நல்ல நேரம்
செல்வக்குமார் சங்கரநாராயணன்Jul 16, 2016
நேரம்! பொதுவாக மூன்று வகைக்குள் அடங்கும், அவை இறந்த, நிகழ் மற்றும் எதிர்காலங்கள். இறந்தகாலம் என்பவை நம் முடிந்த செயல்களையும் கடந்து வந்த நேரங்களையும் குறிக்கும். அதே போல நிகழ்காலம் என்பது இதை நான் எழுதிக்கொண்டு இருப்பது, எதிர்காலம் என்பது நீங்கள் படிக்கப்போகும் சமயம். இப்படித்தான் காலங்கள் வகையுண்டு. ஆனால் பொதுவாக இவை எப்பொழுதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது கிடையாது. மாறாக நல்ல நேரம், கெட்ட நேரம் தான் அதிகம் நம் கவனத்திற் கொள்ளப்படுகிறது.
நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பதன் மூலம் உங்களால் ஒன்றையும் மாற்ற முடியாது. நம்பிக்கைகள் என்றுமே நமக்குத் தேவையான ஒன்று தான், அதை நான் எப்பொழுதும் மறுப்பதில்லை. ஆனால் பல மூட நம்பிக்கைகளைத்தான் வேண்டாம் என்கிறேன். உடனே என்னை நாத்திகன் பட்டியலில் சேர்த்துவிட வேண்டாம், பிறகு நான் வணங்கும் விக்கிரகங்களை சான்றாக அனுப்ப வேண்டி வரும். இல்லையென்றால் நினைத்தாலும் தான் பரவாயில்லை, அந்த உரிமையாவது வாசகர்களுக்குக் கொடுக்காவிட்டால் எப்படி என்னை நான் எழுத்தாளர் வரிசையில் சேர்த்துக்கொள்வது.
சரி, விசயத்திற்கு வருவோம். நேரே நாட்காட்டியை எடுக்கவும் அதில் நல்ல நேரம் எவ்வளவு மணி நேரத்திற்கு போடப்பட்டிருக்கிறது என்று குறிக்கவும். பிறகு ஒரு வாரத்திற்கும், ஒரு மாதத்திற்கும் எவ்வளவு நேரம் அதில் கழிக்கப்படுகிறது என்பதை கணக்குப் போட்டுப் பாருங்கள். கொஞ்சம் தலை சுற்றும்! சுற்றட்டும் சுற்றட்டும். ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள் நேரத்தில் நல்ல நேரம் கெட்ட நேரம் என்று ஒன்று இல்லவே இல்லை. நேரம் பொன் போன்றது அவ்வளவுதான், பொன்னில் (தங்கத்தில்) எது நல்ல பொன்? கெட்ட பொன்?. “போனால் வராது, பொழுது போனால் திரும்பாது“ என்று கிராமத்தில் ஒரு சொலவாடை உண்டு. அதாவது போன பொழுது வருவதும் இல்லை, திரும்புவதும் இல்லை என்பது தான் அது. அப்படி அந்தப் பழமொழிக்கு வேறு அர்த்தமும் இருந்தால் கூட நாம் இதற்கே வைத்துக்கொள்வோம்! ஏனென்றால் நமக்கு இது இந்த நேரத்தில் தேவை.
ஒரு சிறிய தவிர்க்கவியலா உதாரணம் இங்கே சொல்லியே ஆகவேண்டும்,
உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து உங்களுக்கு ஒரு அழைப்பு வருகிறது, உங்கள் நண்பர் ஒருவர் சிறு விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் உங்கள் இரத்த வகை அவருக்குப் பொருந்தும் என்றும் உங்களை உடனே அழைக்கிறார்கள். அப்பொழுது கெட்ட நேரம், நல்ல நேரம் நாட்காட்டி பார்த்துத் தான் போவீர்களா? நிச்சயமாக இருக்கவே இருக்காது. ஏனென்றால் இரத்தம் கொடுப்பதற்கு என்ன தேவை, சரியான உடலளவு இரத்தம் கொடுத்து மூன்று நான்கு மாதங்கள் கடந்திருப்பது நலம் மற்றும் முக்கியமான ஒன்றாக மது அருந்தியிருத்தல் கூடாது. ஆக இக்காரணிகள் தான் முக்கியமானவை, இவற்றை ஆராய்ந்து தான் நீங்கள் அந்தச் செயலைச் செய்ய கிளம்புவீர்கள். இப்பொழுது நீங்கள் ஒருபொழுதும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்கவும் போவதில்லை ஏனென்றால் அது அவசியமற்றது என்று உணர்வுப் பூர்வமாக உணர்ந்ததன் விளைவே அது. இப்படி சின்ன சின்ன விசயத்திலும் நம் அறிவை பயன்படுத்தி தெளிந்த நல்லறிவோடு செயல்படுவது மிகவும் புத்திசாலித்தனம். குடும்பத்தினரிடமும் இது போன்ற மூடப் பழக்கவழக்கங்களைக் களைவது பற்றிப் பேசுதல் நலம்.
நாம் சராசரியாக 30,000 நாட்கள் தான் வாழ்கிறோம். ஆகவே ஒவ்வொரு மணித்துளியும் இன்றியமையாததுவே! ஐந்து கோடி விந்தணுவில் ஒன்றே ஒன்று தான் தாயின் கருவறைக்குள் உயிர்பிழைத்து வெளிவந்து இங்கே உலவிக்கொண்டு இருகிறோம், இது அங்கே சாத்தியப்பட்டதற்குக் கூட சில வினாடிகள் தான் தாமதம். இல்லையென்றால் நீங்களும் நானும் இங்கிருந்திக்க மாட்டோம். வேறு யாரோ நம் இடத்தில் பூர்த்தி செய்யப்பட்டிருப்பார்கள். இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் நேரத்தின் அருமை என்னவென்று. இனிமேலாவது காரியத்தை தள்ளிப் போடாதீர்கள். நேரத்தை அழகுற செலவழியுங்கள், அது எந்த நேரமாக இருந்தாலும்! ஏனென்றால் இனியொரு பிறவி என்பதில் உறுதி இல்லைதானே!
எல்லா நேரமும் நல்ல நேரம் தான் நீங்கள் செய்யும் காரியம் நல்லதாக இருந்தால்.
செல்வக்குமார் சங்கரநாராயணன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நல்ல நேரம்”