மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பறவைகள்

து. ரோசி தமிழ்த்துறைத் தலைவர்

Jul 20, 2019

siragu paravaigal2
குயில் ஓசை, மயில்தோகை , தூக்கணாங்குருவிக்கூடு, முதலானவை வியப்பானவை. கிளி, புறா,அன்னம், அன்றில் போன்றவை மக்களுக்கு மகிழ்ச்சித் தருகின்றன. காக்கை, குருவி, வீட்டுக்கோழி முதலியன சுற்றுப்புறக் கழிவுகளை உட்கொள்கின்றன. பறவையின் எச்சங்களால் நிறைய வனங்கள் உருவாகியுள்ளன. தாவரங்களிலுள்ள பூச்சி, புழுக்களையும் வயல்வெளிகளையும் பாழாக்கும் எலி, சுண்டெலி போன்றவற்றையும் பறவைகள் கட்டுப்படுத்துகின்றன. மேலும் மனிதர்கள் புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்குப் பயப்படுவது போல், கழுகு, பருந்து வல்லூறு, கிளி போன்ற பறவைகளுக்குப் பயப்படுவதில்லை பறவையியல் பேரறிஞர் சலீம் அலி ‘மனிதர்களின்று பறவைகளால் வாழமுடியும், ஆனால் பறவைகளின்றி மனிதர்களால் வாழ முடியாது என்று குறிப்பிடுவார். இத்தகு சிறப்பு வாய்ந்த பறவைகள் சங்க காலத்தில் மக்களால் எவ்வாறு அறியப்பட்டிருந்தன என்பதை அறிலாம்.

தொல்காப்பியம்

உயிர்கள் பகுப்பைத் தொல்காப்பியம்
‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனளே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே’
(மரபியல்-நூற்பா-27)
என்று கூறுகிறது. இவ்உயிர் பகுப்பில்
மாவும் புள்ளும் ஐயறி விளவே
பிறவும் உளவெ அக்கினைப்பிறப்பே
என்று கூறுகிறது. எனவே ஐந்தறிவு உயிராக பறவையினம் பாகுபடுத்தப்பட்டுள்ளது.
பறவைகள் புள் என்றும் பார்ப்பு, பிள்ளை, பறழ், குட்டி ஆகியவை பறவைகளின் இளமைப்பெயர் என்றும் பெண் இனப்பறவைகள் பெடை, பேடை, பெட்டை, அளகு என்றும் ஆண் இனப்பறவைகள் சேவல், ஏற்றை என்றும் தொல்காப்பியம் மரபியல் (நூற்பா-4,6,7,49,50,55,56) வழி அறிய முடிகிறது.

பறவைகள்

பறவைகளில் பறக்கும் நிலை முற்றிலும் சிறப்படைந்து காணப்படுகிறது. ‘இவை விரோதிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளவும் உணவைத் தேடிச் செல்லவும் மற்றும் இரைகளைப் பிடித்துண்ணும் பெரிய பிராணிகளின் பிடிப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் பறவைகள் நிலத்தில் வேகமாக ஓட ஆரம்பித்தன. இந்நிலையின் பொழுது முன்னங்கால்களைத் தொடர்ந்து வேகமாகக் காற்றில் மேலும் கீழும் அசைத்தன. இதனால் முன்னங்கால்களின் பின் விளிம்புகளிலுள்ள செதில்கள் நீண்டு பறக்க உதவும் இறகுகளாக மாற்றமடைய ஆரம்பித்தன. கடைசியாக இவ்வாறு மாற்றமடைந்த முன்னங்கால்கள் இறக்கைகளாக மாற்றமடைந்தன. இறக்கைகள் முழுமையாக மாற்றமடைந்து தேனர்றிய பிறகே பறவைகளுக்குரிய பல:வெறு வகைச் சிறப்புக் குணாதிசயங்கள் மேலும் மேலும் தோன்ற ஆரம்பித்தன. தொடர்ந்து ஊர்வன இனத்தைச் சார்ந்தவைகள் முழுமையாக மாற்றமடைந்தன. ‘‘ (உ. கருப்பண்ணன், பறவைகள் எப்படிப் பறக்கக் கற்றன-பக்-15-16)

‘சங்க நூல்களில் பறவையென்ற பெயர் பறக்கும் உயிர்கள் எல்லாவற்றிற்கும் வழங்கியிருப்பினும் பெரும்பாலும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் புள்ளினத்திற்கே வழங்கியுள்ளது. பறவைகளானவை பறக்கும் சிறப்புத்தன்மை பெற்ற ஊர்வன என்று கூறுவர். விலங்கினததிற்கும பறவையினத்திற்கும் உள்ள முக்கிய வேற்றுமை அவற்றின் இனப்பெருக்க முறையில் காணப்படுகின்றது. விலங்குகள் குட்டிப்போட்டுப் பால்கொடுக்கும் . பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்’’ (பி. எல். சாமி. சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் , ப-1) இச்செய்திகளால் பறவையினத்தின் இயல்பு நிலைகளை அறிய முடிகின்றன.
சங்க இலக்கியத்தில் பறவைகள்

சங்ககால மக்கள் வாழ்க்கை இயற்கையோடு இணைந்ததாகும் . அவ்வாழ்க்கை முதற்பொருள், கருப்பொரள், உரிப்பொருள் ஆகிய நிலைகளில் அடக்கப்படுகிறது. எனவே சங்க இலக்கியங்கள் காட்டும் ஐந்நில பறவைகளை அறியலாம்.

குறிஞ்சி நிலப்பறவைகள்

கிளி, மயில், மலையுறை குருவி, வங்கா ஆகியவை சங்க இலக்கியம் காட்டும் குறிஞ்சி நிலப்பறவைகளாகும். கிளிப்பற்றி (நற்றிணை பாடல்-25 , 102,134,147) குறுந்தொகை (67,133, 142,217,223,291,360) , ஐங்குறுநூறு (260,282,284,286) பெரும்பாணாற்றுப்படை (227-230) ஆகிய சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. மயில் பமற்றி ஐங்குறுநூறு (296), அகநானூறு(108,177) , நற்றிணை -288), புறநானூறு(344), பொருநராற்றுப்படை (190-191), திருமுருகாற்றுப்படை (247) போன்ற சங்க நூல்களில் காணமுடிகிறது. சங்கப்பாடல்கள் பாடிய 473 புலவர்களில் 73புலவர்கள் மயில் பற்றிப் பாடியுள்ளனர். மயில் முழுமையாக 132 இடங்களிலும் உறுப்புகள் பற்றி 121 இடங்களிலும் காணப்படுகின்றன. மலையுறைக் குருவிப்பற்றி குறுந்தொகை (72), அகநானூறு (303,338) புறுநானூறு(19) ம் , வங்கா என்கிற மாம்பழக்குருவிப் பற்றி குறுந்தொகை(151), நற்றிணை (341) ஆகிய சங்க இலக்கியங்களில் காணமுடிகின்றன.

முல்லை நிலப் பறவைகள்

கானக்கோழி. குயில், தூக்கணாங்குருவி, புறா, மடாப்புறாக, மணிப்புறா, சிறிய தவிட்டுப்புறா, சாம்பல்புறா, போகில் (பச்சைப்புறாவினம்) போன்றவை முல்லை நிலப்பறவைகள் ஆகும்.
1. கானக்கோழி-குறுந்தொகை(224), புறநானூறு (28,52) அகநானூறு (192)
2. குயில்-நற்றிணை(224,246), குறுந்தொகை (242)
3. தூக்கணாங்குருவி-குறுந்தொகை(366,374), புறநானூறு (225)
4. மாடப்புறா-நற்றிணை (71,162), குறுந்தொகை(285),நெடுநல்வாடை (45-48)
5. மணிப்புறா –அகநானூறு(167), பெரும்பாணாற்றுப்படை(438-440)
6. சிறியதவிட்டுப்புறா-நற்றிணை (384),அகநானூறு(271)
7. சாம்பல்புறா-நற்றிணை(189),குறுந்தொகை(79,154,174.274),மலைபடுகடாம்(120),பதிற்றுப்பத்து94-32வரி)
8. போகில் – (பச்சைப்புறாவினம்), ஐங்குறுநூறு(325), அகநானூறு(129)

மருத நிலப்பறவைகள்

காக்கை-சிறுகருங்காக்கை, அண்டங்காக்கை, கோழி-கம்புள் கோழி. நீர்க்கோழி, நீலக்கோழி, மனைக்கோழி, மனையுறை, குருவி ஆகியவைமருதநிலப்பறவைகள் ஆகும்.
சிறுகருங்காக்கை-நற்றிணை(210)281,343), குறுந்தொகை(210)ஐங்குறுநூறு(391)பொருநராற்றுப்படை(183-186)
அண்டங்காக்கை-நற்றிணை(367)
கம்புள்கோழி-ஐங்குறுநூறு(85), மலைபடுகடாம்(253-254)
நீர்க்கோழி-புறநானூறு(395)
நீலக்கோழி-ஐங்குறுநூறு(51). சிறுபாணாற்றுப்படை(181-186)
மனைக்கோழி-குறுந்தொகை(1152), பரிபாடல்(8.17-19), புறநானூறு(395), பொருநராற்றுப்படை(222-223)
மனையுறைக்குருவி-நற்றிணை(58,85,231), குறுந்தொகை(46,72,85), புறநானூறு(318)

நெய்தல் நிலப்பறவைகள்

அன்றில், அன்னம், குருகு-இனக்குருகு, வெண்குருகு, பசுங்கால் குருகு, வெண்பூக்குருகு, வெண்தலைக்குருகு, கருங்கால் குருகு, வெள்ளாங்குருகு, சிறுவெள்ளாங்குருகு, யானையங்குருகு,கொக்கு, சிரல்(மீன்கொத்திக்குருவி), சிறுவெண்காக்கை, நாரை, போன்றவை நெய்தல் நிலப்பறவைகளாகும்.
அன்றில்-நற்றிணை(124,152), குறுந்தொகை(57,160.301)
அன்னம்-நற்றிணை(356),ஐங்குறுநூறு(92),கலித்தொகை(70)புறநானூறு(67)
குருகு-நற்றிணை(159), குறுந்தொகை(228), ஐங்குறுநூறு(457)
இனக்குருகு-நற்(131),கலித்தொகை(126)
வெண்குருகு-நற்(4,138,162), குறுந்தொகை(113,303),அக(141)
பசுங்கால் வெண்குருகு-அக(273), வெண்தலைக்குருகு-ஐங்(86), கருங்கால்குருகு-நற்(211), வெள்ளாங்குருகு-ஐங்(86), சிறுவெள்ளாங்குருகு நற்றிணை(70), யானையங்குருகு-குறு(34),
கொக்கு-நற்றிணை(100,230), குறுந்தொகை(117,122), அக(346) புற(342) குறிஞ்சிப்பாட்டு(188) பெரும்பாணாற்றுப்படை(309)

சிரல்
(மீன் கொத்திக்குருவி) பதிற்றுப்பத்து (42: 2-5) , அகநானூறு (106) . சிறுபாணாற்றுப்படை (1810 பெரும்பாணாற்றுப்படை (313-314)
சிறுவெண் காக்கை
நற்றினை (278,345), ஐங்குறுநூறு (163,167,168). அக(170,171)
நாரை
நற்(91,127,178,263), குறு(103,125,166,236,296) ஐங் (156) அக(40,276)

பாலைநிலப்பறவைகள்
ஆந்தை, ஊமன், வானம்பாடி, குடிஞை, குரால், கூகை, எழால், குடுமி எழால், கழுகு, எருவை, பாறு, பொகுவல், கிணந்துள், பருந்து , பூழ் (கௌதாரி) , குறும்பூழ் (காடை) போன்றவை பாலைநிலப்பறவைகளாகும்.
ஆந்தை (ஆண்டலை)-வேட்டைக்கார அந்தை
பதிற்றுப்பத்து (25, 7,8) , பரிபாடல் (2, 58வரி) , திருமுருகாற்றுப்படை (226-227)
ஊமன்
குறுந்தொகை(224)
வானம்பாடி
கலித்தொகை(46) , அகநானூறு (67)
குடிஞை
ஐங் (291) நற்(394) , மலைபடுகடாம் (146,151)
குரால்
பட்டைக்கழுத்து சின்ன ஆந்தை)
ந்ற்(218)அகம்(265)புற(280)மதுரைக்காஞ்சி (1690
கூகை
நற் (83) குறு (153, 393), பரிபாடல் (258) புற (359) திருமுருகாற்றுப்படை (49) அகநானூறு (122,148) பதிற்றுப்பத்து (44)
எழால் (வல்லூறு)
குறு (151) அக (103) குடுமி எழால் பதிற்றுப்பத்து (46)
கழுகு
அகநானூறு (31) புறநானூறு (370) ,
எருவை
நற்றிணை (298), அகநானூறு (51. 77, 215) , பாறு (வெண் முதுகுக் கழுகு
நற்றிணை (229) , அகநானூறு (247) , புறநானூறு (359,360)
பொகுவல்
புறநானூறு (238)
கணந்துள் (ஆள்காட்டிக் குருவி) நற் (212), குறுந்தொகை(350)
பருந்து
நற் (141,325)
குறுந்தொகை
(207,283) , அகநானூறு (363) , புறநானூறு(271), மலைபடுகடாம்(231.502வரிகள்
பூழ் சிவல் (கௌதாரி) புறனாறூறு (321,384) குறும்பூழ் (காடை, அகம்(63), புறம் (214)

siragu paravaigal1

கோழிப்பறவை:
சங்ககால மக்கள் தம வாழ்க்கையை உள்ளது உள்ளபடி காட்டுவதுடன் பறவைகளின் மூலம் ஏதேனும் கருத்தை அல்லது உணர்ச்சியைக் காட்டும் நோக்கம உடையன. அப்பறவைகளில் கோழிப்பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் காணும் பறவைகளில் கானாங்கோழி, நீலமார்ப்புச் சம்பங்கோழி, கம்புள் கோழி, சிவப்புக்கானாங்கோழி, தண்ணீர்க்கோழி, நீலத்தாழைக்கோழி, தாழைக்கோழி, நாமக்கோழி, வரகுக் கோழி, நீளவால் இலைக்கோழி, தாமரைக்கோழி, சுண்டாங் கோழி, வர்ணச்சுண்டாங்கோழி, காட்டுக்கோழி ஆகிய கோழி வகைகள் காணப்படுகின்றன. (க. ரத்னம், தமிழ்நாட்டுப்பறவைகள்-பக்33-34,36-41) இவற்றில் கம்புள் கோழி, நீர்க்கோழி, நீலக்கோழி, கானக்கோழி போன்றவையும் மனைக்கோழியும் சங்கஇலக்கியத்தில் காணமுடிகின்றன.

கம்புள்கோழி
கம்புள் கோழியை ‘சம்பங்கோழி’ என்று அழைப்பர்
ஐங்குறுநூற்றில்
‘பழனக் கம்புள். . . . . . . . . . வேலே-(ஐங்-60)
என்ற பாடல் பழனத்தின் கண் உள்ள சம்பங் கோழிச்சேவல் வரம்புடைய கழனியிலிருந்து தன்னைக் காதலித்தழைக்கும் பேடையின் இயல்பு அறியாமல் அதனை வருந்திக் கூவியழைப்பது போன்ற தலைவன் கடிமனைக்கண் வரவை எதிர்பார்த்து வருந்தியிருக்கும தலைவியின் நிலையறிந்து வரையாமல் வீணே இருளிளும், பகலிலும்,வந்து வந்து போகும் நிலைக்கு ஒப்பாகும் என்று கூறுகிறது.

மேலும்
வெண்ணுதற் கம்புள் அரிக்குரற் பேடை
தண்ணலும் பழனத்துக் கிளையோடு ஆலும்
. . . . . . . . . . . (ஐங்-85)
என்ற பாடல் சம்பங்கோழியுள் வெள்ளை நிறம் அமைந்த நெற்றியையும் அரித்தெழும் ஓசையையுமுடைய பெடைக்கோழி தன் சேவலின்றியும் தனது கிளையோடு மகிழ்ந்து ஆரவாரிக்கும். அதுபோல் தலைவி பரத்தையர் மேல் சென்ற தலைவனை மனத்தில் இருத்தி. தன் சுற்றத்தோடு மகிழ்ந்து இருக்கும் நிலைக்கு ஒப்பாகும் என்று கூறுகிறது.

மருதநில ஓசைகள் பற்றி மதுரைக்காஞ்சிக் கூறும்போது,
‘வண்டிறை கொண்ட கழம்பூம் பொய்கைக்
கம்புட் சேவல் இன்றுயில் இரிய’’ (மது.கா.254-255)
என்கிறது. இதில் வண்டுகள் தங்கும் மணமிக்க பூக்களையுடைய பொய்கையில் கம்புள் சேவல் இனிய உறக்கம் கொள்ளும் என்பதை அறியலாம்.
சங்க இலக்கியம் வாயிலாக , கம்புள் கோழி ‘சம்பங்கோழி’ என்று அழைக்கப்படும். இக்கோழி நீர் நிலைகள் அருகில் வாழக்கூடியது. இதன் பேடை வெண்மையான நெற்றியையும் கரகரத்த குரலையும் உடையது. எப்போதும கூட்டத்தோடு இருக்கும். பொய்கையில் உறக்கம் கொள்கிறது. வயல்வெளிகளில் வாழ்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

32 செ.மீட்டர் உள்ள கம்புள் கோழி நெற்றியும் தலையின் பக்கங்களும் வெண்மை நிறம். கருஞ்சிலேட் நிறம் கொண்ட பிடரியும் உடலும் கொண்ட இதன் மார்பும் அடிவயிறும் நல்ல வெண்மை நிறம். வாலடி இறகுகள் செம்பழுப்பாக இருக்கும். அடிக்கடி குறுகிய வாலை மேலே நிமிர்த்தும். சிரமப்பட்டு உயர எழுந்து பறக்கும்போது கால்கள் கீழே தொங்கும். தாழைக்கோழி போல நீந்தவும் செய்யும். ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை புதர்களுக்கு அடியில் உடமைத்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது. 6முதல் 7முட்டைகள் வரை இடுகிறது’’(க. இரத்தினம், தமிழ்நாட்டுப்பறவைகள்-ப.37)

நீர்க்கோழி
நீர்க்கோழியை இன்று ‘தண்ணீர்க்கோழி’’ என்றும் ‘கானாங்கோழி’’ என்றும் நாட்டுப்புறமக்கள் குறிப்பிடுவதாகப் பி.எல்,சாமி குறிப்பிடுவார். (சங்க இலக்கியததில் புள்ளின விளக்கம்-ப.110) புறநானூற்றில் சோழநாட்டப் பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடும்போது,
‘அவிழ் நெல்லி . . . . . . . . குந்து’’ (புறம்-395,8-11) என்று பிடவூர் நன்செய் வளத்தைக் குறுpப்பிடுகிறார். மதில நற்சோற்றினின்று இறக்கப்பட்ட வடித்த கள்ளையருந்தும் மனைக்கோழி மனையிடத்திலிருந்து செய்யும் பசிய அழைப்பினால் காட்டுக்கோழியும் நருக்கோழியும் குரலெடுத்துக் கூப்பிடுதல் செய்யும் என்று அறியலாம்.
‘நீர்க்கோழியைத் ‘தாழைக்கோழி’ என்று க. ரத்னம் குறிப்பிட்டுள்ளார். 32 சென்டிமீட்டர் உள்ள நீர்க்கோழி சாம்பல் நிறம் உடலையுடையது. இதன் அடிப்பகுதி வெள்ளையாக உள்ளது. ஆணும் பெண்ணுமாய் இரைதேடுகிறது. தமிழகம் எங்கும் பரவலாகக் காணப்படும் நீர்க்கோழி இனம் இது ஒன்றே. கரையோரத்தில் உள்ள நாணல், தாழைப்புதர்களை விட்டு தண்ணீரில் நெடுந்தொலைவு நீந்திச்செல்லும. பழக்கம் இல்லை. அச்சம் கொண்டு பறக்க முற்படும்போது சற்று நேரம் இறக்கையை அடித்துப் பின் எழுந்து பறக்கும். பறக்கும திறமை குறைந்து எனினும இடம் பெயர நேரும்போது உயர்ந்த மலைகளையும் கடந்து பறந்து செல்லும். நீரில் மூழ்கி மறைந்தபடி ஆபத்திலிருந்து தப்பிக்கவும் முயலும். சூன் முதல் செம்படம்பர் வரை கலவியல் ஈடுபடுகிறது. நாணல், தாழை அடர்ந்து காணப்படும் இடங்களில் நீர்த்தாவரங்களைக் கொண்டு மேடையமைத்து 5முதல் 12 வரை முட்டைகள் இடும்.’’ (க. ரத்னம் , தமிழ்நாட்டுப்பறவைகள்,ப.39)

நீலக்கோழி
நீலக்கோழியின் அலகும், கால்களும் சிவப்பு நிறமானவை. உடல் நீல நிறம். இக்கோழி நாணல் செடிகளின் அருகே கூடமைத்து 3முதல் 7வரை முட்டைகள் இடுகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை கலவியல் ஈடுபடுகிறது. இந்நீலக்கோழிப்பற்றி ஐங்குறுநூறு,
‘நீருறை கோழி நீலச் சேவல் . . . . . . . . நோய்க்கே’’ (ஐங்-51)
என்று கூறுகிறது. அதாவது கூர்மையான நகங்களை உடைய பெண் நீலக்கோழிக்கு அதன் சேவல் வயாநோய் தீர்க்கும். அதுபோல தலைவனும் தலைவியின் வயா நோய்க்கு (கருப்பக்கால மசக்கை) மருந்தாக இருந்தான். ஆனால் இன்று அவ்வாறில்லை.
நீலக்கோழி மருதநிலததில் காணப்படுகிறது. ‘இதை நீலத்தாழைக் கோழி’ என்று அழைப்பர். கால் விரல்களால் நாணல் தண்டைப் பற்றியபடி உயர ஏறிச்சென்று அமர்ந்து வெயில் காயும். இனப்பெருக்கக் காலததில் ஒன்றை ஒன்று துரத்தும். ‘சக்சக்’ எனக் குரல் கொடுக்கும் ஆண் அலகால் நீர்த்தாவரங்களைக் கவ்வியபடி தலை தாழ்த்தி பெண்ணின் முன் சிறுகுரலில் கத்தித தன் காதலை வெளிப்படுத்தும்’’ (க. ரத்னம், தமிழ்நாட்டுப் பறவைகள் ப-38)

மனைக்கோழி
சங்க காலத்தில் மனையின் கண் உள்ள இக்கோழியைக் கூட்டில் அடைத்து உள்ளனர். இதன் குஞ்சுகளைக் கவர பூனையும் பிற பறவைகளும் முயலும். அந்த நேரத்தில் தாய்க்கோழி குரல்கொடுத்து தன் இளம் குஞ்சுகளை இறக்கைக் கொண்டு குடைபோல் சூடியபடி அமர்ந்து கொள்ளும். சிலவேளைகளில் அவைகளைப் பாதுகாப்பான இடத்தில் மறைய வைத:து கோபமான குரலில் கூச்சலிடும். பருந்து, கழுகு முதலியன அவ்விடத்திலிருந்து நீங்’கும் வரை தொடர்ந்து குரலைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். இன்றும் கிராமங்களில் இந்நிகழ்வைக் காணமுடிகிறது. பண்ணைக்கோழி வருகையால் இக்கோழி பராமரிப்பின்றி அழிந்து வருகிறது.
காட்டில் வாழும் கோழி இயற்கையில் விளைந்திருக்கும் கதிரைக் குத்தித் தின்னுகிறது. இல்லத்தில் வாழுகின்ற இந்த கோழி மக்கள் காய வைத்திருக்கும் திணையை உண்ணுகிறது. இதை பொருணாற்றுப்படை ‘கானக்கோழி கதிர் குத்த மனைக் கோழி திணைக் கவர’’ (பொரு-222-223) என்கிறது. சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் மனைக்கோழியின் குரல் குறிப்பிடப் பெற்றுள்ளது. விடியற்காலையில் இக்கோழியின் குரலைக் கேட்டுத் தலைவி நடுக்கம் கொள்கிறாள். அவளுடன் கூடியிருக்கும் தலைவன் விடியற் பொழுதில் பிரிந்து செல்வான் என்று வருந்துகிறாள். இதைக் குறுந்தொகை
‘குக்கூ என்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்று என்தூஉ நெஞ்சம்’’ (குறுந்-157)
என்று குறிப்பிடுகிறது. குரலுக்கு எதிர்குரல் கொடுக்கும் பழக்கம் கோழியிடமுள்ளது. யானையிள் பிளிறில் கேட்டுக் கோழியும் குரல் கொடுத்துள்ளதை
‘முதல்வநின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்
குரல்கேட்ட கோழி குன்றதிரக்கூவ (பரி.8, 17-19 வரிகள்)
என்று பரிபாடல் கூறுகிறது.
சங்க இலக்கியத்தில் மனைக்கோழி போன்று குப்பைக்கோழி, குடுமிக்கோழி ஆகிய சொல்லாட்சிகளும் இடம்பெற்றுள்ளன. குப்பைக் கோழிகள், போரிடும்போது தடுப்பார் இல்லாமையால் அதன் வலிமை அழியும் வரை போரிட்டு அடங்குகிறது. அதுப்போன்று தலைவியின் நோயும் தலைவன் வந்து போக்காமல் பசலைப்பெற்று நீடித்தது. மேற்காணும் கோழிகள் அனைத்தும் பெரும்பான்மை மருதநிலத்தில் காணப்படுகின்றன.

கானக்கோழி
கானக்கோழி காட்டுக்கோழி என்பர். இது கவர் குரலை உடையது. ஊதா நிறம் கலந்த கருப்பான காட்டக்கோழி காலை, மாலை இரு வேளைகளிலும் உணவைத் தேடுகிறது. புழு, பூச்சி, சிறிய பாம்பு, தானியம், இலந்தை , கிழங்கு முதலியவற்றை விரும்பி உண்ணும் . சனவரி முதல் மே மாதம் மவரையிலான காலத்தில் இணை சேருகிறது. 5முதல் 6வரையிலான முட்டை இட்டுப் பெண் காட்டுக்கோழி அடை காக்கிறது.

காட்டில் வாழும் கானவர்கள் உறங்கும்போது, வைகறைப்பொழுது வந்துவிட்டது என்பதை உணர்த்த கூவிற்று. இதைப் புறநானூறு
‘வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூவம்
கானத் தோர்நின் தெவ்வர் நீயே’’ (புறம்-28,8-10)
என்று கூறுகிறது. காட்டுக்கோழி கூட்டத்தோடு வந்து திணைகளை கவர்ந்துண்ணும். மழைத்துளியில் நனையப்பெற்ற மலரை வெறுத்து மிளக்கொடி பிணைந்திருப்பதில் உறக்கம் கொள்கிறது. சூதாடுபவர்கள் விளையாடி விட்டுச் சென்ற குழியல் முட்டையிடுவதை
‘நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லின் நல்லகம் நிறையப் பல்பொறிக்
கான வாரணம் ஈனும்’’
என்று புறநானூறு குறிப்பிடுகிறது. காட்டுக்கோழி தன் பெடைகளைக் கவர்கின்ற இனிய குரலையுடைய சேவலின் பிடரில் தண்ணிய துனிகள் துளிரத்துக் காப்பது போல் தன்பால் அடைக்கலம் புக்க தலைவியின் பால் தலைவன் பெரிதும் தண்ணளியுடையன் என்பதைக்
‘கானக் கோழி கவர்குரற் சேவல்
. . . . . . . . பூநாறு புறவில்’’
என்று குறுந்தொகைக் காட்டுகிறது. கிளிதின்று சிதறிவிட்டுச்சென்ற கதிரைக் காட்டுக்கோழிகள் அதன் கூட்டத்தோடு வந்து தின்றுள்ளன. இச்செயல் தலைவனால் நலன் உண்ணப்பட்ட தலைவியை, வேற்றுமணவரைவு நேர்ந்ததோடு ஒப்பிடப்பட்டுள்ளது. இதைச்
‘செவ்வாய்ச் சிறுகிளி. . . . . . . உயிர்த்தன’’ (அகநானூறு-192)
என்று அகநானூறு கூறுகிறது.
‘இந்தியாவில் உள்ள காட்டுக்கோழிகளில் இருவகை உண்டு. சிவந்த நிறமுடையது வடநாட்டில் மிகுதியாகக் காணப்படும். தமிழ்நாட்டில் மிகுதியாகக் காணப்படுவது வெண்மையும் கருமையும் கலந்த பொறிகளை உடைய கோழியாகும். இதையே சங்க நூல்கள் சொல்லியுள்ளன.’’ (பி.எல்.சாமி. சங்கஇலக்கியத்தில் புள்ளின விளக்கம்-ப.182)

கணந்துள் (ஆள்காட்டிக்குருவி)
கணந்துள் பாலைநிலப் பறவையாகவோ முல்லைநிலப் பறவையாகவோ இருக்கலாம். மஞ்சள்நிற ஆள்காட்டிக்குருவி பாலை நிலததிலும் சிவப்புநிற ஆள்காட்டிக்குருவி பசுமையான நிலத்திலும் வாழும் தன்மையுடையது. இப்பறவை நெடிய கால்களையுடையது. பாலை வழியில் வழிப்போக்கர்களுக்கும் பிற பறவைகளுக்கும் துணையாக இருந்துள்ளது. மறவர்கள் மறைந்திருந்து தாக்க இருப்பதைக் காட்டிக் கொடுத்துவிடும்-நற்-212, குறு-350
‘ஆணும் பெண்ணும் மார்புத் தூவிகளை நனைத்து வந்து முட்டைமீது படுத்து முட்டைகளைக் கோடைவெயிலின் வெப்பத்திலிருந்து காக்கும் பழக்கம் கொண்டவை காட்டுக்கோழிகளாகும்.
(க. ரத்னம்-தமிழ்நாட்டுப்பறவைகள் ப-43)
அறிவியல் என்பது வாழ்க்கையோடு ஒன்றிய ஒன்று என்பதையும் சங்ககாலத் தமிழரின் வாழ்க்கையில் ஆதாரமாய் இருப்பதையும் இன்றைக்கு உணரமுடிகிறது. அவர்கள் மருந்தே உணவாகக் கண்டிருக்கிறார்கள். வீட்டுமரம், காட்டுமரம், கோயில்மரம் என தாவரங்களைப் போற்றி இருக்கிறார்கள். கட்டிடத்தில் கலையைக் கண்டார்கள். அடை, அணிகலன்களில் அற்புதம் சொன்னார்கள். எண்களில் எண்ணங்களைக் காட்டினார்கள். அளவையில் அறிவைச் சொன்னார்கள். பறவைகளில் வாழ்வியலைக் கண்டார்கள். அதனுடன் இயற்கை நிகழ்வை அறிந்தார்கள். எனவே சங்ககால மக்களின் அறிவியல் அறிவு இன்றைக்கும் வெவ்வேறு பரிணாமத்தில் பொருந்துவதும் தேவையாக இருப்பதும் வியப்புதான்.

பார்வை நூல்கள்:
1. தொல்காப்பியம்-
2. சங்க இலக்கியங்கள்
3. பி.எல்.சாமி-சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
4. க.ரத்னம்-தமிழ்நாட்டுப் பறவைகள். மெய்யப்பன்தமிழாய்வகம்
தமிழ்நாட்டுப் பறவைகள் என 328 பறவைகளை க. ரத்னம் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.


து. ரோசி தமிழ்த்துறைத் தலைவர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பறவைகள்”

அதிகம் படித்தது