மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய காரணம் …

தேமொழி

Sep 14, 2019

siragu periyar1“பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளோபீடியா’, ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும்” (பக்கம் – 286); என்று நகைச்சுவையாகத் தனது கருத்தை வலியுறுத்த முனையும் பெரியார், நாம் ஒருவரை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது அவருடைய பணம், படிப்பு, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, திறமை ஆகியவற்றுக்காக அல்ல என்கிறார்.

அப்படியானால் எதற்காக நாம் ஒருவரை நினைவில் நிறுத்துகிறோம்? அதற்குப் பெரியாரே கூறும் விடை, “மனிதர்களாக — மனிதத்தன்மை உடையவர்களாக இருந்து, மறைந்த மனிதர்களுக்காக இரங்கி, அவர்களது மனிதத்தன்மையை எடுத்துக் கூறி, மற்றவர்களையும் மனிதர்களாக ஆகுங்கள் என்பதற்காகவே யாகும்” என்ற தெளிவான ஒரு வரையறையை வகுக்கிறார்.

சராசரி மனிதருக்கும் என்றென்றும் போற்றப்படுபவர்களுக்கும் உள்ள வேறுபாடு அது. போற்றப்படுவோரது வாழ்வும், அந்த வாழ்வு பிறருக்கு அளித்த பயனுமே ஒருவரை நினைவில் நிறுத்துவதற்கான அளவுகோல் என்று பெரியார் கருதுகிறார். தனது நலனுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும், பணியாற்றிக் கொண்டிருக்கும், ஊதியத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் எவரையும் அவர்களிடம் பலன் பெறுவோர் மட்டுமே மதிப்பர். அது ஒரு சாதாரணமான வாழ்க்கை, போற்றப்பட வேண்டிய வாழ்க்கையல்ல. ஆனால் தன்னலம் இன்றி பிறர் நலனைக் கருத்தில் கொண்டு மற்றவருக்காக வாழ்ந்து மறைந்தவர் என்றென்றுமே மக்களால் போற்றப்படுவர்.

ஆகவே, சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக, மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள் மட்டுமே அத்தகைய சிறப்புக்குரியவர்கள். அவர்களின் உருவப்படத் திறப்புவிழா செய்வதன் நோக்கமென்ன? அதற்கும் பெரியாரே கூறும் விளக்கமுண்டு. “நாம் உருவப்படத் திறப்புவிழா நடத்துவது என்பது பூசை செய்யவோ, தேங்காய், பழம் ஆராதனை செய்து, விழுந்து கும்பிட்டுப் பக்தி செய்து, நமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த — செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல,” (பக்கம் – 287) என்று பெரியார் படத்திறப்பு விழாவிற்கான நோக்கத்தையும் அவரே தெளிவு படுத்துகிறார்.

மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காகத் தன்னலம் கருதாது, சமூகத்தின் நலன் கருதி; தனக்கென பலனோ, கூலியோ, புகழோ, பாராட்டோ எதிர்பார்க்காமல்; தனது முயற்சியையும், உழைப்பையும், பொருளையும் வழங்கி பிறருக்காகப் பொறுப்புடன் தொண்டாற்றிய பெரியோர்களைக் குறித்தும், அவர்களது தொண்டு குறித்தும், பண்பு குறித்தும் பாராட்டிப் பேசுவதால் மற்றவரும் பொதுப்பணியில் ஈடுபட எண்ணுவார்கள் என்ற நோக்கத்தில்தான் அதற்கான ஒரு வாய்ப்பாகப் படத்திறப்பு விழா செய்கிறோம் எனப் பெரியார் விளக்குகிறார்.

மக்கள் நலனுக்காகத் தொண்டாற்றுபவர்களின் வாழ்க்கை அவர்கள் வாழும் காலத்தில் போராட்டமாக இருக்கும். மக்களில் சிலரும், ஆதிக்கத்தில் உள்ளவரும் அவர்கள் பணியைப் பாராட்டாது தொல்லைகள் தருவார்கள். ஆனால், அவர்கள் உழைக்கும் நோக்கத்தின் உண்மை அறிந்த மக்கள் என்றென்றும் அவர்களைப் போற்றுவார்கள். அவ்வாறே திராவிட இயக்கம் செய்யும் செயல்பாடுகளைப் பலர் வெறுக்கலாம், தொண்டர்கள் வாழ்க்கையைத் துன்பம் தருவதாக ஆக்கலாம், ஆனால் அவர்கள் பணியையும் அது தரும் பலனையும் உணர்ந்த மக்கள் பிற்காலத்தில் அவர்களைப் போற்றுவார்கள் என்று பெரியார் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Siragu nov 26-1

இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்கள் மக்களின் வளர்ச்சிக்கு உதவுவதில்லை. அவை வெறும் அர்த்தமற்ற சடங்குகள். அவை யாராலோ, யார் பிழைப்பிற்காகவோ உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவை. அந்த விழாக்கள் மக்கள் வாழ்வில் எந்த மாறுதல்களையும் கொண்டு வருவதுமில்லை. இந்த விழாக்களைக் கொண்டாடுவதால் என்ன பலன் என்று கொண்டாடும் மக்களும் அக்கறையுடன் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாக்களை வாய்ப்பாகக் கொண்டு அவர்களிடம் இருக்கும் வேற்றுமையை நீக்கவும் அறிவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவுமாறு அறிவாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் விழாக்கள் மாற்றியமைக்கப்படவேண்டும் என்பது பெரியாரின் நோக்கம். (பக்கம் – 289) இந்நாளின் ‘அத்திவரதர் தரிசனம்’ என்ற ஆர்ப்பாட்டத்தின் விளைவால் உண்மையிலேயே பலனடைந்தவர் யாரென்பதை எதையும் ஆராய்ந்து உண்மை அறிய விரும்புவோருக்கு விளங்காமல் போகாது. அப்பொழுது பெரியார் குறிப்பிடுவதில் இருக்கும் உண்மையும் புரியாமல் போகாது.

அவ்வாறே, தனி நபர் ஒருவர் பேரால் எடுக்கப்படும் விழாவின் குறிக்கோளும் கூட அப்பெரியோரது வாழ்வை அவர் சமுதாயத்திற்கு அளித்த பங்களிப்பை நினைவுகூர்ந்து மக்கள் அவரது வாழ்வைப் பின்பற்ற வேண்டும் என்று உணர்த்துவதற்குத்தான் (பக்கம் – 299) என்றும்; ஒருவருக்குச் சிலை திறப்பது என்றால் அது உருவ வழிபாடு அல்ல. அது அவர் பண்பை வழிபாடு செய்வது என்றும் பெரியார் தனது கோணத்தைக் கூறுகிறார். “இது குண வழிபாடு, பண்பு வழிபாடு என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரின் குணத்தையும், பண்பையும் மக்கள் அறிந்து அதன்படி நடக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுவதாகும்” என்பது பெரியார் சிலை திறப்புவிழா குறித்துத் தரும் விளக்கமாகும். (பக்கம் – 308)

இவ்வாறு ஒருவருக்கான பிறந்தநாள் விழா, நினைவு நாள் விழா, படத் திறப்புவிழா, சிலை திறப்பு விழா ஆகியவற்றைப் பற்றிய தனது கருத்துக்களைக் கூறிய பெரியார் ஈ.வெ.ரா., தனது பிறந்த நாள் விழா குறித்து என்ன கூறினார் என்பதை அவரது பிறந்த நாள் (செப்டெம்பர் 17) அன்று அவர் ஆற்றிய உரை ஒன்றினையே மீள்பார்வை செய்து அறியலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பெரியாரின் உரை அவரது 93 ஆவது வயதில் அவர் பேசியது. இதற்குப் பிறகு மற்றுமொரு பிறந்தநாள் கொண்டாட மட்டுமே அவரது வாழ்க்கை அவரை அனுமதித்தது. அவரது அளவுகோல் கொண்டே அவரது வாழ்வை எடை போடும்பொழுது இன்றும், அவர் மறைந்து 45 ஆண்டுகள் கடந்த பின்னரும், மக்கள் அவரை போற்றும் வண்ணம் விழா எடுப்பதிலிருந்து அவர் கூற்றிலிருந்த உண்மை புலனாகிறது.

என் பிறந்த நாள் விழா

தோழர்களே!

     பிறந்த நாள் விழா என்பது முதன் முதலில் துவக்கப்பட்டது எல்லாம் பொய், பித்தலாட்டங்களை அடிப்படையாக வைத்துத்தான். எப்படி எனில் இதுவரை கடவுள்களின் பிறந்த நாள் என்ற பெயரால்தான் நம் நாட்டில் விழாக் கொண்டாடுவது வழக்கம். உண்மையிலேயே இந்தக் கடவுள்கள் எல்லாம் இருந்தார்களா? பிறந்தார்களா? என்றால் அதுதானில்லை.

     அப்படி அவர்கள் கொண்டாடியதன் நோக்கம்–அதை வைத்து மக்களிடத்தில் பக்திப் பிரச்சாரத்தைச் செய்யலாம் என்பதற்காகத்தான்; அதில் வெற்றியும் பெற்றார்கள். அடுத்து நாயன்மார், ஆழ்வார் ஆகியவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள்; அவர்கள் எல்லாம் கடைந்தெடுத்த பித்தலாட்டக்காரர்கள். அவர்கள் செய்யாத காரியங்களை எல்லாம் இட்டுக்கட்டிச் சொல்லி அவர்களுக்குப் பெருமையை உண்டாக்கி அதன் மூலம் கடவுள்களைப் புதுப்பிக்க ஏற்பாடு செய்து விட்டனர்.

     எந்த அயோக்கியத்தனமான பொய்யை எல்லாம் சொல்லியும் கடவுள் பக்தியை உண்டாக்கவே இவற்றையெல்லாம் செய்தனர்.

     நம் இயக்கம் தோன்றி அறிவுப் பிரச்சாரம் செய்ததற்குப் பின்னால்தான் உண்மையிலேயே பிறந்த மனிதர்கட்கு, மனிதத் தொண்டு செய்த பெரியார்கட்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடும் தன்மை ஏற்பட்டது.

     எனக்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதன் நோக்கம், கடவுளை ஒழிப்பதாகும். இதைப் போன்ற கருத்துக்களில் இப்போது மக்கள் உற்சாகம் காட்டுகிறார்கள். நாடெங்கும் என் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்றால் நோக்கம் அதுதான்.

     மற்றவர்கட்கு விழா நடக்கிறது என்றால் அது சாதி வளர்க்கவும் கடவுள் பக்தியை வளர்க்கவும் பயன்படுமே தவிர, உருப்படியாக சமுதாய வளர்ச்சிக்கு எள்ளளவும் பயன்படாதே. எங்களுக்கு விழா நடக்கிறது என்றால், அவற்றிற்கு மாறுபட்ட கொள்கையைப் பிரச்சாரம் செய்வதால்தான் ஆகும்.

(மாயூரத்தில் 22-9-1972-ல் சொற்பொழிவு–’விடுதலை’ 9-10-1972)

(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்; பக்கம் – 308)

வாழ்க பெரியார் !!! ஓங்குக பெரியார் புகழ் !!!

__________________________

உதவிய நூல்:

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, சிந்தனையாளர் கழகம். முதற் பதிப்பு, வெளியீடு – ஜூலை 1974.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய காரணம் …”

அதிகம் படித்தது