படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரையில் உணவகத்தில் பணியாற்றும் தனசேகர்
நாகா ராNov 12, 2016
படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரையில் உணவகங்களில் உணவு தயாரிப்புப் பணியில் இருக்கிறேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் இளைஞர் தனம் என்று செல்லமாக அழைக்கப்படும் தனசேகர்.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் ஆற்றுப்பாலம் அருகில் உள்ளது ராஜேஸ் என்ற இளைஞர் நடத்தும் உணவகம். இங்குதான் பணியாற்றுகிறார் தனசேகர் (26). உணவு தயாரிப்புப் பணிதான் இவரது முக்கியப் பணி. இருப்பினும் சாப்பிட வருபவர்களுக்கு சேவை செய்வதையும் விரும்பி செய்கிறார்.
தூய்மையாக அழுத்தம் திருத்தமாக “ழ”-கரத்தை உச்சரிக்கும் இவரது மொழியால் இவரிடம் பேச்சு கொடுக்க, ஆச்சரியம் மேல் ஆச்சரியமாக கிடைத்தது. காரணம் இவரது படிப்புதான். தனசேகர் முதுநிலை பட்டதாரி அதாவது எம்.எஸ்.சி., பி.எட்., எம்.பில். முடித்துள்ளார்.
படிப்புக்கேற்ற வேலைதான் வேண்டும் என்று வீட்டில் சும்மா படுத்து சுவற்றுச் சுண்ணாம்பை சுரண்டிக் கொண்டிருக்கும் இக்கால இளைஞர்கள் மத்தியில், உணவுக் கரண்டியை கையில் பிடித்து தகுந்த வேலை கிடைக்கும் வரை ஓய்ந்து கிடந்தால், அது வாழ்க்கை இல்லை என்று உணவு தயாரிப்பதிலும்… வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பாத்திரங்களை எவ்வித முகச்சுளிப்பும் இன்றி எடுத்துப் பரிமாறுவதிலும் தனசேகர் நெஞ்சை அள்ளுகிறார்.
தனசேகரின் சொந்த ஊர் காட்டுமன்னார்கோவில் அருகே பழஞ்சநல்லூர். தந்தை நாகூரான், தாய் தேன்மொழி, தம்பி புஷ்பராஜ் ஐ.டி.ஐ. படித்து ஊரிலேயே பணியாற்றுகிறார். தனசேகர் எம்.எஸ்.சி., (கணிதம்) பி.எட்., முடித்து எம்.பில்., செய்துள்ளார். தந்தையும், தாயும் கூலி வேலைக்குச் சென்று இவர்களைப் படிக்க வைத்துள்ளனர்.
பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியலில் தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்துள்ளார் தனசேகர். ஆனால் தன் மகன் இதனால் எவ்வித மன சஞ்சலத்திற்கும் ஆளாகி விடக்கூடாது என்பதற்காக தோல்வி அடைந்ததை பெரிய விவகாரம் ஆக்காமல் ஆறுதலாக இவரது பெற்றோர்கள் இருந்துள்ளனர்.
உறவினர்களின் கேலிப் பேச்சுகள் இவர் பக்கம் வராமல் தடுப்பு அணை போல் காத்து நின்றுள்ளனர். தோல்வி அடைந்ததும் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார் தனசேகர் மேற்பார்வையாளராக.
அவரது பெற்றோர் மேலும் மேலும் படிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்ட பணியில் இருந்து விலகி படிப்பு பக்கம் தன் கவனத்தை மாற்றி அமைத்த இவருக்கு ஒரு பெரும் சோகம் காத்திருந்தது.
2009ம் ஆண்டு குடும்பத்திற்கே பக்கபலமாக இருந்த நாகூரான் இறந்து விட்டார். இருப்பினும் தனசேகரின் படிப்பிற்கு கைகொடுத்து ஊக்கப்படுத்தி மேலும் மேலும் முன்னேற காரணமாக இருந்துள்ளார் அவரது பெரியம்மா பூபதி. இவரது மகன்களும் தனசேகரை சித்தி மகனாக எண்ணாமல் சொந்த சகோதரன் போல் அடைக்கலம் தந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும் பெரியம்மா துணையாக இருந்தாலும் தனசேகர் தன் செலவுகளுக்காக கல்லூரி படிக்கும் போதே பகுதிநேர வேலையைத் தேடியுள்ளார். கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்தவருக்கு அவருடன் படித்த சக மாணவர்களான செல்வக்குமார், சபாபதி, தியாகராஜன், வேம்பையன், ரமேஷ், கமலக்கண்ணன் ஆகியோர் பலவகையில் உதவிகள் செய்துள்ளனர்.
அப்போது நண்பர்களுடன் பிற செலவுகளுக்காக திருமணங்களில் சேவை செய்ய சென்றுள்ளார். அங்கு அறிமுகம் ஆனவர்தான் தஞ்சையைச் சேர்ந்த தங்கம். இவரது சுறுசுறுப்பான, பொறுப்பான வேலையைப் பார்த்து அதிக ஈர்ப்பும், அக்கறையும், அடைக்கலமும் தந்துள்ளார். தஞ்சையில் பிரபல சமையல் கலை நிபுணரான இவர் தான் சமையல் பணி செய்யும் அனைத்து விசேசங்களுக்கும் தனசேகரை அழைத்துச் சென்றுள்ளார் பகுதிநேர வேலைக்காக.
அதுமட்டுமா… உணவுகள் தயாரிக்கும் நுணுக்கமும் கற்றுத் தந்துள்ளார். “கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்… கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்” என்ற பழமொழிக்கு ஏற்ப… தங்கம் என்பவரால் தற்போது தனசேகரும் சைவ, அசைவ உணவுகள் தயாரிப்பதில் திறமைசாலி ஆகி உள்ளார்.
சில நேரங்களில் உணவு கிடைக்காமல் பட்டினியும் இருந்துள்ளராம். பல நேரங்களில் அபரிமிதமான உணவும் கிடைத்துள்ளது. இப்படி படிப்பிற்கும், பிற செலவுகளுக்கும் உதவிகளை செய்துள்ளனர் பலர். அவர்களை மறக்காமல் குறிப்பிடுகிறார். ஒரு பக்கம் படிப்பையும் கவனமாக முடித்துள்ளார். ஒரு பக்கம் சக நண்பர்கள் இவருக்கு பேருதவி செய்ய, ஆரம்ப காலத்தில் படிக்கும் போதிலிருந்து இன்று வரை உற்ற நண்பனாக இருக்கும் ஊர் தோழர் பிரபாகரனும் இவருக்கு உறுதுணையாக நின்றுள்ளார்.
இப்படி ஒரு பக்கம் படிப்ப, மறுபக்கம் கல்வி என்ற இரட்டை குதிரைகளை சமாளித்து ஓட்டி பட்டதாரியாக கம்பீரமாக வெளியில் வந்த இவருக்கு தனக்கு மற்றவர்கள் எப்படி உதவினார்களோ, அதுபோல் தானும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் ஆசிரியர் கல்வியை பி.எட்., விரும்பி எடுத்துள்ளார்.
அப்போதும் திருமணம் உட்பட விசேசங்களுக்கு சமையல் பணி செய்ய போகாமல் இருந்தது இல்லை. பி.எட்., படிக்கும் காலக்கட்டத்தில் மாணவர்களை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்ச்சி கல்லூரியில் நடந்துள்ளது.
அப்போது தன்னைப்பற்றி எவ்வித ஒளிவுமறைவு இன்றி வெளிப்படையாக சொல்லியுள்ளார் தனசேகர். இவரது வெகுளித்தனமான பேச்சும், வெள்ளந்தி குணத்திற்கு அங்கும் பலர் நண்பர்களாகி உள்ளனர்.
இதில் முக்கியமானவர்கள் ஹேமமாலினி, சஹானா, திவ்யா, சரண்யா ஆகியோர். கல்லூரி படிப்பு முடியும் வரை இவருக்கு மதிய உணவை தங்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்து கொடுத்து சொந்த சகோதரனுக்கும் மேலாக பாவித்துள்ளனர்.
இவர்களின் உதவியை என்னால் எக்காலத்திலும் மறக்க முடியாது என்று கண்கள் பனிக்க தெரிவித்தார். இப்படி பி.எட்., படிக்கும் காலத்தில் பழக்கமானவர் கர்ணா… தனது சொந்த சகோதரன் போல் தனசேகருக்கு படிப்பு உட்பட பல உதவிகளை தயங்காமல் செய்து கொடுத்துள்ளார்.
கல்லூரி அருகில் கர்ணா வைத்துள்ள கடை இவருக்கு சொந்த வீடுபோலவே இருந்துள்ளது. பெயருக்கு ஏற்றபடி உதவிகளை செய்வதில் தயக்கமின்றி இருந்துள்ளார் கர்ணா. தன் வளர்ச்சியில் தங்கம், கர்ணா இவர்களுக்கு முக்கிய இடம் கொடுத்துள்ளாராம் தனசேகர்.
தொடர்ந்து எம்.பில்., முடித்து விட்டு தகுந்த பணிக்காக முயற்சிகளில் ஈடுபட்டு இருந்த தனசேகரை, தனது உறவினராக ராஜேஸ் நடத்தும் உணவகத்தில் சேர்த்து விட்டுள்ளார் கர்ணா. அங்கு ராஜேசும் தன் சொந்த சகோதரனிடம் நடந்து கொள்வது போல் தனசேகருக்கு பல உதவிகள் செய்து வருகிறார்.
தற்போது உணவகத்தில் உணவு தயாரிப்பு, உணவு பரிமாறுதல் என்று ஓய்வில்லாது இருக்கும் தனசேகர் இன்றும் தனது படிப்புக்கு ஏற்ற வேலைக்காக பல தேர்வுகள் எழுதி வருகிறார். இதற்கு உறுதுணையாக ராஜேஸ் உள்ளார்.
பிச்சை புகினும் கற்கை நன்றே என்று அவ்வையாரின் வாக்கு எத்தகைய உண்மை. உயர்ந்த படிப்பு படித்தாலும் சிறிதும் கர்வமின்றி சொன்ன வேலையை செய்து வரும் தனசேகர் இக்கால இளைஞர்களுக்கு முன்னோடியாக உள்ளார்.
தற்போது தஞ்சையில் தனது அத்தை (அப்பாவின் அக்கா) தனவள்ளி வீட்டில் தங்கி உள்ள இவர்… இப்படித்தான் வாழ வேண்டும் என்று தஞ்சை மண் எனக்கு கற்றுக்கொடுத்தது. வரும்காலத்தில் எனது இருப்பிடமாக தஞ்சைதான் இருக்கும்.
ஆசிரியர் பணி கிடைத்தாலும் அனைத்து நேரத்திலும் எனக்கு பசியாற வேலை கொடுத்த இந்தப் பணியை மறக்க மாட்டேன் என்று உறுதியாக கூறிய தனசேகரை பெருமிதமாகப் பார்த்து வாழ்த்தினோம். இக்கால இளைஞர்கள் ஒன்றை கண்டிப்பாக உணர வேண்டும். படித்த படிப்பு என்றும் கைவிடாது. இருப்பினும் அதற்காக சோம்பி கிடப்பது அழகன்று. எத்தொழிலாக இருந்தாலும் அத்தொழிலை உணர்வோடு, உண்மையாக செய்தால் முன்னேற்றம் நம்மைத் தேடி வரும்.
நாகா ரா
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரையில் உணவகத்தில் பணியாற்றும் தனசேகர்”