அக்டோபர் 24, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

நோய்நாடி நோய்முதல் நாடி…

ப்ரியா ராஜன்

Apr 18, 2020

siragu coronavirus2

ஊரடங்கு – இன்று நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் நாள்தோறும் எதிரொலிக்கும் வார்த்தை. தமிழ் அகராதியில் நாமனைவரும் மிக அதிகம் பயன்படுத்தும் வார்த்தையும் இதுவாகத்தான் இருக்கும். விலகியிரு, தனித்திரு, வீட்டிலிரு – இவையெல்லாம் இந்த பந்தயத்தில் அடுத்ததடுத்து பதக்கம் பெறும் சொற்கள். தெருவெல்லாம் டிராபிக்ஜாம், ஜவுளிகடை, பாத்திரக்கடை, நகைக்கடை, பரோட்டாகடை என்று எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்த நாம் எப்படி இப்படி ஒடுங்கிபோனோம்? ஆஸ்பத்திரி அல்லது வீடு இந்த இரண்டு இடங்களைத் தவிர இன்று வேறு எந்த இடத்திலும் ஒரே மனிதனை பத்து நிமிடத்திற்கு மேல் பார்க்கமுடியாது. ஏன்? எவ்வாறு? கொரோனா – ஆடாத ஆட்டம் ஆடிய மானுடத்தை பெட்டி பாம்பாக கட்டி போட்டிருக்கும் இந்த குட்டி வைரஸின் நதிமூலம், ரிஷிமூலம் சிறிது ஆராய்வோம் …

நவம்பர் 2019 உலகின் வல்லரசுகளில் ஒன்றான சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரம். இங்குதான் அந்த நாட்டின் மிகப்பெரிய இறைச்சி சந்தைகளில் ஒன்றான ஹுனான் மொத்த விற்பனைச்சந்தை செயல்படுகிறது. இங்கு இறைச்சி, உயிருள்ள மீன்கள் மற்றும் உயிருள்ள வனவிலங்குகளும் விற்பனைக்கு உண்டு.

siragu noinaadi1படங்கள் உபயம்: இணையம் மற்றும் சர்வதேச ஆங்கில இதழ்களான திகார்டியன் மற்றும் டெய்லி மெயில்

சீனாவில் உயிருள்ள வனவிலங்குகளின் சந்தை பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அவ்வப்போது அந்நாட்டு அரசு தடைவிதித்தாலும், சட்டவிரோதமான முறையில் இச்சந்தைகள் நடைபெறுவதை அந்நாட்டு அரசால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதே உண்மை. இதன் பின்னணியில், அதிகாரப் பூர்வமாக மருத்துவப் பயன் நிரூபணம் செய்யப்படாத அந்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பலம் பொருந்திய கும்பல்கள் இருப்பதை உலகமே அறியும். பல தருணங்களில் உலகநாடுகளும், சீனாவின் இயற்கை மற்றும் வன விலங்கு விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் முற்றிலுமாக இதை ஒழிக்க முடியவில்லை.

இச்சந்தைகளுக்கு ஆங்கிலத்தில் வெட் மார்க்கெட்(ஈர சந்தை) என்று பெயர். சுகாதாரமற்ற முறையில் விலங்குகளை நெருக்கடியான சிறு கூண்டுகளில் அடைத்து வைப்பதால், காயங்கள் மற்றும் வெட்டுக்கள் மூலமாக கூண்டில் இருக்கும் ஒரு விலங்கின் குருதி மற்றும் கழிவு மற்ற விலங்குகளின் மேலும் படரும். மேலும் அங்குள்ள கடைகளில், அறுபட்ட பல்வேறு வகை விலங்குகளின் குருதி மற்றும் உடல் கழிவுகள் ஒன்றோடொன்று கலந்து ஈரமாக தேங்கி விடுவதாலும் வந்தது இந்த வெட் மார்க்கெட் என்ற பெயர். இந்த சந்தைதான் இன்று உலகையே உலுக்கும் கொரோனாவின் நதிமூலம் என்று நிறுவப்பட்டுள்ளது.

சரி, குறிப்பாக எந்த விலங்கிலிருந்து இந்த கிருமி பரவியது? அதற்கும் முன்னர், இந்த கிருமி எந்த வகையைச் சார்ந்தது? இங்குதான் நாம் சென்ற 20-30 வருடங்களாக உலகை பீடிக்கும் சில தொற்றுக்களை சற்றே உற்று நோக்கவேண்டும். சார்ஸ்(SARS), மெர்ஸ்(MERS), எபோலா(Ebola), நிபா(Nipah) – தொண்ணூறுகளின் பின் நாம் கேள்விப்பட்டிருக்ககூடிய சிலநோய்களின் பெயர்கள் இவை. இவை உருவாகக் காரணமாக இருந்த நுண் கிருமிகளும் ஒன்றோடொன்று மரபணு அளவில் தொடர்புள்ளவையே. தொண்ணூறுகளின் முன் தோராயமாக 70-80 ஆண்டுகளுக்கு ஒருமுறை மனித இனத்தை பரவலாக பாதித்து வந்த தொற்றுக்கள், எப்படி இவ்வளவு அடிக்கடி தோன்ற தொடங்கின ? இந்த வினாவின் விடையில்தான் கொரோனாவின் ரிஷிமூலம் ஒளிந்துள்ளது.

மருத்துவர்களும் உயிரியல் ஆராய்ச்சி நிபுணர்களும் மேற்கூறிய தொற்றுக்களுக்கு சூட்டியுள்ள பெயர் – விலங்கு வழி தொற்று (zoonotic diseases).ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியன இவ்வகை தொற்றுக்கள் தோன்ற முக்கிய காரணங்களாக பின்வருவனவற்றை பட்டியலிடுகின்றன:

1.காடழிப்பு
2.சட்டவிரோதமான ஒழுங்கு படுத்தப்படாத வன விலங்கு வர்த்தகம்
3.தீவிரப்படுத்தப்பட்ட வேளாண்மை மற்றும் கால்நடை உற்பத்தி
4.மருந்துகளை எதிர்த்து செயலிழக்கச் செய்யும் நுண்ணுயிரின் எதிர்ப்பு சக்தி
5. பருவநிலை மாற்றம்

siragu noinaadi2

கொரோனா வகை கிருமிகள், பன்னெடுங்காலமாக பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் உடம்பில் வாழ்ந்து வருகின்றன. பரிணாம வளர்ச்சியின் மூலம் விலங்குகளும் பறவைகளும் இதற்கு இயற்கையாக ஒத்துப்போய்விட்டதால் அவற்றிற்கு இக்கிருமிகளின் மூலம் கேடு எதுவும் விளைவதில்லை. காடழிப்பால் வாழ்விடம் தொலைத்த விலங்குகள் ஊருக்குள் வர தொடங்குகின்றன. மேலும் வனவிலங்கு வர்த்தகம், தீவிர கால்நடை உற்பத்தி ஆகியவற்றால் விலங்குகளுடனான மனிதனின் இடையீடு சமீபகாலமாக மிகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரித்த தொடர்பின் மூலம் தொற்றுக்கள் விலங்கிலிருந்து மனித உடம்பில் புகுந்து நோயாக உருமாறுகின்றன. வெகு சமீபத்தில், நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரவிய நிபா தொற்று (Nipah virus) வாழ்விடம் தொலைத்த பழந்தின்னி வௌவால்களால் வந்தது என்பதை இவ்விடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டும். மேலும், கடந்த 20-30 வருடங்களில் நிகழ்ந்துள்ள தீவிர உலக வெப்பமயமாதல் போன்ற பருவநிலை மாற்றங்களால், இந்த தொற்றுக்கள், தாம் தோன்றிய இடத்தின் பருவநிலைக்கு மாறுபட்ட தட்பவெட்ப சூழல் கொண்ட நாடுகளுக்கும் பரவி நிலைக்க தொடங்கியுள்ளன. இவை விரைவில் மரபணு மாற்றமும் (mutation) அடைந்து வலுப்பெறுவதால் மருந்துகளுக்கு எதிர்த்து செயல்படும் ஆற்றலும் அடைந்து விடுகின்றன.

இந்த இக்கட்டான நேரத்தில் அரசும் மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களும் கால நேரம் பாராது தம் பணியை மிகச் செவ்வனே செய்து வருகிறார்கள். ஆயினும் மேற்கூறிய காரணிகளை சரி செய்யாத வரையில் நாம் நோயாளிகளை மருத்துவ சிகிச்சையின் மூலம் குணப்படுத்துவது, அறிகுறிகளை மட்டுமே சரி செய்யும் முயற்சியே ஆகும். இதுவும் இந்த நேரத்தில் அத்தியாவசியமே எனினும் உலகளாவிய வகையில் மேற்கூறிய மூலகாரணிகளை நாம் திருத்தியமைக்காவிடில் கொரோனா ஒரு ஆரம்பம் மட்டுமே. காடழிந்தால் நாடழியும். அழிய தொடங்கி விட்டது. இது தொடர்வதும் முற்றுப் பெறுவதும் அரசாங்கங்களும் மக்களும் விழித்து திருந்துவதில்தான் உள்ளது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, இந்த தொடர்-விலங்கு வழி தொற்றுக்களின் தொடக்க புள்ளிகளை சரி செய்வதே நம் வருங்கால சந்ததியை காக்க நாம் ஆற்ற வேண்டிய தலையாய கடமையாகும்.


ப்ரியா ராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நோய்நாடி நோய்முதல் நாடி…”

அதிகம் படித்தது