மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாப் ஆர்ட் – ஓவியர் ஆன்டி வார்ஹோல்

தேமொழி

Oct 13, 2018

மனிதர்களையும், நிகழ்வுகளையும், இயற்கையையும் காண்பதைக் கண்டவாரோ; அல்லது மக்களறிந்த தொன்மக் கற்பனைக் கதைகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் தங்களது கற்பனையில் உருவாக்கி இருபரிமாண ஓவியங்களாகவும் முப்பரிமாண சிற்பங்களாகவும் காட்சிப்படுத்தும் முறை மனித வரலாற்றில் கலை என விவரிக்கப்பட்டது. கலையின் அடிப்படை என்பது ஒலியற்ற எழுத்துவடிவற்ற முறையில் மொழி எல்லைகளையும் கால எல்லைகளையும் கடந்து ஒரு செய்தியை வாழும்காலத்தின் மக்களுக்கும் எதிர்காலத்தின் மக்களுக்கும் சொல்லிச் செல்வது. குகை மனிதர்கள் சுவரில் தீட்டிய வெள்ளை சிவப்புவண்ணக் கீறல்களோ அல்லது கோயில்களில் காணும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் அடிப்படை நோக்கம் காட்சித் தொடர்பு (Visual communication). கலைஞர் ஒருவரின் தனித்தன்மை அவரது படைப்பில் மிளிர்ந்து அவரது கருத்து மக்களைக் கவர்ந்தால் அவர் புகழ் பெற்ற கலைஞர் என்ற பெயர் எடுக்கிறார். எழுதப்படிக்கத் தெரிந்த எல்லோரும் எழுதினாலும் ஒருசிலரே அழகு நயத்தின் அடிப்படையில் கலைஞர் என்றும் பாவலர் என்றும் இலக்கிய உலகில் புகழ் பெறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.

காலந்தோறும் ஊடகங்கள் மாறி வந்துள்ளன. சிற்பங்களும் ஓவியங்களும் கால எல்லை, மொழி எல்லை கடந்து அவை சொல்லும் செய்தி என்னவென்று உலகின் பல மூலைகளில் உள்ள மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்திருந்தது; அதாவது படத்துடன் ஒரு சுருக்கமான பொருள் விளக்கக் கையேடு கொடுக்கத் தேவையற்ற நிலையில், இயல்பை விவரிக்கும் படைப்புகள் (representational visual communication) அவை. அதுவரை கலையின் கருத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் 19 நூற்றாண்டில் வேறு கோணத்தில் திரும்பியது. ஒரு கலைஞர் தனது கருத்தை எவ்வாறு தனது பார்வையில் விவரிக்கிறார் என்ற கோணத்தில் கலை திரும்பிய பொழுது; அந்தக் கருத்தாக்கத்தை கலைஞர் தனது படைப்பில் வெளிப்படுத்தும் உணர்வுக்கு (abstract expressionism) முக்கியத்துவம் ஏற்பட்டு, கலை மரபு என்ற எல்லை கைவிடப்பட்டு நவீனக்கலை (Modern art) என்பதன் காலம் துவங்கியது. ஐரோப்பா நவீனக்கலையின் தாயகம், 19 நூற்றாண்டின் மத்தியில் இருந்து சற்றொப்ப 1970 வரை, ஒரு நூற்றாண்டின் கால அளவிற்கு, பல கலைஞர்களாலும் பல ஊடகங்களும் வண்ணங்களும் பயன்படுத்தப்பட்டது. ஒரு படைப்பென்பது பார்வையாளரின் சிந்தனையைத் தூண்டவேண்டும் என்ற நிலையை கலைப்படைப்புகள் அடைந்தன.

 பாப் ஆர்ட் என்ற பின்நவீனத்துவ ஓவியங்கள்:

இந்த நவீனக்கலையின் முன்னேற்றத்தில் முற்றிலும் வேறுபட்டு மீண்டும் மக்களின் வாழ்வைக் காட்சிப்படுத்தும் முறை ‘பாப் ஆர்ட்’ என்ற பெயருடன் இங்கிலாந்தில் 1950 களின் மத்தியில் ரிச்சர்ட் ஹேமில்ட்டன் (Richard Hamilton – Father of Pop Art) என்பவரால் உருவாகி மீண்டும் கலையின் நோக்கம் திசை திரும்பியது. அமெரிக்காவில் பாப் ஆர்ட் 1960 களில் பரவலானது, அதில் மிகவும் புகழ் பெற்ற ஓவியர்களாக ஆன்டி வார்ஹோல் (Andy Warhol), ராய் லிச்சென்ஸ்டைன் (Roy Lichtenstein), ஜாஸ்ப்பர் ஜோன்ஸ் (Jasper Johns) ஆகியோரைக் கூறலாம். பாப் ஆர்ட் ஓவியங்கள் என்பதன் அடிப்படை; மக்களிடம் பரவலாக சென்றடைந்த பாப்புலர் (popular) உருவங்களைக் கொண்ட ஓவியங்கள் என்பதாகும்.  பாப் கல்ச்சர், பாப் மியூசிக், பாப் ஆர்ட் எனக் கலையின் நோக்கம் மக்களைப் பிரதிபலிக்கத் தொடங்கியது 1960 களின் வரலாறு. ஓவியங்கள் முறையாக பாப் ஆர்ட் என்ற பெயரால் அழைக்கப்படத் துவங்கியது 1962 இன் ஒரு ஓவியக் கண்காட்சி முதற்கொண்டு. உலகில் போர்க்காலம் முடிந்த பிறகு, உலகின் இளைய தலைமுறையாக வாழ்வைத் துவக்கியவர்கள் உலகை எதிர் கொண்ட முறையால் அது பாப் கல்ச்சரின் பொற்காலம் எனலாம். இத்தலைமுறையினர் போரை வெறுத்து உலக அமைதியை விரும்பும் மனப்பான்மை கொண்டவராயும் இருந்தனர். 1960களில் பழைய மரபை ஏற்காத மனநிலை கொண்ட ‘ஹிப்பி’ (hippy) மக்களின் காலத்தை நினைவு கூர்பவருக்கு, இவ்வாறாக மக்களை மையமாகக் கொண்ட ஒரு எண்ணப்போக்கு வியப்பளிக்காது.

பாப் ஆர்ட் என்ற முறையில் நவீனக்கலை திசை மாறியபொழுது, ஒரு படைப்பின் கருத்து என்பது மக்களின் வாழ்க்கையில் இடம் பெறும் எவரும் அல்லது எதுவும் அதன் மையக் கருத்தாக அமையலாம் என்றானது. மேலும் கலையும் வணிகமும் இணைந்து நடைபோட்டது. கலை என்று அருங்காட்சியகத்தில் அடக்கிவிடுவது, அல்லது ஒரு சில மேட்டிமை கொண்டோருக்கான என்ற நிலை கைவிடப்பட்டது. ஓவியங்களில் சோதனைகள் பல நிகழ்த்தப்பட்டது இக்காலத்தில்தான். கலையை உருவாக்கும் நுட்பங்கள் பல சோதனை செய்யப்பட்டு, குறைந்த கால அளவில் அதிக படங்களை உருவாக்கும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைத் தக்க முறையில் ஒரு கருத்தை பிரதிபலிக்கப் பயன் கொள்ளப்பட்டது. படங்களில் அழுத்தமான கோடுகளும், அடர்த்தியான வண்ணங்களும், நிழலையும் உணர்வின் வேறுபாடுகளையும் காட்டுவதற்கு புள்ளிகளும் இடம்பெறத் துவங்கின. இந்த அடிப்படையைப் பின்பற்றும் எவையும் பாப் ஆர்ட் வகையில் அடங்கும்.

ஒருவகையில் படத்தின் கருத்து மக்களின் வாழ்க்கைமுறையை விருப்பத்தைக் காட்சிப்படுத்தும் எதுவாகவும் இருக்கலாம் என்ற நிலையில் அக்கால மக்களிடம் தாக்கம் ஏற்படுத்திய சாதாரண பொருட்களும், உணவு, உடை போன்றவையும் தொலைக்காட்சி, திரைப்படம், அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகள் முதற்கொண்டு அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்தும் உணவு, சோடா, சூப், சோப்பு, செருப்பு, விளம்பரங்கள், காமிக்ஸ் புத்தகம் முதற்கொண்டு பலவும் பாப் ஆர்ட் இல் இடம் பெற்று, ஏற்றுக்கொண்ட பெயருக்கேற்ப பாப்புலர் கல்ச்சரை பாப் ஆர்ட் ஓவியக்கலை வடித்தெடுத்துத் தந்தது. பெரும்பாலும் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை வண்ணங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன (இது இந்நாளிலும் மாறவில்லை. மைக்ரோசாஃப்ட் முதற்கொண்டு கூகுள் வரை பல பெரிய நிறுவனங்களின் முத்திரைகள் இந்த நிறங்களைக் கொண்டு அமைந்திருப்பதையும் காணலாம்). இந்த வண்ணங்கள் ஓவியரின் உணர்வின் வெளிப்பாடு என்ற வகையில் அமையாது.

இக்கால ஓவிய உருவாக்கம் அடையாளம் காணக்கூடிய படங்கள் என்ற நிலைக்கு மீண்டும் திரும்பியது. கோடுகள் தெளிவான உருவங்கள் படங்களில் இடம்பெறத் துவங்கின. வெவ்வேறு படங்களும் ஒருபடத்தில் கருத்தை வலியுறுத்தத் தொகுக்கப்பட்டன(collage). ஒருவகையில் பத்திரிக்கை விளம்பரங்கள், ஓவியங்கள் வளர்ச்சியுடன் பாப் ஓவியங்கள் கைகோர்த்து நடந்தன. இக்கால கட்டத்து கலை வளர்ச்சி பின்நவீனத்துவம் (Postmodern Art) என்றும் அறியப்படுகிறது.  தொடர்ந்து வந்த அடுத்த ஓவியர்கள் தலைமுறையும் அவர்கள் காலத்து கணினி வளர்ச்சியும் மேலும் பின்நவீனத்துவக் கலையில் பெரும் வளர்ச்சியைத் தந்தது. நவீனக்கலை காலத்து ஓவியங்கள் என்று கூறும் பொழுது பாப் ஆர்ட் ஓவியங்களுக்கு அதில் தனியிடம் உண்டு.

 ஆன்டி வார்ஹோல் என்றோர் ஓவியர்:

 Siragu Andy_Warhol_1975பாப் ஓவியங்களில் பலர் தனித்தன்மையுடன் முத்திரை பதித்தாலும் ‘தி போப் ஆஃப் பாப்’ (The Pope of Pop) என்ற புகழைப் பெற்றவர் ஆன்டி வார்ஹோல். ஸ்லோவேக்கியாவில் இருந்து அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகருக்குக் குடியேறியவர்கள் ஆன்டி வார்ஹோல்லின் பெற்றோர்கள். தந்தை கட்டுமானப்பணியிலும், தாய் தையல் தொழிலாளியாகவும் ஆடைகளில் பூவேலை செய்வதிலும் ஈடுபட்டிருந்தார்கள். குடும்பத்தில் மூன்றாவதாகப் பிறந்தவர் ஆன்டி வார்ஹோல் (ஆகஸ்ட் 6, 1928). சிறுவயதில் நோய்வாய்ப்பட்டு ஏழு வயதில் பள்ளி செல்லாமல் வீட்டில் முடங்கியிருந்த பொழுது, ஓவியம் அறிந்த இவரது அன்னை இவருக்கு ஓவியம் கற்பித்தார். பல நூல்களைப் படிக்கும் வாய்ப்பும் நடிகர் நடிகைகளின் மீது ஈர்ப்பும் அவருக்குத் தோற்றுவித்த அந்த காலம்தான் அவர் பின்னாட்களில் ஓவியராக உருவாகக் காரணமாக அமைந்ததாக ஆன்டி வார்ஹோல் குறிப்பிட்டுள்ளார்.

இவரது அன்னை இவருக்கு ஒரு படம் பிடிக்கும் கருவியை இவரது 9 ஆம் வயதில் பரிசாக அளித்த பொழுது புகைப்படம் எடுக்கும் ஆர்வமும் இவரைத் தொற்றிக் கொண்டது. தனது 14 ஆவது வயதில் தந்தையைப் பறிகொடுத்தார். இவரது ஓவியத் திறனை அறிந்து ஆதரித்த தந்தையின் விருப்பப்படி ‘கார்னகி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’ என்று அழைக்கப்படும் இன்றைய ‘கார்னகி மிலான் பல்கலைக் கழகத்தில்’ வணிக ஓவியம் குறித்து பயின்று பட்டம் பெற்று, 20 வயதில் நியூயார்க்கில் ஒரு வணிக ஓவியராக வாழ்க்கையைத் துவங்கினார். தொழிலில் பல படங்களைக் குறைந்த நேரத்தில் வரைந்து வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு, அவர்கள் வேண்டுகோளின்படி விரைவில் மாற்றியமைக்க ஒரு படத்தை பலமுறை உருவாக்கும் தேவை ஏற்பட்ட பொழுது வரைவதில், படி எடுப்பதில் பல நுணுக்கங்களை உருவாக்கி பரிசோதனை செய்து, வரையும் நுட்பங்களைச் செம்மையாக்கினார். இவரது பரிசோதனைகளில் படத்தில் சிறுநீர் ஊற்றி அது வண்ணங்கள் மாற்றும் முறையை (oxidation painting) பயன் கொண்டதும் அடங்கும். கிளாமர் மேகசின் தனது 1949 ஆண்டின் இதழில் படம் வரைந்தவர் என்று இவர் பெயரைக் குறிப்பிடும் பொழுது ‘ஆன்டி வார்ஹோல்’ என்று (Andrew Warhola என்பது இவரது உண்மைப் பெயர், ‘a’ தவறாக விடுபட்டு ஆன்டி வார்ஹோல் என்று எழுதப்பட்டுவிட்டது) தவறாகக் குறிப்பிட்டுவிட, தனது பெயரையும் அவ்வாறே தயக்கமின்றி மாற்றிக் கொண்டார்.

தொடர்ந்து ஆடை அலங்காரப் பொருட்களை வடிவமைக்கும் ஓவியங்களை வரைந்த பொழுது வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப காலணிகளை சிறப்பாக வடிவமைத்தார். ஸ்டென்சில், வார்ப்பு அச்சு போன்றவை உருவாக்கி ஒரே அச்சில் உருவானது போலவும் ஆனால் பற்பல வண்ணங்களில் மாற்றியமைத்துக் கொடுத்த பொழுது இவரது திறமை வெளிப்பட்டது. இவர் போல காலணிகளை வரைந்தவர் இல்லை என்றும் பாராட்டப்பட்டார். நியூயார்க்கில் பெரிய ஓவியக்கூடமும், தனது கீழ் பலரை வேலைக்கமர்த்தி ஓவியம் உருவாக்குவதைத் தொழிற்சாலைகளில் பொருட்கள் உருவாக்குவது போன்று நடத்தி பல வணிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தார். சில்க் ஸ்க்ரீன் பிரிண்டிங் (serigraphy, serigraph printing) என்ற முறையை ஓவியம் வரைவதிலும், புகைப்படங்களைப் பெரிதுபடுத்தி நிழல் உருவமாகத் திரையில் விழச் செய்து படி எடுத்து வரைவதிலும், காமிக்ஸ் படங்கள் போல விளம்பரப் படங்கள் உருவாக்குவதிலும் இவர் கையாண்ட நுணுக்கங்களால் பெரும் பொருள் ஈட்டினார். இவர் தான் ஒரு இயந்திரம் போல இயங்க வேண்டும் என்றும் ஓவியம் உருவாகுவது ஒரு தொழிற்சாலையில் பொருட்கள் உருவாக்கும் முறையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தனது ஓவியக்கூடத்திற்கும் தொழிற்சாலை (ஃபேக்டரி) என்று பெயரிட்டார். தனது வாழும் காலத்திலேயே, ஓவியம் வரைவதற்காக இவரளவில் புகழும் செல்வமும் ஈட்டி வெற்றிபெற்ற ஓவியர் கிடையாது.

இவரது ஃபேக்டரி என்ற அமெரிக்க இருப்பிடம் பல அறிவு மேதைகள் எனக் கருதப்பட்டோர் கூடும் இடமானது. இயல்பாக மக்கள் ஆர்வமுடன் நோக்கும் பெரும்புள்ளிகள் எனப்படுவோரையும் திரைப்பட நடிகர்களையும் இவரும் ஆராதித்தால் தனது ஓவியங்களின் கருப்பொருளாக ஜாக்குலின் கென்னடி (Jackie Kennedy – 1964), எலிசபெத் டைலர், மர்லின் மன்றோ (Gold Marilyn Monroe – 1962), கிங் ஆஃப் ராக் அண்ட் ரோல் எல்விஸ் பிரஸ்லி (Elvis I&II – 1963-64), குத்துச்சண்டை வீரர் முகமது அலி (Muhammad Ali – 1978), சீனத் தலைவர் மா சேதுங் (Mao Zedong – 1974) ஆகியோர் குறித்தும் இவர் படங்கள் வரைந்தார். இவர் புகழ் பெற்றதே பிரபலங்களை வரையத் துவங்கியதால்தான். கேம்பெல் சூப் (Campbell’s Soup Cans-1962), கோக்ககோலா (Coca-Cola -1962), பிரில்லோ சோப் (Brillo Soap – 1964), டாலர் சைன் (Dollar Sign – 1981) போன்றவற்றையும் வரைந்தார்.

ஓர் அரசவையின் உருவப்பட ஓவியர் போல இவரைக் கருதி பல பிரபலங்கள் $40,000 அளித்து தங்களைப் படமாக அவரிடம் வரைந்து வாங்கிக் கொண்டார்கள். 1970 களில் ஆண்டொன்றுக்கு சுமார் 50 உருவப்படங்கள் என்ற அளவில் வரைந்து பெரும் பொருள் ஈட்டினார். ஆனால் இந்த ஓவியங்களைக் காட்சிப்படுத்திய பொழுது, கலை ஆர்வலர்கள் அவற்றை விரும்பவில்லை. இத்தகைய வணிக அடிப்படை நோக்கில் உருவான ஓவியங்களில் கலைநயம் குறைவு என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. ஓவிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரது உலகச் சுற்றுப்பயண வரைபடங்கள் கொண்ட “எ கோல்ட் புக் – 1957″ (A Gold Book, 1957) என்ற நூலில் இந்திய சுற்றுலாவில் டெல்லி, ஆக்ரா பயணப் படங்கள் அடங்கியுள்ளது என்று தெரிகிறது. தனது ஓவியங்களை லாஸ் ஏன்ஜெலஸ் போன்ற நகர்களில் ஓவியக் கண்காட்சி மூலம் காட்சிப்படுத்தி பெயரும் புகழும் பெற்றார். பெரும் பொருளும் புகழும் பெற்ற பின்னர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மாறிப் பல திரைப்படங்களை உருவாக்கினார்.

கணினி பொதுமக்கள் மத்தியில் நுழைந்த 1980 களில் கம்மொடோர் நிறுவனத்தின் அமிகா (Amiga) கணினி வழியாக மென்பொருள் கொண்டு ஓவியம் உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டினார். புதிய தொழில் நுட்பங்களை கலையில் உள்வாங்கிப் பயன் கொள்வதில் முன்னோடியானவர் ஆன்டி வார்ஹோல். புகைப்படம், சிற்பம், திரைப்படம், தொலைக்காட்சி என்று இவர் நுழையாத துறை இல்லை என்ற அளவிற்குக் கலையின் எந்த வடிவமும் அவரை ஈர்த்தது. பாப் ஆர்ட் ஓவியராக உலகப் புகழ் அடைந்தார். பாப் கலாச்சார வாழ்க்கை முறையை நுண்கலை என்ற அளவிற்கு எடுத்துச் சென்றதில் பின்நவீனத்துவக் கால ஓவியங்களில் என்றும் ஆன்டி வார்ஹோலுக்குத் தனியிடம் உண்டு.

1960 களில் திரைப்படத் தயாரிப்பில் கால் பதித்த பொழுது சூப்பர் ஸ்டார் என்ற பல நடிகர்களை உருவாக்கினார். அவரது குழுவில் இருந்த பெண்ணியவாதி ஒருவர் திரைப்படத்தில் தான் எழுதிய ஒரு பகுதி வரவேண்டும் என்று வற்புறுத்த இருவருக்கும் கருத்து மோதல் உருவாகியது. சினம் கொண்ட அந்தப் பெண்மணி ஆன்டி வார்ஹோலைத் துப்பாகியால் சுட்டுவிட்டுப் போலீசில் சரணடைந்தார். இறந்தேவிட்டார் என்று எண்ணப்பட்டவரை ஓர் இறுதி முயற்சியாக மார்பைத் திறந்து, இதயத்தைச் செயற்கை முறையில் இயக்கி மருத்துவர்கள் உயிர் பிழைக்க வைத்துவிட்டனர். சுட்ட பெண்மணியை நீதிமன்றம் மனநோயாளர் காப்பகத்தில் சேர்த்தது. இவ்வாறு வியத்தகு முறையில் உயிர் பிழைத்துவிட்டாலும் பின்னாளில் அவரது மண்ணீரல் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட சிக்கலால், சில நாட்கள் கழித்து உறக்கத்தில் தமது 58 ஆவது வயதில், 1987 பிப்ரவரியில் உயிர் நீத்தார். ஓரினச்சேர்க்கை வாழ்க்கைமுறையில் ஆர்வம் கொண்ட ஆன்டி வார்ஹோல் திருமணம் செய்து கொள்ளாமல் இறுதிவரை தனித்து வாழ்ந்தார்.

தனது வாழ்நாள் முழுவதும் கலைப்பொருள் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார், அவற்றில் பல ஓவியம் தொடர்பான சேகரிப்புகளும் அடங்கும். தனது உயிலில் தனது சுற்றமும் நட்பு வட்டத்தில் இருந்தவருக்குச் சிறிதே செல்வம் அளித்துவிட்டு பொருள் அனைத்தும் ஓவியக்கலையின் வளர்ச்சிக்காகச் செலவிடப்பட எழுதி வைத்திருந்தார். இவரது பொருட்களை ஏலம் விட்டு விற்று பொருள் சேர்க்கவே 10 நாட்கள் தேவைப்பட்டது, அந்த வகையில் 20 மில்லியன் டாலர் இந்த ஏலத்தின் மூலம் திரட்டப்பட்டது. இறந்த பொழுது அவர் 220 மில்லியன் டாலர் பொருளுக்கும் செல்வத்திற்கும் உரிமையாளராக வாழ்ந்து மறைந்தார்.

Siragu Andy_Warhol_museumஇவர் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற பிட்ஸ்பர்க் நகரில் இவரது ஓவியங்களைக் காட்சிப்படுத்த ஏழு தளங்கள் கொண்ட அருங்காட்சியகம் ஒன்று 1994 இல் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே தனியொரு ஓவியருக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அருங்காட்சியகம் இது. இதில் அவரது வாழ்க்கை, அவர் தனது ஓவியங்களில் நுழைத்த நுட்பங்களை விவரிக்கும் காணொளிகள், சிற்ப மாதிரிகள், சிற்பங்கள், சற்றொப்ப 8,000 ஓவியங்கள் யாவும் நிரம்பியுள்ளன.  பார்க்க ஒரு முழுநாள் தேவைப்படும் அளவிற்கு இது ஒரு பெரிய அருங்காட்சியகம். இங்கு இவர் ஓவியங்களில் ஆய்வு செய்ய வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

Siragu Andy_Warhol_museum 3

Siragu-Andy_Warhol_musume1

பிட்ஸ்பர்க் நகர் பாலங்களின் நகரம் (The City of Bridges) என்று பெயர் பெற்ற நகரம். குறைந்தது 400 பாலங்கள் நகரின் பல பகுதிகளை இணைப்பவை. மூன்று ஆறுகள் கூடும் நகரம் என்பதால் ஆறுகளின் பகுதியிலேயே பெரும்பான்மையான புகழ்பெற்ற பாலங்களாக 30 பாலங்கள் உள்ளன. இவற்றில் ஆன்டி வார்ஹோல் அருங்காட்சியகம் செல்லும் வழியில் உள்ள, ஏழாம் வீதியில் உள்ள மஞ்சள் வண்ண பாலத்தை, தனது மண்ணின் மைந்தனான ஆன்டி வார்ஹோலைச் சிறப்பிக்க அவரது பெயரைச் சூட்டி சிறப்பித்துள்ளது பிட்ஸ்பர்க் நகரம்.

ஆன்டி வார்ஹோலின் ஓவியங்கள்:

பாப் ஆர்ட் ஓவியங்களில் உலகப் புகழ் பெற்றவை என்ற வரிசையில் ஆன்டி வார்ஹோல் ஓவியங்களில் பல முதலிடங்களைப் பிடித்துள்ளன. இன்று சில மென்பொருள் நிறுவனங்கள் படங்களை மேம்படுத்த உருவாக்கியுள்ள மென்பொருட்கள், ஒரு சாதாரண படம் ஒன்றை, புகழ்பெற்ற ஓவியர் ஒருவர் தனது பாணியில் அதனை வரைந்தால் எவ்வாறு தோற்றமளிக்கும் என்ற வகையில் படத்தை மாற்றிக் காணும் வாய்ப்பை அளிக்கின்றன. இதில் ஆன்டி வார்ஹோலின் ஓவிய முறையும் கிடைக்கிறது. இது அவர் மறைந்து 30 ஆண்டுகள் கடந்து கணினி மயமாகிவிட்ட உலகிலும் அவரது ஓவியங்கள் கொண்ட தாக்கத்தைக் காட்டுகிறது.

Siragu Indira_Gandhi

அவ்வாறு மாற்றித் தரும் மென்பொருள் ஒன்றின் உதவியுடன், ஆன்டி வார்ஹோல் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியை வரைந்திருந்தால் எப்படி வரைந்திருப்பார் என்று ஒரு எடுத்துக்காட்டாக இந்திராகாந்தியின் படம் மாற்றிக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பு: கவனத்தில் கொள்க; இது ஆன்டி வார்ஹோல் ஓவியம் வரையும் முறைக்கு ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே, அவரே வரைந்த படமன்று. அவர் இந்திரா காந்தியை வரைந்ததாகத் தெரியவில்லை.

Siragu Andy_Warhol_museum 4

ஆன்டி வார்ஹோல் வரைந்த மர்லின் மன்றோ படங்கள் பற்பல, அவற்றில் ஒருசில இங்கே காட்டப்பட்டுள்ளன. இப்படத்தில் காண்பது போல ஒரே படத்தை பல வண்ணங்களில் இவர் வரைந்த மர்லின் மன்றோ படம் ஒன்றே சிறந்த பாப் ஆர்ட் என்பதில் முதலிடம் வகிக்கும் படம். மர்லின் மன்றோ தற்கொலை செய்து உயிர் நீத்த பிறகு அவர் மறைந்தார் என்பதைக் காட்ட இது போன்று பல வண்ணப்படங்களை வரிசையாக்கி அவர் பிரபலமாக இருந்ததைக் காட்டி, பிறகு கருப்பு வெள்ளைப் படங்களாக அமைத்து, பிறகு அவையும் வெளிறிப் போன புகைப்படலமாய் மறைந்து போவதாகக் காட்டி மர்லின் மன்றோ மறைந்ததைக் குறிப்பால் உணர்த்தும் படமொன்றை (Marilyn Diptych. Year: 1962) ஆன்டி வார்ஹோல் உருவாக்கியிருந்தார்.

அவ்வாறே, கேம்பெல் சூப் பல வகைகளில் கிடைப்பதை பல கேம்பெல் சூப் டின்கள் ஒவ்வொரு சுவையிலும் இருக்கும் படத்தை (Campbell’s Soup Cans. Year: 1962) வரைந்திருந்தார், சூப் அவருக்குப் பிடித்த உணவு. ஆக்.ஷன் படம் என்பது போல பல எல்விஸ் பிரஸ்லி படங்களைத் தொடராக அமைத்த படமொன்றையும் (Eight Elvises. Year: 1963, $100 million worth) உருவாக்கினார். சில்வர் கார் கிராஷ் (Silver Car Crash) என்ற இவரது ஓவியம் 105 மில்லியன் டாலருக்கு விற்பனையான படம்.

மீண்டும் பாப் ஆர்ட் என்பதன் பண்புகள் என்னவென்பதைப் படித்துவிட்டு இவரது ஓவியங்களை மீள்பார்வை செய்தோமானால், பாப் ஆர்ட் காலத்தின் தாக்கமும் நோக்கமும், பரவலான மக்கள் விருப்பத்தைக் குறிக்கும் ஓவியங்கள் அருங்கலை என்ற நிலைக்கு உயர்ந்த ஒரு காலகட்டமும் புலனாகும். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி, ஒரு வரலாற்று ஆவணம் என்ற தகுதியைப் பெறுவது போல; பாப் ஆர்ட் ஓவியங்கள் காலத்தை சொல்லிச் செல்வது. நவீனக்கலை என்ற ஓவியக் காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஓர் ஓவிய அடிப்படைக்குச் சவால் விட்டு வளர்ந்த, மக்களின் வாழ்வைப் பிரதிபலித்த பாப் ஆர்ட் ஓவிய முறை தகுதியில் சிறந்தது எனலாம். அவ்வகையில் இவ்வோவிய முறையின்  முன்னோடியான ஆன்டி வார்ஹோலின் ஓவியங்களுக்குக் கலை உலகில் என்றும் ஒரு தனியிடம் நிலைத்திருக்கும்.

20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வெற்றிகரமான ஓவியர் என்பதைத் தவிர்த்து, “In the future, everybody will be world famous for fifteen minutes” என்ற அவர் கருத்து, எதிர்காலத்தில் நிகழ்வதை சரியாகக் கணித்த ஒரு கூற்று என்பதை இன்றைய இணைய-கைபேசி கால வாழ்க்கையில் நம்மால் உணர முடிகிறது.

தகவல் தந்து உதவிய இணைய தளங்கள்:

http://www.warhola.com/biography.html

https://warholfoundation.org/legacy/biography.html

https://www.biography.com/people/andy-warhol-9523875

https://www.warhol.org/

https://learnodo-newtonic.com/andy-warhol-famous-paintings

https://www.theartstory.org/artist-warhol-andy.htm

https://www.theartstory.org/movement-pop-art.htm

குறிப்பு: படங்களில் சில விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டன.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாப் ஆர்ட் – ஓவியர் ஆன்டி வார்ஹோல்”

அதிகம் படித்தது