பார்ப்பனர்களாய்ப் பார்த்து திருந்தா விட்டால்…
சாகுல் அமீதுDec 13, 2014
சில தினங்களுக்கு முன்னர் பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் திராவிட கொள்கைகளான பார்ப்பனிய எதிர்ப்பையும் இட ஒதுக்கீட்டையும் விமர்சித்து கட்டுரை எழுதி இருக்கிறார்.
இடஒதுக்கீட்டை ஆதரித்து எம்மைப் போன்ற பலர் எழுதி வருவதைப் போன்று, இடஒதுக்கீட்டை எதிர்த்து பார்ப்பன சமுதாயத்தின் கருத்தை அவர் எழுதி இருக்கிறார். அவரின் கூற்றில் பல சிறிய உண்மைகள் இருந்தாலும், சில பெரிய பொய்கள் இருப்பதாலே மறுப்பு விளக்கம் கொடுப்பதற்கு இதை எழுத வேண்டியதாகிவிட்டது.
இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் “இரண்டாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டது” என்கிற நியாயமற்ற கருத்தை பரப்புவதாக அவர் விமர்சித்திருக்கின்றார். அவருடைய கருத்திற்கு ஆதாரமாக பார்ப்பனர்கள் அல்லாத பல புலவர்களையும், ஆங்கிலேயர்கள் காலத்தில் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் இருந்தது என்பதையும் சுட்டி இருக்கின்றார்.
“இரண்டாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டது என்பது மிகைப்படுத்தப்பட்ட கருத்தல்ல, மாறாக மிதப்படுத்தப்பட்ட கருத்து. சரியாகக் கூற வேண்டும் எனில், “இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்வுரிமையே மறுக்கப்பட்டது” என்று தான் கூறவேண்டும்.
தற்போதைய நிகழ்வுகளை சுட்டி காட்டினால், திராவிட இயக்கங்களால் உருவான எதிர்வினை என்று சாக்கு கூறிவிடுவார்கள் என்பதற்காக திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்கு முந்தைய கால உதராணத்தை சுட்டி காட்டுகிறேன். அவர்களின் கூற்றுப்படி கல்விகற்க அனைவருக்கும் வாய்ப்பிருந்த ஆங்கிலேயர்கள் காலத்தில் எம்மக்கள் இருந்த நிலையைப் பாருங்கள். 1876 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொடும் பஞ்சத்தில் மக்களுக்கு ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்ட நிவாரணங்களை வில்லியம் டிக்பி என்கிற ஆங்கிலேயர் மதிப்பாய்வு செய்து பதிந்திருக்கின்றார். “ஒவ்வொரு கிராமத்திலும் பட்டினியில் வாடும் மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும், பசியால் மக்கள் இறக்க நேரிட்டால் அதிகாரிகளே அதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டிவரும்” என்று கடுமையான வசனங்களைக் கொண்ட சுற்றறிக்கை அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. கிராமஅதிகாரிகள் எவ்வாறு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குகிறார் என்று நேரடியாகப் பார்ப்பதற்கு வில்லியம் டிக்பி ஒரு கிராம அதிகாரியுடன் செல்கையில் ஓரிடத்தில் அந்த அதிகாரி ஊருக்குள் நுழையாமல் சுற்றுப் பாதையில் வழிகூறுகிறார். வண்டியை நிறுத்தி ஊருக்குள் நுழையும் படி கூறியதற்குத்தான் அதுபோன்ற ஊர்களுக்குள் நுழைய முடியாது என்று மறுத்திருக்கிறார் அந்த கிராமஅதிகாரி. பின்னர் அந்தப் பகுதியில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் ஒருசிறுவனை சோதித்துப் பாருங்கள் என்று கூறியதற்கும் பறையர்களை தன்னால் தொடமுடியாது என்று அந்த அதிகாரி மறுக்கிறார். இந்த அதிகாரி எந்த இலட்சணத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி இருப்பார்? அன்றைய காலகட்டத்தில் இருந்த அனைத்து அதிகாரிகளுமே உயர் சாதிக்காரர்கள் தானே. அவர்களுடைய சாதிப்பற்றால் இழந்த உயிர்கள் எத்தனை ஆயிரங்கள் அந்த ஆண்டு மட்டும்? இறந்து போன இலட்சக்கணக்கான மக்களில் பெரும்பகுதி ஒடுக்கப்பட்ட எம்மக்கள் தானே அன்று. பார்ப்பன குலத்தினர் எத்தனை பேர் இறந்தனர் அன்று? இறப்புப் பட்டியலில் கிட்டத்தட்ட 100% இட ஒதுக்கீடு பெற்றோமே அப்பொழுது எந்தபார்ப்பனரும் நாங்களும் உயிரை விடுகின்றோம் எங்களுக்கு இறப்புப் பட்டியலில் இட ஒதுக்கீடு தாருங்கள் என்று முன்வரவில்லையே. உயிர் போகும்கடைசி காலத்தில் கூட உணவை கொடுக்காதவர்கள், கல்வியை எப்படி கொடுத்திருப்பார்கள்? பார்ப்பன கட்டுரையாளர் கூறியபடி கல்விக்கான வாய்ப்பிருந்தது, ஆனால் எங்களுக்கு வாழ்க்கையே இல்லையே அன்று.
இடஒதுக்கீட்டில் பார்ப்பனர்களுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை என்று புரிய முடியவில்லை. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அரசு வேலை என்பது அரிதான பொருளாதார முன்னேற்ற வாய்ப்பு. அந்த வாய்ப்பை நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாக பங்கீட்டுக் கொடுப்பது தானே நியாயம். திறமையின் அடிப்படையில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்று கேட்பது எந்தவகையில் நாகரிகமானது? நாளை சில குண்டர்கள் உடல் வலிமையின் அடிப்படையில் வெற்றி பெறுபவர்களுக்குத் தான் சொத்துகள் என்று கிளம்பினால் ஏற்றுக்கொள்வீர்களா என்ன?
இடஒதுக்கீட்டால் பல உயர் சாதி மாணவர்களுக்கு சில குறிப்பட்ட கல்வி வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் தோன்றி இருக்கின்றது என்பதை காணமுடிகின்றது. அதை நாம் வாழும் சமூக மாற்றத்தின் யதார்த்தமாக ஏற்று கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். மாறாக இன்றும் நாங்கள் மனைவியை வைத்து சூதாடுவோம் என்று பழமை பேசமுடியுமா?
உயர்சாதி மாணவர்கள் மருத்துவரே தான் ஆகணுமா? ஏன் வீட்டுக்கு ஒருவராக இருக்கும் பொறியாளராகவோ, அறிவியலாராகவோ, சமற்கிருத ஆராய்ச்சியாளராகவோ எல்லாம் ஆகக்கூடாதா? உயர்கல்வியையும் அரசு வேலையையும் தவற விட்டு விட்டால் பார்ப்பனர்களால் உயிர் வாழவே முடியாதா? இந்த இரண்டு வாய்ப்புகளும் இல்லாமல் எத்தனை கோடி பாட்டாளி மக்கள் சிறப்பாக வாழ்கின்றார்களே, அவர்களை பார்த்து பார்ப்பனர்கள் கற்றுக் கொள்ளலாமே.
தற்போதைய இடஒதுக்கீட்டில் ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை சரிபடுத்துவதற்கு அனைவரும் ஆவலாகத்தான் இருக்கின்றார்கள். அவற்றை சுட்டிக்காட்டி இட ஒதுக்கீட்டை முழுவதுமாக எதிர்ப்பது என்பது வேட்டியில் கரை பட்டுவிட்டது என்பதற்காக வேட்டியையே கழற்றி எறிந்து விட்டு வெற்றுடம்புடன் நடப்பதற்கு சமமாகிவிடும்.
பார்ப்பனர்கள் மீது திராவிட இயக்கம் வெறுப்பை கக்குகின்றது, பார்ப்பனிய எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டும் தான் வேருன்றி இருக்கின்றது என்று அக்கட்டுரையாளர் குற்றம் சாட்டி இருக்கின்றார். பார்ப்பனர்கள், பணியாட்கள், ராஜ்புட்களை செருப்பால் அடியுங்கள் என்று தமிழ்நாட்டிலா கோசமிட்டார்கள்? இல்லையே தமிழ்நாட்டை விட பலமடங்கு அதிகமாக பார்ப்பனர்கள் வசிக்கும் உத்திர பிரதேசத்தில் தானே மாயாவதி அவ்வாறு கோசமிட்டார். கர்நாடகத்தில் பார்ப்பன எதிர்ப்பு குறைவாகவா இருக்கின்றது?
திராவிடஇயக்கத்தினரின் வெறுப்பு வியாபாரம் நீண்ட நாள் தாங்காது என்றும், இன்று தி.மு.க.வை பிளந்து தோன்றிய அ.இ.அ.தி.மு.க.வின் தலைமையே ஒருபார்ப்பனர் தான்என்று அக்கட்டுரையாளர் எழுதி இருக்கிறார். அவர் குறிப்பிடும் பார்ப்பன தலைவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். ஏன்அவர் பார்ப்பனியர்களின் விருப்பப்படி இட ஒதுக்கீட்டை குறைக்கவோ, ரத்து செய்யவோ இல்லை. மாறாக அவர் உச்ச மன்றத்தின் 50 விழுக்காடு உத்தரவையும் மீறி 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்தியது ஏன்? 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கறிஞர் விஜயனை அ.இ.அ.தி.மு.க.வினர் தாக்கியது ஏன்?. இதில் வழக்கறிஞர் விஜயன் பார்ப்பனரல்லாதவர், இருப்பினும் தமிழக மக்கள் அன்று விஜயன் பக்கம் நிற்காமல் பார்ப்பன தலைவர் பக்கம் தானே நின்றார்கள். தமிழர்கள் மிகத்தெளிவாகத்தான் இருக்கின்றார்கள், அவர்களின் எதிரி பார்ப்பனர்கள் அல்ல, பார்ப்பனிய கொள்கைகளை பின்பற்றுபவர்களே. அதே பார்ப்பன தலைவர் கோயில்களில் ஆடு மாடு வெட்டக் கூடாது என்று சட்டமிட்ட பொழுது என்ன ஆனது என்பதும் வரலாறு.
மக்களின் உள் மனதில் ஊறி இருக்கும் பார்ப்பன வெறுப்பை திராவிட இயக்கங்கள் அவ்வப்பொழுது தட்டி எழுப்பி தங்களது சுய இலாபத்திற்கு போதைப் பொருளாகப் பயன்படுத்துவதும் நடக்கத்தான் செய்கின்றது. அத்தனை ஊழலிற்கும், 2009 தமிழின துரோகத்திற்கு பின்னரும் தி.மு.க. தலைமையை பலர் பார்ப்பனிய எதிர்ப்பு என்ற ஒற்றைக் கருத்திற்காக ஆதரிப்பதை கண்கூடாக பார்க்க முடிகின்றது. ஊழல் காயங்களுக்கு சலுகை விலை மருந்தாக பார்ப்பனிய எதிர்ப்பு பயன்பட்டு வருவதையும் மக்கள் உணராமலில்லை.
திராவிட இயக்கங்களின் பார்ப்பனிய வெறுப்பு அரசியலை பின்பற்றி தமிழ் தேசியர்கள் தமிழரல்லாதவர்கள் மீதான வெறுப்பு அரசியலை தொடங்கி இருக்கிறார்கள் என்றும் விமர்சித்திருக்கிறார் அக்கட்டுரையாளர். ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு. அவர் வெறுப்பு பக்கத்தினை பார்க்கின்றார். திராவிடர்களும், தமிழ் தேசியர்களும் விருப்பு பக்கத்தினைப் பார்க்கின்றார்கள். திராவிடர்களின் நலனை விரும்பினால், பார்ப்பனர்களை வெறுப்பதாக எண்ணிக் கொள்கின்றார்கள். தமிழர்கள் அரசியலில் முன்னேற வேண்டும் என்றால் தெலுங்கர்களை, மலையாளிகளை, கன்னடர்களை வெறுக்கிறார்கள் என்று பரப்புரையில் ஈடுபடுகின்றார்கள். அவர்கள் கூறும் வெறுப்புகள் மக்களை பாதிப்பதில்லை, மாறாக மக்கள் பாதிக்கப்பட்ட காரணத்தினால் உருவான விளைவு தான் இந்த வெறுப்புகள்.
பார்ப்பனர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டில் பலவேறு இடைநிலை சாதிகளுக்கும் பொருந்தும் என்றாலும் அதிகளவிற்கான வெறுப்பை பார்ப்பனர்களே சம்பாதித்து இருக்கின்றனர். இடைநிலை சாதிகளில் மக்கள் பல்வேறு சிந்தனையில் செயல்படுவதைக் காணமுடியும், ஆனால் பார்ப்பனர்கள் பெரும்பாலும் ஒரேசிந்தனையில் செயல்படுவதுகூட அதற்கான ஒருகாரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு தனிஈழம்தான் தீர்வு என்பதற்கு ஆதரவாளர்களும் இடைநிலை சாதிகளில் இருப்பார்கள், எதிரானவர்களும் இருப்பார்கள். ஆனால் பார்ப்பன சமுதாயத்தில் எவரும் தனி ஈழதீர்வை ஆதரித்து எழுதமாட்டார்கள்.
இறுதியாக இந்த எதிர்ப்புணர்வு இருபக்கமும் இன்னும் எத்தனை காலத்திற்கு தொடர்ந்திருக்கும் என்று கேட்டிருக்கிறார் அக்கட்டுரையாளர். பார்ப்பனிய எதிர்ப்பு என்பது திராவிட இயக்கத்தினரால் பின்னப்பட்ட மாயவலைஅல்ல. பொது மக்களால் தங்களை காத்துக்கொள்ள கட்டப்பட்ட இரும்பு திரை.அத்திரையை தகர்த்து பார்ப்பனர்களுடன் இணக்கமாக வாழவே அனைத்துமக்களும் விரும்புகின்றார்கள். ஆனால் பார்ப்பனர்களோ தங்கள் வீடுகளை பார்ப்பனர்களுக்கு மட்டுமே வாடகைக்கு கொடுப்போம் என்பது போன்ற சிறு சிறுசெயல்களிலும் மக்களுடன் கலக்க விரும்பாமல் தனித்தே இருக்கின்றனர். பார்ப்பனர்களாய் பார்த்து திருந்தா விட்டால் பார்ப்பனிய எதிர்ப்பை ஒழிக்க முடியாது.
சாகுல் அமீது
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பார்ப்பனர்களாய்ப் பார்த்து திருந்தா விட்டால்…”