மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாளை நமதே!

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Aug 27, 2016

Siragu positive thinking3

நாளையும் சரி, நாளும் சரி என்றும் நமதே தான். ஆனால் நாளை நமதே என்பதை பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். நீங்கள் நினைக்கும் அந்த நாளை நமதே என்பதன் அர்த்தம் இன்றை சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே புரியும், அவர்களால் மட்டுமே அதன் மகத்துவத்தையும் உணர முடியும். செய்யும் வேலை துவங்கி சிறு சிறு நிகழ்வுகள் வரை இன்றை யார் யார் விரயம் செய்கிறார்களோ, அவர்களால் தான் அந்த நாளையை நமதாக்க முடியும் என்பதே ஆகச்சிறந்த உண்மை.

நாளைக்குச் செய்வோமென்று இன்றைக் கொன்றுவிடாதே! அதென்ன இன்றைக் கொல்வது என்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம். சிலர் எப்பொழுது எடுத்தாலும் சில வேலையைச் செய்யும் பொழுது நாளைக்குப் பார்த்துக் கொள்வோம், நாளைக்கு முடித்துக் கொள்வோம் என்றவாறாக நினைத்து இன்றைய பொழுதை உதாசீனம் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் அடுத்த நாள் வந்தால் அந்த வேலையை அதே போல அதற்கு அடுத்த நாளிற்கு தள்ளிப் போடுவதை வாடிக்கையாய்க் கொண்டவர்கள். இவ்வாறு நேரத்தின் அருமையை உணராமல் நாளை நாளை என்று ஒவ்வொரு இன்றையும் கொன்று புதைப்பவர்கள்.

சரி! இந்த தள்ளிப் போடுவதால் அப்படி என்ன எனக்கு வந்து விடப்போகிறது என்றும் ஒரு கேள்வியை இப்பொழுது முன் வைப்பீர்கள். உங்களை நான் உங்கள் பள்ளிக் காலத்திற்கு அழைத்துச் செல்கிறேன். ஒவ்வொருவரும் உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் உங்களில் எத்தனை பேர், “நான் அன்றைக்கு நல்லா படிசுருக்கலாம்“, “நான் அன்றைக்கே அந்த கம்பெனிக்கு வேலையில் சேர்ந்திருக்கலாம்“ என்பதாக இன்னும் புலம்பவில்லை என்பதை உங்களால் மறுக்க முடியுமா?. இது தான் யதார்த்தம்!. நாம் ஒவ்வொரு முறையும் இன்றைத் தள்ளிப் போட்டு போட்டு வாழ்வின் வருங்காலத்தை சில ஆண்டுகளுக்கு தள்ளிப் போடுகிறோம் என்பது நிதர்சனமான உண்மை.

Working time

எல்லாருக்கும் எது சரி, எது தவறென்று தெரிகிறது. ஆனால் அதை செயல்படுத்துவதற்கு யாரோ ஒருவரது உந்துதலை மனம் எதிர்பார்க்கிறது. அது அன்னையோ, தந்தையோ, நண்பனோ, உறவினரோ என்று யாராவது ஒருவரைத் தேடுவது மனித இயல்பு. எதற்கும் காத்திருக்காதீர்கள் உங்களுக்கு ஏதேனும் சரி என்று பட்டால் உடனேயே அதைச் செய்து விடுங்கள் அப்பொழுது தான் நீங்கள் பெரிய மன வருத்ததிலிருந்தும் தப்ப முடியும்.

ஒரு முறை எனது நண்பரின் தந்தையைக் காணச் சென்றிருந்தேன் அப்பொழுது அவர்கள் புதிதாக வாங்கியுள்ள இடத்தைச் சுற்றிக்காட்டி இங்கே தான் நாங்கள் வீட்டைக் கட்டி குடிபுகப்போகிறோம் என்று சொல்லி ஏழு மாதங்களுக்குள் அதை நிகழ்த்தியும் காட்டி விட்டார். எனக்குப் பேராச்சர்யம்! ஏனென்றால் என் நண்பரின் தந்தையிடம் இருக்கும் வேகத்தை என் நண்பரிடம் எவ்வித செயலிலும் கண்டதே இல்லை. அப்பொழுது அது பற்றி என் நண்பரின் தந்தையிடம் வினவினேன். அதற்கு அவர் கூறிய பதில் தான் என் வாழ்வை மாற்றுவதற்கு ஒரு சிறு பொறியைக் கொடுத்தது. அதே இடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்தையும் அவரை வாங்கச் சொல்லியிருக்கிறார் அந்த இடத்துக்காரர். முன் பணம் வரை கொடுத்துமாயிற்று! பிறகு ஏனோ அதை வாங்க மறுத்து விட்டார் நண்பரின் தந்தை. ஆனால் இன்று அந்த இடத்தில்  ஒரு மூலையை  அன்றைக்கு கொடுக்கவிருந்த மொத்தத் தொகைக்கும் பல மடங்கு அதிகம் கொடுத்து வாங்கியிருக்கிறார். இத்தனைக்கும் இவையெல்லாம் நடந்தது ஒரு ஐந்து ஆண்டுகளுக்குள் தான். அப்பொழுதுதான் வாய்ப்பின் மகிமையும், நாளின் பெருமையும் உணர்ந்து கொண்டேன்.

நம்மை மாற்றும் அனைத்து நிகழ்வுகளும் நமக்குள்ளேயே இருக்கிறது அல்லது நம்மைச் சுற்றி இருக்கிறது. இதற்காக எந்த நூற்றாண்டுக்கும் செல்லவேண்டாம், எந்த உதாரணத்தையும் தேடவும் வேண்டாம். அதே போலத்தான் நாம் அனைவரும் இன்று  இருப்பது போல் நாளை இருக்கபோவது இல்லை, அதே சமயத்தில் இந்த நாளும் நாளை நம்மோடு இருக்காது! குப்பைக் கூடையில் கிழிக்கப்பட்ட நாட்காட்டியில்  ஒரு நாளை புதைத்து விடத்தான் போகிறோம். இயன்றவரை அதைப் பயன்படுத்தி விட்டு கிழித்து எறியுங்கள். நாளை நமதே என்பதற்காக ஒவ்வொரு இன்றையும் சவப்பெட்டிக்கு அனுப்பாதீர்கள். அவ்வாறு செய்யும் பொழுது இன்று மட்டும் அல்ல,  அந்த நாளை கூட எதற்கும் உபயோகப்படாது.


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாளை நமதே!”

அதிகம் படித்தது