மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தோழர் நல்லகண்ணு அவர்களின் நேர்காணல்

சித்திர சேனன்

Dec 20, 2014

கேள்வி: தங்களின் பூர்வீகம் பற்றிக் கூறுங்கள்?

பதில்: சிதம்பரனார் மாவட்டம் திருவைகுண்டம் நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தேன். நான் சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்று மிக்கவன். இதன் காரணமாக சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டேன். எனது 15ம் வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக்கொண்டேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக போராடுவதற்காக என்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டேன். பதினான்கு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கையெழுத்திட்டு மேல்முறையீடு செய்து ஏழு ஆண்டுகள் சிறைதண்டனையுடன் விடுவிக்கப்பட்டேன்.

கேள்வி: தமிழக நீர்நிலைகள் மற்றும் காடுகளின் நிலை பரிதாபமாக உள்ளது. நீர்நிலைகளை மீட்டெடுத்து வளமான தமிழகத்தை உருவாக்க என்ன வழி?

பதில்: என்னுடைய அனுபவத்தில் பார்க்கும் பொழுது நம்முடைய தமிழ்நாட்டில் இயற்கை வளம் நிறைய உள்ளது. ஆனால் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களைவிட இங்கு நீராதாரங்கள் குறைந்த இடம். கிடைக்கக்கூடிய தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கான பல்வேறு திட்டங்களை இதற்கு முன்னால் இருந்த பலர் செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 39,202 ஏரி மற்றும் குளங்கள் தமிழ்நாட்டில் வெட்டப்பட்டிருக்கிறது. நமக்கு மூன்று பக்கமும் கடல், ஒரு பக்கம் மலை, மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் ஒரு அரணாக அமைந்திருந்தாலும் அந்த அரணாக அமைந்திருப்பது நல்லவையும் கூட. தென்மேற்கு பருவ மழை நமக்குக் கிடைப்பதில்லை. அரபிக்கடலில் இருந்து கிடைக்கக்கூடிய மழை கேரளாவோடு நின்றுவிடுகிறது. அதிலுள்ள சாரல்தான் நமக்கு வரும்.

இதே போல் கிழக்கு தொடர்ச்சி மலையிலும் வட கிழக்கு பருவமழை நமக்கு வருகிறது. இரண்டும் பெய்தாலும் கூட வருடத்தில் 30 நாள் அல்லது 40 நாட்கள்தான் மழை வருகிறது. இது போதுமானதல்ல. கிடைக்கின்ற மழையை சேமித்துவைக்கக்கூடிய வகையில் ஏரி மற்றும் குளங்கள் எல்லாம் கட்டியிருக்கிறார்கள். உலகத்தின் பல நாடுகளை விட நம் முன்னோர்கள் ஏரி, குளங்கள் என்பதை அணுஅணுவாகத் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி சிறு சிறு அளவுக்குத் தகுந்தபடி நீராதாரங்களை சேகரித்திருக்கிறார்கள். ஊற்று, ஊரணி, நீராவி, மாடு குளிப்பாட்டுவதற்கு இடம், தெப்பம், குளங்கள், கேணி என்று பல இருக்கின்றது. குளங்களை குளம் என்று சொல்வார்கள், ஏந்தல் என்று சொல்வார்கள். இப்படி கொள்ளளவிற்குத் தகுந்தபடி இருக்கிறது. தண்ணீரை வடிகால் குளங்கள் வைத்து எவ்வளவு மிச்சப்படுத்தி சேமிப்பது என்பதற்கு இந்தியாவிலேயே அதிகமான பயன்பாட்டுத்திட்டங்களை வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இப்போது காவேரி தண்ணீரும் சரி, பாலாறும் சரி வருவது குறைந்துவிட்டது. வளர்ச்சி அடைய அடைய அவர்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் இந்தியா என்ற ஒரு நாடாக இருந்தாலும் ஒரு மாநிலத்தின் உரிமையைப் பெற்றுத் தரமுடியவில்லை. பாரதியார் சொன்னார்,

“காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்

கண்டதோர் வையை பொருனைநதி-என

மேவி யாறு பலவோடத்-திரு

மேனி செழித்த தமிழ்நாடு.”

இப்பொழுது பாலாற்றிலும் தண்ணீர் இல்லை. ஏனென்றால் கர்நாடகாவில் அணை கட்டிவிட்டார்கள். ஆந்திராவிலும் குறுக்கே அணை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் காவேரியிலும் கர்நாடகா அரசு அணை கட்டியிருக்கிறது. பிரிட்டிசு காலத்தில் அங்கு கட்டினாலும் இங்கு கட்டினாலும் இரண்டு மாநிலங்களும் சேர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இருந்தது. இப்பொழுது பிரச்சனை இவ்வளவு நாளாகியும் தீர்வு காணமுடியவில்லை, நீதிமன்றத் தீர்ப்பு வந்தாலும், நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தாலும் முறையாக முன்னெடுக்க முடியவில்லை. முல்லைப்பெரியாறு பிரச்சனையும் இருக்கிறது. இதனை மத்திய அரசு தீர்த்துவைக்கவில்லை. அப்படி பிரச்சனை ஏராளம் இருக்கிறது. திரும்பவும் புதிய முயற்சி என்ற பெயரால் விளை நிலங்கள் எல்லாம் விலை இடங்களாக மாறிக்கொண்டிருக்கிறது. இன்று உலகமயமாக்கலில் தொழிற்சாலைகளை அதிகப்படுத்தவேண்டும் என்று இந்த இடங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டாயிற்று. அதனால் நீராதாரங்கள் மிகவும் குறைகிறது, விளைநிலங்கள் பாதிக்கிறது, நீராதாரங்களை சேமித்துவைக்க முடியவில்லை, பின்னாள் ஏற்படக்கூடிய விளைவுகளை எல்லாம் தமிழ்நாடு எதிர்நோக்கியிருக்கிறது. இதற்கு ஒரு ஆபத்தான நிலை இருக்கிறது. இதிலிருந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக நாம் இயற்கையை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இயற்கையை பயன்பாட்டுக்கு உள்ளதாக மாற்றவேண்டும். இயற்கையை கொள்ளையடிப்பதற்கு விட்டுவிட்டால் அதாவது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கடற்கரையோரம் உள்ள தாதுமணல் கொள்ளை இதெல்லாம் வரும் பொழுது நிலத்தடி நீரையும் கெடுத்துவிடுகிறது. மணல் கொள்ளை என்று வரும்பொழுது சிறிதுதான் மணல் எடுக்கலாம் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் ஜே.சி.பியை வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி அரசும் கவலைப்படுவதில்லை. அவர்கள் கொள்ளையடிப்பதற்கு அனுமதித்துவிட்டார்கள். நமக்கு பெய்து வரக்கூடிய மழையை சேமித்துவைக்கவேண்டும், பாதுகாக்க வேண்டும். முறையாக பருவமழை வரும் பொழுது நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும். ஆற்று மணலை சேமித்து வைக்கவேண்டும். ஆற்றுமணலும் கொள்ளையடிக்கும் பொழுது நிலத்தடி நீரும் வறண்டு விடுகிறது. வரும் தண்ணீரை சேமித்து வைப்பதுதான் மணல். அதைத்தான் “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு” என்று சொல்வார்கள். கோடைகாலத்தில் கூட அந்த மணலை எடுத்தால் ஊற்று வரும், அதுதான் மணற்கேணி. ஆய்வில் என்னசொல்கிறார்கள் என்றால், ஒரு கனஅடி மணலை உருவாக்க நூறு ஆண்டுகள், இருநூறு ஆண்டுகள் ஆகும் என்று. சுத்தமில்லாத தண்ணீர் வந்தாலும் சுத்தப்படுத்தி அனுப்பும். நிலத்தடி நீரைப் பாதுகாக்கும். இப்பொழுது மீன் முட்டையிட்டாலும் கூட அது தண்ணீரோடு போவதில்லை. அது கீழே மணலில் இருக்கும் பொழுதுதான் மீன் உற்பத்தியாகும். இவ்வளவு கொடுக்கக்கூடிய கொடைகளைக் கூட முறையாக பாதுகாக்கமுடியாமல் கொள்ளையடிக்கக்கூடியதாக நிலை இருக்கிறது. இயற்கையை பாதுகாக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. தொழில் வளர்ச்சி என்ற பெயராலேயும் அது கொள்ளையடிக்கப்படுகிறது.

கேள்வி: குறுகிய மனப்பான்மையுடனும், பண முதலாளிகளுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்து தமிழகத்தை சுடுகாடாக்கும் முயற்சியில் மீத்தேன், நியூட்ரினோ, அணு உலைகள், எரிபொருள் குழாய் அமைக்கும் பணிகள் என மண்ணைக் கெடுக்கும் செயல்களில் மத்திய மாநில அரசுகள் இறங்கியுள்ளன. இது பற்றி தாங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்: குறுகிய மனப்போக்குகளை விட இன்று தொழில் வளர்ச்சி என்று வருகிறது. நோக்கம் அது வேறு, அதாவது வெளிநாட்டு முதலாளிகள் தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவதற்காகக் காரணம் சொல்லி நிலக்கரியைப் பயன்படுத்துவது, தாதுமணலை பயன்படுத்துவது இதெல்லாமே இயற்கையை சுரண்டுவதாகும். Eastern Energy Company என்ற ஒரு நிறுவனத்திற்கு மீத்தேனை எடுப்பதற்கு அனுமதி விட்டிருக்கிறார்கள், அது எங்கு என்றால் முப்போகம் விளையக்கூடிய காவிரி டெல்டா பகுதியில். காவிரி டெல்டாவில் மன்னார்குடி, திருத்துரைப்பூண்டி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் இந்த இடங்களில் எல்லாம் மீத்தேன் வாயு எடுக்க முயற்சிக்கப்படுகிறது. அந்த வாயுவை அழுத்தி எடுப்பது மேலே இருக்கும் தண்ணீர். அந்தத் தண்ணீரும் பல கந்தகங்கள் கலந்திருக்கும். அந்தத் தண்ணீரைப்பூராவும் வெளியே எடுக்கவேண்டும். வெளியே எடுத்துவிட்டால் அது பாயக்கூடிய இடமும் வறண்டுவிடும். அந்தத் தண்ணீரை எங்கு கொண்டுவிடுவது என்ற பிரச்சனை இருக்கிறது. அதை எடுத்தபிறகு கடல் தண்ணீர் உள்ளே வரும். இந்தத் தண்ணீரை காலிசெய்தால்தான் மீத்தேன் வாயுவை எடுக்கமுடியும். அங்கு குடியிருக்கக்கூடிய மிகப்பாரம்பரியமான தொன்மையான வளங்கள், தொல்லியல் சார்ந்த அமைப்புகள், எத்தனையோ கணக்கானோர் வாழ்ந்த குடியிருப்புகள், கோவில்கள், நல்ல விவசாயம் நடந்த அந்த பூமி பூராவும் பாழாகும். மனித வாழ்வுக்கு இடமில்லாத, வசதியில்லாத இடமாக மாற்றப்பட்டுவிடும். இருக்கிற மக்களுக்கு வாழ்வாதாரத்தை என்ன செய்வது? அதெல்லாம் தவறு. அதே மாதிரி நிலக்கரி சுரங்ககள் இருக்கிறது. இயற்கையை சுரண்டுவதற்கு வரமுறை இருக்கவேண்டும். வளர்ச்சி வேண்டும் அதாவது நிரந்தர வளர்ச்சி வேண்டும். ஒரு இடத்தில் தொழில் நடத்தினால் அங்கு வாழக்கூடிய மக்களுக்கு அந்தத் தொழில் நிரந்தர வாழ்வு அளிக்குமா என்று பார்க்கவேண்டும் இதுதான் Sustainable Development. நீடித்து நிலைக்குமா என்று பார்க்க வேண்டும். அந்த மண்ணை எடுத்து காலிசெய்துவிட்டால் அங்கு இருக்கும் மக்களுக்கு அடுத்த இடம் எங்குபோவது என்று வரும். அதையெல்லாம் திட்டமிடாமல் கொள்ளையடிக்க அனுமதிக்க வந்துவிட்டால் பேராபத்து இருக்கிறது. அதேமாதிரி மின்சாரம் கிடைப்பது நல்லது. மின்சாரத்திற்கு அணுசக்தி தேவைப்படுகிறது இது வாதத்திற்குள்ள பொருளாக இருக்கிறது. அதிலும் அந்த அணுசக்தி கழிவுகளை எங்கு கொண்டு போடுவார்கள் என்ற பிரச்சனை இருக்கிறது. அதெல்லாம் பரிசீலித்து ஒரு தொழில் ஆரம்பிக்கும்பொழுது மக்களின் பயத்தைப் போக்கி தொழில் ஆரம்பிக்கவேண்டுமே தவிர பயம் கலந்த வாழ்க்கையைத் தரக்கூடாது. அதெல்லாம் பார்த்து செய்யவேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்.

இயற்கையை அழிக்காமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பழைய சித்தாந்தம் என்ன சொல்கிறது என்றால் இயற்கையை விதிப்படி புரிந்து மனித வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொண்டால் அது நீண்ட காலத்திற்கு பயனளிக்கும். இயற்கை விதிமுறைக்கு மீறாக அழித்துவிட்டால் மனித குலத்திற்கு எதிராக பலிவாங்கும். இந்த எல்லா நிலையையும் தாண்டித்தான் வெப்பநிலை வருகிறது. வெப்பநிலை மாறும்பொழுது விவசாயமும் செய்யமுடியவில்லை, இயற்கையாக உருவாவதை ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த மாதிரி தட்பவெப்ப நிலை பருவநிலை மாற்றத்தை உண்டாக்குகிறது. ஏதோ மாற்றம் வருகிறது என்று நினைக்கிறார்களே தவிர, அதற்குக் காரணம் என்னவென்றால் பூமி வெப்பமடைவது. காடுகளானது மூன்றில் ஒரு பங்கு இருக்கவேண்டும். 33 சதவீதம் காடு இருக்கவேண்டும். இப்பொழுது தமிழ்நாட்டில் 17 சதவீதம் காடுதான் இருக்கிறது. மற்றவை இருந்தது ஆனால் அழித்துவிட்டார்கள். கொள்ளையடிப்பதற்கு, சந்தனமரக்கடத்தல் என்கிறார்கள், செம்மரக்கடத்தல் என்கிறார்கள் இதற்காக அழிக்கப்படுகிறது. திரும்பவும் வளமானவர்களுக்கு, கொள்ளைக்காரர்களுக்கு அடமானமாக தோப்பு, தோட்டம் வைப்பது என்று கொள்ளையடித்திருக்கிறார்கள். இயற்கையினால்தான் கீழே நதிகளுக்கு தண்ணீர் வரவேண்டும் விவசாயத்திற்கு. அது பூராவும் மூலத்திலேயே அழித்துவிட்டால் ஏரி, குளங்களிலெல்லாம் தண்ணீர் வராமல் போய்விடுகிறது. திட்டமிட்டு பாதுகாத்து வைத்திருந்த பூராவும் கொள்ளை மூலமாகவும் அழிக்கப்படுகிறது.  காந்தியே “இயற்கையே ஏராளமாக நமக்குக் கொடுத்திருக்கிறது Nature has enough for needy people but not for greedy people” கொள்ளையடிப்பதே நோக்கம் உள்ளவனுக்கு அந்த இயற்கை இடம் கொடுக்காது என்றார். தேவையானவர்களுக்கு அனுமதிப்பதற்கு வாழ்க்கைக்கு உத்தரவாதம் பண்ணலாம். ஆனால் கொள்ளையடிப்பது என்று வந்துவிட்டால் இயற்கை அழிந்துவிடும். அதெல்லாம் தடுக்கவேண்டும். சுற்றுப்புறச்சூழல், விளைநிலங்களை பாதுகாப்பது எல்லாம் தேவை. ஆனால் இன்று சட்டங்களை மாற்றுகிறார்கள்.

கேள்வி: தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உள்ளதாக நாங்கள் உணர்கிறோம். இனி தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது?

பதில்: ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதாவது தமிழகத்தில் ஒட்டுமொத்தமான நிலைமையைப் பார்த்தோம் என்றால் தமிழ்நாட்டில் அரசியல் மட்டும் இல்லை எல்லா வகையிலும் தமிழ்நாட்டில் ஒரு சிக்கல் வந்துவிட்டது. இந்திய நாட்டிலேயே வளர்ச்சியடைந்த தேசிய இயக்கத்திலும் இடதுசாரி இயக்கத்திலும் பகுத்தறிவு இயக்கத்திலும் முக்கியமான இடங்களில் தமிழ்நாடு ஒன்று. அதில் மஹாராஷ்டிரா, வங்காளம் இதெல்லாம் உண்டு. விடுதலைப் போராட்டத்தில் தீவிரமான இயக்கம் நடந்ததில் தமிழ்நாடு ஒன்று. அதேமாதிரி பெரியார் காலத்தில் சாதிமறுப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை இதை கொண்டுவந்தது ஒன்று, அதே மாதிரி கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் சாதிமறுப்பு, சுயமரியாதை, சுரண்டலற்ற சமுதாயம், ஜமீன் ஒழிப்பு இதற்காகவெல்லாம் போராட்டம் நடத்தி பல போராட்டங்கள் நடத்தி நடத்தித்தான் தமிழ்நாட்டின் பெருமை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று இயக்கங்களும் வலுவான இயக்கங்கள். அதுமட்டுமல்ல ஆரம்பகாலத்திலிருந்து மதங்கள் இருந்தாலும் கூட மதங்கள் மக்களுக்குப் பயன்படவேண்டும் என்ற முறையில் பெரிய போராட்டங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. அப்படி இருந்த இடத்தில் இப்பொழுது சாதி மையம் கொண்டிருக்கிறது, மதங்கள் மையம் கொண்டிருக்கிறது, கொள்ளையடிப்பதுதான் கொள்கை என்று வந்துவிட்டது, மக்களின் நலனைப் பாதுகாப்பது என்றில்லாமல் போய்விட்டது, தனிதமனித புகழ்பாடுவது என்று வந்துவிட்டது. மக்களைப் பொறுத்தவரையில் காங்கிரசு 47லிலிருந்து 67 வரை 20 வருடம் ஆட்சி நடந்தது. 67லிருந்து இதுவரைக்கும் வருவதில்லை. தி.மு.க, அ.தி.மு.க இவைகள்தான் ஆட்சிக்கு வந்திருக்கிறது. இவ்வளவு இருந்தும் இன்றைக்கு சாதி இரண்டொழிய வேற்றில்லை என்றெல்லாம் சொன்னோம். ஆனால் சாதிப் பெயரால் அரசியல் நடத்தப்படுகிறது. அதேமாதிரி சங்கஇலக்கியத்தில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பாடப்பட்டது. இப்பொழுது அதெல்லாம் பேச்சளவில் நின்றுவிட்டது, செயல்பாட்டில் இல்லை. அந்த மாதிரிஎல்லாம் இருக்கும் பொழுது சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும், தனிமனித பெருமையின் பெயராலும் அரசியல் பாழ்படுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக மொத்தத்தில் வரும்பொழுது மக்கள் ஆட்சியை மாற்றுகிறார்கள் காங்கிரசு மாறியது, தி.மு.க பிடிக்கவில்லை என்றால் அ.தி.மு.க வருகிறது. இதெல்லாம் விட மதத்தை அடிப்படையாக வைத்த கொள்கை உள்ளது என்பது பா.ஜ.க போன்ற சக்திகள் வளர்வதற்கு இங்கே வருகிறது. இதெல்லாம் தடுத்து நிறுத்தவேண்டிவரும். ஆனால் வரலாறு இதை சகித்துக்கொண்டிருக்காது. மக்கள் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டுவருவார்கள்.

கேள்வி: தமிழீழச் சிக்கல் குறித்து உங்கள் பார்வை என்ன? இந்தச் சிக்கல் தீர தாங்கள் கூறும் வழிமுறை என்ன?

பதில்: இதை நாங்கள் தனிப்பட்ட முறையில் கூறுவதற்கு இல்லை. எல்லாமே படிப்பினைகள். இந்திய நாடு அடிமைப்பட்டு இருந்த வரை எல்லா நாடுகளும் அடிமைப்பட்டு இருந்தது. இந்தியாதான் பெரியநாடு, இதை ஒட்டிதான் இலங்கை மற்ற பாகிஸ்தான் எல்லா இடங்களும் வந்தது. அதன்பிறகு இரண்டாம் உலகப்போர் முடிந்தபிறகுதான் இந்த நாடெல்லாம் விடுதலை அடைந்தது. இந்தியா விடுதலை அடைந்த பிறகுதான் மற்ற நாடுகளெல்லாம் விடுதலை அடைந்தது. இந்தியா இதுவரைக்கும் சிறிது தலைநிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் என்னவென்றால் ஒரு தேசிய விடுதலைப் போராட்ட எழுச்சி இருந்தது, பக்க மாநிலங்களில் ஜனநாயக உணர்வைத் தட்டி எழுப்பியது இவையெல்லாம் இருந்தது. இந்தியாவில் மத்திய அரசின் உரிமை என்னவென்றால், இந்தியாவில் சுதந்திரம், சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது குடியரசு சட்டத்திலே கொண்டுவரப்பட்டது. அதே மாதிரி நம்நாடு secular socialist republic of india மதசார்பற்ற குடியரசு இந்தியா என்று வருகிறது. இப்பொழுது அதனால்தான் நம் நாடு பெரியநாடு, பலமொழிகள் பேசக்கூடிய நாடு, பல தொன்மையான நாகரீகங்கள் உள்ள நாடு. மதம் என்று வருகிற பொழுது மதச்சார்பற்ற கொள்கைதான் அரசியல் சட்டத்தில் இருக்கிறது. நமக்கு பின்னாளில் விடுதலை அடைந்த நாடுகளில் பாகிஸ்தான் எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அங்கு மதச்சார்பு இல்லை. ஒருமதம் ஆட்சி என்று உள்ளது. இலங்கையிலும் பௌத்தர்கள், சிங்களர்கள், யாழ்ப்பாண தமிழர்கள், பௌத்தர்களுக்கு என்ன உரிமை உண்டோ அதை விட அதிகப்படியான உரிமை ஈழத்தமிழர்களுக்கு உண்டு. அவர்களில் பல மதம் இருக்கிறது. இஸ்லாம் பேசக்கூடிய முஸ்லீம் இருக்கிறார்கள், தமிழ்பேசக்கூடிய தமிழர்கள் இருக்கிறார்கள், தமிழ்பேசக்கூடிய கிறித்துவர்கள் இருக்கிறார்கள். இதெல்லாம் விட்டுவிட்டு மதம் என்பது பொதுவானது என்று இல்லாமல் பௌத்தர்தான் ஆட்சிமதம் என்று கொண்டுவந்துவிட்டார்கள். சிங்களம்தான் ஆட்சி மொழி என்று கொண்டுவந்துவிட்டார்கள். தமிழர்களுக்கு மரியாதை இல்லாமல் போகிறது. 30 சதவீத பூர்வீகத் தமிழர்கள் இருக்கிறார்கள், தமிழ் ஒரு முக்கியமான மொழியாக இருந்தது. அதை நீக்கும் பொழுது மதமும் பௌத்தமதம் ஆட்சிமதம், மொழியும் சிங்கள மொழி என்று வரும்பொழுது தொன்மையான மொழியை தாய்மொழியாகக் கொண்ட யாழ்ப்பாணத் தமிழர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. தமது மொழிவாரி உரிமைக்காக அவர்கள் பாடுபட்டார்கள். அந்த ஒற்றுமையை சீர்குலைத்தது சிங்களர்கள். பௌத்த சாமியார்களும் சேர்ந்து அடக்கி சர்வாதிகார ஆட்சி வந்தது. நேருகாலத்தில் சிறிது கட்டுப்படமுடிந்தது. அதற்குப் பிறகு வந்த காங்கிரசு ஆட்சி அமெரிக்கா மற்றும் சீனாவுடன் சமரசம் வைத்துத்தான் இன்று நம் நாட்டில் தமிழர்களின் உரிமையை பறிக்கப்படுவதற்கு இவர்களும் துணையாக இருந்திருக்கிறார்கள். இதை எதிர்த்துப் போராடுவது நியாயமானது, தமிழர்களின் உரிமையும் நியாயமானது. போராட்ட முறைகளில் வித்தியாசம் இருக்கிறது. சேதாரத்தை உண்டாக்கியது, உலகவாழ்க்கையிலேயே பெரிய போராட்டம் முப்பது ஆண்டுகளாக நடந்திருக்கிறது. பெரிய சோகமானதாகிவிட்டது. வெளிநாட்டிலே தமிழர்கள் என்பது 5 லட்சத்திற்கு மேல் பல இடங்களில் நாடுகடந்து சென்றிருக்கிறார்கள் என்றால் இது மனித வளத்தின் மிகப்பெரிய சோகமாக இருக்கிறது.

ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே திட்டத்தில் வடக்கு-கிழக்கை இணைத்துக் கொண்டுவரவேண்டும் என்று சொன்னார்கள், அதைக் கொண்டுவரவில்லை. கட்சத்தீவை நாம் கொடுத்தது தவறு. அதனால் தமிழ்மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் தமிழ் மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. 1974ல் வந்த ஒப்பந்தம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க உரிமை உண்டு அந்தோனியார் கோவில் இருக்கக்கூடிய கச்சத்தீவில் தங்கி வியாபாரம் செய்யலாம் என்றெல்லாம் வந்தது. இவையெல்லாம் தடுக்கப்படுகிறது. நம் தமிழ்நாட்டு மீனவர்கள் தடுக்கப்படுகிறார்கள், கைதுசெய்யப்படுகிறார்கள். கிட்டத்தட்ட 400, 500 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பிடித்த மீன்களை கடலில் போடுவதும், படகுகளை வசப்படுத்திக்கொள்வதும் இது இன்னும் ஈழத்தமிழரின் உரிமையைத் தாக்கி அழித்தது, 2009 மே 17 அது முடிந்துவிட்டது. முடிந்த பிறகும் அபாயம் என்று சொல்லி அந்த மக்களை குடிபெயர்ந்து வைத்து அந்த மக்களுக்கு இன்னும் வாழ்விடம் கொடுக்காமல் அழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தொடர்ந்து மத்திய அரசாக காங்கிரசு இருக்கும் பொழுது துணையாக இருந்தார்கள். இப்பொழுதும் துணைபோய்க்கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கேள்வி: தமிழகத்தில் நேர்மையான அரசியலை முன்னெடுக்க என்ன வழி?

பதில்: சாதியின் பெயரால் இப்பொழுது ஒரு வளர்ச்சி வந்திருக்கிறது, படிப்பு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் படித்த மாநிலத்தில் தமிழ்நாடு ஒன்று. படித்து சட்டங்களுக்காக போராடும் சூழ்நிலையில் சாதியை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தார்கள், அது தவறு. இதெல்லாம் தடுத்து நிறுத்தி தமிழகம் என்ற பெருமையோடு இருக்கக்கூடிய தமிழ் மொழிக்கும் பாதுகாப்பு இல்லை. செம்மொழி என்று அந்தஸ்து வந்திருந்தாலும் கூட தமிழ் மொழிக்கு பாதுகாப்பு இல்லை. தனியார் பள்ளி அதிகமாகிவிட்டது. ஆங்கிலவழிக் கல்விக்குத்தான் ஆர்வம் இருக்கிறதே தவிர தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறது. இதெல்லாம் பாதுகாத்து நிற்கவேண்டும் என்று சொன்னால் தமிழ்மீது ஆர்வம் கொண்டுள்ளோரும், தமிழ்மக்கள் மீது உள்ள உரிமைக்கும் போராடக்கூடிய பலர்களில் இன்றைக்கும் ஜனநாயக இயக்கமும், இடதுசாரி இயக்கமும் தமிழ்மீது பற்றுகொண்ட அனைவரும் சேர்ந்து நின்று போராடுவது அவசியம்.

கேள்வி: இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனிப்பெரும்பான்மை அடையாததற்கு என்ன காரணம்?

பதில்: அதற்குக் காரணம் சிலர் தமிழ் பேசியே அரசியலுக்கு வருகிறார்கள், சாதியைப் பேசியே அரசியலுக்கு வரவேண்டும் என்று பார்க்கிறார்கள். நாங்கள் உழைக்கும் மக்களின் உரிமையை மையமாக வைத்து அதற்காக தமிழை புறக்கணிப்பது இல்லை, பாராளுமன்றத்தில் ஜீவானந்தம் இருக்கும் பொழுது Hindi never English ever என்று சொல்லும்பொழுது Tamil where? என்று கேட்டவர் ஜீவானந்தம் தான். இந்தி அறவே வேண்டாம் ஆங்கிலம் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்று சொல்லும்போது தமிழுக்கு இருப்பிடம் எங்கே என்று கேட்டார். அதனால் தமிழ்மொழிப் பற்றுதல் எங்களுக்கு உண்டு. தமிழை வைத்து தமிழ் பேசும் பொழுது சாதி பேசுவது எப்படி தமிழர் என்ற முறையில் எப்படி ஒற்றுமைப்படுத்த முடியும். அரசியல் என்றால் சாதி பேசியே அரசியல் கொண்டுவருகிறார்கள் எங்களது சாதி இவ்வளவு இருக்கிறோம் என்று சொல்லி. அப்பொழுது தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. இப்படி இருக்கும் பொழுதுதான் தனியார் பள்ளிகள் எல்லாம் ஆங்கிலப் பள்ளிகளாக வருகிறது. தமிழ் பயிற்சி மொழியாகக் கொடுத்து அந்தத் தமிழ் பயிற்சி மொழிக்கு உள்ள உத்திரவாதம் கொடுத்து அதில் படித்து வருகிறவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றால் தமிழை பயிற்சி மொழியாக எடுப்பார்கள். ஆனால் ஆங்கிலம்தான் எல்லாமே என்ற மாயையை உருவாக்கிவிட்டார்கள். தனியார் பள்ளிகள் தான் அதிகமாக நடக்கிறது. சாதி பெயரால் அரசியல் வரக்கூடாது, மதத்தின் பெயரால் அரசியல் வரக்கூடாது, உழைக்கும் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தாய்மொழிப் பற்று வேண்டும் என்று கொள்கை வழி பேசும் பொழுது இது பலருக்கு பிடிப்பதில்லை. இதெல்லாம் தனிப்பட்ட முறையில் அம்பலமாகித்தான் அப்புறம் உண்மை ஒருநாள் வெளியாகும். மாற்றம் வரும் வராமல் இருக்காது.

கேள்வி: தனியார்மயம், உலகமயம் ஆகக்கூடிய சூழலில் தமிழக மக்களுக்கு இறுதியாக தாங்கள் கூறவிரும்பும் கருத்து என்ன?

பதில்: உலகமயமாக்கலில் இந்தியாவில் எல்லாமே தனியார்மயமாக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பின்புதான் சிறுதொழிலுக்கும் முதலீடு கொடுத்தார்கள். அந்த வங்கிகள் எல்லாம் தனியார் மயமாக்குவது என்று சொன்னால் அந்த வங்கிகள் எல்லாம் குறிப்பிட்ட பேருக்கு உள்ளாகிவிடும், சிறுதொழில் பாதிக்கும். அதே நேரத்தில் விளைநிலங்கள் எல்லாம் தொழில் வைக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு ஆயிரம் ஏக்கர் special economic zone சிறப்பு பொருளாதார மண்டலம் என்று கொண்டுவரும் பொழுது அவர்களுக்கு ஆயிரம் ஏக்கர் கொடுக்கிறார்கள், ஒரு தொழில் நடத்த நூறு ஏக்கர் போதும். ஆனால் அந்த ஆயிரம் ஏக்கரை வைத்து அவன் real estate தான் செய்வான். அந்த விவசாய நல்ல விளைநிலத்தை அவர்கள் அழித்துவிடுவார்கள். அந்த மாதிரி வரும்பொழுதும் தமிழ்நாட்டை பாதிக்கும். எல்லா துறைகளையும் தனியார் மயமாக்கும் பொழுது தொழில் சட்டங்களைத் தடுப்பார்கள், தொழிலாளர்களுடைய உரிமைகளை மறுத்தால்தான் எனக்கு லாபம் வரும் என்று சொல்வார்கள். எந்த வகையிலும் உலகமயமாக்கக்கூடிய அடிப்படையில் எல்லா பொதுத்துறையையும் தனியார் மயமாக்கும்படி வருகிறது.

காந்திகிராம வேலைவாய்ப்புத் திட்டம் வந்தது, அது கிராமப்புரத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் அதாவது பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுப்பதற்கு உத்தரவாதம் இருந்தது. கிராமப்புரத்தில் அனைத்து இடத்திலும் மூன்றுபோகம் விளைவது கிடையாது. மூன்றுபோகம் விளையும் இடத்திலேயே எண்பதுநாள்தான் வேலை இருக்கும். விவசாயத்தில் அதிக நாள் கிடைக்காது. எண்பது நாட்களுக்கு மேல் வேலை கிடைக்கவில்லை என்றால் இவர்கள் நகர்புறங்களுக்குத்தான் குடிபெயர்ந்து போவார்கள். அதைத் தடுத்து நிறுத்துவதற்காகத்தான் மகாத்மாகாந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வந்தது. அதனால் கிராமத்தில் உள்ள ஏழை பெண்கள், நடுத்தரப்பெண்கள் முதற்கொண்டு வேலைக்குப் போவார்கள். அதனால் குறைந்தபட்ச கூலியாவது கிடைத்துவிடும். அந்த விவசாய வேலை இல்லாத மறுநாளில் நகர்புறங்களுக்கு குடிபெயர்ந்து வருவது தடுக்கப்பட்டது. அங்கேயே இருக்கலாம் அன்றன்றைக்கு ஒரு வேலை கிடைக்கிறது என்று இருந்தார்கள். அதையும் இந்த அரசு தடுத்து நிறுத்தி குறைக்கிறது. இந்த மாதிரி உலகமயமாக்கல் கொள்கை என்பது எல்லா இடத்திலேயும் மீத்தேன் போன்ற அவர்களை கொள்ளையடிக்கத்தானே வழி விடுகிறது, பெருமுதலாளிகள் கொள்ளையடிக்கத்தான் விடுகிறது. அதனால் தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்து இருக்கிறது. முன்பு நம் ஊரில் எங்கு வேண்டுமென்றாலும் தண்ணீர் கிடைக்கும். இப்பொழுது பாட்டில் தண்ணீர்தான் வாங்கவேண்டியிருக்கிறது. ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் மனிதனுக்குத் தேவை. 4 லிட்டர் தண்ணீர் என்றால் நூறு ரூபாய் ஆகிறது அப்படி ஏழை எளிய மக்களால் வாங்க முடியுமா?. அந்த வசதி உள்ளவர்கள்தான் வாழமுடியும் என்ற நிலைமை உருவாகிறது. அதனால்தான் ஆபத்து இருக்கிறது.

சிறகு இதழுக்கு நேர்காணல் அளித்த தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு நன்றி.

 


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தோழர் நல்லகண்ணு அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது