பிரிவு 370 நீக்கியது சரியா?
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிAug 10, 2019
அண்மையில் நரேந்திர மோடி அரசு பிரிவு 370 ஐ நீக்கி ஜம்மு & காஷ்மீர் மாநில உரிமையை தடை செய்து அதனை யூனியன் டெரிட்ரீயாக அறிவித்து உள்ளது. யூனியன் டெரிட்ரீகளை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கும் நேரத்தில் ஒரு மாநிலத்தின் உரிமைகளை நடுவண் அரசு பறித்திருப்பது மக்களாட்சியின் தோல்வி.
அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பிரிவு 370 ஐ பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்றன. அன்று அதிகாரத்தில் இருந்த காங்கிரசு கட்சிக்கு தனி அந்தஸ்த்து தரும் பிரிவு 370 இல் விருப்பம் இல்லை என்ற போதும், பாகிஸ்தானின் தலையீடு காரணமாகவும், ஐ.நா வின் தலையீடு காரணமாகவும் அப்போதைய பிரதமர் நேரு இதற்கு ஒத்துக்கொண்டார். மேலும் இந்தியாவோடு ஜம்மு & காஷ்மீர் இணைக்கப்பட வேண்டும் என்பதை மகாராஜா ஹரி சிங் தான் கையெழுத்திட்டார், அவருக்கு மக்களின் ஆதரவு இல்லாத நிலையில் சிறப்பு அதிகாரம் கொண்ட மாநிலமாக ஜம்மு & காஷ்மீரை இந்தியா அங்கீகரித்தது.
ஆர்.எஸ்.எஸ் காந்தியின் கொலையில் தொடர்பிருந்த காரணத்தினால் மறைமுகமாக இயங்கிக் கொண்டு இருந்தது. அதனால் ஆர்.எஸ்.எஸ் இந்து மகா சபையின் மூலமாக எதிர்ப்பை பதிவு செய்தது என்ற போதும் அவர்களால் தடுக்க முடியவில்லை. அன்று செய்ய முடியாத அநீதியை முழு பலத்துடன் ஆட்சிக்கு வந்துவிட்டதால் இன்று செய்ய துணிகின்றனர்.
சிறப்பு அந்தஸ்த்து ஜம்மு & காஷ்மீருக்கு இந்திய வழங்கியபோதும் அதனுடைய உள் விவகாரத்தில் இந்தியா மூக்கினை நுழைத்துக் கொண்டுதான் இருந்தது. இன்றைய நிலையில் 370 ஐ நடுவண் அரசு காஷ்மீரின் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலே நீக்கி உள்ளனர். பிரிவு 370 -ஐ அரசமைப்புச் சட்டம் 370(1) பிரிவின் படி ஜம்மு – காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதல் பெற்றே பிறப்பித்துள்ளேன் என்று இன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார் என்ற போதும் உண்மை என்னவென்றால், கடந்த ஆண்டே காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. இதில் இருந்து இன்றைய மோடி அரசு சர்வாதிகார போக்குடன் நடந்திருக்கின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதும் காஷ்மீர் விவகாரத்தில் மனிதநேயமற்ற அதிகாரப் போக்குடனே நடந்திருக்கின்றது. ஐநாவின் தீர்வையும் ஏற்றுக்கொள்ளாமல், இராணுவப் படைகளை அந்த மாநிலத்தில் குவித்துள்ளது. உள்மாநில காவலர்கள் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இராணுவப் படைகள் 1:10 என்ற விகிதத்தில் தான் இன்றும் உள்ளது.
இதே போக்கில் வடகிழக்கு மாநிலங்களின் தன்னாட்சியை ஆளும் மதத் தீவிரவாத அரசு தடை செய்ய அனைத்து வாய்ப்பும் உள்ளது. இது தங்கள் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கும் பரவும். இதனால் மிகப்பெரிய அரசியல் நிலையற்ற தன்மை நாட்டில் ஏற்படும், மாநில சுயாட்சி என்பதே இந்திய துணைக்கண்டத்தை சிதையாமல் காக்கும் என்பதே அரசியல் தலைவர்களின் கருத்தாக உள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக போராடுவதாக சொல்லக்கூடிய மாயாவதி போன்றோர், டெல்லியின் அதிகாரத்திற்காக போராடக் கூடிய அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோரும் காஷ்மீர் பிரச்சனையில் நடுவண் அரசின் சர்வாதிகார போக்கை ஆதரித்திருப்பது மிகுந்த வேதனையான ஒன்று என்றே சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
விடுதலை அடைந்து கடந்த 70 ஆண்டுகளில் ஒரு மாநில சட்டசபையின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில அதிகாரத்தை நீக்கி யூனியன் டெரிட்டோரியாக அறிவித்தது இதுவே முதல் முறை. இந்திய அரசமைப்பின் concurrent list என்பதே மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கத்தான் என்பதை மீண்டும் நடுவண் அரசு பதிய வைத்திருக்கின்றது.
காஷ்மீர் பிரச்சனையை பொறுத்த வரை தமிழ்நாடு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அவர்கள் காட்டிய பாதையில் இன்றும் பயணித்து மாநில சுயாட்சிக்கான குரலை உயர்த்தி பிடித்திருப்பது வடக்கில் உள்ள பலரை தமிழ் நாட்டை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது.
இந்த தகவல் தொழில்நுட்ப காலத்திலும் பொய்கள் எவ்வாறு வேகமாக பரவுகின்றன என்பதற்கு காஷ்மீர் பிரச்சனையே சாட்சி. முதலில் காஷ்மீரில் இரட்டை குடியுரிமை இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும், இது நடைமுறையில் இல்லை. அதே சட்டம் தான் காஷ்மீருக்கும். இதைப்பற்றிய பொய் செய்திகள் இணையத்தில் வலதுசாரிகளால் வேகமாக பரப்பப்படுகிறது. அடுத்து காஷ்மீரில் தகவல் அறியும் சட்டம் உள்ளது.
தவறான தகவல்களால் இணையம் நிரம்பி வழியும் சூழ்நிலையில் அதைப் பற்றிய புரிந்துணர்வு அவசியம்.
இனி வரும் காலங்கள் இந்தி பேசாத மாநிலங்களுக்கும், சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தல் நிறைந்ததாகவே இருக்கும்.
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரிவு 370 நீக்கியது சரியா?”