மகிழ்ச்சிக்கான இரகசியங்கள்!
செல்வக்குமார் சங்கரநாராயணன்Apr 2, 2016
1.”எதற்கு அவசியமே இல்லையோ அதை நினைத்து எப்பொழுதும் கவலைப்படாதீர்கள்”.
2.”ஏதாவது மனம் பொருந்தாத நிகழ்வு நடந்தாலோ, தவறான நிகழ்வொன்று நேர்ந்தாலோ இது தவறான நிகழ்வுதானே அன்றி தவறான வாழ்க்கை கிடையாது என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.”
3.”உங்களுக்குத் தெரிந்தவரையில் இருப்பது இந்த ஒரே வாழ்க்கை மட்டும் தான். உங்களுக்குப் பிடித்தது போல பிறருக்கு இடையூறின்றி இரசித்து வாழுங்கள்.”
4.”மனமுடையும் பொழுதுகளில் தனியே அழுதுவிடுங்கள்! அது மனச்சுமையையும் குறைக்கும் , கண்களில் உள்ள தூசுகளையும் வெளியேற்றும்.”
5.”பிறரிடம் பேசும் பொழுதுகளில் நல்லெண்ணத்தை அதிகம் விதையுங்கள், அவரோடு சேர்ந்து உங்கள் எண்ணமும் வளர்ச்சி அடையும்.”
இவை எல்லாம் தெரிந்தும் கவலைப்படும் மனதை என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கூறுகிறீர்களா?, தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தானே தெரியும் என்று நீங்கள் கூறுவது என் காதில் விழாமல் எல்லாம் இல்லை.
ஒரு சிறிய உதாரணம் உங்களுக்காகக் காத்திருக்கின்றது, ஒரு கடைக்குச் செல்கிறோம் அங்கே வண்ணமயமான ஒரு பீங்கான் கோப்பையை மிகவும் ஆசைப்பட்டு வீட்டிற்கு வாங்கிவருகிறோம். சிறிது நாள் பயன்பாட்டிற்குப் பிறகு அது உடைந்துவிட்டது என்றால் “சில வினாடிகள்” உச் ,ப்ச் கொட்டிவிட்டு அதை சுத்தம் செய்து வெளியில் கொட்டிவிடுவோம். மீண்டும் பழைய இயல்பு நிலையில் (ஆண்களுக்கு கிரிக்கெட் தொடரோ!, பெண்களுக்கு தொலைக்காட்சித் தொடரோ! அதை எளிதில் கொடுத்துவிடும்) லயிக்கச் சென்றுவிடுவோம் அல்லவா! அது தான் நம் மனதின் இயல்பு.
ஏதோ ஒரு இனிமையான விடயம் உங்கள் கவலைகளை மறக்கச் செய்வதற்காகக் காத்திராமல், வேண்டும் பொழுது எல்லாம் இனிமையான செயல்களை நீங்களே செய்யலாம். அது பிடித்தவரிடம் மனம் விட்டுப் பேசுதலோ, செல்லப்பிராணிகளிடம் கொஞ்சுவதோ, ரசித்த புத்தகத்தை மீண்டும் படிப்பதோ, இல்லை நெடுந்தூர பயணம் செய்வதாகவோ இருக்கலாம். ஆனால் அதை நாமாக ஒவ்வொரு முறையும் உருவாக்கிக்கொள்வதில் தான் அளவில்லா மகிழ்ச்சி உங்களைத் தேடிவரும்.
மகிழ்ச்சியை உருவாக்கும் சூட்சுமம் இதுதான், இதற்கு மேலும் என்னால் மகிழ்ச்சிக்கான வழி முறையைச் சொல்ல முடியும், ஆனால் உங்களுக்கான வாழ்க்கையின் பந்தயத்தில் என் கால்களைக் கொண்டு ஓடமுடியாதே!!!!!!
மகிழ்ச்சியை உருவாக்குங்கள்! பின்பு அது உருவாக்கும் உறவுகளை, மனித நேயத்தை, அன்பை, பாசத்தை, காதலை மற்றும் அனைத்தையும்.
செல்வக்குமார் சங்கரநாராயணன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மகிழ்ச்சிக்கான இரகசியங்கள்!”