மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மனப்பாங்கை மாற்றுவோம்

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Oct 8, 2016

siragu-image1

எல்லாவற்றிலும் பிடிவாதத்தை விதைத்துவிட்டால் பல நேரங்களில் ஏமாற்றங்களை அறுவடை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். சில இடங்களில் வாழ்க்கை அதன் போக்கில் நம்மை இழுக்க முற்படும் போது அதற்கு இசைந்து கொடுக்கவும் பழகிக்கொள்ள வேண்டும். அதன் மூலமும் நாம் நினைத்தது நினைத்ததை விட சிறப்பாகக் கிடைத்திருக்கும். இது எல்லாருக்கும் ஏதோவொரு வகையில் நடந்திருக்கும். இப்படி இருப்பேன் என்றால் பரவாயில்லை, ஆனால் இப்படித்தான் இருப்பேன் என்று இறுமாப்போடு இருப்பது என்றுமே கூடாது.

பலமுறை ஒரு செயலைச் செய்து, அந்தச் செயலிற்குத் தேவையான முடிவு எட்டப்படவில்லை என்றால் அணுகுமுறையை மாற்றவேண்டுமே அன்றி செயலை மாற்றுதல் கூடாது. ஒரேவித அணுகுமுறையை எந்த ஒரு விசயத்திலும் கையாளுதல் கூடாது. ஒன்று சரிப்பட்டுவராது என்று தெரிந்தவுடன் அதை எதிர்கொள்ள மாற்று வழிகளைத் தான் ஆராயவேண்டுமே தவிர, மாற்று செயல்களை அல்ல. நான் என்ன கூற வருகிறேன் என்றால்  பாதையில் நடக்கும் பொழுது கால்களில் முள் குத்தினால் காலணிகளை அணிந்து நடக்க வேண்டும், அதை விட்டுவிட்டு பாதையையே மாற்ற முடியாது. இல்லாவிட்டால் திருச்சிக்குப் போகவேண்டியவன் திருப்பதிக்குச் செல்லும் பேருந்தில் ஏறிய கதையாகிவிடும்.

மனப்பாங்கை மாற்றுவது என்பது ஒருவித அணுகுமுறை, அது ஒரு கலை, ஒரே நாளில் அதை முழுதும் செயல்படுத்த முடியாதுதான். ஆனால் ஒவ்வொரு நாளும் அதை நம்முள் மெருகேற்றிக் கொண்டு இருக்க வேண்டும். பிறகு நாம் அவ்வித நல்ல குணம் பொருத்திய மனிதர்களாய் நடமாடுவோம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்? எனக்காக எதுவும் மாறாதா? என்று நீங்கள் என்னைக் கேட்பது என் காதில் விழுகிறது. சாலைகளில் குண்டும் குழியுமாக இருக்கிறது என்றால் நாம் தான் அதற்குத் தகுந்தவாறு செல்ல வேண்டும், அதைவிட்டுவிட்டு “ஏ சாலையே எனக்குத் தகுந்தவாறு நேராக, அழகாக உருமாறி நில்” என்று அந்தக் கால மாயாஜாலப் படங்களில் வருவது போன்று கட்டளை பிறப்பிக்க முடியாது.

வீடோ, அலுவலகமோ, வெளி வட்டங்களோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் தகுந்தார் போல் நம்மால் மாற முடியாது. ஆனால் நாம் நம்மை மாற்றப்போகும் அந்த ஒரே கண்ணோட்டம் என்பது அனைவரையும் ஈர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நம் தன்மைக்கு ஒன்ற முனைந்து வருவார்கள். எதையும் கனிவுடன் ஆய்ந்து அணுகும் பொழுது அது எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நம்மிடம் அதை மட்டுமே திருப்பித் தருவார்கள் என்பது நான் கண்ட உண்மையும் கூட.”சில விசயங்கள் இப்படித்தான் இருக்கும், என்றும் மாறாது, நடக்கவே நடக்காது, என்னால் அதை மாற்ற முடியாது” என்றவாறான எண்ணத்தை முதலில் தூக்கி எறியுங்கள். இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் மிகப்பெரிய பாக்கியசாலி! ஏனென்றால் எவ்வளவு பரபரப்பிற்கு மத்தியில் நீங்கள் நேரம் செலவழித்து இக்கட்டுரையை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இது எத்தனை பேருக்குத் தான் வாய்க்கும்.

மனப்பாங்கை மாற்றுவதால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம். பெர்னாட்ஷா என்பவர் நல்ல நாடக ஆசிரியர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர் எழுதத் துவங்கியிருந்த கால கட்டத்தில் அனைவரின் விமர்சனத்திற்கும் உள்ளானார். அவர் எழுத்துக்களை யாருக்கும் பிடிக்கவேயில்லை, எல்லாராலும் தூற்றப்பட்டார். அவரும் எந்த விமர்சனத்தையும் எதிர் விமர்சனம் செய்யாமல் தனக்கான நேரம் வரும்பொழுது திறமையை வெளிக்கொணர எண்ணி பொறுமையுடன் இருந்தார். அவருக்கு முந்தைய பிரபல நாடக ஆசிரியர் சேக்ஸ்பியரின் எழுத்துக்களை விட இதில் அப்படியொன்றும் இல்லை என நினைத்த மக்கள் பெர்னாட்ஷாவை  ஒரு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். எப்படியாவது அவரை சேக்ஸ்பியரின் வசனத்தை படிக்கச் செய்து தன்னை தானே நொந்துகொள்ள வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். பெர்னாட்ஷாவும் மேடையேறினார் வசனங்களைப்  படித்துக் கொண்டிருந்தார். அதன் சுவையில் மூழ்கிய மக்கள் அனைவரும் பாராட்டி ஆரவாரம் செய்தனர். அப்பொழுது பெர்னாட்ஷா, “இங்கு நான் படித்த வசனங்கள் எல்லாமே உங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட என்னுடைய வசனங்கள் தான் “ என்று கூறிவிட்டுச் சென்ற அன்றிலிருந்து அவர் உலகப் புகழை அடைந்தார்.

இவ்வாறாகத்தான் எதுவும், நம் மனப்பாங்கை மாற்றுவது என்பது ஒரு மாபெரும் சக்தி போன்றது. அதை  நம் செயல்கள் மூலம்தான் வெளிப்படுத்த வேண்டும். அந்த வெளிப்படுத்துதல் என்பது அனைவரையும் பெர்னாட்ஷாவை விமர்சனம் செய்தோரை அவர் சிந்திக்க வைத்ததுபோல் இருக்க வேண்டும். இல்லையென்றால் இதைமட்டுமாவது நினைவிற் கொள்ளுங்கள் நீங்கள் மாறக்கூடும், நாம் மிருகங்களுடன் வாழவில்லை ! நம்மைச் சுற்றி சில மனிதர்களும் இருக்கின்றார்கள்!


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மனப்பாங்கை மாற்றுவோம்”

அதிகம் படித்தது