மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மக்களாட்சித் தத்துவம் மறக்கடிக்கப்படுகிறதா…!

சுசிலா

Jun 24, 2017

Siragu hindhi1

மக்களாட்சித் தத்துவம் என்பது, மக்கள் விரும்பும் ஒரு நல்லாட்சியை தங்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுப்பது என்று நாம் எல்லோருக்கும் தெரியும். தேர்தலுக்கு முன் ஒரு கட்சி தங்கள் வாக்குறுதிகளை மக்கள் பார்வைக்கு நேரடியாக வைக்கிறது. அதனை நம்பித்தான் மக்களும் தங்கள் ஆதரவை அவர்களுக்கு நல்குகிறார்கள். இது தான் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், வாக்குறுதிகளுக்கும், தங்கள் ஆட்சிக்கும் தொடர்பே இல்லாதது போல, ஆட்சிக்கு வந்ததும் நடந்து கொள்ளும் ஒரு முறை இருக்கிறதே, இது தான் சர்வாதிகார ஆட்சி முறைக்கு வித்திடுகிறதோ என்று நம்மை அச்சப்பட வைக்கிறது.!

Siragu hindhi3

தற்போது இந்தியாவில் ஆட்சி புரியும் பா.ச.க அரசு அப்படித்தான் அநேக செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்தே மக்களுக்கு பல வழிகளில் இடையூறுகளை செய்து கொண்டுதான் இருக்கிறது. இந்தித்திணிப்பு, சமற்கிருதத்திணிப்பு என அரசு அலுவலங்கள், மத்திய கல்வித்துறை பள்ளிகள் மூலம் திணிப்பைக் கொண்டு வந்தது. தங்கள் ஆட்சி புரியும் ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பகவத்கீதையை கல்வியில் புகுத்தி இருக்கிறது. பகவத்கீதை ஒரு வருணாசிரம நூல். நால்வருணமுறையை வலியுறுத்தக் கூடிய சமூகநீதிக்கு, சமத்துவத்திற்கு எதிரான ஒரு நூல். அதனை பள்ளி சிறார்கள் பாடத்திட்டத்தில் வைத்தல் என்பது பிஞ்சு மனங்களிடம் நஞ்சை விதைப்பது போலாகாதா…!

பின்பு, புதிய கல்விக்கொள்கை என்ற முறையை கொண்டுவருவதற்கு துடித்துக்கொண்டிருக்கிறது மத்திய மதவாத அரசு. இதன் மூலம் குலக்கல்வித் திட்டத்தையும், இடஒதுக்கீட்டை ஒழிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்தித்திணிப்பு, ஆண்-பெண் ஒன்றாக பயிலும் கல்வி நிலையங்கள் இருக்கக்கூடாது என்பதும் இதில் ஒன்றாக இருக்கிறது. பெண்கல்வி மறுப்பும் மெல்ல மெல்ல கொண்டுவர ஏதுவான வழிகளை கையாளுகிறது. பொதுவாக பார்த்தோமானால், நம்மை இன்னும் இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு பின்னே கொண்டு போய் பழைய அடிமைநிலையினை அமல்படுத்த முயல்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.!.

Siragu-jailஅடுத்து, பண மதிப்பிழப்பு என்ற ஒரு முறையைக் கொண்டு வந்து மக்கள் எல்லோரையும் பணத்திற்காக அங்கும், இங்கும் என்று அலைய வைத்தார்கள். 100 ரூபாய் செலவு செய்வதற்குக் கூட முடியாமல் மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். வயதான முதியோர்கள் பலர் உயிரிழந்தனர் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். எதைப்பற்றியும் சிந்திக்கக்கூட முடியாமல் ஆறுமாதகாலம் மக்கள் பணத்திற்காக ஓடிக்கொண்டே இருந்தனர். இதற்கான காரணம் கருப்புப்பணத்தை ஒழிப்பது என்று அரசு சார்பில் சொல்லப்பட்டது. ஆனால், கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டதா என்றால், இல்லை என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும். ஏனென்றால், பெரிய வியாபார நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் இந்த அறிவிப்பு வரும்முன்னரே பெரிய அளவில் உடைமைகளாகவும், முதலீடாகவும் பதுக்கிவிட்டனர். எல்லாமே செய்து முடித்தப்பிறகு தான் அறிவிப்பு வெளியே மக்களுக்கு வந்தது. அடித்தட்டு மக்களும், மத்தியதர மக்களும் பிச்சைக்காரர்கள் போல் தங்கள் பணத்தை எடுக்க அலைக்கழிக்கப்பட்டார்களே… அதனை எளிதில் மறந்துவிடத்தான் முடியுமா…! மேலும் மின்னணு பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்துகிறோம் என்று கிராமப்புற, படிக்காத, மக்களையும், முதியோர்களையும் வதைத்தது இந்த மத்திய அரசு.

Siragu-state-govt3இதற்கடுத்து, நீட் தேர்வு என்ற நச்சுப்பாம்பை இறக்கி விட்டது. மாநிலக்கல்வித் திட்டத்தில் பயின்ற ஏழை, கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயில முடியாதபடி, ஒரே பொதுத்தேர்வு என்ற நுழைவுத் தேர்வை நடத்தி, கல்வியிலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தியது. ஒரே பொது நுழைவுத்தேர்வு என்று சொல்லி விட்டு, மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டன. இந்தியிலும், ஆங்கிலத்திலும் உள்ள வினாக்கள் எளிதாகவும், மாநில மொழிகளிலுள்ள வினாக்கள் கடினமாகவும் கொடுத்து, அவர்களின் எதிர்காலத்தை சூன்யமாக்கி உள்ளது. அதிலும் எழுத வந்த மாணவர்களை நடத்திய விதம் மிகவும் இழிவாக இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம்.

Siragu-farmersஅடுத்து பார்த்தோமானால், விவசாயிகள் பிரச்சினை. நமக்கு சோறு போடும் வேளாண்மை நண்பர்கள் வறுமையில் வாடி, தற்கொலை செய்து கொள்ளும் நிலைமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கான வங்கிக் கடன் தள்ளுபடி செய்வதில் பாராமுகமாகத் தானே இன்றுவரை ஒன்றுமே செய்யாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது. நம் விவசாய நண்பர்கள், மீனவ நண்பர்கள், நெசவாள மக்கள் என அனைத்து உழைக்கும் வர்க்கத்தையும் பழி வாங்கும் செயலாகவே தங்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது இந்த மத்திய அரசு. சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பை அளிப்போம் என்று சொல்லி வாக்குகள் வாங்கி வெற்றி பெற்று, ஆட்சியில் அமர்ந்த இந்த அரசு அவர்களை பாதுகாக்க வேண்டாம். துன்புறுத்தாமல், கொல்லாமல் இருந்தால் போதாதா…!

அடுத்து பார்த்தீர்களானால், மாட்டிறைச்சி அரசியலை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. நாம் உண்ணும் உணவை அரசு தீர்மானிக்கிறதென்றால், நமக்கான சுதந்திரம் என்னவானது…? இதன் மூலம் பசுவதை காவலர்கள் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அட்டூழியம் இருக்கிறதே, அதை சொல்லி மாளாது. மாநிலங்கள் தோறும் இதன்முலம் வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கிறது நாம் அறிந்த ஒன்று தான்..! அடுத்தது, மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி என்ற தத்துவத்தையே குழிதோண்டி புதைக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. மாநிலங்கள் அனைத்தும், சுயமாக செயல்படவிடாமல் ஏதோ ஒரு வகையில் மிரட்டப்பட்டு அடிப்பணியவைக்க முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.!

Siragu-GST-Billஇன்னும் சில தினங்களில் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி செலுத்தும் முறை, நம்மை அதலபாதாளத்தில் தள்ளக் கூடியதாக இருக்கிறது. சிறு, குறு வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மக்கள் அனைவரையும் துன்பப்படுத்துவதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேலும் இந்த சேவை வரி மூலம் மாநில அரசிற்கான வருவாய் மூன்றில் ஒரு பங்காக குறைந்து விடுகிறது. எல்லாவற்றிக்கும் மத்திய அரசை கையேந்தும் நிலை உருவாக்கி விடும் ஆபத்து இருக்கிறது. இதில் இம்மாதம் 30-ந்தேதி இரவு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கூடி, இந்த வரி அமலுக்கு வரவுள்ள நேரத்தை கொண்டாடப் போகிறார்களாம். வரி மேல் வரி என்று மக்களை, ஒருவேளை சோற்றிற்கு திக்குமுக்காட வைப்பதில்தானா ஒரு நாட்டின் வளர்ச்சி இருக்கிறது. இது என்ன ஏழை மக்கள் வாழ இயலாத ஒரு நாடாக மாற்ற முயற்சிக்கிறதா இந்த அரசு.!

நம் உணவு, கல்வி, மொழி, வாழ்வாதாரம் என அனைத்தையும் தன் பாதத்தில் போட்டு மிதித்துவிட்டு, அம்பானிகளையும், அதானிகளையும், பாபா ராம்தேவ்களையும், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்களையும், ஜக்கிகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் வாழ வைப்பது தான் ஒரு அரசினுடைய கொள்கையா.!

ஒரே அகண்ட பாரதம் என்ற பெயரில், ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவ துடித்துக்கொண்டிருக்கிறது… அது மட்டுமல்ல, அதற்கான அத்துணை வழிகளிலும் குறுக்குசால் ஓட்டுகிறது இந்த மத்திய மதவாத பா.ச.க அரசு. இனியும் மக்கள் விழிப்புடன் இல்லையென்றால், மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். நாம் அனைவரும் அதற்கான முன்னெடுப்பை நோக்கி பயணப்படுவோம்.!

மக்களாட்சி ஓங்குக … மாநில சுயாட்சி வளர்க …!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மக்களாட்சித் தத்துவம் மறக்கடிக்கப்படுகிறதா…!”

அதிகம் படித்தது