மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மடிந்து ஒழியட்டும் … ஆணவப்படுகொலைகள்

சுசிலா

Dec 16, 2017

Siragu-aanavapadukolai1

இரு தினங்களுக்கு முன்பு திருப்பூர் நீதிமன்றம், ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. அது நீதிபதி அலமேலு நடராஜன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு, என்னவெனில் ஆணவப்படுகொலைக்கு எதிராக முதல்முறையாக கடுமையான, அதிகபட்ச தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லியாக வேண்டும்.!

உடுமலைப்பேட்டை சங்கர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், பட்டப்பகலில், நாடு ரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். சாதி மாறி திருமணம் செய்துகொண்ட ஒரு செயலால் சாதிவெறியர்களால், அதுவும், தன்னுடைய மனைவியின் பெற்றோர்களாலேயே, கூலிப்படையினரைக்கொண்டு அரிவாளால் சரமாரி வெட்டப்பட்டு உயிரிழந்தார். இவையெல்லாம், கணநேரத்தில் தன் மனைவி கண்முன்னாலேயே நடந்து முடிந்திருக்கிறது. அது மட்டுமல்ல… சங்கரின் மனைவி, கௌசல்யாவையும் தாக்கியிருக்கிறார்கள். தீவிர சிகிச்சைக்குப்பிறகு உயிர்பிழைத்திருக்கிறார் கௌசல்யா.

இந்த வழக்கில், குற்றவாளிகளாக 11 பேர் தாக்கல் செய்யப்பட்டு, அதில் கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய தாய், மாமன், மற்றுமொருவர் ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மரண தண்டனை கூடாது என்ற ஒரு கருத்தியலைக் கொண்டவர்கள் தான் நாம். ஆனால், இம்மாதிரி கொடூர குற்றங்களுக்கு, அதிகபட்ச தண்டனை தருவது என்பது சரியானது தான். ஏனென்றால், இனி வரும்காலங்களில், இந்த மாதிரி ஆணவப்படுகொலைகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். சாதிவெறி ஒழிக்கப்பட வேண்டும். தன் மக்களை விட சாதி பெரிது என்றஎண்ணம் தானே இப்படி தங்கள் குழந்தைகளையே கொள்ளும் அளவிற்கான வெறியை தூண்டுகிறது. பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் சாதிகள் என்றோ முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும். இன்னமும் பல வடிவங்களில் உலா வருகிறதென்றால், அதற்குரிய தண்டனைகள் வழங்கப்படாதது தான் மிக முக்கிய காரணம் ஆகும். சாதி சங்கங்கள் மூலம் சாதிகள் காக்கப்படுகின்றன. இந்த சாதி சங்கங்கள் மற்றும் சாதிவெறியர்களால் தான் இளவரசன், கோகுல்ராஜ் கொலைகளில் உண்மைகள் மூடிமறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், சங்கர் வழக்கில் நியாயம் வென்றிருக்கிறது, நீதி வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு சகோதரி கவுசல்யாவின் மனஉறுதி, போராடும் போர்க்குணம், நம்பிக்கை அனைத்தும் கை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

Siragu-aanavapadukolai2

அப்பெண் கௌசல்யா அப்படி என்ன தவறு செய்துவிட்டார். தனக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்தது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?. அவரவர் வாழ்க்கையை தீர்மானிப்பது அவரவர் உரிமை அல்லவா. உரிமை மறுக்கப்படுவது குற்றம் இல்லையா என பல கேள்விகள், சாதி வெறியர்களுக்கு முன் வைக்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பும் கூட மேல் முறையீடு என்ற பெயரில் நீர்க்க செய்யும் வாய்ப்பிருக்கிறது. அதற்கு துணைபோகாமல், நீதிமன்றங்கள் வெற்றி பெற்ற நீதியை இழந்துவிட கூடாது. மேலும் விடுவிக்கப்பட்டவர்கள் கூட தண்டனைக்கு உள்ளாகப்பட வேண்டியவர்கள் தான். சாதியின் பெயரால், நடைபெறும் இந்த ஆணவக்கொலைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.

சாதி என்ற நோய், நம் சமூகத்தை பீடித்திருக்கும் புற்றுநோயை போன்றது. புரையோடி போயிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நோயிலிருந்து நம் சமூகத்தை காப்பாற்ற வேண்டுமானால், அவசியமான, அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அந்த அறுவை சிகிச்சைகள் தான் அதிகபட்ச தண்டனைகள். இதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். இதில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், பாதிக்கப்பட்ட அப்பெண் கௌசல்யா மிகவும் மனதிடத்துடன் இருக்கிறார் என்பது தான். குற்றவாளிகள், தன்னுடைய பெற்றோர்களாக இருந்தாலும், அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். இந்த சாதி பெயரில் நடக்கும் ஆணவப்படுகொலைகள் ஒழியவேண்டும், அதற்காக தன வாழ்நாள் முழுதும் பாடுபடுவேன் என்று சொல்லும் அளவிற்கு தன்னை, ஒரு சிறந்த சாதி ஒழிப்புப் போராளியாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒரு முன்னுதாரணம் அல்லவா. ஆதலால், இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பு என்பது வரவேற்கப்படவேண்டிய ஒரு தீர்ப்பு.!

மக்களே … சாதிகள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.!
சாதியின் பெயரால் நடக்கும் படுகொலைகள், ஆணவப்படுகொலைகளை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம்.!
சக மனிதனை, மனிதனாக மதிக்கும் மனிதம் போற்றுவோம்.!
பெண்ணுரிமையை மீட்டெடுப்போம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மடிந்து ஒழியட்டும் … ஆணவப்படுகொலைகள்”

அதிகம் படித்தது