மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நீரின்றி அமையாது உலகு

கி.ஆறுமுகம்

Nov 28, 2015

neerindri3நீரின்றி அமையாது உலகு என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருவள்ளுவரின் குறளை மட்டும் மாணவர்களுக்குப் பாடமாக வைத்துவிட்டு, அதை உணரவில்லை நமது அரசு. எனவேதான், இயற்கை தமிழக அரசுக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது. மழையின் சிறப்பினை திருவள்ளுவர் மட்டும் கூறவில்லை, மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என மழையைப் போற்றி வணங்கித் தம் காப்பியத்தைத் தொடங்கினார் இளங்கோவடிகள். ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் மழையின் அருமைபெருமைகளை உணர்ந்துள்ளோம். இந்த ஆண்டில் நமக்கு இயற்கை கொடுத்த மழைநீரை வீணாக்கியதுதான் நாம் செய்த சாதனை. ஆய்வாளர்கள் நிலத்தடி நீர் குறைந்து வரும் மாநிலமாக தமிழகம் உள்ளது என தமது அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். இதனைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படவில்லை, அரசும் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.

neerindri7நமது தமிழகத்தில் 13 ஆயிரத்து 799 ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 10 ஆயிரத்து 64 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. தனது ஆவண அறிக்கையில், சென்னையில் முன்பு இருந்த ஏரிகள் இன்று காணவில்லை. ஆம், நுங்கம்பாக்கம் ஏரி, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கத்தில் சில பகுதிகள், பனகல் மாளிகை, மாம்பலம் ஏரி, மாம்பலம் பகுதியின் சில பகுதிகள், வேளச்சேரி ஏரி, 100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால், அல்லிக்குளம், நேரு ஸ்டேடியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், கோயம்பேடு ஏரி, கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு சந்தை, மெட்ரோ ரயில் நிலையம், முகப்பேர் ஏரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, விருகம்பாக்கம் ஏரி, தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு மற்றும் இன்று கல்வித்துறையில் உயர்ந்த நிலையில் உள்ள நிறுவனங்களின் ஏரி, பொத்தேரி முதலான பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு இன்று நீர் தெருக்களில் வந்துவிட்டது, வீட்டுக்குள் வந்துவிட்டது என்று நாம் கூறுகிறோம். நீர் வரவில்லை நாம் தான் அதன் இடத்தில் உள்ளோம். இயற்கையை அதன் இடத்தில் வாழ விடாமல் நாம் செய்தால் இயற்கை நம்மை வாழ விடாது. நாம் பூமித்தாயின் நீர் வளத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறோம். அதனை சரி செய்ய இயற்கை முயன்றாலும் அதனையும் நாம் தடுத்துவிட்டோம்.

neerindri92005ல் வந்த மழை நீரையும் நாம் வீணாக கடலில் கலக்க விட்டுவிட்டோம். இந்த ஆண்டும் நாம் அதையே செய்துவிட்டு அண்டை மாநிலத்திடம் தண்ணீருக்காக போராட்டம் செய்யப்போகிறோம். ஏன், நமக்கு கிடைத்த தண்ணீரை சேமிக்க என்ன வழிமுறைகளை கையாண்டோம், ஏன் மக்கள் சிந்திக்கவில்லை. நாம் நமது அரசை குறைகூற நமக்கு அருகதை கிடையாது. ஏனென்றால் இலவசங்களில் மயங்கி இவர்களைத் தேர்ந்தெடுத்தது நாம்தான் என்பதை மறந்து விடக்கூடாது. நமக்கு யார் நல்லது செய்வார்கள் என்று சிந்திக்காமல் தேர்ந்தெடுத்தது நமது தவறு. நமது தவறை மறைக்க அரசைக் குறை கூறக்கூடாது. நாம் என்ன செய்தோம் மழை நீரை சேமிக்க.

neerindri10சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்பு அமைக்க வேண்டும், பல அடுக்குமாடி கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு செயல்படுத்த வேண்டும், அவ்வாறு இருந்தால்தான் மின்சார இணைப்பு மற்றும் இதர உரிமங்கள் என்று ஆணை பிறப்பித்தது. பின் சில ஆண்டு நாம் அதை பின்பற்றினோம் நமது வசதிக்காக, பிறகு அதனை நாம் தொடர்ந்து செயல்படுத்தினோமா?, எத்தனை பேர் வீடுகட்டும்போது மழைநீர் பூமியில் இறக்கிவிட வேண்டும் என்று மழைநீரை சேமிக்க இடம் வைத்து உள்ளீர்கள்?. இதனைச் சொன்னால் சென்னையில் கட்ட இடம் கிடைப்பதே அறிது, அதில் சில அடிகளை நாம் ஏன் வீணாக்க வேண்டும் என்று முழுவதும் கட்டிடம், அது மட்டும் அல்லாமல் சாலைகள் முழுவதும் தார் சாலை, சிமெண்ட் சாலை என்று போட்டு தண்ணீரை நிலத்தில் இறங்கவிடாமல் கால்வாய்களில் கழிவுநீருடன் கலந்து சென்று கடலில் கலக்க வைத்து விட்டோம். மற்றும் ஏரி குளங்களை நாம் சரியாகப் பராமரிக்கவில்லை ஏரிகள் அதன் கொள்ளளவை முழுவதும் எட்டவில்லை, ஏரிகள் தூர்வாரவில்லை.

சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி 3.1 டி.எம்.சி, செம்பரம்பாக்கம் 3.3 டி.எம்.சி, புழல் 3.6 டி.எம்.சி, சோழவரம் 0.8 டி.எம்.சி போன்ற ஏரிகளில் நீர் திறந்து விடப்பட்டு, அடையாறு ஆற்றின் மூலம் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரிகளில் இருந்து வெளிவரும் தண்ணீர் சுமார் 36 ஏரிகளுக்கு செல்லும், ஆனால் அவை இன்று இல்லை. அதனால் இந்தத் தண்ணீர் கடலில் கலக்கிறது.

ஏரிகளின் உண்மையான பரப்பளவு மற்றும் அதன் ஆக்கிரமிப்புகளும்:

neerindri5

மேலும் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள சில ஏரிகளாவன அம்பத்தூர் ஏரி, ரெட்டேரி ஏரி, புழல் ஏரி போன்றவைகளும் இதில் அடங்கும். இது போன்ற ஏரிகளை நாம் அழித்ததின் விளைவு வீடுகளில் தண்ணீர், நமது இயல்பு வாழ்க்கை பாதிப்பு. நாம் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் பொருள்களின் குப்பைகள் மற்றும் கழிவுகளை சரியான இடத்தில் நாம் சேர்த்துள்ளோமா?. குப்பைகளை கால்வாய்களில் கொட்டி கழிவுநீர் செல்ல தடை, நெகிழி பைகளை (பிளாஸ்டிக்குகளை) தெருக்களில் வீசி பூமிக்குள் தண்ணீர் செல்ல தடை செய்து, தண்ணீர் தன் இருப்பிடத்திற்குச் செல்ல தடை செய்ததுதான் நமது சாதனை.

நான்கு மாத பருவ மழையைத் தாங்கிய பூமியை, நான்கு நாள் மழையைத் தாங்க முடியாதபடி செய்துவிட்டோம். நமது அரசு இந்த ஆண்டில் தீபாவளிப் பண்டிகையில் தண்ணீரில் (டாஸ்மாக்) தேடிய வருவாய் 375 கோடி. ஆனால் இயற்கை அரசுக்கு விதித்த அபராதம் 500 கோடிக்கு மேல், தண்ணீரில் வந்தது தண்ணீரினால் போனது. அண்டை மாநிலம் தண்ணீர் தரவில்லை என்றால் போராட்டம் துவக்குகிறோம், ஆனால் நாம் தண்ணீரை சேமிக்கவில்லை. அந்தத் தண்ணீரை எப்படி சேமிப்பது என்பதை அண்டை மாநிலத்திடம்தான் கற்க வேண்டும். ஆந்திராவில் பாலாற்றில் அணை கட்டினால் உடனே போராட்டம், கேரளாவில் அணை கட்டினால் போராட்டம், கர்நாடகாவிலும் இதே நிலை. இவர்கள் அனைவரும் நீரை சேமிக்க அணை கட்ட செலவு செய்கின்றனர். ஆனால் நமது அரசு? 2012-13ம் ஆண்டில் அறிவித்த திட்டங்கள் செலவிட்ட தொகைகளாவன, இலவச மடிக்கணினி (லேப்டாப்) திட்டம் – 10,000 கோடி, இலவச மின் விசிறி மற்றும் கிரைண்டர் திட்டம் – 1250 கோடி, இலவச வேட்டி சேலை – 300 கோடி என்று நாம் இது போன்ற இலவசங்களில் தான் உள்ளோம்.

neerindri11அண்டை மாநிலமான ஆந்திர அரசு, கோதாவரி கிருஷ்ணா நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கான (174 km) செலவு 1300 கோடி. தொடக்கம் 2014, முடித்தது 2015ல். நாம்? எத்தனை அணைகளைக் கட்டிட திட்டம் போட்டுள்ளோம்?, எத்தனை ஆற்றினை இணைத்துள்ளோம்?, ஆறுகளில் இருந்து வரும் கால்வாய்களையும் ஆக்கிரமிப்புதான் செய்துள்ளோம். இது மட்டுமல்ல வேளச்சேரியில் உள்ள சதுப்பு நிலப்பகுதியையும் அழித்துக் கொண்டிருக்கிறோம். சதுப்பு நிலம் என்பது தொடர்ந்து நிலத்தடி நீரை சேமிக்கும் இடம். இது இருக்கும் இடத்திலிருந்து இதன் சுற்றுவட்டாரத்தின் நிலத்தடி நீரை பாதுகாக்கும் தன்மை கொண்டது இந்த சதுப்பு நிலம். இதனை நாம் அழித்து வேளச்சேரி பகுதியின் நிலத்தடி நீரை அழித்துக் கொண்டிருக்கிறோம். இது போன்று நாம் நமக்கு இயற்கை தந்த தண்ணீரையும் சேமிக்கவில்லை, நிலத்தடி நீரையும் சேமிக்கவில்லை. இயற்கை கொடுத்ததை அழித்துவிட்டு, நாம் குடிக்கும் தண்ணீருக்கு வரி செலுத்துகிறோம்.

அமெரிக்காவுக்கு இது எப்படி என்று சிந்திக்கிறீர்களா?. ஆம் நாம் ஒவ்வொருவரும் குடிக்கும் தண்ணீர் RO water. இந்த RO உரிமம் அமெரிக்காவுக்கு சொந்தமானது. இயற்கைத் தண்ணீரை அழித்துவிட்டு கடல் நீரை குடிநீராக மாற்ற நாம் பல திட்டம் செயல்படுத்துகிறோம். இந்த RO அனைத்திலும் அமெரிக்கா பணம் சம்பாதிக்கிறது, நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். APJ அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தபோது, அறிவியல் ஆலோசகராக இருந்தவரும் அப்துல் கலாமும் இனைந்து தமிழகத்தில் நதிகளை இணைக்க வேண்டும் என்று ஒரு அறிக்கையை தமிழக அரசிடம் கொடுத்தனர். அதனை கிடப்பில் போட்டுவிட்டது நமது அரசு. தமிழகத்தில் பருவமழையின் அளவு 96 cm ஆகும். நமக்கு இந்த ஆண்டு வந்தது 46 cm தான். இதனையே சென்னை மற்றும் பிற பகுதிகள் மற்றும் தமிழகம் தாங்கமுடியவில்லை, சாலைகள் காணவில்லை. 96 cm மழை என்றால் தமிழகமே காணாமல் போய்விடும். நமது முன்னோர்கள் ஆறு குளங்களில் தண்ணீரைப் பார்த்தனர், நாம் எப்போதாவது பார்த்திருக்கிறோமா?. இதே நிலைமை தொடர்ந்தால் நமக்கு பிறகு வரும் சந்ததிகள் தண்ணீரையே அதிசயமாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

இனியாவது நீரைப் பாதுகாப்போம், நீரை சேமித்து பயன்படுத்துவோம் என்று உறுதி எடுப்போம்.


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீரின்றி அமையாது உலகு”

அதிகம் படித்தது