மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தோழமை தொண்டு நிறுவன இயக்குனர் தேவநேயன் அவர்களின் நேர்காணல்

சித்திர சேனன்

Jan 30, 2016

devaneyan3கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்: என்னுடைய பெற்றோருடைய சொந்த ஊர் திருநெல்வேலி. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் கோபி பாளையம் என்கிற கிராமம். அங்கு எட்டாம் வகுப்பு வரையிலும் அரசு உதவி பெறுகிற கிறித்துவப் பள்ளியிலும், பின் அரசுப் பள்ளியிலும் படித்தேன். பத்தாம் வகுப்பு திண்டுக்கலில் அரசு உதவி பெறுகிற பள்ளியில் படித்தேன். அதன்பிறகு இளங்கலை இயற்பியல் கோபி கலைக்கல்லூரியிலும், முதுகலை இயற்பியல் லயோலா கல்லூரியிலும் படித்திருக்கிறேன். அப்பா ஒரு தனித்தமிழ் ஆர்வலர், பாவலரேறு பெருஞ்சித்திரனாருடைய மாணவர்.

அடிப்டையில் எங்களது கிராமப்புரத்தில் நிறைய விடயங்களைக் கொண்டுவருவதற்கு என்னுடைய அப்பா ஒரு காரணம். பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியராக இருந்து பள்ளிக்கூடத்தையே ஒரு சமூகக்கூடமாக மாற்றியவர். அதனால் என்னுடைய வீட்டில் அனைவருக்குமே சமூகப்பணி என்பது சாதாரண விடயம்தான். என்னுடைய வீடு இயல்பாகவே தமிழறிஞர்கள், சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெரியாரிய தொண்டர்கள், அம்பேத்கர் தொண்டர்கள் என்று இந்த மாதிரி சமூகம் சார்ந்து இயங்கும். அதனால் எனக்கு இயல்பாகவே சிறிய வயதிலிருந்தே அதில் ஆர்வம் உண்டு.

அதன்பிறகு என்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கிற காலகட்டத்தில், ஈழத்தமிழர் போரில் என்னுடைய அப்பா தீவிரமாக ஈடுபட்டார். அவருடன் இணைந்து வேலைசெய்ததால், பெரியாரிய அமைப்பு கூட்டங்கள், தமிழ் அமைப்பு கூட்டங்கள் என்று இந்த மாதிரி கூட்டங்களுக்கெல்லாம் சென்று சென்று இயல்பாகவே வீடே அந்த அடிப்படையில் இருந்தது. அதன்பிறகு கல்லூரியில் படிக்கும் பொழுது பெரியாரிய சிந்தனையாளர் திராவிட கழகம் மரியாதைக்குரிய ராமகிருஷ்ணனோடு இனைந்து பணியாற்றுவதற்கும், மரியாதைக்குரிய ஐயா பெருஞ்சித்திரனாருடைய மகன் பொழிலனோடு இணைந்து பணியாற்றுவதற்கான வேலைகளை நிறைய செய்ததற்குப்பின், இயல்பாகவே பெரியாரிய, தமிழ்தேசிய, அம்பேத்கரிய பார்வையும் வந்தது.

அதன்பிறகு கல்லூரி படிப்பு MSc-யை லயோலா கல்லூரியில் முடித்ததற்குப் பிறகு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தது மட்டுமல்லாமல், தமிழ்சான்றோர் அமைப்பில் ஒருங்கிணைக்கிற பொறுப்பை ஏற்படுத்திதமிழ்நாடு முழுவதும் 100 தமிழர்கள் சாகும் வரை பட்டினிப் போராட்டம், தமிழ்வழி கல்விக்கான போராட்டத்திற்கான நெறிப்படுத்துகிற வேலைகளையும், தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தில் தமிழிசை நிகழ்ச்சிகளை நெறிப்படுத்துகிற வேலைகளையும், தமிழ்நாட்டில் இருக்கிற தமிழ், தமிழர் அமைப்புகளோடு இணைந்து ஒருங்கிணைக்கிற பணியிலும் இருந்தேன். குறிப்பாக சுப.வீரபாண்டியன், தோழர் தியாகு, மணியரசன், பெரியார்தாசன் இவர்களோடு இயங்குவதற்கான ஒரு பெரிய வாய்ப்பையும், அவர்களோடு நெருங்கிப் பழகி அம்பேத்கார், பெரியாரிய சிந்தனைகளை கிராமப்புற கூட்டங்களில் எற்படுத்துவதற்கும், வீதி நாடகங்கள் போன்ற அமைப்புகள் இயக்கப் பாடல்களோடு பாடுவதற்கான பிரச்சார பயணங்களிலும், தனித்தமிழ் இதழ்கள், பெரியாரிய, மாக்சீய அறிஞர்களின் இதழ்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான பணிகளையும் பல்வேறு கட்டங்களில் வேலைசெய்து வந்தேன்.

devaneyan41999ம் வருடம் முதுகலை மனித உரிமை கல்வியை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பயின்றேன். 2000ம் ஆண்டு பிரான்சிலிருந்து ஒளிபரப்புகிற தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் தொடர்பு அலுவலராக பணி தொடரும் பொழுது, நிறைய ஊடகத்துறை நண்பர்கள் உடன் பயணப்பட்டேன். 2002ம் ஆண்டு தமிழகத்தின் மனித உரிமை அமைப்புகளில் ஒரு பெரிய அமைப்பாகவும், சிறந்த அமைப்பாகவும் செயல்பட்டுக்கொண்டு வருகிற மக்கள் கண்காணிப்பகத்தில், மண்டல ஒருங்கிணைப்பாளராக பணியைத் தொடங்கினேன். மாநில ஒருங்கிணைப்பாளராக மனித உரிமை கல்வி நிறுவனத்தில் மனித உரிமை கல்வியை, குழந்தைகளிடம் குறிப்பாக ஆதிதிராவிட நல பள்ளிகளில் மனித உரிமை பள்ளிக் குழந்தை பாடத்திட்டத்தை, கொண்டு வருதற்கான பணியை செய்து, அங்கிருந்து பாடத்திட்ட உருவாக்கம், பயிற்சி போன்றவற்றை கற்றுக்கொண்டேன். மரியாதைக்குரிய பேராசிரியர் முனைவர் தேவசகாயம்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக மனித உரிமை கல்விக்கென்று பாடநூல்களை உருவாக்கியவர். அவரோடும் இந்தியாவின் தலைசிறந்த மனித உரிமை செயற்பாட்டாளர் திருமிகு சென்றி டிபேன் அவர்களுடனும் பணியாற்றுவதற்கும், பயிற்சி செய்வதற்குமான வாய்ப்பு மக்கள் கண்காணிப்பகத்தின் மூலம் கிடைத்தது. இதன் அடிப்படையில், அங்கிருந்து 2005ம் ஆண்டு பயிற்சியின் போது, நெதர்லாந்து நாட்டில் நான்கு மாதங்கள் வளர்ச்சி மற்றும் மனித உரிமை தொடர்பான பயிற்சி, பயிலரங்கம், பட்டயப்படிப்பிற்கு சென்று வந்ததற்குப் பிறகு, 2006ம் ஆண்டு குழந்தை உரிமை மற்றும் முன்னேற்ற மையம் (CCRD)-ல் ஒரு நெறியாளராக பணியாற்றுகிற வாய்ப்பையும் பெற்றேன்.

2000ம் ஆண்டுக்குப் பின்பு என்னுடைய பணித்தளங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியவர் மரியாதைக்குரிய கருப்பரங்கம் தோழர் சுரேஷ் தர்மா. கருப்பரங்கத்தைப் பற்றி கண்டிப்பாக நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கருப்பரங்கம் என்பது ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்தினருடைய பிரச்சனைகளை மக்கள் மத்தியில் கொண்டு வருவதற்கும், அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும், விளிம்புநிலை சமூக தொழிலாளர் ஆதிவாசி, தலித் இவர்களுடைய விடுதலைக்காகவும் தோழர் சுரேஷ் தர்மா அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். உருவாக்கி தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பேருக்கு வீதி நாடக பயிற்சியைக் கொடுத்தது மட்டுமல்லாமல், ஒரு உரிமை சார்ந்த பார்வை, குழந்தை உரிமைக்கான பார்வைகளை நெறிப்படுத்துகிற நெறியாளராக தமிழ்நாடு முழுவதும் பயணப்பட்டவர். அவரோடு இணைந்து பணியாற்றுகிற பெரும்பாக்கியம் கிடைத்தது.

தோழர் சுரேஷ் அவர்களோடு இணைந்து நிறைய பயிற்சிகளை நெறிப்படுத்துவதற்கும், புத்தகங்கள் எழுதுவதற்கும், சுவரொட்டிகள் எழுதுவதற்கும் கற்றேன். எல்லாவற்றிலும் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் செய்பவர், அற்புதமான மக்கள் சிந்தனையாளர், உண்மையான ஒரு சமூகப் பணியாளருக்கு ஒரு எடுத்துக்காட்டு, ஒரு பொதுவுடைமைவாதி, மாக்சிய அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனையை உள்வாங்கியவர். தான் கருப்பு என்பது வெறுப்பல்ல, கருப்புதான் உண்மையான ஒடுக்கப்பட்டவருடைய அடையாளம், கருப்புதான் விடுதலை அடையாளம் என்பதற்காக பல்வேறு நெறிப்படுத்துவதற்கான விடயங்களை எடுத்துக்கொண்டு செல்கிற பணியில் அவரோடு இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கிற காலகட்டத்தில், இயல்பாக விளையாட்டாக பேசிக்கொண்டிருப்போம், எல்லாரும் பல்வேறு சமூக அமைப்பில் வேலைசெய்கிறோம், அவர்களுக்குள் ஒரு தோழமை சக்தி இல்லாமல் இருக்கிறது, ஏன் நமக்குள் ஒரு தோழமை சக்தியை உருவாக்குகிற மையமாக உருவாக்கினால் என்ன என்று ஒரு தேநீர் குடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் விளையாட்டுத்தனமாக பேசப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட கருத்துருதான், திடீரென்று கால் முளைத்து வளர்ந்து வளர்ச்சி பெற்ற தோழமையாக இன்று நிற்கிறது. தோழர் சுரேஷ் விளையாட்டாக ஆரம்பித்து, அவருடைய தலைமையில் அவரோடு நானும் இணைந்து, அந்த தோழமைக்கான பதிவை முதன்முதலாக 2006ம் ஆண்டு பதிவுசெய்து 2006ம் ஆண்டு முதல் தோழமை என்கிற அமைப்பை நெறிப்படுத்தி வருகிறோம்.

கேள்வி: தோழமையினுடைய பணிகள் என்ன?

devaneyan2

பதில்: மரியாதைக்குரிய தோழர் கருப்பரங்கம் சுரேஷ் தர்மா அவர்களுடன் தமிழகம் முழுவதும் பயணப்படுகிற பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றோம். எல்லோரும் வளர்ச்சி சார்ந்த பார்வையில் இருக்கும் பொழுது, உரிமை சார்ந்த பார்வையை வளர்த்தெடுக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் நாங்கள் பணியாற்றும் பொழுது, உரிமை சார்ந்த விடயங்களை ஒரு தோழமை உணர்வோடு, ஒரு உரிமை சார்ந்த கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கிற தோழமை சக்திகளுக்கு தோழமையாக இருக்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் தோழமை.

குறிப்பாக மனித உரிமை கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதற்கான பணிகளாக குழந்தைகள், பெண்கள், இளைஞர் இவர்களோடு செய்யவேண்டும் என்பதற்காகத்தான், முதன்முதலாக தமிழகத்தில் குழந்தை உரிமைகளை குழந்தைகளிடம் கொண்டு வருவதற்கான, குழந்தை உரிமைக்கான ஒரு பாடநூலை உருவாக்குகிற பணியையும், பல்வேறு பயிற்சியை உருவாக்குகிற பணியையும் துவங்கினோம். பல்வேறு நிறுவனங்களுக்கு தோழமை கொடுக்கிற அமைப்பாகத்தான் தொடங்கினோம். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், பல்வேறு பணிகளை செய்கிறோம். சென்னை போன்ற பெருநகரத்தில் நாங்கள் இருப்பதால், அவர்களுடைய பிரச்சனைகளை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான ஊடகத் தோழமைக்காகவும், அரசோடு இணைந்து வேலைசெய்வதற்கு, அரசுக்கு இதைக் கொண்டு போவதற்கான அரசியல் நெறியாளர்களை, அரசு ஆளுமை உள்ளவர்களை வழக்காடுவதற்கும், அவர்களை தொடர்பு கொள்வதற்கான ஒரு தோழமை சக்திகளாகத்தான் துவங்கினோம்.

அதுமட்டுமல்லாமல் வெறும் கருணை சார்ந்த பார்வையில் இயங்கிக்கொண்டிருக்கிற அமைப்புகளை, ஒரு உரிமை சார்ந்த பார்வையாக மாற்றுகிற பெரிய பணியை செய்துவந்தோம். பெண்களுக்காக வேலை செய்கிற அமைப்பில் பெண் உரிமை பார்வையில் வேலை செய்வதும், குழந்தைகளுக்காக வேலை செய்கிற அமைப்பில் குழந்தை உரிமை பார்வையில் வேலை செய்வதும், விளிம்புநிலை சமூகமான தலித் சமூகத்தில் வேலை செய்கிற அமைப்பில் தலித் உரிமை மனித உரிமை என்ற கோணமும், ஆதிவாசி உரிமை, மனித உரிமை என்ற கோணத்திலும், கடற்கரையோரம் வாழும் மீனவ மக்களின் உரிமையும் மனித உரிமை, அரவாணிகள் உரிமையும் மனித உரிமை, மாற்றத்திறனாளிகள் உரிமையும் மனித உரிமை என்ற பார்வை பணிகளைத்தான் நாங்கள் நிறைய செய்தோம், அதை பல வடிவங்களாக செய்தோம். ஒன்று பயிற்சி கொடுத்தோம், நிறைய சட்டங்கள் தொடர்பான விடயங்களைப் பேசினோம், ஆவணப்படுத்தினோம், ஆய்வுகளை மேற்கொண்டோம், நிறைய பாடநூல்களை வடிவமைத்தோம், இது மாதிரி நிறைய நூற்றுக்கணக்கான மாநில அளவில், மாவட்ட அளவில் ஊடக நேர்காணல்களை ஏற்படுத்தினோம். ஊடகத்தின் வழியாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு செல்வதற்கான முயற்சிகளை பல்வேறு தளங்களில் ஏற்படுத்தினோம். மனித உரிமை பாதிக்கப்படும் இடங்களில், அவர்களுக்காக போராடி பணியாற்றி வருபவர்களை ஊடகத்தில் பேசவைக்கிற வேலைகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறோம்.

devaneyan6

இது ஒரு அறிவுஜீவி மையமாக இருக்கக்கூடாது, அறிவுஜீவி என்றால் வெறும் பயிற்சி கொடுப்பார்கள், பேசுவார்கள், சென்றுவிடுவார்கள் என்பதை உடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மனித உரிமை ஒரு குறுகிய வட்டத்திற்குள் போய்விடக்கூடாது. மனித உரிமை என்பது கலாச்சாரம், பண்பாடு, நாளுக்கு நாள் செயல்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் 2008 காலகட்டத்தில் நிறைய பொது விசாரணைகளையும், நேரடி கள ஆய்வுகளையும், பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்திப்பது போன்றவற்றை மேற்கொண்டோம்.

இதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 2008ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரையிலும் மாநில மகளிர் ஆணையத்தில், தோழமை ஒரு மிகப்பெரிய பணியை நான்கைந்து பொது விசாரணைகளை நெறிப்படுத்தியது. நிறைய கருத்தரங்குகளை, விழிப்புணர்வு கலைநிகழ்வுகளை, தமிழ்நாடு அரசு சார்ந்திருக்கிற அமைப்பையே இயங்கவைக்கிற பணிகளையும், இரண்டாயிரம், மூவாயிரம் மனுக்களுக்கான தீர்வுகளை நிவர்த்தி செய்தோம். அவை 32 மாவட்டங்களிலும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்திற்கான விழிப்புணர்வுகளாக இருக்கலாம், 32 மாவட்டங்களிலும் ஆய்வுகூட்டங்களாக இருக்கலாம், நான்கு மிகப்பெரிய பொது விசாரணை, இந்தியாவிலேயே முதன்முதலாக அரவாணிகளுக்கான பொதுவிசாரணை நெறிப்படுத்தியதாக இருக்கலாம் அல்லது சுமங்கலி திட்டத்தால் பாதிக்கப்பட்ட வளர்நலம் பெண்களுக்கானதாக இருக்கலாம் அல்லது குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பொது விசாரணையாக இருக்கலாம், இவையனைத்தையும் நெறிப்படுத்துகிற பணியை தோழமை நேர்த்தியுடன் நிவர்த்தி செய்தது.

யோசிக்கும்பொழுது வெறுமனே தோழமை ஒரு அறிவுசார் அமைப்பாக மாறிவிடக்கூடாது என்பதற்காக, பல்வேறு கட்டங்களில் கள ஆய்வு செல்லும் பொழுது, ஆழிப்பேரலை சுனாமிக்குப் பின் கட்டாயம் இடமாற்றம் செய்யப்பட்ட பட்டினப்பாக்கம் சீனிவாசபுர மக்கள் குடியமர்த்தப்பட்ட செம்மஞ்சேரி பகுதியைப் பற்றிய ஒரு கள ஆய்வுக்காக, முதன்முதலாக 2008ம் ஆண்டு சூலை, ஆகஸ்ட்டு மாதம் செம்மஞ்சேரி செல்லும்பொழுதுதான், நாம் ஒரு வெறும் அறிவுசார் அமைப்பாக இருக்கக்கூடாது, நேராக களத்தில் வேலைசெய்யவேண்டும் என்கிற ஒரு பொறி ஏற்பட்டு, 2008ம் ஆண்டிலிருந்து செம்மஞ்சேரியில் வேலை செய்கிற பணியை ஆரம்பித்தோம். தோழமை என்பது இரண்டு முகங்களைக் கொண்டது. உரிமை சார்ந்த கலாச்சாரத்திற்கான பல்வேறு வழக்காடுதல், ஆதரித்து வழக்காடுதல், நெறிப்படுத்துதல், பயிற்சிகள் வழங்குதல் ஒருபக்கம், அறிவுத்தளங்களில் மனித உரிமைப் பாதையும், நேரடி கள அனுபவமாக களத்தில் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூக மக்களுடைய உரிமைகளுக்காக, குழந்தைகளுடைய உரிமைக்காக, பெண்களின் உரிமைக்காக செம்மஞ்சேரியில் வேலை செய்து வருகிறோம்.

கேள்வி: இன்றைய குழந்தைகளின் உரிமைகள் பற்றி கூறுங்கள்?

devaneyan7பதில்: குழந்தைகள் உரிமை என்று சொல்லும் பொழுதே முதன்முதலாக குழந்தைகளுக்கெல்லாம் உரிமை இருக்கிறதா என்று கேட்பார்கள். அப்படி கேட்பவர்களுக்கு ஹிட்லர் ஆண்ட ஆட்சியில் இருக்கிறார்களா, அல்லது முசரப் ஆண்ட ஆட்சியில் இருக்கிறார்களா என்று அவர்களிடம் தான் சென்று கேட்க வேண்டும். பொதுவாகவே இந்த தேசத்தில் எல்லோருக்கும் உரிமை இருக்கிறதா என்ற கேள்வியே ஒரு அபத்தமான கேள்விதான். சனநாயக நாட்டில் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பது இயல்பானதுதான். அதில் எல்லோரும் உரிமைகளை அனுபவிக்கிறார்களா? இல்லையா? என்கிற கேள்விதான் சரியான கேள்வி. இவர்களுக்கு உரிமை இருக்கிறது, அவர்களுக்கு உரிமை இல்லை என்பது இல்லை. உரிமை என்பது இயல்பானது, இயற்கையானது. உரிமைகளைப் பற்றிப் பேசும் பொழுது உரிமைகள் என்பது பிறப்பால் வருவது, பிரிக்க முடியாதது. நம் உடல், உறுப்புகள் ஒட்டி உறவாடுவது போல பிரிக்க முடியாதது. உரிமைகள் என்பது அனைவருக்கும் பொதுவானது. இது சாதி, மத, வர்க்க, உடல் ரீதியாக, பிறப்பு ரீதியாக அல்லது நிறம் ரீதியாக எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது.

இந்த தேசத்தில் சுதந்திரம் அடைந்து விடுதலை அடைந்த எல்லா நாடுகளிலும், சனநாயக நாடு சக்தி இருக்கிற எல்லா நாடுகளிலும் எல்லோருக்கும் உரிமை உண்டு. அது குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் உண்டு. குழந்தை உரிமைகளை நாம் பார்ப்பவராக இருக்கவேண்டும். குழந்தை உரிமைகளை யாரும் கொடுக்க முடியாது. இயல்பாக குழந்தை உரிமை கொண்டவர்கள் குழந்தைகள். உரிமை என்பது யாரிடமும் பெற்றுக்கொள்கிற யாசகம் அல்ல. உரிமை இயல்பானது, இயற்கையானது, யாரும் நெறிப்படுத்தி செயல்படுத்துவதற்கான விடயம் அல்ல.

குழந்தை உரிமைகளை அங்கீகரிக்கிற சமூகமாக நாம் இல்லாத காலகட்டத்தில், குழந்தைகளுக்கு உரிமை இருக்கிறது என்பதைப் பற்றி, 1919களிலிருந்தே நிறைய முழக்கங்கள் ஏற்பட்டது. பின் ஐ.நா சபையின் மனித உரிமைக்கான உடன்படிக்கை 1948ல் வந்ததற்குப் பின்பும், பல்வேறு முயற்சிகள் குழந்தை உரிமைகளுக்கென்று தனியான ஒரு பிரகடனத்தை ஐ.நா சபை உருவாக்க வேண்டும் என்று, பல்வேறு முயற்சிகள் உலகளவில் குழந்தை உரிமை செயற்பாட்டாளர் செய்ததாலும், 1989ம் ஆண்டு நவம்பர் 20 குழந்தை உரிமைநாள் உருவாக்கப்பட்டது. குழந்தை உரிமைகளுக்கான உடன்படிக்கை உருவாக்கப்பட்டதற்குப் பின்புதான் குழந்தை உரிமைக்கான விடயங்கள் வந்தது.

devaneyan10பிறப்பால் வருவது என்று வரும்பொழுது குழந்தைகள் பிறக்கவே முடியாது என்ற நிலைமைதான் நம் தேசத்தில் இருக்கிறது. பிறப்பதற்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதுதான் மிக முக்கியமான செய்தியாகப் பார்க்க வேண்டும். மனித உரிமைகள், குழந்தை உரிமைகள் அல்லது எந்த உரிமையானாலும் ஒரு அளவுக்குட்பட்டது. அளவுகள் என்பது எனக்கான உரிமைகள் இருக்கும்பொழுது அடுத்தவரின் உரிமையை மறுக்கவோ, மீறவோ கூடாது என்பதுதான் மிக மிக முக்கியமான விடயம். மனித உரிமை என்பது பாதுகாக்கும் கடமை. அனைவருக்கும் பாதுகாக்கும் கடமை இருக்கிறது. எனக்கு தெரிந்தவர்களுக்குத்தான் மனித உரிமையில் பாதுகாப்பு, மற்றவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்றில்லாமல், அனைவருக்கும் மனித உரிமையில் பாதுகாக்க அனைவருக்கும் பொதுவான கடமை இருக்கிறது என்பதுதான் மிக முக்கியமான செய்தி.

உரிமைகள் என்று வரும்பொழுது அனைவருக்கும் பொதுவானது எனும் பொழுது, குழந்தைகள் என்று யாரும் பிரிக்க முடியாது. இயல்பாகவே குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றி நாம் பேசும்பொழுது, குழந்தைகள் உரிமைகள் இயல்பானது இயற்கையானது என்று வரும்பொழுது எல்லா குழந்தைகளும் அந்த உரிமைகளை அனுபவிக்கிறார்களா?, குழந்தைகள் உரிமைகளை எல்லா குழந்தைகளுக்கும் சமமாக அங்கீகரிக்கிறார்களா?. இந்த தேசத்தில் கருவுற்றதிலிருந்து 18 வயதுவரை குழந்தைகள் என்று சொல்கிறார்கள். பிறப்பதற்கான உரிமைகள் பற்றிப் பேசும்பொழுது, பிறப்பதற்கே முடியாத நிலை இருக்கிறது.

குறிப்பாக ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளின் நிலைமை, இன்று இயல்பாக சிசுக்கொலை, கருக்கொலை என்பது மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறது. கருக்கொலை என்பது, தான் பிறந்து உயிர் வாழ்வதற்கான உரிமையே இல்லாது மறுக்கப்பட்டதாகத்தான் அந்த குழந்தைகள் இருக்கிறது. அடுத்து பிறந்ததற்குப் பிறகு இன்றைக்கும் சிசுக்கொலை என்பது இந்த தேசத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதைப் பார்க்கும்பொழுது ஆண் குழந்தை, பெண் குழந்தைகளுக்கான விகிதாச்சாரம் என்பது இன்றைக்கு மிகவும் மோசமாக இருக்கிறது. ஆயிரம் குழந்தைகளுக்கு 947 பெண்குழந்தைகள் இருக்கிற நிலைமைதான் நம் தேசத்தில் இருக்கிறது.

குறிப்பாக வளர்ந்த மாவட்டம் என்று சொல்லுகிற கடலூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களிலும் 6 வயதுக்குட்ட ஆண்குழந்தை, பெண்குழந்தைகளின் விகிதாச்சரம் என்பது 900க்கு கீழே இருக்கிறது என்பது மிகவும் அபத்தத்திற்குரிய விடயம். இந்த தேசத்தில் குழந்தை உரிமைகளை யாரும் அனுபவிக்கிறதற்கான சூழல் இல்லை, அதற்கான எல்லா நிலைகளும் மறுக்கப்படுகிற நிலைதான் இருக்கிறது என்பது உண்மையாக இருக்கிறது. குழந்தைகளுக்கான மறுப்பு, குழந்தைகளுக்கான பிறப்பு எல்லா விடயத்தையும் பார்க்கும்பொழுது, மறுப்பு என்பது அதிகமாக நடந்திருக்கிற நேரத்தில்தான் நாம் குழந்தைகள் உரிமைகள் பற்றி பேசவேண்டியதிருக்கிறது.

devaneyan16இன்றைக்கு குழந்தைகள் உரிமைகள் என்று பேசும்பொழுது, நம் குழந்தையின் சிறந்த நலனை பேணுபவர்களாக இருக்கிறோமா?, குழந்தைகளுக்கான முன்னுரிமை கொடுக்கிறோமா?, எல்லா இடங்களிலும் குழந்தைகளுக்கு முதலிடம் கொடுக்கிறோமா? என்று பார்த்தால் இல்லை. ‘குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர்’ என்று வள்ளுவர் சொன்னால்கூட இன்றைக்கு குழந்தைகள் இயல்பாக தன்னுடைய குழந்தைப் பருவத்தை அனுபவிக்கிறார்களா?.கடவுளாகப் போற்றப்படுபவர்கள் கடவுளாகப் போற்றப்படுகிறார்களா?. ஏன் குழந்தைகளுக்கான வன்முறை இவ்வளவு நடக்கிறது?, குழந்தைக்கு எதிரான வன்முறையின் வடிவங்கள் எவ்வளவு அதிகரித்துக் கொண்டிருக்கின்றன?, எல்லா விதத்திலும் நாசமாக்கப்படுகிற சூறையாடப்படுகிற பட்டியலில் முதலிடத்தில் இருப்பது குழந்தைகள் என்பது நியாயமான விடயம்தானே.

வீட்டுக்குள்ளே ஒரு பிரச்சனை வந்தாலும் பாதிக்கப்படுவது குழந்தைகள்.வீட்டுக்கு வெளியே பிரச்சனை வந்தாலும் பாதிக்கப்படுவது குழந்தைகள், போர் நடைபெற்றாலும் அதாவது 1945 ஆகஸ்ட்டு 6,9 அமெரிக்கா ஜப்பானில் உள்ள ஹிரோசிமா மீது போடப்பட்ட 2 அணுகுண்டுகளினாலும் இன்று பிறக்கின்ற குழந்தைகளும் மாற்றுத்திறனாளியாகப் பிறந்து கொண்டிருப்பதற்கான காரணம் என்ன?, அந்த குழந்தைதான் காரணமா? சுனாமியில் அதிகமாக இறந்தது குழந்தைகள்தான். 2004 சூலை 16 கும்பகோணம் தீப்படுகொலையில் 94 குழந்தைகள் இறந்தார்கள், ஒரு பெரியவர்கூட இறக்கவில்லை, பெரியவர்கள் இறக்கவேண்டும் என்ற எண்ணம் கிடையாது, அப்படிப் பார்த்தாலும் தீவிபத்து இயற்கை பேரிடர், செயற்கை பேரிடர், வன்முறை, சாதிக்கொடுமை எல்லாவற்றிலும் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். உலகத்தில் எளிதில் நாசமாக்கப்படும், சூறையாக்கப்படும் பட்டியலில் முதலிடத்தில் இருப்போர் குழந்தைகள்தான் என்பது உறுதிசெய்யப்படுகிறது.

நாசமாக்கப்படும், சூறையாடப்படும் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பதற்காக இருக்கிற ஐக்கிய நாடு சபை 1989ல் உருவாக்கப்பட்ட குழந்தை உரிமைக்கான உடன்படிக்கை, 1992ல் இந்தியா கையெழுத்திட்டதற்குப் பின்பு இன்று எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. உயிர் வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, முன்னேற்றத்திற்கான உரிமை, பங்கேற்புக்கான உரிமை என்று நான்கு விதமான உரிமைகளைப் பிரித்து ஐ.நா சபை சொன்னதற்குப் பிறகு, 1992ம் ஆண்டு இந்தியா கையெழுத்திட்டதற்குப் பிறகும்கூட இன்று உரிமைகள் மறுக்கப்பட்ட அமைப்புகளாக இந்த நாட்டில் குழந்தைகள் இருப்பது என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாக இருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுதுதான் குழந்தைகளுக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா என்பதைத் தாண்டி குழந்தை உரிமைகள் பாதுகாப்பாளராக நாம் மாறவேண்டும் என்பது அவசியமாக இருக்கிறது.

கேள்வி: உரிமை சார்ந்து தமிழகத்தில் குழந்தைகளின் நிலைமை என்ன?, இதற்கு களப்பணி செய்யவேண்டியுள்ளதா?, அரசு இதில் போதிய கவனம் செலுத்துகிறதா?

பதில்: உலகத்தில் முதலில் எளிதில் நாசமாக்கப்படும், சூறையாடப்படும் பட்டியலில் முதலிடத்தில் இருப்போர் குழந்தைகள் என நான் முதலிலேயே சொன்னேன். கண்டிப்பாக அவர்களுக்கு உரிமை சார்ந்த, அவர்களுக்காக உரிமை சார்ந்த களப்பணி ஆற்றுவது என்பது அனைவரின் கடமையாகும். இதில் பல்வேறு கடமையாளர்கள் இருக்கிறார்கள். குழந்தை உரிமைகளை பாதுகாப்பதில் முதல் கடமையாளர் யார் என்றால் அரசுதான். இரண்டாவது கடமையாளர் சமூகம், மூன்றாவது கடமையாளர் குடும்பம் என்று போய்க்கொண்டிருக்கும். முதல் கடமையாளராக இருக்கிற அரசு தன்னுடைய கடமைகளை முழுமையாக செய்கிறார்களா? என்று கேள்வி கேட்டால், மிகப்பெரிய அபத்தமான செய்திதான் இன்றைக்கு. எல்லா இடங்களிலும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிற குழந்தை மீதான வன்முறை, குழந்தை மீதான உரிமை மீறல்கள் இரண்டையும் நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. குழந்தை உரிமைகளைப் பற்றி பேசும்பொழுது, இரண்டு செய்தியை நாம் முக்கியமாகப் பார்க்கவேண்டும். ஒன்று வன்முறை அதாவது அந்த குழந்தை மீது நடத்தப்படுகிற வன்முறைகள், மற்றொன்று குழந்தை மீதான மறுப்புகள். நாம் வன்முறைகளைப் பற்றி நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்.

devaneyan19இயல்பாகவே குழந்தைகளை வன்முறையாளராக நம் சமூகம் கொண்டிருக்கிறது. என்னை என்னுடைய அப்பா அடித்தார், அப்பா அடித்தார் என்று. இங்கு அடித்தல் என்பது நியாயமாக்கப்பட்டிருக்கிறது. அடியாத மாடு படியாது?, அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான், முருங்கையை ஒடிச்சு வளர்க்க வேண்டும், குழந்தையை அடிச்சு வளர்க்க வேண்டும் என்கிற பழமொழிகள்கூட வெளிப்படுத்துவது என்னவென்றால், இயல்பாக நாம் குழந்தைகளை நசுக்கலாம், சூறையாடலாம் என்பதுதான். இயல்பாக அடிப்பதற்கும் படிப்பதற்கும் சம்பந்தம் உண்டா?. அடிப்பதற்கும் படிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது?, அது தவறான கற்பிதம்.

அடிமைகளாக இருக்கும்பொழுது அடித்தார்கள், சுதந்திரம் பெற்ற தேசத்தில் நாம் எப்படி அடிப்பது என்பது அனைவருக்கும் தடை செய்யப்பட்டிருக்கும் பொழுது, குழந்தைகளுக்கு தடை செய்யப்படவேண்டும் என்ற சூழல் இருந்தாலும்கூட, இன்றைக்கு எல்லா நிலைகளிலும் நம் தமிழ்நாட்டில் அதிகபட்சமான குழந்தை உழைப்பாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள், குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள், சாதி ரீதியான வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள், புறக்கணிக்கப்படுகிற குழந்தைகள் இருக்கிறார்கள், கடத்தப்படுகிற குழந்தைகள் இருக்கின்றார்கள், இப்படி பல்வேறு வடிவங்களால் குழந்தைகளுக்கான உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

SAM_2957; Gujarat, Rajasthan, India; 05/22/2008, INDIA-11398இன்றைக்கு எல்லா இடங்களிலும் குழந்தை உழைப்பாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதைத் தடுப்பதற்கான முதல் கடமையாளரான அரசு இதை செய்கிறதா என்று பார்த்தால், குழந்தைகளுக்கான அரசு அமைப்புகள், இதற்காக இருக்கிற பாதுகாப்பு அமைப்புகள் அத்தனையும் முழுமையாக இயங்கியிருந்தால், எந்த இடத்திலும் குழந்தை உழைப்பாளர்கள் இல்லாமல் இருக்க முடியும். இன்றைக்கு கட்டாயக்கல்வி உரிமை சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்றால், அமல்படுத்தப்பட்டு இருந்தால் எந்த குழந்தையும் சாலையோரத்திலோ அல்லது நிறுவனங்களிலோ அல்லது சிறு, குறு நிறுவனங்களிலோ வேலை செய்ய முடியாது. ஆனால் இன்றைக்கு எல்லா இடத்திலும் வேலை செய்கிறார்கள் என்றால் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று அர்த்தம். குழந்தை உழைப்பாளர் தடுப்புச் சட்டம் ஒழுங்காக வேலை செய்திருந்தால், எங்கேயும் குழந்தை உழைப்பாளர்கள் இருக்க மாட்டார்கள். கடத்தப்படுகிற குழந்தைகளுக்கான சட்டம் (ITPA Act) ஒழுங்காக வேலை செய்திருந்தால், இன்று எங்கேயும் கடத்தப்பட்டிருக்க மாட்டார்கள். பாலியலுக்கான பிரச்சனைகள் பார்த்தீர்கள் என்றால், இன்றைக்கு பாலியல் சுரண்டல் என்பது மிகவும் மோசமாக நடந்துகொண்டிருக்கிறது.

devaneyan22சமீபத்தில்கூட பார்த்திருப்பீர்கள், மதுரை அருகில் காவல்துறையைச் சார்ந்த 12பேர் சேர்ந்து, 13 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது. பாதுகாக்க வேண்டிய காவல்துறை அலுவலர்களே, இன்றைக்கு குழந்தையை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திருக்கிறார்கள். இதே மாதிரி புதுச்சேரியில் நடந்த வன்முறையாக இருக்கலாம், அல்லது சிவகங்கையில் நடந்த பாலியல் வன்முறையாக இருக்கலாம், அல்லது தூத்துக்குடியில் புனிதா சகோதரி 12 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக இருக்கலாம், அல்லது சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 9வயது சிறுமி பூங்கொடி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக இருக்கலாம், இது அத்தனைக்கும் பின்னால் இருக்கிற விடயம் குழந்தைக்கு எதிராக இருக்கிற வன்முறையைத் தடுப்பதற்கான சட்டங்கள் இயங்கவில்லை என்பதுதான் மிக மிக வேதனையாக இருக்கிறது.

கேள்வி: குழந்தைகள் உரிமைகள் பற்றி உங்கள் செயல்பாடு என்ன?

பதில்: இரண்டு தளங்களில் நாங்கள் குழந்தைகளுக்காக செயல்பட்டு வருகிறோம். ஒன்று தோழமை மாநில அளவில் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பயிற்சிகள் நடத்துதல், ஆவணப்படுத்துதல், ஆய்வுசெய்தல், நேரடியாக களத் தலையீடு, ஊடகம் வழியாக பயிற்சி, குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நீதித்துறை சார்ந்த பயிற்சி, ஆசிரியர்களுக்கு பயிற்சி, காவல் துறை அலுவலர்களுக்கு பயிற்சி, சமூகப் பணியாளர்களுக்கு பயிற்சி என்று நடத்தி வருகிறோம். பல்வேறு நிலைகளில் சாதாரணமாக இயல்பாக வேலை செய்து கொண்டு இருப்பவர்களிடம் குழந்தை உரிமை பார்வையைக் கொண்டுவருதவற்கான பணியை மாநில அளவில் நிறைய செய்துகொண்டிருக்கிறோம்.

குழந்தை மீது நடக்கிற வன்முறையை எடுத்து நேரடியாக கள ஆய்வு செய்து வழக்குகளை மீட்டுக் கொடுத்திருக்கிறோம். கடத்தப்படுகிற குந்தைகளை மீட்பதற்கான பணிகளை நிறைய செய்துகொண்டிருக்கிறோம். இம்மாதிரி மாநில அளவில் நிறைய வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம்.

இது வெறும் அறிவு சார்ந்த பணியாக இல்லாமல், நேரடியாக கள அனுபவம் தினமும் பெறவேண்டும் என்பதற்காக, சென்னைக்குள் குடிசைகள் இருக்கக்கூடாது, குடிசைகள் அசிங்கம் என்கிற தவறான திட்டத்தின் அடிப்படையில் சென்னையிலிருந்து கட்டாயம் இடமாற்றம் செய்யப்பட்ட 23 குடிசைப் பகுதிகளை, ஒரு இடத்திலிருந்து கட்டாயமாக மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டிருக்கிற செம்மஞ்சேரி பகுதியில் இருக்கிற குழந்தைகளுடைய உரிமைகளுக்காக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

devaneyan15இதில் குறிப்பாக கட்டாயம் இடமாற்றம் செய்யப்பட்ட பகுதியில் உள்ள குழந்தைகள் திருமண தடுப்பு, குழந்தைகள் பாலியல் வன்முறை தடுப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் குழந்தைகளிடம் நடக்கிற இயல்பான உலகத்தை உருவாக்குகிற விடயங்களில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

தோழமை என்பது மிகச் சிறிய அமைப்பு. சிறிய சிறிய வேலைகள்தான் செய்கிறோம், பெரியதாக எந்த விடயங்களும் செய்யமுடியாது. ஆனாலும் குழந்தை உரிமைகளை பாதுகாக்கிற பணி என்பது கடல் போன்ற பணி, நிறைய வேலைகளை செய்யவேண்டியதிருக்கிறது. ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களைத் திறந்தால் குறைந்தபட்சம் மூன்றிலிருந்து ஐந்து, ஏழு குழந்தை உரிமை மீறல்கள் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் பொழுது குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கென்று பல்வேறு தளங்களில், பல்வேறு நிலைகளில், பல்வேறு விதமான, பல்வேறு அணுகுமுறைகளில் நாம் வேலை செய்யவேண்டிய அவசியம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக நகர்புறங்களில் குழந்தைகளின் நிலைமை, வறுமை என்பது மிகவும் மோசமாக இருக்கிறது. இன்றைக்கு இடமாற்றம் நடந்து கொண்டிருக்கிற, எல்லா இடங்களிலும் விவசாயம் அழிந்து கூலித்தொழிலாளர்கள் நகரத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடும்பமாக சென்னையை நோக்கி பயணப்படும்பொழுது அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளும் வருவது என்பது மிகவும் ஆச்சரியமான நிலையிலே உண்மைதான். அப்படிப் பார்க்கும் பொழுது எல்லாத் தளங்களிலும் வேலை செய்கிற பொறுப்பு அனைத்து சமூக அமைப்பிற்கும் உண்டு. அதில் ஒரு சிறு சிறு விடயங்களாக பல்வேறு அமைப்பினரை இணைத்து பணியாற்றுகிற பணியும் நம் தோழமை செய்துகொண்டு வருகிறது.

கேள்வி: குழந்தைகள் உரிமைகள் சார்ந்து உலக நாடுகளுக்கு இணையாக தமிழகமும் மேம்படுவதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் சமூகத்தில் மேற்கொள்ள வேண்டும்?

பதில்: நாம் குழந்தையின் சிறந்த நலனைப் பேணுபவர்களா?. குழந்தையின் சிறந்த நலன் என்பது குழந்தைகள் விரும்புவதல்ல, குழந்தை விரும்புவது என்பது, அது இருபத்து நான்கு மணிநேரமும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கும், இருபத்து நான்கு மணிநேரமும் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கும், பள்ளிக்கூடமே போகக்கூடாது என்று நினைக்கும், அது அல்ல. குழந்தைகளுக்குத் தேவையானதா?, தேவை என்பது உணவு மட்டும்தான், சத்தான சரிவிகித உணவுதான் குழந்தைக்கு உகந்தது. எனவே நாம் மிக முக்கியமாகப் பார்க்கும் பொழுது அடிப்படையாக, மிக முக்கியமாக முதல் செய்தியாக பார்ப்பது என்னவென்றால் குழந்தையின் சிறந்த நலன் என்பது குழந்தைகள் விரும்புவது மட்டும் அல்ல, குழந்தைகளுக்குத் தேவையானது மட்டுமல்ல, குழந்தைகளின் நேய அணுகுமுறை, குழந்தை பாதுகாப்பு அணுகுமுறையில் உருவாக்குவதற்கான விடயங்களை நாம் கட்டாயப்படுத்த வேண்டும். குடும்ப ரீதியாக குழந்தை நேய அணுகுமுறை இருக்கிறதா?, நமது குடும்பங்களில் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறதா?, குழந்தைகளுடைய கருத்துக்கள் மதிக்கப்படுகிறதா?, குழந்தைகள் தங்களுடைய கருத்துக்களை சொல்வதற்கு இடம் இருக்கின்றதா?, குழந்தைகள் இயல்பாக மகிழ்வாக இருக்கிறார்களா?, குழந்தைகள் தங்களுடைய பருவத்தை அனுபவிக்கிறார்களா? என்பதை குடும்ப ரீதியாகப் பார்க்க வேண்டும்.

Girlsஅடுத்து நம் அலுவலக ரீதியாகப் பார்க்கும் பொழுது, நாம் சார்ந்திருக்கும் அலுவலகங்களில் குழந்தை உழைப்பாளர்கள் இல்லாத, குழந்தை சுரண்டல் இல்லாத, குழந்தை வன்முறை இல்லாத சமூகமாக நம்முடைய அலுவலகமோ, சமூகமோ இருப்பதற்கான சூழல் இருக்கிறதா?, என்னுடைய கிராமமோ என்னுடைய இருப்பிடமோ குழந்தை உழைப்பாளர் இல்லாத இடம், குழந்தை பாலியல் தொல்லை நடக்காத இடம், குழந்தை பாலியல் வன்முறை இல்லாத இடம், குழந்தைகள் மீது வன்முறை இல்லாத பள்ளிக்கூடம் இருக்கிறதா?, கிராமங்கள் இருக்கிறதா?, சமூகங்கள் இருக்கிறதா?, அரசு திட்டங்கள் இருக்கிறதா?, இன்றைக்கு அரசு திட்டத்தினால் குழந்தை உழைப்பாளர் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் இதெல்லாம் ஒன்றுக்குள் ஒன்று இணைந்து ஒரு குழந்தை நேய அணுகுமுறையை உருவாக்குவது முதல் வேலை.

இரண்டாவது குழந்தை உரிமைக்கான கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும், இது பண்பாடாக மாற வேண்டும். அடித்தால் படிக்கமாட்டார்கள், அடிக்காமல் அன்பும் அரவணைப்பும்தான் குழந்தைகளுக்குத் தேவைப்படுகிறது, அதைக் கொண்டு வருவதற்கான வசதிகள் என்ன? இதை உருவாக்குவதற்கு பல்வேறு தளங்கள் இருக்கின்றன. இன்றைக்கு ஊடகங்கள் மிகத் தவறான கருத்துக்களை குழந்தைகள் மீது திணித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இன்றைக்கு கைக்குள் மிகப்பெரிய கொடூர வன்முறையாக அலைபேசி இருக்கிறது, தொலைகாட்சி, இணையம் போன்றவை இருக்கின்றன. இயல்பாக இருக்கிற நண்பர்கள் வட்டத்தில் குழந்தைகள் வன்முறையாளர்கள் ஆக்கப்படுகிற சூழல் நடந்துகொண்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிருக்கிறது. இன்றைக்குக் கொடுக்கப்படுகிற ஊடகத்தினுடைய அனைத்து நிலைகளிலும் வன்முறையாளர்களாக உருவாக்குகிற நிலைமைதான் உருவாகிக் கொண்டிருக்கிறது.

devaneyan25ஆகவே நாம் அனைவரும் இணைந்து ஒரு குழந்தை நேய அணுகுமுறையுடன் கூடிய குழந்தைப் பாதுகாப்புக்கான அரசு, குழந்தைப் பாதுகாப்புக்கான தமிழ்நாடு, குழந்தைப் பாதுகாப்புள்ள சமூகம், குழந்தைப் பாதுகாப்புள்ள நாடாக உருவாக்குவது மிக மிக முக்கியம். அதற்கு பல்வேறு நாடுகள் நமக்கு எடுத்துக் காட்டுகளாக இருக்கிறது. அதைப் போன்ற நாடுகளோடு நாம் கருத்துக்களை எடுத்து நமது பண்பாட்டு ரீதியாக அதை மாற்றவேண்டும். உடனே மேலை நாட்டு கலாச்சாரத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது கண்டிப்பாக இல்லை, மேலை நாடுகளில் இருக்கிற குழந்தை நேய அணுகுமுறை, குழந்தைப் பாதுகாப்பு அணுகுமுறை, குழந்தைகளுக்காக நடத்தப்படுகிற திட்டங்கள், செயல்திட்டங்கள், குழந்தைகளுக்காக எவ்வளவு நிதி ஒதுக்குகிறார்கள் இவையனைத்தையும் கருத்திற் கொண்டுதான் ஒருமித்து அனைவரும் இணைந்து கூடி நாமும் செயல்படுவோம், குழந்தை உரிமைகளைக் காத்திடுவோம் என்கிற முழக்கத்தை முதலில் எடுத்து குழந்தைகளுக்கு உரியதை, உகந்ததை, உதவக்கூடியதை, உருவாக்குகிற அரசாக நாம் மாற்றுவதற்கான முன்முயற்சிகளை சமூக ஆர்வலர்களும், அனைவரும் எடுக்கும் பொழுதுதான் நம் சமூகம் ஒரு நல்ல குழந்தை நேய அணுகுமுறையுள்ள சமூகமாக மாறும்.

கேள்வி: இன்றைக்கு குழந்தைகளுக்கு பள்ளிகளில் தரமான கல்வி, சத்தான உணவு, விளையாட போதிய அனுமதியும் உண்டா? இதை உங்கள் பார்வையில் எப்படி பார்க்கிறீர்கள்?

devaneyan1பதில்: இன்றைய சூழலில் முதலில் ஆரம்பப்(Nursery) பள்ளிக்கூடமே, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்று நினைக்கிறேன். இன்றைக்கு Nurse கையிலிருந்து குழந்தையை வாங்கியதும், ஆரம்பப்(Nursery) பள்ளிகளில் சேர்த்துவிடவேண்டும் என்கிற தவறான மனப்பாங்கு எல்லா இடத்திலும் இருக்கிறது. இது அயோக்கியத்தனமான செய்தி என்று நான் சொல்கிறேன், இதுமிகவும் கோபத்தில் சொல்கிற விடயம். அப்படிப் பார்க்கும்பொழுது, மிகவும் அடிப்படையான ஒன்றாக நான் எண்ணுவது என்பது, ஒரு ஆரம்பப்(Nursery) பள்ளிக்குச் செல்கிற குழந்தைக்கும், குழந்தை பராமரிப்பு மையம் என்று சொல்லப்படுகிற குழந்தை மையங்கள், குழந்தை பாதுகாப்பு மையம், குழந்தை நல மையம் என்று சொல்லப்படுகிற அங்கன்வாடிக்கு செல்கிற குழந்தைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தாலே, எந்த அளவிற்கு நாம் குழந்தை உரிமைகளை மீறுகிறோம் என்பது புரியும்.

devaneyan3வீட்டிலிருக்கிற குண்டா, அண்டா எல்லாவற்றையும் அடமானம் வைத்து குழந்தையை தனியார் பள்ளிகளில், பதிவு செய்யப்படாத பள்ளிகளில் சேர்க்கிறோம். எதற்காக, இது ஆங்கில மோகமாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன் அல்லது நாம்தான் படிக்கவில்லை என்ற பெற்றோர்களின் உயர்ந்த எண்ணமாகக்கூட கருதலாம். ஆனால் அங்கு நடக்கிற வன்முறை என்னவென்றால், இன்றைக்கு பள்ளிக்கூடத்திற்குச் செல்லுகிற குழந்தைக்கும், அங்கன்வாடிக்குச் செல்லுகிற குழந்தைக்குமான வித்தியாசம் என்னவென்றால், இன்று அங்கன்வாடி தரமாக இருக்கிறதா, என்பது தனி கதை, நாம் அதை தனியாகப் பார்க்க வேண்டும். அங்கன்வாடிக்குச் சென்றால் குழந்தைகளின் உடல் எடை எடுக்கப்படுகிறது, தடுப்பூசிகள் உறுதி செய்யப்படுகின்றன, சிறிய வயதிலே அந்த ஆரம்ப காலத்திலே குழந்தையினுடைய செவித்திறன், கண் பார்வை குறைவு போன்ற உடல் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த மூன்றுமே நர்சரி பள்ளிக்குச் சென்றால் நடக்காது.

இன்றைக்கு குழந்தைகளை கருவுற்ற நாளிலிருந்து கவனிக்க வேண்டியதிருக்கிறது. கருவுற்ற தாய்மார்களுக்கென்று சத்தான சரிவிகித உணவு, கீரை போன்ற உணவுகள் கொடுக்கப்படுகிறது. ஏன் அது ஒழுங்காகப் போய்ச்சேருகிறதா. வயிற்றில் வளருகிற குழந்தையின் அடிப்படை உரிமைகள் என்பதை யாராவது பார்க்கிறார்களா? இல்லையே. கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சரிவிகித உணவு மிகவும் அவசியமாக இருக்கிறது. ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுது படிக்கவில்லை என்று திட்டுகிறோமே, திட்டுவதற்கானக் காரணம் குழந்தைகள் அல்ல.

கருவுற்ற காலத்திலிருந்து இரண்டு வயதுவரை சத்தான சரிவிகித உணவை அந்தக் குழந்தை உண்ணுவதற்கான சூழல் இருக்கிறதா?, இல்லையே. கர்ப்பகால பராமரிப்பை சரியாக செய்யாத சமூகத்தையும் அரசையும் திட்டாத நாம், நம் குழந்தைகளை திட்டிக்கொண்டிருக்கிறோம். எனவே கர்ப்பகால பராமரிப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. இன்றைக்கு மருத்துவமனைகளில் குழந்தைகள் இறந்து பிறப்பதற்குக் காரணம், அதற்கானத் திட்டம் சரியாக வேலை செய்யவில்லை என்பதுதான்.

devaneyan7அதற்கடுத்து குழந்தை வெளியில் வந்ததற்குப் பிறகு, அங்கன்வாடியின் நிலைமை என்ன?. அங்கன்வாடிக்குச் செல்லும் ஒரு குழந்தைக்கு ஐம்பத்து ஏழு பைசா ஒரு நாளைக்கு ஊட்டச்சத்துக்கென்று கொடுக்கிறார்கள். ஊட்டச்சத்து என்றால் காய்கறி வாங்குவதற்குக் கொடுக்கிறார்கள். ஐம்பத்து ஏழு பைசாவில் இரண்டு வெங்காயம் வாங்க முடியுமா? இன்றைய விலைவாசியில். ஏன் குழந்தைகளை அப்படிப் பார்க்கிறார்கள்.

அங்கன்வாடிக்கு வருகிற குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் என்பதனால்தான் இப்படி வைக்கிறார்களா?, அவ்வளவு குறைவாகக் கொடுக்கிறார்களா?. அப்படியென்றால் பணக்கார வீட்டுக் குழந்தைகள் வராததுதான் காரணமா?. இந்த தேசத்தில் அறுபத்து நான்கு சதவிகிதம் இரத்தச்சோகையுடன் இருக்கிற தாய்மார்கள் பெற்றெடுக்கிற குழந்தைகள் எந்த அளவிற்கு பிறக்கும். ஊட்டச்சத்து அற்ற குழந்தைகளை உருவாக்குவது, ஊட்டச்சத்து அற்ற தேசத்தை உருவாக்குவதற்குச் சமம்.

devaneyan15இன்றைக்கு பள்ளிக்கூடங்கள் குழந்தைகளுக்கு உகந்ததை, உரியதை, உதவக்கூடியதைக் கொடுக்கிறதா?. இன்றைக்கு பள்ளிக்கூடங்கள் இயல்பாகவே ஒரு சிறைக்கூடங்களாக இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் பாலியல் வன்முறை, அடித்தல், உதைத்தல் போன்ற வன்முறைகள் நடந்து கொண்டிருக்கிறது. நாமக்கல் போன்ற இடங்களில் இருக்கிற கோழிப்பண்ணை பள்ளிகளின் நிலைமை என்ன இன்றைக்கு?, கொத்தடிமைக் குழந்தைகளாக இருக்கிறார்களே. குழந்தைகள் படித்து வெளியில் வரும்பொழுது என்னவாக மாறுகிறார்கள். நுகர்வோர்களாக குழந்தைகளை உருவாக்குவதுதான் உங்களுடைய எண்ணமா. திணிப்பு என்ற பெயரில் குழந்தைகளை எவ்வளவு மோசமாக மாற்றுகிறது. எத்தனைக் குழந்தைகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை ஒவ்வொரு ஆண்டும் பார்க்கிறோம்.நாமக்கல் பள்ளியில் நடக்கிற தற்கொலையைப் பார்க்கும்பொழுது மிகவும் மோசமாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு இயல்பாகவே கல்வியைப் படிக்கிற ஆர்வத்தைத் தூண்டாமல், திணிப்பது என்பது இன்றைக்கு மோசமாக இருக்கிறது. பதினொன்றாம் வகுப்பு எடுக்காமல் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிற சூழல், இரண்டாண்டு படித்து எழுதுவது. ஒன்பதாம் வகுப்பு படிக்காமல் பத்தாம் வகுப்பு படிக்கவைப்பது போன்ற அநீதிகள் நடக்கும்பொழுது, யார் குற்றவாளி என்று பார்க்கும்பொழுது குழந்தைகள் குற்றவாளி அல்ல, இந்த சமூகம்தான் குற்றவாளி, இந்த அரசுதான் குற்றவாளி என்பதை ஏன் பார்க்காமல் இருக்கிறார்கள்.

devaneyan17இன்றைக்கு பள்ளிக்கூடங்களில் ஓய்வு நேரங்கள் இருக்கிறதா?, நீதிபோதனை வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றதா?, இவற்றையெல்லாம் காலிசெய்து பாடம், பாடம், பாடம் என்று கொலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “காலையில் மலராய் வகுப்புக்குள் செல்வோர், மாலையில் சறுகாய் வெளியில் வருகிறார்கள்” என்று சொல்வது உண்மைதானே இன்றைக்கு. பள்ளிக்கூடங்களில் குழந்தை நேய அணுகுமுறை இருக்கிறதா?, விளையாட்டு இடங்கள் இருக்கிறதா?. இன்று ஓடி, ஆடி, கூடி விளையாடுகிற குழந்தைகள் எங்கிருக்கிறது.

இன்று குழந்தைகள் எல்லோரும் கூடி சாதி, மத, வர்க்கம் எல்லாவற்றையும் ஒழிக்கும் ஒரே இடம் விளையாட்டிடம். இன்றைக்கு விளையாட்டிடம் எங்கிருக்கிறது. பொதுத் தளங்களில் உள்ள விளையாட்டிடங்களில் குழந்தைகள் விளையாடுகிறார்களா?. இதையெல்லாம் இழந்ததற்குப் பிறகு எப்படி குழந்தை நேய அணுகுமுறை வரும், குழந்தைக்கு பாதுகாப்பான அணுகுமுறை எப்படி வரும், ஒரு மதச்சார்பற்ற நாடு எப்படி வரும், ஒரு சாதியற்ற நாடு எப்படி வரும். அனைத்து சமூகமும் இணைந்து வாழுகிற சமூகமாக இருப்பதற்கான விளையாட்டிடங்களையெல்லாம் தொலைத்தற்குப்பிறகு, எப்படி ஒரு கூட்டுக் கலாச்சாரம் வரும். இதெல்லாம் உருவாக்குகிற கேள்வியாகத்தான் இன்றைக்கு இருக்கிறது. இது அத்தனையும் உறுதி செய்யப்படுகிற இடமாக இப்பொழுது இருப்பது என்பது, என்னைப் பொறுத்தவரையிலும் கொஞ்சம் கொஞ்சம் கனிந்திருப்பது அரசு பள்ளிகளில்தான். நாம் அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது என்பது மிக மிக அவசியம். அரசுப் பள்ளிகளில் இந்த தேசத்தின் இறையாண்மை இருக்கிறது. அரசுப் பள்ளிகளில்தான் உண்மையான நேயம் இருக்கிறது, அரசுப் பள்ளிகளில்தான் இந்த தேசத்திற்கான எல்லாமே இருக்கிறது, அரசுப் பள்ளிகளை விடுத்து வெளியே செல்வது என்பது குழந்தை உரிமைகளுக்கு எதிரானதாகத்தான் நான் பார்க்கிறேன்.

கேள்வி: இன்றைய குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் சூழலிலிருந்து மீட்க என்ன வழி?

devaneyan11பதில்: இன்றைக்கு போதை பழக்கத்திற்கான காரணம் யார்?. குழந்தைகள் குற்றவாளிகள் அல்ல, இன்றைக்கு குழந்தைகள் கெட்டவார்த்தைகள் சொல்கிறார்கள் என்று சொல்கிறோம், அந்தக் குழந்தைகள் கெட்டவார்த்தையை ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொள்கிறார்களா? இல்லை. குழந்தைகளுக்கு சமூகம்தான் கற்றுக்கொடுக்கிறது. குழந்தை பொய் சொல்கிறது என்று சொல்கிறார்களே, அதை யார் கற்றுக்கொடுக்கிறார்கள், குழந்தைகளா பொய் சொல்கிறார்கள். வீட்டுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு வெளியில் இருக்கிறேன் என்று சொல்கிற தகப்பனாருக்கு முன்னால் குழந்தை எப்படி பொய் சொல்லாமல் இருக்கும். குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்று தெரியாது. அவர்களுக்கான மூளை எளிதில் முடிவெடுக்கிற அதிகாரத்தைப் பெறாது. வாங்கி வரச் சொல்கிறார்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த மாதிரி பயன்படுத்துகிறார்கள் என்று தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள், ஒரு திரைப்படத்தில் காட்டுகிறார்கள் என்று இவையனைத்தையும் பார்க்கும்பொழுது, என்ன நடக்கும்?, இதை அந்தக் குழந்தை செய்து பார்க்கும். அவ்வாறு செய்து பார்க்கும் குழந்தை மாட்டிக்கொள்ளும்.

அசிங்கமான பாட்டு பாடுகிறது என்று குழந்தையைத் திட்டுகிறோம். அந்த அசிங்கமான பாட்டு எழுதியவர், அந்த ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் விருது வாங்கியிருப்பார். அந்தப் பாடலைப் பாடியதற்காக அந்தக் குழந்தையைக் குற்றவாளி ஆக்கியிருப்பார்கள். இதேமாதிரிதான் போதைப்பொருள் பயன்படுத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாம் அதையும் கவனத்தில் கொள்ளவேண்டியதிருக்கிறது.

கேள்வி: பாலியல் ரீதியாக குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு என்ன வழி?

devaneyan12பதில்: பாலியல் ரீதியாக நடப்பதைத் தடுப்பதற்கு பல்வேறு முன்முயற்சிகளை கடுமையாக எடுக்க வேண்டியதிருக்கிறது இன்றைக்கு. அடிப்படையில் மிக முக்கியமான செய்தியாக நான் பார்ப்பது இன்றைக்கு பாலியல் கல்வியை விட, பாலின கல்வி(Gender Education) மிக முக்கியமானது. இன்றைக்கு பாலியல் பிரச்சனை வரும்பொழுது பெண் குழந்தைகளுக்கு எது நல்ல தொடுகை, கெட்ட தொடுகை என்று சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சொல்கிறேன், மூன்று வயது குழந்தையை பாலியல் வன்முறை பண்ணும்பொழுது, அந்த மூன்று வயது குழந்தைக்கு நல்ல தொடுகை, கெட்ட தொடுகை பற்றி தெரியுமா? தெரியாது. எனவே ஆண் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டியதிருக்கிறது.

ஆண் குழந்தைகளுக்கு, சக மாதரை பார்க்கும் பார்வை, அந்தப் பார்வையில் இருக்கிற பிரச்சனை, பாலியல் தொடர்பாக இருக்கிற சிக்கல்கள், வளர்நலம் பருவத்தில் இருக்கிற பருவ மாற்றங்கள், உடல் ரீதியான மாற்றங்கள், மனரீதியான மாற்றங்கள், காம இச்சைப் பிரச்சனைகளைத் தீர்ப்பது, பாலியலைப் புரிந்து கொள்ளுதல் போன்றவற்றை சொல்லிக்கொடுக்க வேண்டும். பாலினத்தை புதிரா புனிதமா என்று விவாதிப்பார்கள். அது புதிரும் அல்ல, புனிதமும் அல்ல இயற்கையானது, இயல்பானது. அதை நெறிப்படுத்துவதாக நாம் இருக்கிறோமா அல்லது கட்டமைக்கிறோமா என்ற விடயத்தையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. அந்தப் புரிதல்களை ஆண் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும், பெண் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும்.

devaneyan13இன்றைக்கு ஆண் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்ற வன்முறையான நிகழ்வு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பொதுவாக பாலியல் பிரச்சனை என்று வரும்பொழுது யார் உன்னைத் தொடலாம், யார் உன்னைத் தொடக்கூடாது போன்ற விடயங்களையும், யார் அணுகலாம், என்ன அணுகலாம், என்ன அணுகக்கூடாது என்பது பற்றியும் குடும்ப ரீதியாக சமூக ரீதியாக கற்றுக்கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளை பாதுகாப்பதற்கென்று கொள்கைகளை நெறிமுறைகளை நாம் வகுக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு மாதா, குரு, தெய்வம் என்கிற நிலையில் குருவாக இருக்கிற ஆசிரியர்களே குழந்தைகளை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். காவல் துறையினர் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு கொடுமைப்படுத்துகிறார்கள். எல்லா இடங்களிலும் குழந்தை பாதுகாப்புக் கொள்கைகளை நெறிப்படுத்த வேண்டியுள்ளது.

கேள்வி: ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி வளர்க்கக்கூடாது என்று ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தாங்கள் கூற விரும்புவது?

devaneyan20பதில்: எப்படி வளர்க்கலாம், எப்படி வளர்க்கக்கூடாது என்பது அந்தந்த சூழலைப் பொறுத்து. எல்லா குழந்தைகளையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. ஐந்து விரல்களும் ஒன்றாக இருக்காது. முதலில் ஒரு குழந்தையோடு இன்னொரு குழந்தையை ஒப்பீடு செய்யக்கூடாது. இந்த தேசத்தில் இருக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தன்மைகள் இருக்கத்தான் செய்கிறது. அந்தத் தனித்தன்மையை அடையாளம் காட்டும். குழந்தைகளை குற்றவாளியாக்கக்கூடாது. குழந்தைகளை அடிப்பதோ, திட்டுவதோ கூடாது. குழந்தையை வளர்ப்பது என்பது ஒரு கலை. குழந்தைகளுக்கு முன்பு நாம் எப்படி இருக்கிறோம், என்னவாக இருக்கிறோம் என்பதை பெரியவர்களிடமிருந்துதான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.

devaneyan20குறிப்பாக பெரியவர்கள் என்று சொல்லும்பொழுது பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாகவும், குடும்பங்களில் பெற்றோர்களாகவும், வெளியில் சமூகத்தில் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். அந்தந்த இடத்தில் இதையெல்லாம் பார்த்து எளிதில் கற்றுக்கொள்கிறார்கள். அது எளிதில் குழந்தைகள் மனதில் பதிந்து விடுகிறது. குழந்தைகளை வளர்ப்பதில் அனைவருக்கும் கடமை இருக்கிறது. அப்படிப் பார்க்கும்பொழுது ஊடகங்களுக்கென்று மிக முக்கியமான கடமை இருக்கிறது. இன்றைக்கு ஊடகங்கள் குழந்தைக்கு எதிரான நிறைய தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நுகர்வோர் கலாச்சாரம் என்கிற பெயரில் குழந்தைகளுக்கு உதவாத உணவுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள், விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பல வண்ணங்களில் குழந்தைகளுக்கு ரசாயனம் சார்ந்த பொருட்களைக் கொடுத்து மூளையை மழுங்கச் செய்கிறார்கள்.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கிற விடயங்களுக்கு, நாம் எப்படி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்கு பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. குழந்தைநேய ஆசிரியர்களாக, குழந்தைப் பாதுகாப்பு ஆசிரியர்களாக, இன்றைக்கு ஒரு ஆசிரியர் என்பது குழந்தைக்குள் தாக்கம் ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிற ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அந்த ஆசிரியர்கள் முன்மாதிரிகளாக எடுத்துக்கொள்கிறார்களா, முன்மாதிரி சமூகம், குழந்தைகளின் கருத்துக்கள் அந்தப் பள்ளிக்கூடங்களில் மதிக்கப்படுகிறதா, குழந்தைகளின் கருத்துக்கள் வீடுகளில் மதிக்கப்படுகிறதா, குழந்தைகள் இந்த தேசத்தில் உரிமை உடையவர்கள் என்றால் அவர்களுடைய கருத்துக்கள் மதிக்கப்படும்.

devaneyan18குழந்தைகளுக்கு சம வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகிறதா, சுதந்திரமாக இருக்கிறார்களா, மகிழ்வாக இருக்கிறார்களா, குழந்தைப் பருவத்தை அனுபவிக்கிறார்களா, குழந்தைப் பருவம் வாழ்க்கையில் திருப்பி கிடைக்க முடியாத பருவம். நாற்பது, ஐம்பது வயதில் அனுபவிக்க முடியாததை அறுபது வயதில் அனுபவித்து விடலாம். இருபது வயதில் அனுபவிக்க முடியாததை முப்பது வயதில் அனுபவித்து விடலாம். ஆனால் பத்து பன்னிரண்டு வயதில் அனுபவிக்க முடியாததை, எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த வயதை விட்டுச் சென்றுவிட்டால் பெறமுடியாது. பருவத்தை மகிழ்வாக அனுபவிக்கிற சூழலைத்தான் உருவாக்கவேண்டுமே ஒழிய, அதற்கு எதிராக நடக்கிற வன்முறை அந்தக் குழந்தைப் பருவத்தில் நுழையக் கூடாது. மாம்பழத்திற்குக்கூட பல்வேறு பருவங்கள் உண்டு. துளிர் இருக்கும், பின் பூ வரும், பிஞ்சு வரும், இளம் காய் வரும், காய் வரும், பழம் வரும். இளம் பிஞ்சை நசுக்கி விட்டால் நல்ல மாம்பழம் கிடைக்காது. குழந்தைகளுக்கும் பல்வேறு பருவம் இருக்கிறது. அந்தப் பருவத்தில் மிக முக்கியமான பருவம் குழந்தைப் பருவம். அந்தப் பருவத்தை நசுக்கியதற்குப் பிறகு நல்ல குடிமகன் வருவானா?, வரவே முடியாது. எனவே அனைவரும் இணைந்து குழந்தைப் பருவத்தைப் பாதுகாக்கிற பணியில், குழந்தை நேய அணுகுமுறையுடன் குழந்தைப் பாதுகாப்புக்கான அணுகுமுறையை உருவாக்குவதுதான் மிக மிக முக்கியமானதாக இருக்கும்.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தோழமை தொண்டு நிறுவன இயக்குனர் தேவநேயன் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது