மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பொருளாதார விளையாடல்கள்

T.K.அகிலன்

Apr 2, 2016

porulaadhaara vilayaadalgal1உலகை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பொருளதாரத் துறையின் கைக்கு சென்று கொண்டிருக்கும் காலம் இது. மிக சமீபத்திய எதிர்காலத்தில் அதிகாரம் முற்றிலும் பொருளாதாரத்துறையைச் சார்ந்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறு அடையப்பட்டிருந்தாலும், அது எப்போதுமே பொருளாதாரத்தை சார்ந்தே இருந்திருக்கிறது. ஆனால் மெல்ல மெல்ல அதன் தொடக்கமும், செயலியக்கமும், முடிவும் பொருளாதாரத்தைச் சார்ந்தே இருக்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனில் அதன் விளைவுகள் மனித சமூகத்திற்கு முற்றிலும் சாதகமாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

porulaadhaara-vilayaadalgal9பொருளாதாரத்தின் மறுபெயர் நுகர்வு. பூமியில் இருக்கும் இயற்கை வளங்களை மனித சமூகம் உபயோகப்படுத்தி, அதைக் கழிவாக மீண்டும் பூமிக்கு அளிப்பது நுகர்வு. உலகத்தில் உள்ள அனைத்து உயிருள்ளவையும் உயிரற்றவையும், தொடர்ந்து மற்றொன்றை நுகர்ந்து தானும் மாறி நுகர்ந்தவற்றையும் பிறிதொன்றாக மாற்றி வேறொன்றின் நுகர்வுக்குத் திரும்ப அளித்துக் கொண்டே இருக்கின்றன. இது ஒரு இடைவிடாத இயக்கம். மனிதர்கள் இன்று உருவாக்கும் பெரும்பான்மையான கழிவுகள் பிற உயிரினங்களால் நுகரமுடியாதவையாக உள்ளதால் பூமி மனிதக் கழிவுகளின் குப்பைக்கூடமாக மாறிவருகிறது. மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களுக்கெல்லாம் உணவே அவற்றின் நுகர்வின் பெரும் பகுதி. உயிரில்லாதவை பிற உயிரினங்களாலோ இயற்கையின் விசைகளாலோ நுகரப்படுகிறது. நுகரப்படுவதன் எதிர் விளைவாக அவை நுகரவும் செய்கின்றன. இந்தத் தொடர் இயக்கங்களின் மூலமே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் பிற உயிரினங்களையோ அல்லது பிற உயிரினங்களால் இயற்கையாக உருவாக்கப்பட்டவற்றையோதான் உணவாக நுகர்கின்றன. அதேபோல ஒவ்வோரு உயிரினமும் உருவாக்கும் கழிவுகளை நுகர்வதற்கு வேறு ஒரு உயிரினம் காத்துக் கொண்டிருக்கும். உயிரில்லாத ஜடப் பொருளான பாறை மழையையும், ஒளியையும், வெப்பத்தையும், காற்றையும் பெற்று, அவற்றால் மாற்றமடைந்து தாதுக்களாகக் கரைந்து சென்று தாவர இனங்களுக்கு உணவாகிறது. மண்ணாக மாறி தாவரங்கள் வாழும் இடமாகிறது. இயற்கையில் உள்ள ஒவ்வொன்றும் பிறிதொன்றை நுகர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், பிறிதொன்றுக்காக தன்னை அழித்து அளித்துக்கொண்டும் இருக்கும்.

மனிதர்களும் மிக சமீப காலம்வரை, கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை, இந்தத் தொடர்சங்கிலியில் ஒரு கண்ணியாகவே இருந்துவந்திருக்கிறார்கள். தாங்களும் அலகிலா இயற்கை இயக்கங்களில் சிறு கண்ணி என்பதை அறிந்து அதற்கேற்ற முறையில் தங்கள் வாழ்வின் இயல்பை அமைத்திருந்தார்கள். அந்த நாட்களில் வேறு வழியும் இல்லை. உயிர்ச் சங்கிலியைப் பொருட்படுத்தாது வாழும் தொழில்நுட்பங்கள் அவர்களிடம் இல்லாதிருந்திருக்கலாம். அல்லது பரவலாக்கப்படாமல் இருந்திருக்கலாம்.

porulaadhaara vilayaadalgal7சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உயிர்ப் பரிணாம வளர்ச்சியின் உச்சக்கட்ட சாத்தியமான உணர்வுநிலைகளை மனிதர்கள் அடைந்திருக்கிறார்கள். ரசவாதம் போன்ற தொழில்நுட்பங்கள், குறைந்தப்பட்சம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனித சமூகத்தில் இருந்திருக்கின்றன. மறைஞானத் தளத்தில் (Mystical Dimension) பல தொழில்நுட்பங்கள் (Technologies) இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் தகுதியுடையவர்களால் மட்டுமே அடைய முடிந்தது. இவற்றை அறிந்துக்கொள்வதற்கு அறஉணர்வு அடிப்படையான தகுதியாக இருந்ததை இன்று நாம் கதைகளாக அறியும் வரலாற்றிலிருந்து ஊகிக்கலாம். நம் மன இயல்பு அவ்வாறு இருந்தால், இன்றைய அரசியல் நிலைகளுக்கேற்ற ஊகங்களுக்கும் நாம் வரவும் நேரிடலாம்! ஒன்றும் செய்வதற்கில்லை! அக்காலங்களில் அடைந்த அறிவியல் அறிவு, சமூகங்களை அழிக்கும் ஆயுதமாக எப்போதும் மாறவில்லை. விதிவிலக்குகள் எங்கும் சாத்தியமே! அத்தகைய விதிவிலக்குகள் சமூகங்களை அழிக்கும் அளவுக்கு வீரியத்தைப் பெற முடியவில்லை. எனவே மனிதர்கள் உலக இயக்கமாகிய வலைப்பின்னலில், தொடர்ந்து ஒரு கண்ணியாக இருந்து வந்திருக்கிறார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் அறிதலின் எல்லைகள் விரிய ஆரம்பித்தன. குறிப்பாக மேலை நாடுகளில். அதுவும் பௌதீக அறிவியலில். இந்த அறிதல்களை அந்தக் காலத்து ஒற்றைப்படையான மத நம்பிக்கைகள் தடைச் செய்ய முயன்றன. மதங்கள் உண்மையில் மனிதனில் உன்னதங்களை உருவாக்கி நிலை நிறுத்த வேண்டியவை. அறிதல் என்பது மனிதனின் உன்னதங்களில் ஒன்று. மதங்கள் அந்த அறிதலை தடை செய்ய முயன்றதன் விளைவுதான், அறிவியல் மதங்கள் போதிக்கும் உன்னதங்களை உதறிச் செல்ல வைத்து விட்டதாகத் தோன்றுகிறது.

இதில் ஆச்சரியப்படத்தக்க ஒன்று; மேலை நாடுகளில், மதங்களால் மனிதனின் அறிதல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்த அதே நேரத்தில் கீழை நாடுகளில் தகுதியுடைவர்களுக்கு மட்டுமே அறிதலுக்கான சாத்தியங்கள் அளிக்கப்பட்டு அறிதல் என்னும் இயக்கம் இயங்கிக்கொண்டிருக்கவும் செய்தது. மேலை நாடுகளில் அறிதலுக்கான தடைகளை மதங்களிலிருந்து விலக்கிய பிறகுதான் அங்கு அறிவியல் வளரத்தொடங்கி பின்னர் தொழில்நுட்பமாக அனைவரையும் அடைந்தது. அந்தத் தொழில் நுட்பம் கீழை நாடுகளை அடைந்தபோது, இங்கு இருந்த அறிவியல் திரைக்குப் பின் சென்று மேலை நாடுகளிலிருந்து வருவது மட்டும்தான் அறிவியல் என்னும் மாயை உருவாகியது.

porulaadhaara-vilayaadalgal8கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் உலகில் தொழில் புரட்சி தொடங்கியது. அது மனிதன் அடைந்த பௌதீக அறிவை தொழில்நுட்பமாக மாற்றி அவற்றை சமூக இயக்கங்களுக்காக, மனிதத் தேவைகளை எளிதில் பெறுவதற்கான, எனவே செயல்களை எளிதாக்குவதற்காக பயன்படுத்த முயற்சித்தது. அந்த முயற்சி வெற்றியும் பெற்று விட்டது. அது காலப்போக்கில் மனிதர்களுக்கு இயற்கையின் இயக்கங்கள் மேல் இருந்த ஒத்திசைந்த உணர்வை இல்லாமல் செய்யத் தொடங்கியது. அதாவது அறிவின் பயன்கள், அந்த அறிவை ஒத்திசைவுடன் அணுகும் மனநிலை இல்லாதவர்களுக்கும் சென்று சேர்ந்தபோது அவர்கள் இயற்கையை புறந்தள்ளத் தொடங்கிவிட்டார்கள். உதாரணமாக ஐன்ஸ்டீனின் சார்புநிலைக் கோட்பாடு அளித்த அறிதல்கள், அறிவியலாளர்களைக் கடந்து ராணுவத்தை அடைந்தபோது அது அணுக்குண்டாக மாறி இரண்டு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களை சில நிமிடங்களில் கொன்றழித்ததுடன், அந்த இடங்களில் பிறந்த அடுத்த தலைமுறையினரில் கணிசமானவர்களை பிறவிக் குறைபாடுள்ளவர்களாகப் பிறக்க வைத்து, அறிவியலின் இருண்ட முகத்தை உணர வைத்தது.

இந்த நிலையில் இயற்கை உயிர் வாழ்க்கையை ஒருங்கிணைத்துச் செல்லும் பெருங்கருணை என்னும் நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டு, மனிதர்களுக்கு உதவும் ஒரு பெரும் கருவியாக அல்லது மனிதர்களுக்குத் தேவையானதை எல்லாம் உருவாக்கி அளிக்கும் இயந்திரமாக மனித மனங்களில் மாற்றியமைக்கப்பட்டது. இது ஒரு அனுமானம்தான். கடந்த காலத்தின் பாதையை திரும்பிப் பார்த்து, கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருப்பதை காட்சியின் புலத்திலிருந்து சற்றே நீட்டித்துப் பார்ப்பது.

ஆனால் தொழில்புரட்சியால் அடைந்தவை அனைத்துத் தரப்பினருக்கும் புற வாழ்க்கையை எளிதாக்கியிருக்கிறது. அன்று வாழ்ந்தவர்களால் கற்பனைக்கூட செய்ய முடியாத அளவுக்கு இன்றைய வாழ்க்கையை எளிமையாக்கியிருக்கிறது. புற வாழ்க்கையை மட்டும்தான்! புற வாழ்க்கை எவ்வளவு எளிதாகியிருக்கிறதோ அதை விட பல மடங்கு அக வாழ்க்கை கடினமாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. எளிமையாக்கப்பட்ட புற வாழ்க்கை அக வாழ்க்கையின் தரத்தை உயர்த்தினால் மட்டுமே மனிதனின் வாழ்க்கைத் தரம் உண்மையில் உயரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக புற வாழ்க்கையில் அடையும் எளிமையாக்கலை மட்டும் வைத்து வாழ்க்கைத் தரத்தை அளவிடும் அளவுகோலை அடைந்து விட்டிருக்கிறோம். புற வாழ்க்கையில் எளிமையாக்கல் அடையப்பட வேண்டியதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த எளிமையாக்கல் இன்னும் அதிகப்படியான துன்பங்களை மனிதனுக்குள் உருவாக்கும் என்றால் அங்கு எளிமையாக்கல் உண்மையில் நிகழ்ந்திருக்கிறதா? ஆனால் நாம் கொண்டிருக்கும் அளவுகோல் எளிமையாக்கிவிட்டது என்றுதான் தெரிவிக்கிறது. எனில் அளவுகோலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. இங்கு அகவாழ்க்கை கடினமாகியிருக்கிறது என்பதும் அனுபங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அனுமானமே!

ஒரு மாபெரும் கருவியாக அல்லது இயந்திரமாக மனித மனதால் உருவகிக்கப்பட்ட உலகம், அந்த நிலையில், மனிதனுக்குத் தேவையானவற்றை அளிப்பதற்கானது மட்டும்தான் என்று பெரும்பான்மையான மனிதர்களால் கருதப்படுகிறது. மனிதனின் உணர்வுகளில் அது ஒரு இயந்திரம் மட்டுமே. அந்த மனநிலையில், எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் உலகிலிருந்து திகட்டத் திகட்ட நுகர்ந்து கொண்டிருப்பது நியாயமானதே. அதில் வேறு எந்த உணர்வுகளுக்கும் இடம் இல்லை. இன்றைய நிலையில் பொருளாதார இயக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், மனிதனுக்கும் உலகுக்குமான இந்த உறவினை புரிந்துக் கொள்வது அவசியம்.

porulaadhaara vilayaadalgal3எல்லா நாடுகளும் எப்போதும் பொருளாதார வல்லமையையே விழைகின்றன. அதை அடைந்தால் பெரும்பாலான மற்ற வல்லமைகளையும் மிக எளிதில் பெற்றுவிட முடியும். தற்போதைய நிலையில் பொருளாதார வல்லமை என்பது முதலாளித்துவ அமைப்பின் வல்லமை. எனவே இன்றைய அனைத்து அரசியல் தலைமைகளும் முதலாளித்துவம்(Capitalism) சார்ந்த பொருளாதார விளையாடல்களையே தங்கள் முதன்மை இயக்கங்களாகக் கொண்டுள்ளன. கம்யூனிஸ்ட் நாடுகளான சைனா போன்றவையும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிகபட்சமாக பிற நாடுகளில் முதலாளித்துவம் என்னும் பெயரில் செய்யப்படும் அதே பொருளாதார இயக்கங்களுக்கு வேறு சில சித்தாந்தம் சார்ந்த பெயர்கள் இடப்பட்டிருக்கலாம்.

முதலில் கூறியது போல பொருளாதாரம் என்பது நுகர்வின் மறு பெயர். மக்கள் நுகர்வதற்கு உலகின் சக்திகள் பொருள்களாக மாற்றப்பட வேண்டும். நுகர்வதற்கு பொருட்கள் தேவையென்றால், தங்களிடம் இருக்கும் பொருட்களைக் கொடுத்து தேவையானப் பொருட்களை அடைய வேண்டும். கொடுப்பதற்கு வேறு பொருட்கள் இல்லையெனில், உழைப்பின் மூலம் பொருட்களை உருவாக்கி, பண்டமாற்று செய்யப்பட வேண்டும். அதுவே மனித சமூகம் நுகர்வுக்கு ஏற்படுத்தியிருக்கும் அடிப்படை விதி. மனிதர்களுள் இருக்கும் எல்லா அற உணர்வுகளும், இந்த விதியை சமனமாக பயன்படுத்தத் தேவையான, இதுவரை மனித சமூகம் அடைந்த அறிதல்களின் வழியாக உருவாக்கிய விதிகளே. அந்த விதிகளை பாதுகாப்பதற்காக சமூக அளவில் சட்டத்திட்டங்களும், அவற்றை நிர்வகிக்கும் அமைப்புகளும் இயக்கப்படுகின்றன.

முதலாளித்துவ இயக்கத்தின் நோக்கம் பொருளாதார நிறைவுத்தன்மை அல்லது சமநிலையில் தன்னை நிறைவு செய்துகொள்வது அல்ல. அதாவது தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே சமநிலையை அடைய வைப்பது அதன் நோக்கம் இல்லை. இதுவே முதலாளித்துவத்தின் எதிர்மறை இயக்கங்களுக்குக் காரணமாக இருக்கலாம். மாறாக தேவை எப்போதும் உற்பத்தியை விட அதிகமாக இருக்குமாறு அது பார்த்துக்கொள்கிறது. அவ்வாறு உயிர்ப்புடன் இருக்க பொருளாதார வளர்ச்சி என்னும் அளவீடும் அதன் இயக்கத்தினுள் வந்து சேர்ந்து விட்டது. விளைவாக தனிமனித அளவிலும் பொருளாதார நிறைவு என்பது வந்து சேரவே இல்லை. மீண்டும் மீண்டும் நுகர்வுப் பொருட்களை சேர்த்துக் கொண்டிருக்கவே தனிமனித விழைவு முயல்கிறது. தற்போதைய வாழ்வுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்கள் அனைத்தும் சேர்ந்த பின், எதிர்கால நுகர்வுப் பொருட்களைப் பெறுவதற்கான சேமிப்பில் அது ஈடுபடுகிறது. மரணத்தின் மீதான மனிதர்களின் பயம், மரணத்தைப்பற்றி நினைக்காமல் என்றும் இருப்பவர்களாக அவர்களை கற்பனைச் செய்ய வைத்து, விளைவாக எதிர்காலத்திற்கான சேமிப்பை எல்லை இல்லாததாகவும் மாற்றி விட்டது.

porulaadhaara vilayaadalgalஇதன் மறு எல்லையாக, இன்றைய உலகின் மக்கள் தொகையில் தோராயமாக இருபது சதவீதம் மக்கள், மிக அடிப்படைத் தேவையான உணவுக்கே வழியில்லாமல் இருக்கிறார்கள் என்று இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. அவர்களின் முழு உழைப்பும் உணவுக்காக மட்டும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. அல்லது தேவையான உணவை அடைவதற்கான அளவு உழைப்பை அளிப்பதற்கான வாய்ப்புகள் கூட அவர்களுக்கு இல்லை. அறம் கருணை என்றெல்லாம் மனித உன்னதங்களைக் கொண்டாடும் மனித சமூகத்தில்தான் அன்றாட உணவுக்கே திண்டாடும் மனிதர்களும், ஒரு நேரத்தில் தான் உண்ணும் உணவுடன் பலருக்குப் போதுமான உணவை குப்பைக்கு அனுப்பும் மனிதர்களும் வாழ்கிறார்கள். தன் மிக எளிய தினசரித் தேவைகளுக்கான நுகர்வுப் பொருட்களை பெற முடியாமல் உடலாலும் மனதாலும் துன்புறும் மனிதர்கள் வாழும் அதே மனித சமூகத்தில்தான் நுகர்வுத்தேவைகள் அனைத்தும் நிறைவேறிய பின்னும், தானும் மரணிப்பேன் என்பதை அறியாத, வாழமுடியாத அந்த எதிர்காலத்திற்கான சேமிப்பில் மனதாலும் பின் உடலாலும் துன்புற்று உழல்கின்றவர்களும் இருக்கிறார்கள். புரிந்துக்கொள்ள இயலாத முரண்கள்தான்!

இதற்குக் காரணம் திறமையின்மையா இல்லை வாய்ப்பின்மையா? இல்லையெனில் சக மனிதர்களும் இங்கு வாழ்கிறார்கள் என்னும் உணர்வின்மையா? அதுவும் இல்லையெனில் மனிதனுக்கு சாத்தியமான உன்னதங்களை அடையும் பரிணாம வளர்ச்சியை மனிதசமூகம் இன்னும் அடையவில்லையா? தனிப்பட்ட முறையில் சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவது ஒரு புறமிருக்க, அந்த சமூகம் எவ்வாறு இருக்கிறது என்பதுதான் முக்கியத்துவம் உடையது. சமூகத்தை நாம் விரும்புமாறு மாற்ற விரும்பினால் அது இன்று இருக்கும் யதார்த்தத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். மாறாக எவ்வாறு இருக்க வேண்டும் என்னும் விருப்பத்திலிருந்துத் தொடங்கினால் அது பேரழிவையும் துணைக்கு அழைத்து வரும். அந்தத் துணை ஒருவேளை விருப்பத்தை நிறைவேறாமலும் தடுக்கலாம்.

-தொடரும்


T.K.அகிலன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொருளாதார விளையாடல்கள்”

அதிகம் படித்தது