மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மக்கள் பாதையின் மக்கள் மருந்தகம்

இராமியா

Nov 11, 2017

Siragu makkal marundhagam1

“திரு. சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும் “மக்கள் பாதை” நண்பர்கள் இணைந்து தமிழக மக்களுக்கு உன்னத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிகக் குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன் சிவகங்கையில் முதல் JAN AUSHADHI MEDICAL STORE (மக்கள் மருந்தகம்) Generic Medical Shop துவங்கி உள்ளோம், இதை தமிழக மக்கள் பயன் படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் தங்களின் மருந்துப் பெயருடன் வாட்ஸ்அப் (9788052839) அல்லது svgjanaushadhi@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். தங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம். அனைத்து வகையான ஆங்கில மருந்துகளும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.”

என்று தொடங்கி ஒரு நீண்ட செய்தி புலனத்திலும் (whatsapp), முகநூலிலும் (facebook) பலருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அனுப்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. இச்செய்தியில், மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் சூட்டி உள்ள பெயரை எழுதுவதாகவும், அப்படி இல்லாமல் மருந்துகளின் பெயரை எழுதிக் கொடுக்கும் படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பு உள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் இதில் மிகுந்த அக்கறை கொண்டு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Siragu makkal marundhagam3

மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் “மக்கள் பாதை” நண்பர்கள் குழுவினர் அவர்களுடைய உயர்ந்த எண்ணத்திற்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதே சமயம் அவர்கள் கள்ளம் கபடம் சிறிதளவும் இல்லாமல், சூழ்ச்சியே உருவான உலக மகா அயோக்கியர்களுக்கு எதிராகப் போராட முனைந்து இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டி உள்ளது.

முதலில் இவர்கள் தமிழ் நாட்டில் ஒரு மருந்துக் கடையைத் திறந்து இருக்கிறார்கள். இதனால் இலாப வேட்டைக்காரர்களான முதலாளிகளுக்குப் பொருட்படுத்தும் அளவிற்கான பாதிப்பு ஏற்படாது. முதலாளிகள் பொருட்படுத்த வேண்டிய அளவு பாதிப்பு ஏற்படும் வகையில் இக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அதை அவர்களால் எளிதில் தடுத்து நிறுத்த முடியும். இக்கடைகளுக்கு மருந்துகள் அளிக்கும் (சப்ளை செய்யும்) மருந்து நிறுவனங்கள் முதலாளியக் குழுமங்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அவற்றால் இக்கடைகளுக்கு வேண்டிய மருந்துகள் கிடைக்காதபடி செய்ய முடியும். இத்திட்டம் முழு வளர்ச்சி அடையும் முன்பே – முழு வளர்ச்சி என்ன, குறைந்தபட்சத் தேவையில் ஆயிரத்தில் ஒரு பங்கு வளர்ச்சி அடைவதற்கு முன்பே – உருத்தெரியாமல் அழிக்க முடியும்.

Siragu makkal marundhagam4

அடுத்து, மருத்துவர்கள் மருந்து நிறுவனங்கள் சூட்டி உள்ள பெயரை எழுதாமல் மருந்துகளின் மருத்துவப் பெயர்களையே எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை அனைத்து மருத்துவர்களும் ஏற்றுக் கொள்வார்களா? மருத்துவ மனைகள் கட்டிக் கொள்ளாமலும், மருந்துக் கடைகளை வைத்துக் கொள்ளாமலும், சிறு அறைகளில் (Consulting room) மருத்துவ ஆலோசனையை மட்டும் அளிக்கும் மருத்துவர்கள் மட்டும் இதை ஒப்புக் கொள்ள முடியும். அவர்களிலும் மருந்து நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க அளிக்கும் “ஊக்கத் தொகையில்” ஆசை கொண்ட மருத்துவர்களை விலக்கி விட்டுப் பார்த்தால், மீதி உள்ளவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். இவ்வெண்ணிக்கை பொருட்படுத்தும் அளவில் இருக்க வாய்ப்பு இல்லை. அதாவது மருந்து உற்பத்தி நிறுவனங்கள் சூட்டும் பெயரை எழுதாமல் மருந்தின் பெயரையே மருத்துவர்கள் எழுதித் தர வேண்டும் என்பது நடைமுறையில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

அடுத்து, இத்திட்டத்தற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் மக்கள் மருந்தகங்களை வளர்த்து எடுப்பதில் ஆர்வத்துடன் இருப்பதாகவும், மக்கள் பாதை நண்பர்கள் ஆர்வத்துடன் குறிப்பிட்டு உள்ளனர். ஆகவே மக்கள் அனைவரும் மக்கள் மருந்தகங்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் உள்ளனர். அவ்வாறு செய்தால் மருந்து வணிகத்தில் முதலாளிகள் அடிக்கும் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி விட முடியும் என்று நம்பிக்கையையும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மக்கள் பாதை நண்பர்களின் நம்பிக்கைக்கு வாழ்த்தும், மரியாதையும் அளிக்கும் அதே சமயத்தில் அதன் நடைமுறை வாய்ப்பைப் பறறிய ஐயத்தையும் வெளிப்படுத்த வேண்டி உள்ளது.

Siragu makkal marundhagam5

மக்கள் பாதை நண்பர்கள் நினைப்பது / விரும்புவது போல மக்கள் மருந்தகங்களை மிகப் பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்தத் தொடங்கினால், மருந்து உற்பத்தித் தொழிலில் ஈடுபடுத்தப்படும் மூலதனத்திற்குக் கிடைக்கும் இலாபம் குறைந்து விடும். அப்படி இலாபம் குறைந்தால், இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள மூலதனம், இதை விட அதிக இலாபம் தரும் தொழில்கைள நோக்கி நகர்ந்து விடும். ஆகவே மக்களுக்குத் தேவையான மருந்துகள் உற்பத்தி ஆவதில் தடை ஏற்படும். அதாவது மக்கள் பாதை நண்பர்கள் நினைப்பது / விரும்புவது போல முடிவு இராது.

இன்றைய பொருளாதாரச் சூழ்நிலை மேலே கூறியது போல் அதிக இலாபம் தரும் தொழில்களை நோக்கி மூலதனம் நகர்வதற்கு வசதியாக இல்லை. அதாவது ஒரு தொழிலில் இலாபம் குறைகிறது என்றால் அதைவிட அதிக இலாபம் தரும் வேறு தொழில் இருப்பது இல்லை. இத்தொழிலில் உள்ள பிரச்சினை எல்லாத் தொழில்களிலும் இருக்கிறது. ஆகவே முதலாளிகள் தங்கள் தொழில்களிலேயே இலாபம் குறையாமல் பார்த்துக் கொள்ள முனைகிறார்கள். அதனால் தான் உழைக்கும் மக்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. முதலாளித்துவப் பாதையில் இவ்வாறு அடக்கு முறைகள் அதிகரிக்குமே ஒழிய, மக்கள் பாதை நண்பர்கள் நினைப்பது / விரும்புவது போல முதலாளிகள் தங்கள் இலாபத்தைக் குறைத்துக் கொள்ள முன்வரவே மாட்டார்கள்.

அப்படியானால் மக்கள் மருந்தகங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? மூலதனத்தின் ஆட்சி இருக்கும் வரையில் மக்கள் மருந்தகங்கள் மட்டும் அல்ல; மக்கள் நலன்களுக்கான எந்தத் திட்டமும் வெற்றி பெறாது. மூலதனத்தின் ஆட்சியின் கீழ் சீர்திருத்தங்கள் செய்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்று நம்பும் மக்கள் பாதை நண்பர்களும், அவர்களைப் போன்ற பிறரும் இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அந்தப் பிரச்சினை இந்தப் பிரச்சினை என்று தனித் தனியாகக் கையில் எடுத்துக் கொண்டு போராடுவதை விட்டு விட்டு, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணமான மூலதன ஆட்சியை எதிர்த்து, அதாவது முதலாளித்துவப் பொருளாதார முறையை எதிர்த்துப் போராடுவது தான் மக்களின் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வாகும்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மக்கள் பாதையின் மக்கள் மருந்தகம்”

அதிகம் படித்தது