மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Jun 24, 2017

Siragu-mannichchidunga-article-fi.jpg

நண்பர் ஒருவருடன் தகவல் பரிமாறிக்கொள்கையில் ஆண் பெரியதா, பெண் பெரியதா என்ற வாக்குவாதம் நிகழ்ந்தது. அதாவது திருவிளையாடல் படத்தில் வருவது போலவே சிவன் பெரியதா, சக்தி பெரியதா என்பது போல! பொதுவாகச் சென்று விடுவோம் என்றவாறாக, இருவரும் சமுதாயத்தின் இரு கண்கள் என்றேன். அவன் எனக்கும் சேர்த்தே ஆண் தான் பெரியது என்றான். சரி எதிரணிக்குச் செல்வோம் என்று கங்கணம் கட்டாமல் பெண் தான் பெரிதென்று கூறினேன், ஏனென்றால் வேறு வழியும் இல்லை.

ஆணிடம் இருப்பது சில பெண்ணிடம் இல்லை, பெண்ணிடம் இருப்பது சில ஆணிடம் இல்லை! உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி. அதே போல ஆண், பெண் இவர்களை ஒப்பிடுவதற்கு இவர்கள் என்ன பண்டமா? பொருளா ?. இரண்டுமே தனித்துவம், இரண்டுமே உயிர்! அதற்குரிய சிறப்பு அதனிடம் மட்டுமே உண்டு. சமுதாயத்தில் இரு கண்களில் ஆணும் பெண்ணும் இல்லையென்றால் நானும் நீங்களும் இருந்திருக்கப்போவதில்லை! அட யாரும் இருந்திருக்கமாட்டோம்தான். இருந்தாலும் அவன் தன் நிலைப்பாட்டை எள்ளளவும் மாற்றிக்கொள்ளவில்லை! மன்னிக்கவும் எள்ளின் முனையளவு கூட மாற்றிக்கொள்ளவில்லை.

எழுத்துகளில் கூட என்வரையில் பெண் என்பது ஒரு புதுமையும் ஆச்சரியமும் கொண்டது.

அதாவது.,,,

*ஆண் –இவ்வெழுத்தைத் தனியாகப் பிரி.

ஆ- உயிரெழுத்து

ண் – மெய்யெழுத்து

ஆணில் ஒரு உயிர், ஒரு மெய்!

*பெண் – இவ்வெழுத்தைத் தனியாகப் பிரி.

பெ –உயிர்மெய்

ண்- மெய்

பெண்ணில் ஒரு உயிர் ஆனால் இரண்டு மெய்!

இப்பொழுது ஒப்பிடும் பொழுது ஆண் எனும் எழுத்தில் ஒரு உயிரும், மெய்யும் இருக்கிறது.

ஆக ஆண் என்பவன் ஒரு உயிரையும், ஒரு உடம்பையும் (மெய்) உள்ளடக்கியவன் ஆகிறான்!

இங்கே பெண் என்பவள் ஒரு உயிரையும், இரண்டு மெய்யையும் கொண்டு இருக்கிறாள். இங்கே இரண்டாவது மெய் என்பது அவள் வயிற்றில் சுமக்கும் ஒரு உடலைக் குறிக்கிறது. இப்பொழுதே புரியவில்லையா? எழுத்தில் கூட எவ்வளவு இருக்கிறது பெண் பற்றி!

ஒரு ஆணாக பிறப்பவன் துன்பங்கள் அனுபவிக்காமல் இருக்கப்போவது இல்லை, ஆனாலும் ஒரு பெண் அனுபவிப்பதில் உடல்ரீதியாக கொஞ்சமும், மனரீதியாக அவர்களுக்குத் தக்கவாறு கொஞ்சம் அனுபவிக்கத் தான் செய்கிறார்கள்.

ஒரு ஆண், தன் வீட்டிலே பிறந்து, தன் வீட்டிலே வளர்ந்து, தன் ஊர், தன் நண்பர்கள், தன் குடும்பம், தன் வழிபாடு, தன் சந்தோசம் என்று தான் தான் தான் என்றே இருந்துவிடுகிறான் ! ஆகையால் அவனை அவ்வளவு எளிதில் எந்த மாற்றமும் இவற்றால் பாதித்துவிடுவது இல்லை. ஆனால் ஒரு பெண் என்பவள் தன் குடும்பம், வளர்ந்த ஊர், நண்பர், பிடித்த இடம், எல்லாவற்றையும் அப்படியே ஒரு ஓரமாக உடலளவிலும் மனதளவிலும் தள்ளி வைத்துவிட்டு மணாளனே மங்கையின் பாக்கியம் என்றவாறாக திருமண பந்தத்தில் இணைந்தவுடன் பிடிக்கிறதோ பிடிக்கலையோ சென்று தான் ஆகிறாள். ஒரு ஆண் இவ்வாறு வருவது கிடையாது ஏதும் கிடையாது. இருந்தும் ஒரு பெண் செய்த உணவு வேண்டும், ஒரு பெண் துவைத்த ஆடை தேவை, ஒரு பெண் செய்யும் சேவையும் வேண்டும், அந்தப் பெண்ணும் வேண்டும் ஆனால் அவள் அவனுக்குக் கீழாகவும் இருக்க வேண்டும். முன் வேதகாலத்தில் கூட இப்படி இல்லை!

ஒரு உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், சிலருக்கு வேறு வீட்டிலோ, புது இடத்திலோ படுத்தால் தூக்கம் கூட வராது. என் தாத்தா அவ்வாறே கூறுவார், அதனால் தான் எங்கு சென்றாலும் இரவில் தூங்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று திண்ணமாக எண்ணுபவர் அவர். உறவினர் வீட்டிற்குச் சென்ற பொழுது, நான் பல சமயத்தில் அதை உணர்ந்திருக்கிறேன். ஆகையால் கூடுமானவரை வீட்டிற்குத் திரும்பிவிடுவது வழக்கம்.

அதே போல, ஒரு ஆணுக்குப் பெண் பற்றித் தெரியாமல் இருக்காது ! பெண்ணிற்கும் ஆண் புதிதானவன் இல்லை! ஆணுக்கு அக்கா, தங்கச்சி இல்லாமலும் பிறந்திருக்கலாம்,பெண்ணும் தம்பி, அண்ணன்மாருடன் பிறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆணிற்கு அம்மா ஒரு பெண் என்பதும், பெண்ணிற்கு தன் அப்பா ஒரு ஆண் என்பதையும் யாரும் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருந்தும் ஒரு பந்தத்தில் இணைகையிலோ அல்லது நண்பர்களாய் இருக்கையிலோ நான் பெண்ணிடம் பேசியது இல்லை என்று அவனும், நான் ஆணிடம் பேசியதில்லை என்று அவளும் அவர்கள் பேசுவதற்காக ஏதேதோ பேசிக்கொண்டு இருப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது, என்று கதை கேட்டுவிட்டு இவ்வளவையும் நாங்கள் பேசிமுடித்த பிறகு அவன் ஒரேயொரு வார்த்தை கூறினான்,

“ஆயிரம் தான் சொல்லு ஆண் ஆண்தான், பெண் பெண்தான்” என்றான். இம்முறை அவன் வேண்டுமென்றே நெடிலை அழுத்திக் கணிரென்றும், குறிலை தாழ்த்தி சுரத்தை இல்லாமலும் சொல்லிகொண்டிருந்தான்.

“தோசைக்கரண்டியும், பூரிக்கட்டையும் நிறைய வாங்கி வைத்துக்கொள்!” என்றவாறாக ஒரு சிரிப்பொன்றை வடமொழியில் உதிர்த்துவிட்டு கட்செவி அஞ்சலை கட்டில் ஓரத்தில் வைத்தேன் .


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்”

அதிகம் படித்தது