ஆகஸ்டு 11, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

பார்ப்பனர்களில் நல்லவர்கள்?!

இராமியா

Feb 17, 2018

Siragu paarppanargal1

“பார்ப்பனர்களில் நல்லவர்களே இல்லையா?” என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாக எதிர்ப்பதன் / ஒதுக்குவதன் மூலம் அவர்களில் உள்ள நல்லவர்களின் சேவை கிடைக்காமல் போய்விடும் என்றும், அதனால் சமுதாயத்திற்குப் பேரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இவ்வாறு கூறுபவர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அதிகாரப்படுத்தும் பணியைச் செய்த ஒரு பார்ப்பனரையும் வரலாற்றின் எந்தக்கால கட்டத்திலும் எடுத்துக்காட்டியது இல்லை.

பார்ப்பனர்களை/ பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து முதன்முதலாகப் போர்க்கொடி உயர்த்தி வரலாற்றில் முத்திரை பதித்தவர் புத்தரே. அப்படி அவர் போராடியபோது, அவர் பக்கம் நியாயம் இருக்கிறது என்றுகூறி, அவருடன் சேர்ந்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக எந்த ஒரு பார்ப்பனரும் துணைநின்றது இல்லை. அவருடைய மறைவுக்குப்பின், புத்தமதத்தை ஆக்கிரமித்து, நாத்திகரான புத்தரை கடவுள் அவதாரம் ஆக்கி, அம்மதத்தின் புரட்சிகர அம்சங்களை எல்லாம் நீர்த்துப்போகச் செய்தனர். ஒரு பார்ப்பனர்கூட புத்தரின் மனிதகுலச் சமத்துவக் கொள்கையை ஏற்கவில்லை என்பது மட்டும்அல்ல, அதை எதிர்த்துப் பார்ப்பன அதிகாரத்தை நிலைகுலையாமல் பார்த்துக் கொள்வதிலேயே உறுதியாக இருந்தனர்.

Siragu paarppanargal4

கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர், மந்திரம் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டது. ஆகவே கடவுளைவிடப் பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள். ஆகவே பார்ப்பனர்களுக்குத் தீங்கு இழைக்கக்கூடாது என்பது மட்டும் அல்ல, அவர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு நேராமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதே கடவுளுக்கும் சமூகத்திற்கும் இழைக்கும் பெரும்பாவம் என்றும், அவ்வாறு செய்யாதவர்களைக் கடவுள் கடுமையாகத் தண்டிப்பார் என்றும் ஒரு மாயஉருவை உருவாக்கி வைத்து இருந்தார்கள்.

கஜினி முகம்மது போன்ற இசுலாமியர்கள் படை எடுத்து வந்து இங்குள்ள செல்வங்களை எல்லாம் வாரிக்கொண்டு போனார்கள். செல்வங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் வசமே குவிந்து இருந்ததால், அவர்கள் பார்ப்பனர்களையே குறிவைத்துத் தாக்கி, துன்புறுத்தி, கவர்ந்துகொண்டு போனார்கள். பார்ப்பனர்களைத் தாக்குவதும், துன்புறுத்துவதும், அவர்களிடம் இருந்து செல்வங்களைக் கவர்வதுமான நிகழ்வுகள் தொடர்ந்து ஒவ்வொரு படைஎடுப்பின் போதும் நடந்தன. அவ்வாறு பார்ப்பனர்களைத் துன்புறுத்திய இசுலாமியர்களுக்கு எந்தக்கேடும் நிகழவில்லை என்பது மட்டும் அல்ல, அவர்கள் மேலும்மேலும் வலிமையுடன் திரும்பத்திரும்பத் தாக்கியதையும் மக்கள் கண்டனர். பார்ப்பனர்களைத் துன்புறுத்தினால் அல்ல, அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளாமல் இருந்தாலே “சாமி கண்ணைக் குத்திவிடும்” என்று கட்டப்பட்டு வைத்து இருந்த மாய உரு (False image) உடையத்தொடங்கிஇருந்தது. இந்நிலை தொடர்ந்து இருந்தால் “பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள், அவர்கள் உயர்நிலை வேலைகளையே செய்யவேண்டும்” என்ற வழக்கம் / எண்ணம் மறைந்து போயிருக்கும். அதிகாரம் கொண்ட வேலைகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தரப்பட வேண்டும் என்ற நிலைமாறி, அனைத்து வகுப்புமக்களும் அனைத்து நிலை வேலைகளையும் செய்யும்படியான நிலை ஏற்பட்டு இருக்கும்.

Siragu paarppanargal5

ஆனால் இந்த நிகழ்ச்சிப்போக்கு நடந்து விடக்கூடாது என்று மிகத்தீவிரமாக யோசித்த இராமாநுஜர் வர்ணாசிரம அதர்மத்தைத் தளரவிடாமல் காப்பதற்கு ஒரு உத்தியை வகுத்தார். அதன்படி பேச்சளவில் சாதிவேறுபாடு இல்லை என்றார். சில சூத்திரர்களைப் பார்ப்பனர்களாக ஏற்றுக் கொண்டார். ஆனால் திறமை இருக்கிறதோ இல்லையோ பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளில் அமர்த்தப்பட வேண்டும். திறமை இருந்தாலும் சூத்திரர்கள் கீழ்நிலை வேலைகளையே செய்யவேண்டும் என்ற வர்ணாசிரம அதர்மக் கோட்பாட்டில் சிறுகீறலும் விழுந்து விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார், வெற்றியும் கண்டார்.

சரிந்துகொண்டு இருந்த வர்ணாசிரம அதர்மத்தைச் சரியாமல் தடுத்து மீண்டும் நிலைநிறுத்தியதால் இராமாநுஜரைப் புரட்சியாளர் என்றும் சீர்திருத்தவாதி என்றும் அவாள் சொல்வதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால் பெரியாரின் வழியில் நடந்து கொள்வதாகச் சொல்லும் சிலர் அவரை “மதத்தில் புரட்சிசெய்த மகான்” என்று கூறுவது விந்தையிலும் விந்தை.

இராமாநுஜர் ஒரு பக்கம் இருக்கட்டும். மனிதநேயம் கொண்டவர்கள் பாராட்டாமல் இருக்கமுடியாதபடி செயல்பட்ட இராஜாராம் மோகன்ராயை எடுத்துக்கொள்வோம். கணவன் இறந்தால் அவனை எரிக்கும் சிதையுடன் மனைவியையும் சேர்த்து உயிருடன் எரிக்கும் உடன்கட்டை (ஏறும்அல்ல) ஏற்றும் பழக்கத்தை ஒழித்தவர் அவர். அப்பேர்பட்ட அவரும், திறமை இல்லாவிட்டாலும் பார்ப்பனர்களை உயர்நிலை வேலைகளில்தான் அமர்த்த வேண்டும். திறமை இருந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்புமக்கள் கீழ்நிலை வேலைகளைத்தான் செய்யவேண்டும் என்ற வர்ணாசிரம அதர்மத்திற்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை.

பார்ப்பனர்களைப் பற்றி பெரியாருக்கும் காந்தியாருக்கும் நடந்த வாக்குவாதத்தில் “பார்ப்பனர்களில் நல்லவர்கள் இருக்கிறார்களா?” என்ற வினாவிற்கு விடைதேடிய காந்தியார் நீண்டநேரம் யோசித்தபின் கோபாலகிருஷ்ண கோகலே இருப்பதாகக் கூறினார். அப்படிப்பட்ட கோபாலகிருஷ்ண கோகலேயும், ஒடுக்கப்பட்ட வகுப்புமக்கள் துன்புறுத்தப்படக் கூடாது என்றுதான் போராடினாரே ஒழிய, வர்ணாசிரம அதர்மத்தைக் குலைத்து, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அதிகாரப்படுத்தும் விதமாக, அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலை வேலைகளையும் செய்யவேண்டும் என்று கூறவே இல்லை.

சாதிஒழிப்பு வீரராகத் தூக்கிநிறுத்திக் காட்டப்படும் பாரதியாரும் நீதிக்கட்சியினர் முன் வைத்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவக் கொள்கையைக்கண்டு முகம் சுளித்தார். இதைப்பற்றிக் கருத்து சொல்லவேண்டியநிலை ஏற்பட்டபோது, அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார். அது மட்டும் அல்லாமல் வர்ணாசிரம அதர்மத்தை வானளாவப் புகழ்ந்தும் உள்ளார். அவருடைய கருத்து ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைத் துன்புறுத்தி வேலைவாங்கக்கூடாது என்பதுதான். திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் அமர்த்தப்படக்கூடாது என்பதையோ, திறமைமிகுந்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலை வேலைகளில் அமர்த்தப்பட வேண்டும் என்பதையோ அவர் விரும்பவில்லை. (ஆனால் பார்ப்பனர் அல்லாத வ.உ.சி. முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவக் கொள்கையைத் தனது அரசியல்பெருஞ்சொல்லாகப் பிரகடனம் செய்தார்.)

Siragu paarppanargal2

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பின், பொதுவுடைமைக் கட்சியின் போராட்டங்கள் பலவற்றில் பார்ப்பனர்கள் பங்குகொண்டு பல ஈகங்களைப் புரிந்து உள்ளனர். ஆனால் அவையாவும் கூலி உயர்வுப் போராட்டங்களே ஒழிய, சமூக மாற்றப் போராட்டங்கள் அல்ல. முக்கியமாக, திறமைக் குறைவான பார்ப்பனர்களைக் கீழ்நிலை வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பவைக்கும், மற்றும் திறமைஉள்ள ஒடுக்கப்பட்ட வகுப்புமக்களை உயர்நிலை வேலைகளுக்குச் செல்லவிடாமல் தடுக்கும் வர்ணாசிரம அதர்ம முறைக்கு எதிரான போரட்டங்கள் அல்லவே அல்ல. அப்படிப்பட்ட போராட்டங்களைப் பொதுவுடைமைக் கட்சிகள் முன் வைக்கவில்லை. அப்படி முன்வைத்தால் அப்பொழுதுதான் அக்கட்சிகளில் உள்ள பார்ப்பனர்கள் நல்லவர்களா/ புரட்சியாளர்களா என்று தெரிந்து கொள்ளமுடியும்.

இன்னும் சில பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் குருதிக்காகத் தவிப்போர்களுக்குக் குருதி கொடுத்து உயிர்காக்கும் பண்பாளர்கள். அப்படிப்பட்ட பண்பாளர்கள் பழகுவதற்கும் இனியவர்களாகவே இருப்பார்கள். ஆனால் வர்ணாசிரம அதர்மத்திற்கு எதிராகப் பேசினால் அவர்களால் பொறுத்துக் கொள்ளமுடியாது.

இப்படியாக எங்கெங்கு சுற்றினாலும், எப்படிஎப்படிப் பார்த்தாலும் நல்லவர்கள், புரட்சியாளர்கள் என்று நினைக்கத் தோன்றும் பார்ப்பனர்கள் யாருமே வர்ணாசிரம அதர்மத்திற்கு எதிராக என்று வரும்போது பதுங்கிக் கொள்கிறார்கள், குழப்புகிறார்கள், முரண்டுபிடிக்கிறார்கள், எதிர்த்துச்சீறுகிறார்கள். அனைத்து வகுப்பிலும் அனைத்து நிலைத்திறமை உடையவர்களும், இருக்கையில், உயர்நிலைகளில் பார்ப்பனர்களையும், அடுத்த நிலைகளில் ஒடுக்கப்பட்ட வகுப்புமக்களையும் தேர்ந்தெடுப்பதால் பொதுப்போட்டிமுறை திமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கச் சற்றும் திறனற்றது என்பதை அவாளால் உள்வாங்க முடிவதே இல்லை. இதை உள்வாங்கி விகிதாச்சாரப் பங்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடல் உழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப முடியக்கூடாது என்பதிலும், திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட வகுப்புமக்கள் அதிகாரம் கொண்ட வேலைகளைப் பெறுவதில் உள்ள தடைகள் தகர்க்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக நிற்கும் பார்ப்பனர்களைத்தான் நல்லவர்கள் என்று கூறமுடியும். அப்படிப்பட்ட பார்ப்பனர்களுடன் சேர்ந்து பணியாற்ற முற்போக்கு உள்ளம் கொண்ட அனைவரும் ஆயத்தமாக உள்ளனர்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பார்ப்பனர்களில் நல்லவர்கள்?!”

அதிகம் படித்தது