரைக்கழைக்க ஒளிகாட்டும் கடற்கரைத் துறைகள் இருந்தன. வணிகக் கப்பல் வழி தவறாமல் கரைசேர வழிகாட்டியாகக் காணப்பட்ட கலங்கரை விளக்கத்துடன், கப்பல்களை பழுது பார்க்கும் துறையும் இருந்தன. கலங்கரை விளக்கம் இருந்ததை,

                        “கோடுயர் திணிமணல் அகள் துறைநீரால்

                        மாட வொள்ளெரி மருங்கறிந்தொய்ய”

                                    “ வானமூன்றிய மதலை போல

                                     ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

                                     விண் பொர நிவந்த வேயாமாடத்து

                                     இரவின் மாட்டிய இலங்கு அடர் ஞெசிழி

                                     உரவுநீ ரழுவந் தோடுங்கலங் கரையும்”

என்ற அடிகள் தெளிவுபடுத்தும். கடலில் இயங்கும் காற்றைக் கலன் செலுத்தப் பயன்படுத்தும் அறிவினைப் பண்டைத்தமிழர் பெற்றிருந்தனர் என ஒளவை சு.துரைசாமி பிள்ளை குறிப்பிடுகிறார். உலகமே பெயர்ந்து வருவது போன்ற கலம் ஒன்றினை இரவும் பகலும் ஓய்வின்றி காற்று அசைத்துச் செல்ல நாவாய் ஓட்டுகிறவன் அதனைத் திறம்பட கரைசேர்த்ததை மதுரை மருதனிளநாகனார்,

                                    “உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்

                                     புலவுத்திரைப் பெருங்கடல் நீரினிற் போழ

                                     இரவும் எல்லையும் அசைவின்றாகி

                                     விரை செலல் இயற்கை”

என விளக்குவர். நாவாய் ஓட்டுகிறவன் காற்றின் வரவறிந்து கலம் செலுத்திய திறன் இதனால் புலனாகும். தமிழர்க்குப் பழங்காலத்திலேயே காற்றின் வரவறிந்து கலம் செலுத்துகிற திறன் இருந்ததை இதனால் அறிய முடிகின்றது.

கெடலரும் தாளையொடு கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என ஐந்தாம் பத்தின் பதிகமும், கடம்பு எறிந்த சேரன் கடல் வயிறு கலக்கியவன் எனச் சிலப்பதிகாரமும் குறிக்கின்றன. சேரர் கலஞ் சென்ற குடகடலில் பிறர்கலம் செலுத்த அஞ்சுவர் என மாறோகத்து நப்பசலையார் அகநானூற்றில் குறிப்பர். ‘நளியிரு முந்நீர் நாவாயோட்டி வளிதொழிலாண்ட உரவோன் மருக’ எனக் கரிகால் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் கூறுவர். கி.மு.முதல் நூற்றாண்டில் இலங்கை சோழ மன்னரால் வெல்லப்பட்டது. கடல் சூழ உலகை வளைத்து தம் புகழ் நிறுவிய உரவோர் உம்பல் எனப் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் உணர்த்துவர். குடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடுகிறார். பாண்டியன் மாகீர்த்தி என்ற நிலந்தரு திருவிற்பாண்டியன் கடல்கடந்து சாவகநாட்டில்(சுமித்ரா) தன் ஆட்சியை நிறுவியிருந்தான் இவற்றால் பாண்டியர் கடற்றாணையின் சிறப்பும் கலமாண்ட பெருமையும் புலப்படும். சோழநாட்டின் புகழ்பெற்ற துறைமுகமாகிய பூம்பகாரில் இருந்து சோழந்தி என்ற அம்பி கங்கைக்கும் பர்மாவிற்கும் சென்று மீண்டது என்று பெரிப்ருஸ் கூறியுள்ளார். தமிழகம் கடற் பயணத்தில் சிறந்து விளங்கியதற்குக் காரணம் அக்காலத்திலிருந்த எண்ணற்ற வகைக் கப்பல்களும் போர்க் கப்பல்களும் ஆகும்.

சங்க இலக்கியத்தின் வாயிலாக அக்கால மக்களும் சேர, சோழ, பாண்டியரும் பலவகை நாவாய்களைப் போர்க் கலங்களாகப் பயன்படுத்தி கடல் எல்லை காக்கவும் வாணிகம் பெருக்கவும், கடல்கடந்து புகழ்பரப்பவும் கொண்டிருந்தனர் என்பதனை அறிய முடிகின்றது. கப்பலைக் குறிக்கும் வங்கம் என்ற சொல் பெருங்கலத்தைக் குறித்தது. கப்பல்களைப் பழுதுபார்க்கும் துறைகளும் கலங்கரை விளக்கமும் அற்றை நாளில் சிறப்புறத் திகழ்ந்தன.

அணை – கற்சிறை

siragu tholir nutpaviyal5

மிகுதியாக வரும் வெள்ளத்தைக் கல்லால் கட்டப்பட்ட கல்லணை தேக்குவதால் நீர் குளம் போலத் தேங்கி நிற்கும். அந்த அணையில் மதகுகள் அமைத்து வேண்டும் போது வேண்டிய அளவு தண்ணீரைத் திறந்து விடுவதுண்டு. கல்லால் கட்டப்பட்ட அணையைக் கற்சிறை என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.93இதனால் தொல்காப்பியம் தோன்றிய காலத்திலேயே கற்சிறை என்னும் கல்லணைகளிருந்தன என்பதை அறிய முடிகிறது. மிக்கு வரும் ஆற்று நீரிடத்துக் கல்லணை நின்று தாங்கினாற் போல பகைவர் படையைத் தடுத்துத் தோற்று ஓடச்செய்த படைத்தலைவன் என மதுரைக்காஞ்சி கூறுகிறது. இரண்டு குன்றுகளுக்கு இடையே குறுக்காக அமையுமாறு தொழில் நுட்ப வல்லுநர்கள் இக்காலத்தில் அணை அமைப்பது போலவே கல்லணையும் அமைந்துள்ளது. காவிரியில் கரிகாலன் கல்லணை கட்டிய செய்தி பொருநராற்றுப் படையில் “நிரைத்தலைக் குறைப்புனல் வரைப்பகம் புகுதொறும்புனலொடு மகளிர் கதுமெனக் குடைய” என இடம்பெற்றுள்ளது.

‘வரைப்பகம்’ என்னும் சொல் அணையைக் குறிக்கும். திருவாலங்காட்டுச் செப்பேடு சோழன் கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டியதையும் அணை கட்டிய செய்தியையும் புலப்படுத்துகிறது. நீர்தேக்கங்கள் அமைப்பதில் மணல் தளத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டிடங்கள் எழுப்புவது ஒப்பற்ற கலையாகும். அணையின் மேல் வழிந்து செல்லும் நீர், அதன்கீழ் கசிந்து செல்லும் நீர் இரண்டாலும் பாதிக்கப்படாத வகையில் அணை அமைந்திருக்கும். கரிகாலனை ‘பொன்னிக்கரை கண்ட பூபதி’ எனக் கவிசக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவிற் புகழ்ந்துரைத்ததாக  இராசமாணிக்கனார் குறிப்பர். நாட்டின் வளம் பெருக்கக் கரிகாலன் கல்லணை அமைத்தான் என்பதும் அறிவியலில் சிறந்த பொறியியல் வல்லுநர் வியக்கும் வண்ணம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி அவ்வணை பயன் நல்குகிறது என்பதும் அக்கால மக்களின் தொழில் நுட்ப அறிவுக்குச் சான்றாகும்.

போர்கருவிகள்

siragu tholir nutpaviyal6

போர்கருவிகள் பகையடும் வீரர் பயன்படுத்தும் கருவிகள் போர்க் கருவிகள் எனப்படும். “படைக்கலம், தானை, கடுமுள், சுதனம், படையே, துப்பு, துழுமுள், ஏதி, கார்த்திகை, கூர்த்திகை ஆயுதப் பொதுப் பெயர்”

                                     “தானை படையே படைக்கலங்கருவி

                                      யெஃகிவை யாயுதம் வேலுமியம்புவர்”

                                     “துப்பு மேதியுஞ் சுதனமு மாகும்”

எனும் நிகண்டுப் பாக்கள் ஆயுதங்களின் பொதுப் பெயர்களைத் தொகுத்துரைக்கின்றன. இவற்றுள் பழந்தமிழ் இலக்கியங்களில் பயின்றுவரும் படைக்கலம், தானை, படை, துப்பு, எஃகு, வேல் என்னும் சொற்கள் படைக்கலங்களைச் சுட்டுகின்றன என்பர் டாக்டர் தங்கங்கந்தசாமி. படுக்கப் பயன்படுவன படை, பல்படைத் தொகுதி படைக்கலம் தானை எனில் ஆயுதப்பொழுது, துப்பு எனில் வலி, அறிவு, துணை, துணைக் கருவி என்னும் பொருள் உடையது. எஃகு என்பது உருக்கு, கூர்மை, வேல், ஆயுதப்பொழுது எனும் பொருள் தருவது. இரும்பாலான கூரிய கருவிகள் எஃகாகும். வெல்லத் துணையாக விளங்கும்; கருவி வேல் எனப்பட்டது. அருகில் உள்ள பகைவரைத் தாக்கும் வாளினைக் கையில் பிடித்து பகையழிப்பர் வீரர். சற்றுத் தொலைவில் உள்ள பகைவரைத் தம் கையில் உள்ள வேல் வீசியழிப்பர். நெடுந்தொலைவில் உள்ள பகைவரை அழிக்க வில்லில் இருந்து புறப்படும் அம்பு பயன்படும். போரில் இம்மூன்றும் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன.

வாள், ஈர்வாள், கொடுவாள், உடைவாள் எனப் பல வகைப்படும். ஒந்தியின் முதுகு போல வாள் இருக்கும் எனக் குநற்தொகை கூறும். உடைவாளைச் சுரிகை என்று கூறுவர். வாளை ஒளிறு வாள் என்று புறநானூறு கூறுகிறது. வெண்மையான ஒளி வீசும் கருவியாதலால் அதற்கு வாள் என்று பெயர் வந்தது. வாளால் செய்யும் போர் வாள் அமர் எனப்பட்டது. வாளால் போரிடும் படை வாள் தானை என்று அழைக்கப்பட்டது. வாள்படையை வீரர்கள் இடுப்பில் கச்சையில் கட்டப்பட்ட உறைகளில் செருகி வைத்திருப்பர். வாணிகச் சாத்திற்குக் காவல் புரிவோர் வெண்மையான யானை மருப்பினால் செய்யப்பட்ட கைப்பிடியை உடைவாளைப் பாதுகாப்புக் கருவியாக வைத்திருக்கின்றனர் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. திண்மையான பிடியை உடைய ஒளி பொருந்திய வாள் என்று முல்லைப்பாட்டுக் கூறும் வாளின் இடைப்பாகம் வாய் எனப்படுகின்றது. மழுங்கியும் சிதைந்தும் இருக்கும் வாள் வடுவுடைய வாளாகும். வடுவுடைய வாள் போருக்கு உதவாது வாளின் நுனிப்பாகம் வெவ்வேறு வடிவம் பெறும் முள் வளைவுடைய வாள் கொடுவாள் எனப்படும். கொடுவாள் வளைந்த அரிவாள் எனவும் பெயர் பெறும் நெல் அரிவதற்கு பயன்படும் வாள் கூர்வாள் எனப்படும். அரம் போன்ற வாயையுடைய வாள் மழுவாள் எனப்படுகின்றது. மூவிலை வேல் ‘சூலம்’ எனப்படும். இது சிவனுக்குரியதாகக் கூறுவர். வைணவக் கடவுளாகிய திருமாலுக்குரிய படை திகிரி. திகிரிக்கு நேமி, ஆழி, சக்கராயுதம் என்ற வேறு பெயர்களும் உண்டு. அதியமான் திகிரிப்படை கொண்டு கோவலூர் அரணை அழித்தமையைப் பரணர் பாடியதாக ஒளவையார் கூறுகிறார். பகையழிக்கும் வேலைக் குறித்து எஃகம் என்ற சொல்லும, அயில் என்ற சொல்லும், உடம்படி என்ற சொல்லும், பல இடங்களில் வேலும் இலக்கியங்களில் வந்துள்ளன.

திரண்டு நீண்டு வளர்ந்து முகையோடு கூடித் தோன்றும் கரும்பின் கூட்டம் என்று மலைபடுகடாம் கூறுகிறது. கரும்பின் வெண்முகை வேல் போலுள்ளது என நற்றிணை கூறுகிறது. சுடர் போன்ற வெண்மையும் இலைபோன்ற வடிவமும் பெற்று கூரிய நுனியை உடைய நீண்ட வேல் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது.

ஈந்து இலையின் நுனியும் வேலின் கூரிய முனை போலிருக்கும் எனப் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. வேலின் தலைப்பகுதி இலை வடிவத்தில் எஃகால் செய்யப்படுவதால் எஃகு என்றும் எஃகம் என்றும் கூறப்பெறும். கூர்மையானது என்ற பொருளில் வேலுக்கு அயில் என்ற பெயரும் உண்டு.போரில் முனை சிதைந்த வேலையும் கொல்லன் செப்பஞ்செய்து தருவான். அது கொல்லனது உலைக் களத்தில் கிடக்கும்.

வேல் படை நெய் பூசப்பட்டுக் காவல் பொருந்திய படைக் கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும். பகைவனுடைய உடம்பை இடித்துச் சாய்க்கவல்ல கருவி என்ற பொருளில் உடம்பிடி என்ற பெயரும் வேலுக்கு வழங்கப்பட்டது. சிறிய காம்மை உடைய கைவேல் எனப்படும். கூரிய கைவேல் குந்தம் எனனப்படும். பூந்தலைக் குந்தம் குத்தி என முல்லைப்பாட்டுக் கூறும் வேல் இலைப்போல் வடிவமைக்கப்படுவதால் அதன் அடிப்பாகம் காம்பு என அழைக்கப்படும். பூண் செறிக்கப்பட்ட கெட்டியான மூங்கில் குழாய்கள் வேலின் காம்பு இறுகச் செறிக்கப்படுவதும் உண்டு என அகநானூறு கூறுகின்றது. வாளி,கணை, பகழி, கோல், அம்பு எனச் சங்க இலக்கியங்களில் அம்பைக் குறித்துச் சொற்கள் வழங்குகின்றன.

சிலை என்ற சொல்லுக்கு வில்லென்றும் பொருள் உண்டு. வலிமை வாய்ந்த வில் சிலை எனப்படும். அம்பை கடுவிசையோடு செலுத்துதற்கு உரிய வில்லே சிலை எனப்படுகிறது. சிலையின் வடிவம் இறா அல்லது இறவு எனப்படும். மீனின் வடிவாலான வடிவத்தைப் போன்றது. வில்லினுடைய இரண்டு முனைகளும் சிறுத்துச் சிறிது வெளிப்புறமாக வளைந்தும் இருக்கும். நடுப்பாகம் சிறிது அகன்றும், பருத்தும், இறவின் செதில்களைப் போல வலுவான நரம்பால் இறுக்கிக் கட்டிய பல கட்டுகளை உடையதாகவும் இருக்கும். முடங்கு இறவு பூட்டுற்றவில் ஏய்க்கும் எனத் திணைமாலை கூறுகிறது. கொடுமையை உண்டாக்க வல்ல வில் என்றும் பொருள்படும் கொடுவில் என்றும் கூறப்படும். போர்க் கருவியாகப் பயன்படும் வில் படையிலட மூன்று உறுப்புகள் உண்டு.

வில், நாண், அம்பு ஆகிய மூன்றும் பயன்படும் போதே அந்த வில் படைக் கருவியாகிறது. வலிமையும் வளையும் தன்மையும் உடைய மூங்கில் பிளாச்சுகளால் ஆன வில் அமைவில் எனப்படும் வலுவான வளைந்த மரக்கிளையின் கொம்பால் ஆகிய வில்லுக்குக் கொடுமரம் என்று பெயர். வில்லுக்கு சாபம் என்ற பெயரும் உண்டு. வில்லில் நாண் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வில் குலைவில் எனப்படும். நாண் பூட்டப்பெற்று வில்லில் அம்பு வைத்துத் தொடுக்கப்படும் இடம் ‘உடு’ என அழைக்கப்படும். நாணில் அம்பின் அடிப்பாகம் பொருந்துமிடம் உடு எனப்படும். எனவே உடு என்பது அம்பின் சிறகை உடைய அடிப்பகுதியின் பெயராக வழங்குகின்றன. நாணை வேகமாக இழுத்து அம்பை எய்யும் அளவிற்கு அம்பு கடுவிசையுடன் செல்லும்.

அம்பின் நுனிப் பகுதியின் அடிப்பாகத்தைக் குழாய் போல் அமைத்து அதை நீண்ட நடுக்கோலில் செறித்து அதை உறுதியாகப் பிணித்திருக்கும் அம்பும் உண்டு. அம்புகளை ஒருசேர வைத்திருக்கும் புட்டிலுக்குத் தூணி என்று பெயர். அதை அம்புப் புட்டியல் என்றும் அம்புஅறாத்தூணி என்றும் கூறுவது உண்டு. மதிலரண்காக்கும் போருக்கும் விற்படை மிகவும் பயன்பட்டது. மேலும் சில தாக்கும் கருவிகளை இலக்கியம் எடுத்துக்காட்டும். கணிக்கி என்பது ‘மழு’ என்ற ஆயுதம் என்பதையும் அது குந்தாலி என்றும் வழங்கப்பட்டது, என்பதையும் புறநானூறு கூறுகின்றது. பதிற்றுப்பத்து தண்டுடைவலத்தர் என்னும் தொடரில் தண்டு’ என்ற படைக்கருவியைச் சுட்டுகிறது. வச்சிரப்படை இந்திரனுக்குரியது எனவும் கலப்பை என்று பொருள்படும் ‘நாஞ்சில்’ பலராமனுக்குரிய படை எனவும் புறநானூறு கூறுகின்றது. திகிரி அல்லது ஆழி என்பது அரணழிக்கும் ஆற்றலுடையது எனக் குறிக்கின்றது. இவையன்றித் தற்காப்புக்காக உடலில் அணியப்படும் கவசம். உலர் மரத்தால் செய்யப்பட்ட கேடமாகிய பலகை இருள் போன்ற கரிய நிறமுடைய தோல் ஆகியவற்றை அக்காலத்தில் வீரர் பயன்படுத்தினர். மிக நுட்பமாக இத்தகு கருவிகளை அமைத்துப் போராற்றல் வாய்ந்தவராக அக்காலத் தமிழர் விளங்கினர் என்பதை சங்க இலக்கியம் எடுத்துக்காட்டும்.


பேரா. இரா. குமார்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொழில் நுட்பவியல்- பகுதி-2”

அதிகம் படித்தது