மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புதினங்களில் ஆளுமை வெளிப்பாடுகள்

முனைவர் மு.பழனியப்பன்

Feb 25, 2023

siragu-pen-ezhuthalargal2-150x150புதினங்களில்  ஆளுமை வெளிப்பாடுகள்    

புதினங்கள் எழுதுவதில் சென்ற நூற்றாண்டில் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.  இந்துமதி, லட்சுமி, அனுராதா ரமணன், வாஸந்தி போன்றோர் அவ்வகையில் குறிப்பிடத்தகுந்தவர்கள். தற்காலத்தில் ஓரளிற்குப் பெண்கள் புதினங்களை எழுதி வருகிறார்கள். புதினங்கள் வாயிலாகவும் ஆளுமைப் பண்புகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன.

சு.தமிழ்ச்செல்வியின் அளம் நாவலும்   பெண் ஆளுமைப் பண்புகளும்.

திருத்துறைப்பூண்டி நகருக்கு அருகே உள்ள கோயில்தாழ்வு என்னும் இடத்தில் கதை நிகழுகிறது. மூன்று பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு கணவனின் துணையின்றி தனியாக வாழ்வில் போராடும் சுந்திராம்பாளையும், அவளது மூன்று மகள்களையும் மையமாகச் சுற்றி கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. பிறந்த பச்சிளங்குழந்தை அஞ்சம்பாள், மூன்று வயதான ராசம்பாள், ஏழு அல்லது எட்டு வயதான வடிவாம்பாள் அவர்களோடு கதை தொடங்குகிறது. வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாகத் திரியும் சுதந்திராம்பாளின் கணவன் சுப்பையன் கப்பல் வேலைக்கு போகிறான். வேலை செய்யாது இருந்த போது திட்டிக்கொண்டேயிருக்கும் அவளுக்கு அவன் பிரிந்து போவது பெரும் துயரத்தை தருகிறது. சுப்பையன் அவளை சமாதானப்படுத்தி செல்கிறான். சென்றவன் மறுபடியும் ஊர் திரும்பவேயில்லை. உயிருடன் இருக்கிறான இல்லையா என்றே தெரியாத நிலையில் என்றாவது ஒருநாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு வாழுகிறாள் சுந்திராம்பாள், மூன்றும் பெண் குழந்தைகளாக அதுவும் மிகவும் கருப்பாக இருப்பதால் எப்படி அவர்களுக்கு திருமணம் செய்விப்பது கூடுதல் துயரத்திற்குள்ளாகிறாள்.

வறுமை வாட்டி வதைக்கும் இவர்களுக்கு வாழ்வின் பசிபோக்கும் உயிர்மருந்தாய் கேட்பாராற்று தானாய் வளர்ந்து கிடக்கும் பலவகையான கிழங்குகளே உணவுகளாக அமைந்துவிடுன்றன. ஒவ்வொரு வகை கிழங்குகளையும் உணவாக மாற்றிக்கொள்ளும் நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது. அத்தனை வறுமையிலும் தான் இருக்கும் கிராமத்தை விட்டு புலம் பெயர மறுக்கும் ஒரு வைராக்கியம் மிகுந்த மனுசியாக இருக்கிறாள் சுந்தரம். இந்த பிடிவாதத்திற்கு காரணம் மண் மீதான நேசம் என்பதைக்காட்டிலும் வெளிநாட்டில் மாயமாகிப்போன தன் கணவன் தன்னை இந்த இடத்திலேதான் விட்டு விட்டு போயிருக்கிறான், அவன் திரும்பி வரும்போது தான் அந்த இடத்திலேயே இருக்க வேண்டும் சமூகம் ஏற்படுத்தி வந்த வரைமுறைகளை கட்டிக்காத்து விட வேண்டும் என்பதுதான்.

காலங்கள் உருண்டோட இரண்டாவது மகள் ராசாம்பாளும் வயதிற்கு வந்துவிடுகிறாள். வறுமையோடு இரண்டாவது பெண்ணிற்கும் திருமணம் செய்ததுவைக்க வேண்டும் என்ற பொறுப்பும், கவலையும் அவளுக்கு வந்துவிடுகிறது. இந்த சூழலிலும் அவள் ஒப்பாரி வைத்து முடங்கிடாது தைரியாமாய் சூழலை எதிர்கொள்ளும் தன் போராட்டத்தை தொடர்ந்து நடத்துகிறார். என்றாவது ஒருநாள் தன் கணவன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையை மட்டும் மனதிற்குள் வைத்துக்கொண்டு தன் வாழ்க்கையை நகர்த்துகிறாள். இரண்டு பிள்ளைகள் வயதிற்கு வந்தவுடன் வெளி வேலைக்கு தன் கடைசி மகள் அஞ்சம்பாளை ஒத்தாசைக்கு வாத்துக்கொள்கிறாள். இருபத்தி மூன்று வயதாகியும் திருமணமாகாமல் இருக்கும் வடிவாம்பாளுக்கு இறுதியாக வரன் வருகிறது, ஏறத்தாழ அவள் அப்பன் வயதில், அதே சமயம் நடுக்கச்சிக்கும் வரன் வந்துவிட இருவரின் திருமணத்தையும் ஒன்றாக நடத்தி வைக்கிறாள். திருமணமான மூன்றாவது மாதமே முத்த பெண் மூளியாகி வீட்டுக்கு வந்துவிட சிறிய மனநிம்மதிகளுக்கு பிறகு அவள் போராட்டம் மறுபடியும் தொடங்கி விடுகிறது.

சாண் ஏற முழம் சறுக்கல் என வாழ்க்கை போராட்டம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சுந்திரம்பாள் உழைத்துக் கொண்டே இருக்கிறாள். அவள் உழைப்பிற்கான காரணங்கள் மட்டும் பரம்பரையாகத் தொடர்கிறது. முன்பு தன் குழந்தைகளுக்காக உழைத்தவள் இறுதியில் மகளின் குழந்தைகளுக்காகவும் சேர்ந்து உழைக்கிறாள்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதினங்களில் ஆளுமை வெளிப்பாடுகள்”

அதிகம் படித்தது