நகர விரிவாக்கமும் மார்செட்டி மாறிலி கோட்பாடும்
தேமொழிMar 19, 2022
இயல்பான மக்கட்தொகை அதிகரிப்பு, வாழ்வாதாரம் நாடி வரும் புதியவர்களின் குடியேற்றம், அதனால் ஏற்படும் மக்கட்தொகை அடர்த்தி, குடியிருப்புகள் பற்றாக்குறை, புதிய குடியிருப்புகள் அமைக்க நிலம் இல்லாமை, வணிக வழியில் அதிகரிக்கும் பொருளாதாரம், பல்வேறு தொழில் வளர்ச்சி, பலவகை பண்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சமூகச் செயல்பாடுகள் அதிகரித்தல் ஆகியவற்றிற்குத் தீர்வு காண ஒரு நகரம் விரிவடைகிறது என்பதை நாம் அறிவோம். அத்துடன் போக்குவரத்து தொழில்நுட்ப வளர்ச்சியும் நகர விரிவாக்கத்திற்கு ஒரு காரணமாக அமைகிறது.
இத்தாலிய இயற்பியலாளரான ‘செசரே மார்செட்டி’ (Italian physicist-Cesare Marchetti) ‘மார்செட்டி மாறிலி’ (Marchetti Constant) என்ற கோட்பாட்டை 1994 ஆம் ஆண்டில் முன் வைத்தார். மக்கள் தங்கள் வாழிடத்திலிருந்து ஓர் அரை மணி நேரப்பயணத் தொலைவில் இருக்கும் இடத்திற்குச் செல்வதை மட்டுமே விரும்புவர் என்பது தான் மார்செட்டி மாறிலி குறிப்பிடுவது. எனவே அவர்கள் பணியிடங்கள் அரைமணி நேரம் செலவழித்துக் கடக்கும் இடத்திற்குள் மட்டுமே அமையும். இதுவே பெரும்பாலோர் விரும்புவதும், காலம் காலமாக நடைமுறையில் இருப்பதும் ஆகும். அண்மைய அமெரிக்க சென்சஸ் அறிக்கை இன்றைய நாளில் மக்களின் சராசரிப் பயண நேரம் 27.6 நிமிடங்கள் என்று குறிப்பிடுகிறது.
20-30 நிமிடப்பயணத் தொலைவு என்ற மக்களின் தேர்வுக்குக் காரணம்; ஒரு நாளில் இருப்பது 24 மணி நேரம் மட்டுமே, அதில் தவிர்க்க முடியாத செயல்பாடுகளான உறக்கம் மற்றும் உழைப்பு ஆகியவற்றுக்கு மூன்றில் இரண்டு பங்கு நேரம் கழிந்தவுடன் மிச்சமிருக்கும் 8 மணிநேரத்தில் வேலைக்குப் போகவும் வீடு திரும்பவும் பயணத்திற்காக ஒருமணி நேரம் மட்டும் ஒதுக்குவதே இயலும் என்பதுதான் அடிப்படை. ஆகவே ஒருவழிப் பயணத்திற்கு 20-30 நிமிடப்பயணத் தொலைவு என்பதே மனித இனத்தின் விருப்பமாக இருக்கிறது. இதனால் பணிக்காகப் பயணம் செய்யும் இடங்கள் இந்த நேரத்தில் கடக்கக் கூடிய தொலைவில் இருப்பதாக அமைந்துவிடுகிறது.
ஒரு குடியிருப்பிலிருந்து கார் இல்லாமல் நடைப்பயணத்திலேயே தனது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் இடங்களில் அமைந்த வீடுகளுக்கு நடைப்பயண அலகுகள் (Walk Score®) என்ற எண் ஒன்றும் வீடுகளுக்குக் கொடுக்கப்படுகிறது. உணவு விடுதிகள், மளிகைப் பொருட்கள் கடைகள், சிறிய தேவைகளுக்கான சேவை நிலையங்கள் (முடி திருத்தும் நிலையம், அஞ்சல் நிலையம், வங்கி, மருந்தகம், நூலகம் போன்றவை), பூங்காக்கள், பள்ளிகள், கலை, பண்பாட்டுப் பொழுதுபோக்கு இடங்கள் இவையாவும் 20 நிமிட நடைத் தொலைவில் இருந்தால் அந்தக் குடியிருப்புகளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறது. 50 மதிப்பெண்கள் ஓரளவு நடையில் சில தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் 75க்கும் மேல் மதிப்பெண் பெற்ற வீட்டில் வாசித்தால் கார் இல்லாமலே வாழமுடியும் என்ற பிரிவிலும் அடங்கும். புது இடத்தில் குடியேற விரும்புவோருக்கு அப்பகுதியின் குற்றவியல் நடவடிக்கை, நல்ல கல்வி நிலையங்கள் இருத்தல் குறித்த தகவல் போல வீடு வாங்குவது பற்றி முடிவெடுப்பதில் இருப்பிடம் குறித்த இந்தத்தகவலும் உதவும். இவ்வாறு தர நிர்ணய மதிப்பெண் கணக்கிடவும் 20 நிமிடநடைத்தொலைவு என்பதுதான் அடிப்படை.
இந்தப்பயணக் கொள்கை அடிப்படையில் அமையும் வாழ்க்கை முறை வரலாறு முழுவதும் நகர வளர்ச்சியில் பெரும் தாக்கத்தைக் கொடுத்துள்ளது. அது பழங்கால ரோம் நகரமாக இருந்தாலும் இக்கால நியூயார்க் நகரம் என்பதாக இருந்தாலும் இது உண்மையே. இதைத்தான் சென்சஸ் தரவும் சுட்டுகிறது. ஆனால் நகர வளர்ச்சியில் போக்குவரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி நகரத்தின் அளவை விரிவாக்கிக் கொண்டே வந்திருக்கிறது.
பொதுவாக ஒரு சராசரி மனிதரால் 20 நிமிடத்தில் ஒரு மைல் (சற்றொப்ப 1½ கிலோமீட்டர்) தூரம் கடக்கமுடியும். பழங்காலத்தில் ஊரில் உள்ள எந்த இடத்திற்கும் அரை மணி நேரத்தில் நடைப்பயணத்தில் சென்று வரலாம் என்ற அளவில்தான் ஊர்களின் அளவு அமைந்திருந்திருக்கிறது. பிறகு குதிரை, மாடு போன்ற விலங்குகளின் உதவியாலும் சக்கரங்கள் கொண்ட வண்டிகளின் உதவியாலும் அதே அரைமணி நேரத்தில் மேலும் தொலைவைக் கடக்கலாம் என்ற நிலை உருவாகிய பொழுது நகரங்கள் சற்றே அளவில் விரிவடையத் தொடங்குகின்றன. இழுக்கும் விலங்குகளுக்குப் பதிலாக, இயந்திரங்கள் உதவியுடன் வண்டிகள் இயக்கப்பட்ட பொழுது மேலும் அதிகத் தொலைவிற்கு அதே அரை மணி நேரத்தில் செல்ல முடிந்தது. இது மேலும் நகரத்தின் அளவை விரிவாக்கியது. ஆனால் மக்கள் பயணத்திற்கு ஒதுக்கும் நேரம் மட்டும் அதே அரைமணிநேர அளவுதான். இந்த நிலையில் அருகருகே இருந்த ஊர்களும் சிற்றூர்களுக்கும் இடையே இருக்கும் எல்லைகள் மதிப்பிழந்து விடுகிறது. வணிகமையம் கொண்ட ஒரு பேரூரின் பகுதிகளாக அவை மக்களால் கருதும் அளவிற்கு நகரம் விரிவடைந்து விடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக நமக்கு நினைவில் வருவது சென்னை மாநகரமாகவே இருக்கும்.
இன்றும் ஒருவரிடம் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு அந்த இடம் எவ்வளவு தொலைவு என்று கேட்டால், தொலைவை அளக்க உதவும் மைல் அல்லது கிலோமீட்டர் என்ற முறையில் பதில் அளிக்காமல் இங்கிருந்து 40 நிமிடங்கள் தொலைவில் இருக்கிறது என்று சொல்லும் வழக்கம் இருப்பதைக் காணலாம். 1800களின் இறுதிகளில் போக்குவரத்திற்கு மின்சார டிராம் வண்டிகளும், 1900களின் துவக்கத்தில் பயன்பாட்டிற்கு வந்த மோட்டார் வண்டிகளும் சென்னை பகுதியின் போக்குவரத்தில் ஏற்படுத்திய தாக்கம் வணிக மையமான சென்னை நகருடன் அருகில் உள்ள ஊர்களை இணைத்தன. குறுக்கும் நெடுக்கும் போக்குவரத்து நெரிசலில் நேரம் அதிகமாவதைத் தடுக்க விரைவு நெடுஞ்சாலைகளும், புறவழிப்பாதைகளும் வளர வளர போக்குவரத்தும் எளிதாகிறது, விபத்துகளும் குறைகிறது, பயண நேரமும் குறைகிறது. விளைவு மேலும் மேலும் நகர வளர்ச்சிதான்.
இதன் விளைவாக, நகர நெரிசலில் வாழ விரும்பாத வசதி வாய்ப்பு உள்ளவர்களை மாநகரங்களின் புறநகர்களுக்குக் குடியேறினர். ஒரு 30 நிமிடம் பயணம் செய்தால் நெரிசல் நிறைந்த நகரின் அடுக்கு மாடிக்குடியிருப்பின் சிறிய வீட்டில் வசிப்பதைத் தவிர்த்து, நகரிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ள புறநகரப் பகுதியில் வசதியான பெரிய தனி வீட்டில் வாழ முடிந்தது. புதிய இருப்புப் பாதை நெடுஞ்சாலைகளின் போக்குவரத்துப் பாதையில் வழியில் அமைந்த சிற்றூர்களும் இதனால் வளர்ச்சி அடைந்து முக்கியத்துவம் பெற்றன. ஒரு நிலத்தின் மதிப்பு அதை அணுகக்கூடிய தன்மையால் நிர்ணயிக்கப்படுகிறது, அதற்குப் போக்குவரத்து வசதிகள்தான் காரணம் என்பது யாவரும் அறிந்த உண்மையே. எனவே பயணம் செய்யக்கூடிய வேகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிகரித்து அது நகர விரிவாக்கத்தின் அடிப்படையாக அமைந்துவிடுகிறது.
மார்செட்டியின் கணிப்பின் அடிப்படையில் தொழிற்புரட்சிக் காலத்திற்கு முன்னிருந்த நடைப்பயணக் காலத்து நகரங்களின் குறுக்களவு அல்லது விட்டம் சற்றொப்ப 2 மைல்கள் அளவில் இருந்தது, ஆனால் அது மோட்டார் ஊர்திகள் காலத்தில் 40 மைல்கள் வரை விட்டம் கொண்ட நகரம் என்ற அளவிற்கு அதிகரித்து விட்டது. அதாவது 3 அல்லது 4 சதுர மைல் பரப்பளவு கொண்ட நகரத்தின் வளர்ச்சி 1250 சதுர மைல் பரப்பளவு கொண்ட மாநகரத்தின் நிலையை எட்டியது. இதனால் நகர்ப்புற விரிவாக்க வரலாற்றைப் பயணக் கோட்பாடு வடிவமைப்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள இயலுகிறது.
குறிப்பாக, 1850 முதல் 1950 வரையில் நிகழ்ந்த போக்குவரத்து தொழில் நுட்ப வளர்ச்சியும், மக்கட்தொகை பெருக்கமும் நகர வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கு நேரடியான காரணங்களாக அமைந்தன. விரிவடைந்த மாநகர்களை நிர்வகிப்பதும், பெருகிவிடும் குடிமக்களின் தேவைக்கேற்ப சீர்படுத்துவதும் புதிய புதிய சவால்களை அரசுக்குக் கொடுக்கும் நிலை ஏற்படுகிறது.
References:
[1] Marchetti, C., (1994). Anthropological Invariants in Travel Behavior,
Technological Forecasting and Social Change , Internal Publication, International Institute for Applied Systems Analysis, Laxenburg, Austria. 47 :75–88. http://www.cesaremarchetti.org/archive/electronic/basic_instincts.pdf
[2] T.M.AHajeeHafila Banu , Sivaganesh. P and S.Bhakyasri (2021). Growth of The City Chennai Based on Urban Ecology. International Journal of Creative Research Thoughts – IJCRT | Volume 9, Issue 6 June 2021 | ISSN: 2320-2882. www.ijcrt.org
[3] Jean-Paul Rodrigue (2020), Transportation and the Urban Form, The Geography of Transport Systems, 5th Edition, New York: Routledge, 456 pages. ISBN 978-0-367-36463-2. doi.org/10.4324/9780429346323
[4] Qian An, Peter Gordon and James E. Moore II (2014). A note on commuting times and city size: Testing variances as well as means. The Journal of Transport and Land Use, VOL. 7 NO. 2 (2014) / Articles DOI: https://doi.org/10.5198/jtlu.v7i2.427
[5] Jonathan English (2019), The Commuting Principle That Shaped Urban History. August 29, 2019. https://www.bloomberg.com/news/features/2019-08-29/the-commuting-principle-that-shaped-urban-history
[6] Henderson, J. V. (1974). The Sizes and Types of Cities. The American Economic Review, 64(4), 640–656. http://www.jstor.org/stable/1813316
[7] CharlynnBurd, Michael Burrows and Brian Mckenzie (2021). Travel Time to Work in the United States: 2019. March 18, 2021, Report # ACS 47. https://www.census.gov/content/dam/Census/library/publications/2021/acs/acs-47.pdf
[8] Census Bureau Estimates Show Average One-Way Travel Time to Work Rises to All-Time High, March 18, 2021, The Census Bureau of USA. https://www.census.gov/newsroom/press-releases/2021/one-way-travel-time-to-work-rises.html
[9] Walk Score Methodology. https://www.walkscore.com/methodology.shtml
——————–
தேமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நகர விரிவாக்கமும் மார்செட்டி மாறிலி கோட்பாடும்”