மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்ணெழுத்து

முனைவர் மு.பழனியப்பன்

Mar 26, 2022

siragu-pen-ezhuthalargal2-150x150

(சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையையும், ஜவாஹர் பிரேமலதாவின் புகாரின் செல்வியையும் முன்வைத்து)

சீத்தலைச் சாத்தனார் என்ற ஆண் புலவரால் எழுதப்பட்ட காப்பியம் மணிமேகலை. இதனை ஒரு பெண்பாற்புலவர் எழுதினால் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்று சிந்தனை செய்து பார்த்தால், அப்படி ஒரு பெண் மணிமேகலையை பெண்படைப்பாளராக இருந்து எழுதியிருக்கிறார் ஜவாஹர் பிரேமலதா என்ற பெண் படைப்பளார். மணிமேகலைக் காப்பியத்தைப் புகாரின் செல்வி என்ற பெயரில் புதின வடிவில் மீட்டுருவாக்கம் செய்துள்ளார். அப்படைப்பு ஒரு பெண் படைப்பாக மிளிரும் தன்மையை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

பெண் எழுத்தும் ஆண் எழுத்தும்

ஆண் செய்த இலக்கியங்கள் எல்லாம் ஆணின் ஆதிக்கத்தை உணர்த்துகின்றன. ஆனால் பெண்ணின் மொழி ஆதிக்க மொழியன்று. ஆணின் ஆதிக்க உணர்வில் எழுந்த பெண் பற்றிய வரையறைச் சட்டங்களை, பண்பாட்டமைதியில் எழுந்த பாலியல் ஒடுக்குமுறைகளைத் தகர்த்து எறிய விழைகிறது. பெண் மொழி ஆணாதிக்கச் சொல்லாடலை எதிர்த்து அமைவதுதான் பெண் மொழி” ( செ. சாரதாம்பாள், பெண்ணிய உளப்பகுப்பாய்வும், பெண் எழுத்தும். ப. 33)

மணிமேகலை பெண் எழுத்து அறிமுகம்

‘புகாரின் செல்வி’ என்ற புதினத்தின் கதை நாயகி மணிமேகலை. தன்னைப் பற்றி தானே அறிமுகம் செய்து கொள்கிறாள். இவ்வறிமுகம் பெண் எழுத்து சார்ந்த அறிமுகமாக விளங்குகிறது. ‘‘நான் ஒரு கணிகையின் மகள்.கணிகைகளின் அபல நிலை நான் அறியாததா? என் தாய் மாதவியின் அறிவும், திறமையும் குடத்திலிட்ட விளக்காய் அவளுடைய பிறந்த குலத்தினால் மாறிப் போனதே! பிறந்த தாயினாலேயே மீண்டும் நெருக்கடியான சூழலைச் சந்திக்கிறாளே! எல்லாவற்றையும் எதிர்த்துத் துறவிக் கோலம் பூணுவதற்குத் துணிந்தாளே. எப்படி வேண்டுமானலும் வாழலாம் என்று நினைக்கும் கணிகை குலப் பெண்கள் மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைத்து, தாயையும் நாடாளும் மன்னனையும் எதிர்த்து நிற்கிறாளே… கணிகை குலப் பெண்களில் ஒருத்தியாகப் பிறந்து பல ஆடவரால் வெறும் உடலாகப் பார்க்கப்படும் இழிநிலையை நானும் பெற்றுள்ளேனே. என்னையும் துறவியாக மாற்றிக் காட்டுவேன் என்று துணிந்து நிற்கிறாளே. ஆனால் கணிகை மட்டும் அல்ல எந்தப் பெண்ணும் இந்தச் சமூகத்தில் ஒழுக்கத்துடன் வாழ முடியாத சூழலையும் நான் அறிவேன் தாயே” (ப. 59) என்று தாயையும் தன்னையும் அறிமுகம் செய்து கொள்கிறாள் மணிமேகலை.

இந்தப் பகுதியின் வழியாக பெண்கள் ஒழுக்கத்துடன் வாழும் வாழ்வில் எதிர் கொள்ளவேண்டிய நெருக்கடிகள், சவால்கள் ஆகியவற்றை உணர்ந்து கொள்ள முடிகின்றது. இப்படித் தனக்குத்தானே அறிமுகம் செய்து கொள்ளும் வாய்ப்பு மணிமேகலைக் காப்பியத்தில் அமையவில்லை.

siragu manimegalai2

சீத்தலைச் சாத்தனார் காட்டும் மணிமேகலை அறிமுகம்

சீத்தலைச் சாத்தனார் மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலையை
‘‘மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந் தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்”
(சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை, ஊர் அலருற்ற காதை, அடிகள் 50-57)
என்று மாதவியே தன் மகள் மணிமேகலை அல்லள். அவள் கண்ணகியின் மகள் என்று சொல்லுமளவிற்கு பத்தினி மகளாக அருந்தவப் படுபவளாகச் சீத்தலைச் சாத்தனார் காட்டுகிறார்.

மேற்கண்ட இரு அறிமுகங்களில் மணிமேகலையை கணிகையாக உடல் சார்ந்து பார்க்கும் படியான ஆண்களின் பார்வையை இழித்துக் காட்டும் நிலையில் ஜவாஹர் பிரேமலதாவின் பெண்எழுத்து அமைந்துள்ளது. ஆனால் மணிமேகலை காப்பியத் தலைவி என்ற மதிப்பில் அவளைப் பெருமைப்படுத்தும் நோக்கில் சாத்தனாரின் பதிவு இருக்கிறது என்பதை உணரமுடிகின்றது.

மூலத்தில் இருந்து வேறுபடும் புதிய சந்திப்புகள்

மணிமேகலைக் காப்பியத்தில் படைத்துக் காட்டப்படாத பல நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், சந்திப்புகள் புகாரின் செல்வி என்ற புதினத்தில் காட்டப்பெற்றுள்ளன. மணிமேகலையும் கோவலனும் சந்தித்தாக மணிமேகலையின் மூலத்தில் இல்லை. ஆனால் புகாரின் செல்வி புதினத்தில் அவ்வாறு சந்தித்த ஒரு சந்திப்பு நிகழச் செய்விக்கப்படுகிறது.கோவலனின் தந்தை மாசாத்துவான் மணிமேகலையைச் சந்திப்பது போலவும் ஒரு காட்சி அமைக்கப்பெற்றுள்ளது.இதுவும் புதிய சந்திப்பாகும்.இதுபோன்று மாநாய்கனிடம் பணியாற்றிய சாமன் என்ற படகோட்டியையும் மணிமேகலை சந்திக்கிறாள். இவ்வாறு சந்திக்காத மனிதர்களை மணிமேகலை சந்தித்து இந்தப் புதினத்தில் மணிமேகலைக் காப்பியத்தின் மறுகோணத்தைக் காட்டுவதாக அமைகின்றது.

கோவலனின் கையைப் பற்றிக்கொண்டு மணிமேகலை கடற்கரையில் நடக்கிறாள்.கடற்கரை நண்டுகளுடன் அவள் வி்ளையாடி மகிழ்கிறாள். அப்போது மணிமேகலைக்கும் கோவலனுக்கும் நடந்த உரையாடல் காப்பியத்தில் இல்லாத கவினுறு காட்சியாகப் புதினத்தில் விரிகிறது.

‘‘அப்பா! எனக்கு யானை பொம்மை வாங்கித் தரியா?” கோவலன் பெருமூச்சு விட்டான். தேரேறி கடற்கரையில் அப்போதுதான் திறந்து வைக்கப்பட்டுக் கொண்டிருந்த அங்காடிக் கடைகளை நோக்கிச் சென்றான்.

கண்கொள்ளாத அளவிற்கு மரப்பாச்சி பொம்மைகள். உருட்டி விளையாடும் தேர். யானை பொம்மை. இராஜா ராணி பொம்மை எனப் பிடித்ததை வாங்கிக்கொண்டாள். அத்தனையையும் அள்ளிக்கொண்டு துள்ளிக் குதித்தபடி தந்தைக்கு முன் தேரில் ஏறிவிட ஓடினாள்.

தேரில் ஏறும்போது “சர்ரென்று ஒரு சத்தம். தேரில் நீட்டிக் கொண்டிருந்த சிறிய கூர் ஆணி அவள் பட்டுப் பாவாடையைக் கிழித்துவிட்டது. அவ்வளவுதான், கையில் வைத்திருந்த பொம்மைகளைக் கீழே போடவும் மனம் வராமல் மாட்டிக் கொண்டிருந்த பாவாடையை எடுக்கவும் தெரியாமல் தேரில் பாதி ஏறிய நிலையிலேயே நின்றாள்.

கோவலன் மகளின் நிலையைக் கண்டு ஓடிவந்து பாவாடையை விடுத்துத் தேரில் ஏற்றினான்.

கடலலைக் கால்களை நனைக்க மணிமேகலைத் தன் உணர்வு பெற்றாள். அந்தப் பாவாடை போல் தன் வாழ்வும் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. அன்று தன்னை ஆணியில் இருந்து விடுவித்துத் தேரில் ஏற்றிய தந்தையோ வானுலகம் சென்றுவிட்டார்.

தன்னை இப்போது யார் காப்பது? நண்டுகள் இங்குமங்கும் அலைந்து திரிந்தன. என் மனமும் உதயகுமாரனிடமும், தாயிடமும் அலைந்து அலைந்து திரிகிறதே” (ப. 48) என்ற இந்தப் பகுதியில் மணிமேகலை, கோவலன் சந்திப்பு பல எண்ண அலைகளை உருவாக்குகின்றது.

மணிமேகலையின் வாழ்க்கை கிழிந்த பட்டுப் பாவாடையின் நிலையாக ஆகிவிட்டதைப் பெண் படைப்பாளர் மணிமேகலையின் பக்கம் நின்று எடுத்துரைக்கிறார்.

கோவலனின் தந்தை மாசாத்துவானும் மணிமேகலையும் சந்திக்கின்ற காட்சியைப் படைப்பாளர் உருவாக்குகிறார். ‘‘புகார் வந்திறங்கிய மணிமேகலைக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவளைப் பார்ப்பதற்குக் கோவலனின் தந்தை மாசாத்துவான் வந்திருந்தார். கோவலனின் சாயலைப் பார்த்தவுடன் தன் தந்தையும் வயதாகியிருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் எனத் தோன்றியது.அறவண அடிகளின் பௌத்த பள்ளியில் மாசாத்துவானும் பௌத்தராக பயிற்சி பெற சேர்ந்திருப்பதை அறிந்து வியந்தாள்.

‘‘ நீ என் மகனுக்குக் கணிகையின் மூலம் பிறந்துவிட்டாய் என்பதற்காக நான் உன்னை அடியோடு புறக்கணித்தேன். உன் பிறந்தநாளை கொண்டாடிய பின் கோவலனுக்குப் பொருள் கொடுப்பதை அடியோடு நிறுத்திவிட்டேன். அவ்வளவு உன்னையும் உன் தாயையும் வெறுத்தேன். மணிமேகலா தெய்வம் அப்படி நினைக்கவில்லை. உன்னை எங்களின் வாரிசாகவே தான் நினைத்து உன்னைக் காப்பாற்றியிருக்கிறது. தெய்வம் எப்போதும் தெய்வம் தானம்மா. கோவலன் இறந்தபின்தான் நான் தெளிந்தேன். உதயகுமாரனின் இறப்பும் சேர்ந்து என்னை மாற்றிவிட்டது. அது மட்டுமா, கடல் போங்கி பெருஞ்செல்வத்தைக் கண் பார்த்திருக்கும்போதே வாரிசுருட்டிக் கொண்டது. இந்த உலகின் நிலையாமை உணர்ந்தேன். உன்தாயும் அறவண அடிகளும் காஞ்சி மாநகரம் சென்றுவிட்டனர். உன்னை அழைத்துச் செல்லவே நான் காத்திருக்கிறேன்” (ப. 141)

என்று இந்தச் சந்திப்பும் மணிமேகலையின் மூலத்தில் இல்லாத சந்திப்பாகும். மணிமேகலா தெய்வம் பெண் தெய்வம் என்பதால் மணிமேகலை பெண் என்பதால் பெண்ணுக்கு இரங்கும் பெண் தெய்வமாக மணிமேகலா தெய்வம் இப்புதினத்தில் படைத்துக்காட்டப்பெற்றுள்ளது.

அடுத்த சந்திப்பு மணிமேகலையும் கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கனிடம் பல்லாண்டுகள் பணியாற்றிய படகோட்டி சாமன் என்பவரும் சந்திக்கும் சந்திப்பாகும். ‘‘மகன் ஊரை விட்டு நடந்தே சென்றிருக்கிறாள் என்பதையறிந்து துடிதுடித்துப் போனார். தேரிலிருந்து இறங்கினால் மன்னன் அரண்மனையிலும், கப்பலிலும் தான் அவரது அடுத்த பயணம் இருக்கும். கோவலன் மாதவியுடன் உன் பிறந்த நாளை விழாவாக எடுத்து ஊர்மெச்சக் கொண்டாடியபோது குனிந்தவர்தான்.பின் நிமிரவே இல்லை. அவன் குலதெங்வத்தின் பெயரை உனக்குச் சூட்டியபோது அவர் முகம் இருளடைந்து போனது. கண்ணகியைப் போய் பார்த்துவிட்டு வருவதை மெல்ல மெல்ல நிறுத்திக் கொண்டார்” (ப.124) என்ற சாமனின் பேச்சு மாநாய்கனின் வாழ்க்கை நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது.

இப்படி புதிய புதிய சந்திப்புகளை நிகழ்த்தி மணிமேகலைக் காப்பியத்தில் நிகழ வேண்டியனவற்றைத் தன் கற்பனைக்குள் கொண்டுவந்து அவற்றில் பெண்தன்மை மேலோங்கும்படி தன் புதினத்தை ஜவாஹர் ஹேமலதா படைத்துள்ளார்.

மணிமேகலையை மையமாக வைத்து கோவலன், கண்ணகி இருவர் வீட்டில் நிகழ்ந்த பின் விளைவுகளை இப்புதினம் எடுத்துரைத்து நிற்கிறது. மணிமேகலையின் பிறப்பு கண்ணகி, கோவலன் இருவர் வீட்டாரையும் தள்ளி வைத்திருக்கிறது என்பதை உணர்ந்த மணிமேகலை தன் வாழ்க்கை தனிமைப்படுத்தப்பட்டதை எண்ணி வருந்துகிறாள்.
இதனை ‘‘அவள் பிறந்தபோதே வெறுப்பைச் சுமந்து பிறந்திருக்கிறாள். அவள் தொடர்பாகக் கோவலன் நிகழ்த்திய எந்தச் செயலும் பகைப்புலத்திலிருந்துதான் சிலரால் பார்க்கப்பட்டிருக்கிறது. ஒருவித வித குற்ற உணர்வு தலை தூக்கியது” (ப. 125) என்ற பகுதி மணிமேகலைக்குள் புதைந்து கிடக்கும் குற்ற உணர்வைக் காட்டுவதாக உள்ளது.

மேற்கண்ட சந்திப்புகளில் மணிமேகலையின் வருத்தகரமான வாழ்க்கையே வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. மணிமேலை கோவலனுடன் சந்திக்கும் சந்திப்பில் ஆணியில் கிழிபட்ட பாவாடை நிலைக்கு ஆளாகிறாள். முள் மேல் சேலை விழுந்தாலும், சேலை மீது முள் விழுந்தாலும் சேலைக்குத்தான் சேதம் என்ற மரபுக் கருத்தின்படி மணிமேகலை ஆணி மேல் பட்ட பாவாடை ஆகிறாள். மாசாத்துவான் சந்திப்பில் தன்மீது இருந்த வெறுப்பில் சற்று மாற்றம் பெற்று நல்லவளாக அவளை மாசாத்துவான் தன் வீட்டுக்கு அழைக்கும் நிலையில் உரிமை பெற்றவளாகத் திகழ்கிறாள். மாநாய்கன் சார்பாளனான சாமன் சந்திப்பில் முழுவதும் தலைகுனிவை ஏற்படுத்தியவளாக மணிமேகலை திகழ்கிறாள். கோவலன் பெற்று வைத்திருந்த வெறுப்புகளையெல்லாம் தன் தூய்மையால் துடைப்பவளாக மணிமேகலை இப்புதினத்தில் படைக்கப்பெற்றுள்ளாள்.

பெண் எழுத்து

பெண் எழுத்து என்பது தனித்துவம் வாய்ந்தது. மணிமேகலை கதை பெண்ணைக் கதை தலைவியாகக் கொண்டது. அதனை சீத்தலைச் சாத்தனார் என்ற ஆண் எழுதுகிற நிலையில் காப்பியம் ஆண்தன்மை வாய்ந்ததாக படைக்கப்பெற்றுள்ளது. ஆனால் மணிமேகலைக் கதையை ஜவாஹர் பிரேமலதா என்ற பெண் படைக்கின்றபோது அக்காப்பியத்தில் பெண்தன்மை இடம்பெற்றிருப்பதை உணரமுடிகின்றது.

மணிமேகலை மணிபல்லவத்தீனுக்கு மணிமேகலா தெய்வத்தால் எடுத்துச் செல்லப்பெறுகிறாள். அது அவள் அறியாத பூமி, முன்பின் பார்த்திராத நிலம். அந்நிலத்தைச் சீத்தலைச் சாத்தனர்

‘‘மணிபல்லவத்திடை
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின்
முத்து விளை கழனி முரி செம் பவளமொடு
விரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின்
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி
முடக் கால் புன்னையும் மடல் பூந் தாழையும்
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் — ”
(மணிமேகலை, மணிபல்லவத்தில் துயருற்ற காதை, அடிகள் 1-10 )
என்று பல இயற்கை அழகு கொண்ட பகுதியாகக் காட்டுகிறார். ஆனால் புதினத்தில்

‘‘இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.தட்டுத் தடுமாறி கைகளைச் சுற்றித் தடவிப் பார்த்தாள். அவளுடைய கால்களை மரத்தின் பிழுதுகள் பிணித்திருந்தன. இருகைகளாலும் விலக்கி, அவற்றின் பிணைப்பிலிருந்து விடுபட்டு விழுதுகளை விலக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
ஆங்காங்கே சிவப்பாய் மின்னுகிறதே அது என்ன?
இருட்டில் ஒன்றும் புலப்படவில்லை.
கால்களுக்கிடையே எதுவோ நீளமாக ஊர்ந்தது. அசையாமல் நின்றுவிட்டாள். விடியும் வரை நின்று கொண்டேயிருந்தாள். இரவு மிக நீண்டு கொண்டே இருந்தது. கால்கள் மரத்துப் போயின.

காலை சூரியனின் ஒளி எங்கும் வீசி நிற்க, அவள் பார்வையில் பட்டவையெல்லாம் எங்கும் பாம்புகள். பாம்புகள் பல, வண்ணம் பல, வடிவங்கள் பல, நீளங்கள் பாம்புகளுக்கிடையில் தான் மரத்தோடு மரமாய் நிற்பதை உணர்ந்தாள். அவளுக்கு உடம்பு சிலிர்த்தது. நடுங்கத் தொடங்கியது” (ப. 51)

என்று மணிபல்லவத்தீவில் புதிதாக இறங்கிய பெண் எதிர்கொள்ளும் துன்பச் சூழல்களைக் காட்டுகிறாளர் ஜவாஹர் பிரேமலதா. சீத்தலைச் சாத்தனார் காட்டும் மணிபல்லவத் தீவிற்கும், பிரமேலதா காட்டும் மணி பல்லவத் தீவிற்கும் உள்ள வேறுபாடு இதுதான். ஆண் அழகியலாக ஒரு இடத்தைக் காண பெண் அவலத்தோடு அந்த இடத்தைக் காட்டுகிறாள்.

மணிமேகலையின் உயிர்ப்பகுதி பசி போக்குதல் என்ற அறமாகும். இதனைச் சீத்தலைச் சாத்தனார்,
“ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
( மணிமேகலை, பாத்திரம் பெற்றகாதை, பாடல் வரி 92-96 )
என்று குறிப்பிடுகிறார். இதனை இப்புதினம்
‘‘கரு உற்பத்தி தொடங்கிய நாள் முதல் மனிதனிடம் தொடரும் பசி, வாய்க்கரிசி போடும் வரை நீள்கிறது. இடையில் அளவில் மாற்றம் வருமே தவிர உணவே தேவையில்லாமல் போவது இல்லை. உடம்பெடுத்தபோது, பசி தொடங்குகிறது. தொப்பூழ்க் கொடியில் தொடங்கி இறப்பின் மடியில் தான் அடங்குகிறது.
ஆசை உயிரைக் கொல்வது பிறரை வருத்தும்.

பசி தன்னைச் சார்ந்தவரையே கொல்லும். பசியில் உயிர் போகிறதே என்று நானே நினைத்தேனே.. பசிதான் மிகப் பெரிய பிணி. உதயகுமரன் போன்றவர்கள் மக்களின் பசிப்பிணி போக்காமல் தங்களின் உடற்பசிக்கு அலைகிறார்களே… தாய் மாதவியைப் போல நானும் துயரம் அடைய எனக்குப் பிறக்கும் குழந்தைகளும். கணிகையின் வாரிசுகளாகத் தான் அறியப்படுவார்கள். இது முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டு தானிருக்கும். நான் பொதுத் தொண்டில் ஈடுபட்டு மக்களின் பசியைப் போக்கினால் மன அமைதியாவது கிட்டும்” ( ப.62)

என்ற நிலையில் பொதுத் தொண்டில் நாட்டம் கொண்டு, மணிமேகலை செயல்படுவதாக, புதினத்தில் படைக்கிறார் ஜவாஹர் பிரேமலதா. வயிற்றுப் பசி, உடல்பசி இரண்டின் கோரத்தையும் வெளிப்பட நேர்முகமாகப் பேசுபவளாக விளங்குகிறாள். தனக்கும் தன் தாய்க்கும் தன் பரம்பரைக்கும் ஏற்படும் துயரங்களை முன்வைத்து சிந்திப்பவளாக விளங்குகிறாள். இந்நிலையில் பெண் எழுத்து என்பது தன் துயரம், சமுதாயத் துயரம் இரண்டையும் கலந்து அவற்றின் மெய்ம்மைப் பக்கங்களை வெளிப்படுத்தும் போக்கினது என்பதை உணரமுடிகின்றது.

இவ்வாறு மணிமேகலை என்ற காப்பியத்தை ஆண் படைக்கும் நிலையில் ஆண் மையப் போக்கு இருப்பதை அறியமுடிகின்றது. மணிமேகலை என்ற காப்பியத்தை பெண் எழுதும்போது பெண் மையம் அமைந்திருப்பதை உணரமுடிகின்றது.

முடிவுகள்

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பெற்றது. இக்காப்பியம் ஆண் மையம் கொண்டதாக விளங்குகிறது.

ஜவாஹர் பிரேமலதா எழுதிய புகாரின் செல்வி என்ற புதினம் மணிமேகலைக் கதையைப் புதின வடிவில் பெண் மையம் இட்டு எழுதப்பெற்றுள்ளது.

மணிமேகலையை சீத்தலைச் சாத்தனார் மாபெரும் பத்தினி கண்ணகியின் மகளாக அறிமுகம் செய்கிறார். ஜவாஹர் பிரேமலதா மணிமேகலையை உண்மை இயல்புகளுடன் கணிகையர் குலப் பெண்ணாக அக்குல அவலங்களுக்கு உட்பட்டவளாக அறிமுகம் செய்கிறார்.

சந்திக்க முடியாத பாத்தி்ரங்களைச் சந்திக்க வைத்துச் சீத்தலைச் சாத்தனார் விடுத்த இடைவெளிகளை நிரப்பியுள்ளார் ஜவாஹர் பிரேமலதா.

மணிமேகலை இறங்கிய மணிபல்லவம் அழகானதாக சீத்தலைச்சாத்தனாரால் காட்டப்பட பாம்புகள் சூழ்ந்த அச்ச சூழலில் ஜவாஹர் பிரேமலதா காட்டுகிறார். மேலும் பசிப்பிணி நீக்கும் உயரிய அறத்தைச் செய்பவளாக உயரத்தில் சீத்தலைச் சாத்தனார் ஏற்றி வைக்கிறார். ஆனால் வயிற்றுப் பசி, உடல் பசி கருதியே பெண்களை நோக்குகிறது இந்த உலகம் என்று காட்டுகிறார் ஜவாஹர் பிரேமலதா.

இவற்றின் வழி ஒரு பனுவலை ஆண் எழுதும் நிலையில் ஆண்மையம் இருப்பதையும், பெண் எழுதும் நிலையில் பெண் மையம் இருப்பதையும் உணரமுடிகின்றது.

பயன்பட்ட நூல்கள்.

சாரதாம்பாள். செ., பெண்ணிய உளப்பகுப்பாய்வும், பெண் எழுத்தும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,
சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை. 1997
ஜவாஹர் பிரேமலதா, புகாரின் செல்வி, பிரேமா புக்ஸ், சேலம், 2021


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்ணெழுத்து”

அதிகம் படித்தது