நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சரியான தருணம் இது..
சா.சின்னதுரைDec 19, 2015
நுாறு ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த மழைதானே. அடுத்த கன மழை எப்போதாவதுதானே வரப்போகிறது என்று, அனைத்தையும் மறந்து பழையபடியே இருக்கப் போகிறோமா? இந்த அளவுக்கு மழை அடுத்த ஆண்டும் வரலாம், ஏன் அடுத்த மாதம்கூட வரலாம். மாறிவிட்ட புவி வெப்பச் சூழ்நிலையில் எதுவும் எப்போதும் நடக்கும். நாம் அனைவருமே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, தற்காத்துக் கொள்ளப் போகிறோமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி..
கடந்த சில தினங்களில் தமிழகமெங்கும் கொட்டித் தீர்த்த பருவ மழை, பல படிப்பினைகளை நமக்கு கொடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் பெரிய அளவில் வெள்ளச்சேதம் ஏற்பட்டதற்கு, நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு தான் பிரதான காரணம். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்குப் பின் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண்பது எளிதாகியுள்ளது. மேலும் வெள்ள நீருடன், பல ஆண்டுகளாக சென்னையில் தேங்கி இருந்த, பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், துணிக் கழிவுகள் உள்ளிட்டவை கடலுக்கு இழுத்து செல்லப்பட்டன. இதனால், சென்னையின் நீர்வழித் தடங்கள் சுத்தமாகியுள்ளன. அரசு குறைந்தபட்சம் இப்போதாவது நிலைமையை உணர்ந்து, நீர் வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்கள் அனைத்தையும் தயவு தாட்சண்யமின்றி காலி செய்ய வேண்டும்.
சென்னையில் கூவம், அடையாறு ஆறுகள் பயணிக்கின்றன. பக்கிங்ஹாம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் -அரும்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட பல கால்வாய்கள் உள்ளன. இந்த நீர்வழித்தடங்கள், பல ஆண்டுகளாக கழிவுநீர் செல்லவே பயன்படுகின்றன. அந்த காலத்தில் இருந்தது போல ஏரி, குளங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்படாமல், முறையாக தூர்வாரி நிர்வகிக்கப்பட்டு இருந்தால், மிக கனமழை காலங்களில் இப்போது ஏற்பட்டது போன்ற சேதம் உண்டாவதைத் தடுக்கலாம் என்று நீர் வள நிபுணர்கள் கூறுகிறார்கள்.
”ஒரு நகரத்தை நிர்மாணிக்கும்போது, அதில் உள்ள நீர்நிலைகளைத் தொந்தரவு செய்யாமல் கட்டடங்களைக் கட்ட வேண்டும். முறையான வடிகால் வசதிகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை மாநகரில் இந்த விடயங்கள் பல காலமாக கண்டுகொள்ளப்படவேயில்லை. சென்னை மாநகரம் அடிப்படையிலேயே ஒரு நீர்ப்பிடிப்புள்ள பகுதி. பல ஏரிகளை விரிவாக்கம் என்ற பெயரில் அழித்து விட்டார்கள். உண்மையில் விரிவாக்கம் என்றால், ஏரிகளை அப்படியே விட்டு சுற்றியுள்ள மாவட்டங்களின் பகுதிகளை இணைப்பதன் மூலம்தான் நகரின் பரப்பை அதிகரித்திருக்க வேண்டும். ‘இவ்வளவு ஏரிகளையும், நீர்நிலைகளையும் அழித்து கட்டடங்கள் உருவாக்கப்படும்போது, நிச்சயம் இதுபோன்ற பேரழிவு நிகழும்’ என்று ஒரு வழக்கறிஞராகப் பல முறை எச்சரித்து வந்திருக்கிறேன். அது, இன்று நடந்தே விட்டது” என்கிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர். சுரேஷ்.
நகரமயமாதலின் அசுர வளர்ச்சிக்கு, நீர் நிலைகள் பலிகடாவாகியுள்ளன. 1980–ம் ஆண்டு கணக்கின்படி, சென்னையைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ 650 நீர் நிலைகள் இருந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவற்றில் பாதி, அடையாறுக்கு தெற்கே இருந்தது. 2008–ம் ஆண்டு கணக்கின்படி இந்த எண்ணிக்கை 27 ஆகிவிட்டது. பள்ளிக்கரணையில் இருந்து குரோம்பேட்டை வரை இருந்த 10 ஏரிகள், ஆக்கிரமிப்பு காரணமாக முற்றிலும் காணாமல் போய்விட்டன. நீலாங்கரை பகுதியில் 13 நீர்நிலைகள் இருந்தன. அவற்றில் 11 காணாமல் போய் இப்போது 2 குளங்கள் மட்டுமே இருக்கின்றன.
1980–ம் ஆண்டு இருந்த 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு மொத்தம் 1,130 ஹெக்டேராக இருந்தது. 2000–ம் ஆண்டில் இந்த 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு சரிபாதிக்கும் கீழாக 645 ஹெக்டேராக சுருங்கிவிட்டது. வில்லிவாக்கத்துக்கும், அம்பத்தூருக்கும் இடையே உள்ள கொரட்டூர் ஏரியின் பரப்பளவு 900 ஏக்கராக இருந்தது. இப்போது அது 600 ஏக்கராக சுருங்கிவிட்டது. மதுரவாயல் ஏரியின் பரப்பளவு 120 ஏக்கராக இருந்தது. இப்போது அது 25 ஏக்கராக சுருங்கி விட்டது.
80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் சதுப்பு நிலமாக இருந்த பள்ளிக்கரணை இப்போது குப்பைகள் கொட்டப்படும் இடமாக மாற்றப்பட்டுவிட்டது. ஆதம்பாக்கம் ஏரியை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் இணைக்கும் வீராங்கல் ஓடை, அது புறப்படும் இடத்தில் இருந்து 550 மீட்டருடன் முடிந்து விடுகிறது. மீதியை காணவில்லை. முகப்பேர் ஏரி முற்றிலும் காணாமல் போய் விட்டது.
விருகம்பாக்கம் வடிகால் முன்பு 6.5 கிலோ மீட்டர் நீளமாக இருந்தது. நுங்கம்பாக்கம் ஏரியில் முடியும் வகையில் இருந்த இந்த கால்வாய் இப்போது 4.5 கி.மீ. ஆகி விட்டது. 2 கி.மீ. நீள கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. போதாக்குறைக்கு நுங்கம்பாக்கம் ஏரி மூடப்பட்டு அதில் கட்டிடங்கள் கட்டப்பட்டு விட்டன.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறு குளங்களை பெருநிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு குடியிருப்புகள் என கட்டடங்களாக மாறியதால் வடிகால்கள், வாய்க்கால்கள், நீர்வழிப்பாதைகள் ஆகியவை இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டன.
ஏதோ தப்பித்தோம் பிழைத்தோம் என்று இருக்கும் ஏரி, குளங்களும் தொடர்ந்து நடைபெறும் ஆக்கிரமிப்புகளால், வேகமாக தங்கள் நீர்ப் பிடிப்பு ஆதார பகுதிகளை இழந்து வருகின்றன. இதன் காரணமாக மழை பெய்யும்போது அந்த நீர் நிலைகள், மழைநீரை முழுவதுமாக உள்வாங்கி சேமிக்க முடியாமல் திணறுகின்றன. குறைந்த அளவிலான இடத்தில் அதிக நீர் சேரும்போது, அவை உடைப்பு எடுத்து, மனித குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன.
நீர் நிலைகளை, தனியார் பலர் ஆக்கிரமித்துள்ள நிலையில், அதனை அகற்றி, காப்பாற்ற வேண்டிய அரசு நிர்வாகமே, அவற்றை ஆக்கிரமித்துள்ளதுதான் கொடுமை. விலை மதிப்பில்லாத நீர் நிலை பகுதிகளை ஆக்கிரமித்து இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது மட்டுமின்றி, அரசுத் துறைகளின் கட்டுமான பணிகளுக்காக, நீர் நிலைகளை தமிழக அரசு ஒதுக்கி வருவது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது.
நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால், அங்கு தேங்க வேண்டிய மழைநீர் வெளியேறி மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. நீர்நிலைகளின் அளவுகள் குறைவதற்கான காரணமாக உள்ள இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே, நகரத்தின் பெரும்பான்மையான மக்களின் துயரங்களைத் தீர்க்க முடியும். ஒரு சிலரின் சுயநலத்தால் ஏற்படுகின்ற இதுபோன்ற விளைவுகள் அபாயகரமானதாக உள்ளது.
”தமிழகத்தில் 1996-97-ம் ஆண்டு கணக்குப்படி 39,202 நீர்நிலைகள் இருந்தன. முன்னர் 50 சதவீத விவசாயம் ஏரி, கண்மாய், குளங்கள் மூலம் நடைபெற்றன. தற்போது பத்து சதவீதத்துக்கு குறைந்தளவு விவசாயம் மட்டும் நீர்நிலை பாசனம் மூலம் நடைபெறுகின்றன. இந்த நீர்நிலைகளில் பெரும்பாலானவை சோழர்கள், பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்டவை. இவற்றில் பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு காரணமாக நீர் தேக்க முடியாத அளவுக்கு சுருங்கிவிட்டன. ஏராளமான நீர்நிலைகளை Real Estate, அரசியல் பின்புலம் உள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக தமிழக அரசே தெரிவித்துள்ளது. இந்த பேரிழப்புக்கு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கத் தவறியதே முதல் காரணம்” என்கிறார் தமிழ்நாடு பொதுநலன் வழக்கு மையத்தின் கே.கே.ரமேஷ்.
நீர்நிலைகள் மட்டும் என்றில்லாமல், வரத்து கால்வாய்கள், போக்கு கால்வாய்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்ததால், நீர் வழித்தடம் முற்றிலுமாக அற்றுப்போய்விட்டது. விளைவு, இன்று தாங்க முடியாத அளவிற்கு சென்னை நகரம் மழையால் பாதிக்கப்பட்டு, நிலை குலைந்து நிற்கிறது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்களை தடுக்க கடுமையான தண்டனைகள் கொண்டு வரப்பட வேண்டும். சென்னை நகரைச் சுற்றி உள்ள பல உள்ளாட்சி அமைப்புக்கள், நீர் நிலைகளையே குப்பை சேகரிப்பு மையங்களாக பயன்படுத்துகின்றன. அதைத் தடுக்க வேண்டும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பதை தடுக்காவிட்டால், இதேபோல் எதிர்காலத்தில் சென்னை நகரம் குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கும், மழை காலங்களில் மிதக்கும்.
‘மழை வெள்ள பாதிப்புக்கு தவறான நிர்வாகம் மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தது தான் காரணம்’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் ஆக்கிரமிப்புகள் தான் என்பதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று மத்திய அரசு தமிழகத்தை அறிவுறுத்தியுள்ளது.
நீர்வள ஆதாரத்துக்கு உயிரூட்டவேண்டிய தருணம் இது. அரசு இன்னமும் காரணங்களை அடுக்கிக் கொண்டிருக்காமல் கவனம் எடுத்து செயல்படவேண்டும். அரசின் கவனத்திற்கு யோசனைகள்:
* நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழைக்குப் பின், நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண்பது எளிதாகியுள்ளது. இதை விட்டால், நீர்வழித்தடங்களை பாதுகாக்க வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. எனவே நீர் நிலைகளின் எல்லைகளை முறையாக அளவீடு செய்து, வேலி அமைத்து பொதுப்பணித் துறை தொடர்ந்து பராமரித்து வரவேண்டும்.
* தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், மண் மற்றும் குப்பைகளை அகற்ற பல்வேறு துறை வல்லுர்கள் அடங்கிய குழு அமைத்து நீர்நிலைகளை மீண்டும் மீட்டு, அவற்றை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
* நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்களுக்கு மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கக்கூடாது. அக்கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுப்பதை தடை செய்ய வேண்டும். விதிகளை மீறிய கட்டுமானங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து நீர் நிலைகளை மீட்க வேண்டும்.
* எத்தனை ஆண்டுகளாக வசித்து வந்தாலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இடங்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது. இதற்கான நிர்வாக உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும்.
* நீர் நிலைகளை, அரசு துறைகளுக்கு ஒதுக்குவது தவறான முன்னுதாரணம். எனவே அரசு தாமே முன்வந்து நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள அரசு குடியிருப்புகள் மற்றும் அலுவலக கட்டிடங்களை அகற்ற வேண்டும்.
* மனித வாழ்க்கைக்கு முக்கியமான அம்சங்களாக உள்ள நீர்நிலைகளுக்கு, தற்போது ஏற்பட்டு வரும் வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
சென்னை மழை நமக்கு ஒரு பாடம் எச்சரிக்கை மணி. இதில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், கற்றுக் கொள்வோமா?
சா.சின்னதுரை
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சரியான தருணம் இது..”