தொழில் நுட்பவியல்
பேரா. இரா. குமார்Nov 30, 2019
பண்டைத் தமிழர் புவியியல், பயிரியல், உயிரியல், தொழில் நுட்பவியல் ஆகிய அறிவியல் துறைகளில் மேம்பட்டவர்களாக விளங்கியுள்ளனர். அவை குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடக்கின்றன. அவற்றுள் தொழில் நுட்பவியல் குறித்த செய்திகள் மட்டும் ஈண்டு ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சங்ககாலத் தொழில் நுட்பவியலுக்கு அக்காலத்து எழுந்த கட்டிடங்கள், அரண்கள், நகரமைப்பு, கப்பல்கள், போர்கருவிகள் ஆகியன சான்றாக உள்ளன. அவைகள் குறித்த செய்திகளை ஆராய்ந்து வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கட்டிடக்கலை:
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனது அரண்மனை திட்டமிடப்பட்டுச் சிற்பநூல் வல்லாரால் கட்டடப்பெற்றது. மன்றங்கள், நாளோலக்க மண்டபம், படைவீடு, கருவூலம், வழிபடு தெய்வங்களுக்குரிய கோட்டங்கள், அட்டிற்சாலை, இளவேனில் மண்டபம், பள்ளியறை, அரசியின் கோயில்மாடம், மாளிகைக் கூடம், கோபுரம், யானைத்தறி, குதிரைக் கொட்டில், பயிற்சிக்கூடம் முதலான அமைப்புகளுடன் அரண்மனை அமைக்கப்பட்டிருந்தது. கட்டடக்கலை வல்ல பொறியாளர் நுண்ணிய நூலைப் பிடித்து மன்னர்கேற்ப அரண்மனை அமைத்துள்ளனர். அரண்மனையைச் சுற்றி மாடங்களும், அவற்றை வளைத்து மதிலும் கட்டப்பட்டன. வாயிலருகில் கொற்றவை கோயில் கட்டப்பட்டது. வாயிற்கதவுகளிரண்டிலும் உத்திரம் என்னும் மீனின் பெயர் கொண்ட உத்திரக் கற்கவியில் இரண்டு குவளை மலர்களைப் போலச் செய்யப்பட்ட கைப்பிடிகள் செருகப்பட்டன. அவை தாழ்ப்பாளுடன் அமைத்தவை. கைவன்மை மிகுந்த கருமான் பரித்த இரும்புசிட்டியால் பிணித்துச் செவ்வரக்கிட்டு முடுக்கிச் செய்யப்பட்டதால் கதவுகள் குற்ற மற்றவையாக இருந்தன.
வாயிலில் வீற்றிருக்கும் தெய்வத்திற்கு வெண்சிறுகடுகு அப்பி, நெய் பூசப்பட்டு உரிய சிறப்புச் செய்தனர் என நெடுநல்வாடை பாண்டியனுக்கு அமைக்கப்பட்ட அரண்மனைச் சிறப்பைப் புலப்படுத்தும். சிற்ப நூல் பயின்றோரே மேற்கூறப்பட்டவை கட்டும் தகுதி பெற்றோராய் இருந்தனர். சிற்ப நூல் வல்லோரால் சிறப்புறச் செய்யப்பட்ட மாடம் என இளங்கோவடிகள் குறிப்பிடுவதால் அதனை உணரமுடியும். அக்காலத்தில் கட்டடக்கலை நூல் கற்றுத் தேர்ந்த நெறியாளரே நகரங்களில் பெரிய மாடமாளிகைகளைக் கட்டியுள்ளனர் என்பது இதனால் தெற்றெனப் புலனாகிறது. கட்டடம் கட்டுவதற்குச் செம்மண்ணைச் சுட்டுப் பயன்படுத்தியுள்ளனர். அதனை “சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்” “சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனை” என்ற அடிகள் விளக்கும். செம்மண் மட்டுமன்றிச் சுண்ணாம்பும் கட்டடம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாவை செய்வோர் மண்ணீட்டாளர் எனப்பட்டனர். செல்வர்கள் பல கட்டுகள் அமைந்த வீட்டைக் கட்டினர். பல கட்டுகளால் மாட்சிமைப்பட்ட நல்ல வீடுகள் ஓவியம் போல் அழகாகவும், விசாலமாகவும் கட்டப்பட்டன. அதனை,
“ஓவுக்கண்டன்ன வில்”
“ஓவத்தணையவினை புனை நல்லில்”
“ஓவத்தன்ன விடனுடை வரைப்பின்”
என்ற அடிகள் தெளிவுபடுத்தும். ஏழு அடுக்குகள் கொண்ட (எழு நிலை மாடங்கள்) மாடிவீடு கட்டி அதில் செல்வர்கள் வாழ்ந்ததினையும் அவ்வீடுகள் வலிமையாக இருந்ததையும் “இடஞ் சிறந் துயரிய வெழு நிலை மாடத்து” “திண்சுவர் நல்லில்” என்ற அடிகள் உணர்த்தும். அவ்வீடுகள் மலை போல் உயர்ந்திருந்ததை “விண்டோய் மாடம், நான் மாடக்கூடல், நீண்மாடக்கடல என்ற அடைத்தொடர்கள் தெளிவுபடுத்தும்.
தெருக்கள்
தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நகரங்களில் அகன்ற தெருக்களை அமைத்திருந்தனர். அந்நகரங்களைக் காவல் செய்ய காவலர்களைப் பணியமர்த்தியிருந்தனர். அதனை, “ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்” “கடியுரை வியனகர்” என்ற தொடர்கள் புலப்படுத்தும். நகரமைப்பைத் தாமரைப் பூப்போலவும் நந்தியாவட்டை மலர் போலவும் அமைத்திருந்தனர். மதுரை அதற்குத் தக்க சான்றாக இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளன.
அரண்
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இயற்கை அரணும், செயற்கை அரணும் என இருவகை அரண்கள் உண்டு. இயற்கை அரண்களாக மலையரண். நீர் அரண், காட்டரண், நிலவரண் என்பவை இருந்தன. உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும், ஒரு நகரத்தின் பாதுகாப்பிற்கும், ஓர் ஊரின் பாதுகாப்பிற்கும், ஒரு கோயிலின் பாதுகாப்பிற்கும்,ஓர் அரண்மனையின் பாதுகாப்பிற்கும் உதவக்கூடியவை அரண்களாகும். நாட்டின் பாதுகாப்பிற்கு அரணாக காவற்காடு, அகழி, மதில் ஆகியவை விளங்கியுள்ளன. மிதிலுக்குப் புரிசை, இஞ்சி என்ற பெயர்கள் உண்டு. அம்புடை ஆர் எயில், மண்புனை இஞ்சி மதில் எனக் குறிக்கப்பட்டுள்ளன. மதில் நீளமாகவும் உயரமாகவும் பாதுகாப்பாகவும் இருந்து அம்பு எய்வதற்கு ஏற்ற அமைப்புக் கொண்டதாகக் கட்டப்பட்டிருந்தது. அரைத்த செம்மண்ணினாலும் மதிலினைக் கட்டியுள்ளனர். அம்மதிற் சுவர் செம்பினால் செய்தது போன்று உறுதியாக இருந்துள்ளது.இம்மதில்கள் பழங்காலத்தில் புறமதில், இடைமதில், உள்மதில் அல்லது அக மதில் என்று மூவகையாக அமைக்கப்பட்டிருந்தன. மதிலை அழிக்கும் போர்முறைக்கு உழிஞை என்றும், மதிலைக் காக்கும் போர் முறை நொச்சி என்றும் தொல்காப்பியம் கூறுகிறது.
மதில் சுற்றியிருப்பதால் சுற்று என்று கூறப்பட்டது. ‘சுற்றுஅமர்’ என மதிற்சுவரைத் தொல்காப்பியம் குறிக்கும். அரண் என்ற சொல் அனைத்து அரண்களையும் குறிப்பதுடன் மதிலரனையும் குறிக்கும். வரைப்பு எனவும் மதிலைக் குறிப்பிடுவதுண்டு. இலக்கியங்கள் மதிலரணை நெடுமண் இஞ்சி நீள் நகர் வரைப்பு, எனவும் ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’ ‘அரும்படி வரைப்பு’ ‘நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பு’ எனச் சுட்டுகின்றன. மதிலை இலக்கியங்கள் புரிசை, எயில், இஞ்சி, சுற்று, அரண், வரைப்பு, வேலி என்ற சொற்களில் குறிக்கின்றன. ‘வேலி’ என்பது முள்ளாலும், சுழி முதலியவற்றாலும் ஆன அரணைச் சுட்டும். ‘பெருநீர் வேலி’ ‘இமிழ்கடல் வேலி’ ‘மலை வேலி’ ‘முள் மிடைவேலி’ முதலானவை நீராலும் மலையாலும் முள்ளாளும் ஆன காப்பைச் சுட்டும். மதிலரண் நானிலத்திலும் இடம் பெறும். அது கதவுகள் உடையதும், மறவர்களால் காக்கப்படுவதும் ஆகிய சிறப்புடையது. அக்கதவுகளில் புழை அமைத்திருந்தனர். அதனை “வாயிலொடு புழை அமைத்து, ஞாயில் தொறும் புழைநிறீஇ” என உணர்த்தும். பகைவர் தாக்காமல் தம்மைப் பாதுகாத்து மறைத்துக்கொள்ள இது மறைவிடமாக. உதவியுள்ளது.
பல்யானைச் செல்கெழு குட்டுவன் உழிஞை சூடிப் படை எடுத்துச் சென்று பகைவரின் ‘அகப்பா’ என்னும் அரணை அழித்தான். அந்த அரணின் வாயிலில் எந்திரவில் தொங்கும்படி கட்டப்பட்டிருந்தது. ஐயவி தூலாமும் இருந்தது. இந்த ‘ஐயவிதுலாம்’ என்பது தன்னை நெருங்குபவர் தலையை நெருக்கித் திருகும் மரங்களாகும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் பகைவரது ஊரினது கோட்டையில் உள்ள அம்புகளை எய்யும் எந்திரவில்லையுடைய மதில் வாயிலை அழித்து ஊருக்குள் புகுந்துள்ளான்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பகையரசனின் ஊரில் எந்திர வில்லில் இருந்து அம்புகளை வீசும் மதிலின் அரணை அழித்தான் அம்புகளை எய்யும் எந்திர வில்லும் மதிலின் வாயிலில் பொருத்தப்பட்டிருந்தது. தானே வளைந்து அம்பு எய்யும் விற்பொறியும கருங்குரங்கு போலிருந்து வந்தவரைக் கடிக்கும் பொறியும் கல்லை எறிகின்ற கவணும் கொதிக்கும் நெய்யைச் சேர்ந்தார் மேல் இறைக்கும் நெய் கொதிமிடாவும், உருகிய செம்பை மேலே இறைக்கும் செம்பு உலைப் பொறியும், கற்களை வீசும் கற்கூடைகளும், அகழி கடந்து மதில் பற்றுவோரைத் தூண்டிலில் இழுக்கும் தூண்டில் பொறியும், கழுத்தில் பூட்டி முறுக்கும் கழுக்கோல் சங்கிலிப் பொறியும், அம்புக்கட்டுகளும், ஏவு அறைகளும் மதுரை மதிலின் மேல் அமைக்கப்பட்டிருந்தமையைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அவற்றின் நுட்பம் வாய்ந்த செயல்பாடுகள் சங்ககால மக்களது தொழில்நுட்பத் திறனை நன்கு விளக்கி நிற்கும்.
அகழி
ஆழமாக அகழ்ந்து அமைக்கும் அகழியைச் சுற்றியுள்ள காவற் காட்டில் சூரிய ஒளியும் நுழையாதபடி மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும். காவற்காடு முள் செடிகளான வேலியைச் சூழ்ந்து அமைந்திருக்கும். காவற்காட்டையும், வேலியையும் அடுத்தே ஆழமான அகழி அமைந்திருக்கும். அகழியை அடுத்து மிகவும் உயர்ந்து வாயில்களோடு கூடிய கோபுரங்களைக் கொண்ட நீண்டுயர்ந்த மதில்களிருக்கும். மதில், அகழி, மிளை என்று மூன்று உறுப்புக்களைக் கொண்ட பாதுகாப்பு அமைப்பு அரண் என்றும், அருப்பம் என்றும் குறும்பு என்றும் கூறப்படும்.
அரண் என்றால் பாதுகாப்பு என்று பொருள். நாங்கள் அம்பு எய்து போர் தொடங்கப்போவதால் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விடுங்கள் என்று பகைவர் மக்களுக்கு அறிவித்துப் போர் தொடங்குவது சங்ககால அறப்போர் முறையாக இருந்தது. அகழி நிலத்தைத் தோண்டியும், எதிர்ப்படும் பாறையை உடைத்தும் நிலத்திலிருந்து நீர் சுரக்கும் அளவிற்கு ஆழமான நீர் நிறைந்திருக்கும். மண்ணை ஆழமாக அகழ்ந்தது. நிறைந்த நீரால் நீலமாகத் தோன்றும் அகழி என்று மதுரைக்காஞ்சி கூறகிறது. கல் தரையைத் தோண்டிச் செய்த சிறிதாகிய நீர் வரும் வாயை உடைய அகழி என்றும் மதுரைக்காஞ்சி கூறுகிறது. கற்களை அகழ்ந்து இயற்றிய அகழி என்று மலைபடுகடாம் குறிக்கின்றது. பகைவர் அகழியில் இறங்குவதைத் தடுக்க அகழியில் முதலைகள் வளர்க்கப்படும். இரையைத் தேடி உலாவும் வளைந்த காலினை உடைய முதலைகளோடு திரை உண்டாக ஆழ்ந்த கல்லை அகழ்ந்த கிடங்கு என்று மலைபடுகடாம் கூறுகிறது. முதலைகளில் ஒரு வகையாகிய கராம் முதலைகள் பெருகித் திரியும். ஆழமான நீரையுடைய அகழி என்று புறநானூறு கூறுகிறது. சங்ககாலத்தில் நகரங்களும் அகழி சூழ்ந்திருந்தன.
பகைவர் கடத்தற்கரிய நீர் அரணாம் அகழியில் திரியும் முதலை, சுறா திமிங்கலம் முதலானவை உயிர்க்கு ஊறு விளைவிக்கும். இவையனைத்தும் சங்ககால மக்கள் பல்துறையிலும் தொழில் நுட்பம் வாய்ந்த நுண்ணறிவினர் என்பதைப் புலப்படுத்தும்.
(தொடரும்)
பேரா. இரா. குமார்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொழில் நுட்பவியல்”