மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புகழ் நிலைத்திருக்கும்!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Feb 8, 2020

Siragu kobe bryant1

மரணம் வலி மிகுந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சில மரணங்கள் என்றென்றும் அச்ச அதிர்வலைகள் தரும் வல்லமை மிக்கது. ஒரு நொடி நம்மை அந்த நிலையில் சிந்தித்துபப் பார்க்கும்போது உயிர் வரை நடுக்கத்தை உணர முடியும். கண்ணிமைகளால் கூட துயரத்தின் வலியை அறிய முடியும், அப்படி ஒரு மரணம்தான் கூடைப்பந்து வீரர் Kobe Bryant மற்றும் அவரின் 13 வயது மகள் Gianna விற்கு நடந்தது. அவர்களோடு இன்னும் 7 பேர் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போனார்கள். Kobe Bryant தன் சிறு வயது முதலே கூடைப்பந்தில் ஆர்வம் கொண்டு விளையாடி 5 முறை தான் விளையாடிய Lakers அணிக்காக வெற்றியை ஈட்டித் தந்து championship வென்றவர். அவருடைய மகள் 13 வயது Gianna தன் தந்தையைப் போலவே கூடைப்பந்தாட்டத்தில் முன்னனி வீராங்கனையாக திகழ்ந்தார்.

Kobe Bryant இன் இந்த மரணம் பல அதிர்வலைகளை அவர் ரசிகர்கள், நண்பர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இந்த செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் ஒரு செய்தியை கவனிக்க நேரிட்டது. Gianna வோடு சேர்த்து Kobe – க்கு 4 மகள்கள். அவரின் கடைசி மகளுக்கு இப்போது தான் 7 மாதங்கள். ஒரு பேட்டியில் Kobe Bryant – யிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகின்றது. உங்களுக்குப் பின் உங்கள் கூடைப்பந்தாட்ட முறைகளைக் கொண்டு செல்ல ஒரு மகன் வேண்டாமா? அப்போது அவர் மகள் Gianna அருகில் இருந்து “நான் இருக்கிறேன்”(I am there to carry the legacy of my father. Son is not needed for that) என்று பதில் கொடுத்தாராம். அந்த வீரங்கனையையும் நாம் இந்த விபத்தில் இழந்தோம் என்பதே வேதனை.

அப்போது தான் Kobe Bryant கூறினார் “என் மனைவிக்கு மகன் வேண்டும் என்ற விருப்பம் உண்டு, அதனால் தான் முயன்று கொண்டு இருக்கிறார்“ எனச் சொல்லி சிரித்தார்.

இந்த செய்திகளை படிக்கும் போது வளர்ந்த நாடுகளில், பொருளாதார தன்னிறைவு கொண்டவர்களிடத்திலும் ஆண் குழந்தை தான் தந்தையின் புகழை எடுத்துச் செல்ல தகுதியானவன் என்ற சிந்தனை எப்படி பதிந்திருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது.

அந்த ஆணாதிக்கச் சிந்தனையை தகர்க்கும் விதமாக அவரின் முதல் மகள் கைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்க, இரண்டாவது மகள் மறைந்த Gianna கூடைப்பந்தில் சிறந்து தன் தந்தையைப் போன்றே அதில் அறிவுக் கூர்மை பெற்றவராக விளங்கினார்.

ஆணாதிக்கச் சிந்தனை மரபு உலகம் முழுவதும் எப்படி நீக்கமற நிறைந்துள்ளது என்பதற்கு Kobe Bryant – யிடம் கேட்கப்பட்ட கேள்வியே சாட்சி.
தன் நண்பர்கள் தன்னிடம் “It takes a man to make a boy “(ஒரு ஆண் மகனால் தான் ஒரு ஆண் குழந்தையை உருவாக்க முடியும்) என ஒருமுறை கூறியிருக்கிறார்கள். அதற்கு Kobe, “ It takes a king to make princess” என்று பதிலளித்து உள்ளார். (ஒரு அரசனால் தான் இளவரசிகளை உருவாக்க இயலும்) இந்த கேள்வியும் அந்த கேள்விக்கான பதிலும் ஊறிப்போன ஆணாதிக்க சமூகத்திற்கு மகள்களின் தந்தை அளித்த பதிலாகத்தான் பார்க்க முடியும்.

ஐந்து பெண்களை பெற்றால் அரசனும் ஆண்டி என பிற்போக்கு சமூக கட்டமைப்பின் எச்சங்களை Kobe Bryant – உம் அவரின் மகளும் தகர்த்து வெற்றிகளை குவித்திருக்கின்றனர். இன்று அவர்கள் இருவரும் நம்மிடையே இல்லை என்றாலும் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புகழ் நிலைத்திருக்கும்!”

அதிகம் படித்தது